சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 20, 2020

இல்லுமினாட்டி 63


ன்று தான் சிந்துவுக்கு அவன் பேட்டி கொடுக்கும் தினம் என்பதால் உதய் கண்ணாடி முன் அதிக நேரம் இருந்து அழகாய்த் தெரிய முயற்சிகள் எடுத்துக் கொண்டான். மறைவில் இருந்து அடிக்கடி மூத்த மகனைக் கவனித்த பத்மாவதி பிறகு இளைய மகன் அறைக்கு வந்தாள். ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்த க்ரிஷ் எச்சரிக்கையுடன் படித்துக் கொண்டிருக்கும் பக்கத்தை நுனி மடக்கிக் குறித்துக் கொண்டு புத்தகத்தை மூடி பக்கத்தில் வைத்துக் கொண்டான். இல்லா விட்டால் அம்மா சின்னக் குழந்தை அதைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுவாள். ”முதலில் நான் சொல்வதை எல்லாம் கேள். பிறகு தான் தருவேன்என்று சொல்லிப் பிடிவாதம் பிடிப்பாள்.

பத்மாவதி க்ரிஷிடம் ரகசியமாய்ச் சொன்னாள். “பார் இப்போதும் கண்ணாடி முன் உன் அண்ணன் நின்று அரை மணி நேரம் ஆகிறது. இன்னும் மேக்கப் முடியவில்லை. என்னவென்று நீ போய்க் கேள். உன் கிட்ட மனசு விட்டுப் பேசினாலும் பேசுவான்

க்ரிஷ் புன்னகையுடன் எழுந்தான். எப்போதுமே அவனைக் கிண்டல் செய்யும் அண்ணனைக் கிண்டல் செய்ய நல்ல சந்தர்ப்பம். இல்லா விட்டாலும் அவன் அங்கிருந்து கிளம்பாமல் அம்மா விட மாட்டாள்.

என்னடா இப்ப எல்லாம் மேக்கப்புக்கு ரொம்ப நேரம் எடுத்துக்கிறாய் என்று அம்மா சொல்கிறாள். என்ன நடக்குதுஎன்று சொன்னபடியே க்ரிஷ் உதய் அறைக்குள் நுழைய, உதய் அசடு வழிந்தபடி வாசலிலேயே தள்ளி நிற்கும் தாயை லேசாக முறைத்தான்.

ஒன்னும் இல்லடா. சாதாரணமா தான் இருக்கேன். கிழவி தான் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுது

இல்லையே. நானும் உன்னை இவ்வளவு அழகாய் இத்தனை நாளாய் பார்த்ததே இல்லையே...” என்று அண்ணனைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான்.

தன் முயற்சிகள் வீண் போகவில்லை, அழகாய்த் தெரிகிறதாய் தம்பியே சொல்லி விட்டான் என்று பரமதிருப்தி அடைந்த உதய்அப்படில்லாம் இல்லைஎன்று பலவீனமாய்ச் சொன்னான்.

பார்த்தியா என்கிட்டயே மறைக்கிறாய்என்று புகார் சொன்னபடியே க்ரிஷ் அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து சொன்னான். “யார்டா அது...”

உதய் அதற்கு மேல் எதையும் மறைக்கவில்லை. தாழ்ந்த குரலில் தம்பியிடம் சிந்து பற்றிச் சொன்னான். அவளைப் பார்த்ததிலிருந்து தன் இதயம் தன்னிடம் இல்லை என்று சொன்னான். அவள் அவளைப் பற்றிச் சொல்லியிருந்த தகவல்களை எல்லாம் தம்பியிடம் சொன்னான். எத்தனையோ காதுகளைத் தீட்டியும் அரைகுறையாய் தான் பத்மாவதி காதில் விழுந்தது. ஆனால் நெருங்கிப் போனால் தம்பியிடம் சொல்வதையும் உதய் நிறுத்தி விடுவான் என்று பயந்தாள். அப்புறமாய் இளைய மகனிடம் விரிவாய்க் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

அவளைப் பார்த்த நாளைக்கே உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன். நீ எதோ தியானத்தில் இருந்தாய். அப்புறம் அவள் மனசில் என்ன இருக்குன்னும் எனக்குத் தெரியாது. அந்தப் பெண் மனசில் ஒரு எம்.பின்னு கொடுத்த மரியாதை மட்டும் இருக்கலாம். அவள் மனசில் வேற யாரையாவது காதலிச்சுட்டு இருக்கலாம். அதெல்லாம் தெரியாமல் என்ன சொல்றதுன்னு கூடத் தோணுச்சு. அதனால் பிறகு உன் கிட்டயும் சொல்லலை....” அவன் தம்பியிடம் சொல்லி முடித்த போது பத்மாவதி அவனுக்குப் பின்னால் இருந்தாள். உதய் பிறகு தான் கவனித்து முறைத்ததை அவள் கண்டுகொள்ளவில்லை.

அதுவும் சரி தான்என்று க்ரிஷ் புரிதலுடன் தலையசைத்தான்.          

பத்மாவதி சொன்னாள். “நான் சும்மா உன் கூட உன் ஆபிசுக்கு வர்ற மாதிரி வரட்டுமா? எனக்கு ஒரு தடவை அந்தப் பொண்ணைப் பார்க்கணும்

உதய் அழாத குறையாய் க்ரிஷிடம் சொன்னான். “என்னை இந்தக் கிழவி கிட்ட இருந்து தயவு செய்து காப்பாத்துடா

பத்மாவதி மூத்தமகனை முறைத்தாள். க்ரிஷ் அம்மாவிடம் சற்றுக் கண்டிப்பான குரலில் சொன்னான். “அந்தப் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அப்படில்லாம் நீ போறது நாகரிகம் இல்லைம்மா. இத்தனை நாள் பொறுத்த உனக்கு இன்னும் ரெண்டு நாள் பொறுக்க முடியாதா. சும்மா இரு.”

பத்மாவதி தலையசைத்தாள். சின்ன மகன் எதையும் நியாயமாய் தான் சொல்வான். ஆனால் அவள் மூத்த மகனிடம் தீர்க்கமான குரலில் சொன்னாள். “ஆனா இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் ஜவ்வு இழு இழுக்கக்கூடாது.  அவ மனசுல என்ன இருக்குன்னு சீக்கிரமே தெரிஞ்சுக்கோ. ரெண்டு நாள்ல நீ கேட்டுச் சொல்லலைன்னா நானே நேர்ல போய் அந்தப் பொண்ணு கிட்ட நாசுக்கா பேசித் தெரிஞ்சுக்குவேன். அதுக்கு மேல பொறுக்க மாட்டேன். சொல்லிட்டேன்


விஸ்வத்தின் கடிதத்தின் நகல் க்ரிஷுக்கும் வந்து சேர்ந்தது. அவனுடைய விடாமுயற்சியையும், துணிச்சலையும் க்ரிஷால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சீக்கிரமே களத்துக்கு வந்து விடுவேன் என்று அறிவிக்கிற அறிவிப்பு  போலத் தோன்றியது.

க்ரிஷ் செந்தில்நாதனுக்குப் போன் செய்தான். அந்தக் கடிதம் பற்றிய தகவலைச் சொல்லி விட்டு விஸ்வம் இனி எப்போது வேண்டுமானாலும் மனோகரைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னான். மனோகர் எப்படி இருக்கிறான் என்று கேட்டான்.

செந்தில்நாதன் சொன்னார். “பெங்களூர் புறநகர்ப்பகுதியில் ஒரு பங்களாவில் குடியிருக்கிறான். அவனுடன் ரெண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவன் அதிகம் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ஏதாவது வேண்டுமானால் வாங்கி வர அந்த வேலைக்காரர்கள் போகிறார்கள், அல்லது போனில் வரவழைக்கிறான். அவர்களிடம் ஏதோ வயிற்று ஆபரேஷன் முடிந்து இப்போது ஓய்வில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறான். அக்கம் பக்கத்திலும் அந்தச் செய்தியையே சொல்லி இருக்கிறான். அவன் வீட்டு எதிரில் இருக்கிற வர்க்ஷாப்பில் இருக்கும் இளைஞன் ஒருவனும் இவன் ஆள் போல் தெரிகிறது. அந்த வீட்டை யார் பார்க்கிறார்கள், யார் போகிறார்கள் என்றெல்லாம் கண்காணிக்கும் வேலையையும் சேர்ந்தே அவன் பார்க்கிறான். இது வரை விஸ்வம் மனோகரைத் தொடர்பு கொண்டது போலத் தெரியவில்லை. சக்தி அலைகளில் விஸ்வம் தொடர்பு கொள்வதில் ஏதாவது சிக்கல் இருந்தாலும் போன்கால் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று மனோகர் ஆவலாக எதிர்பார்ப்பது மாதிரி தான் தெரிகிறது. எந்தப் புதிய எண்ணில் இருந்து போன்கால் வந்தாலும்  ஓடிப் போய் ஆவலாய் பார்க்கிறான். ஏதாவது விளம்பரமோ, தவறான நம்பரோவாக இருந்தால் சலிப்போடு பேசி போனை வைத்து விடுகிறான்... இது தான் இப்போதைய நிலவரம்....”

அப்படியானால் இனி எந்த வகையிலோ அவனை விஸ்வம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கவனமாக இருங்கள்என்று க்ரிஷ் சொன்னான்.


விஸ்வத்தின் கடிதத்தை கர்னீலியஸும் படித்தார். இல்லுமினாட்டியின் தலைமை தன் எந்தக் கருத்தையும் அத்துடன் சேர்ந்து அனுப்பவில்லை. ஒரு உறுப்பினரிடமிருந்து வந்த கடிதத்தை மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தும் அன்றாட வேலையைச் செய்வது போல் தலைமை காட்டிக் கொண்டது.

கர்னீலியஸ் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அவர் அருகில் இருந்த மேசையில் அந்த ரகசியப் புத்தகம் இப்போதும் இருந்தது. அந்தப் புத்தகத்தில் இருக்கும் ரகசியப் பயிற்சிமுறைகளைத் தினமும் பின்பற்றி வருகிறார். இளமையில் அந்தப் பயிற்சிகள் மூலம் எத்தனையோ நினைவுத்திருப்பல்களைச் செய்திருக்கிறார். காலப் போக்கில் விட்டு விட்டதாலோ இல்லை வயதாகி விட்டதாலோ மூளை முந்தைய அளவு ஒத்துழைக்க மாட்டேன்கிறது.

அன்று அந்த சிக்னலில் அவர் கார் செயலற்றுப் போனதிலிருந்து வங்கிக்குப் போகும் முயற்சியை அவர் எடுக்கவே இல்லை. அந்த சிக்னலைத் தாண்டாமல் அவருடைய வங்கிக்குப் போக முடியாது என்பதாலோ என்னவோ அங்கே தான் விஸ்வம் ஏதோ மர்ம முடிச்சு போட்டு இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஏனென்றால் அவர் வீட்டில் இருக்கும் போதோ வேறு இடங்களுக்குப் போகும் போதோ எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது சில நாட்களாய் அந்த ரகசிய ஆவணத்தில் எழுதியிருப்பதை நினைவுபடுத்திக் கொள்ள அவர் முயற்சிகள் எடுக்கும் போது கூட இந்தக் கண்காணிப்பு உணர்வுப் பிரச்னையில்லை

இந்தப் பயிற்சிகளில் சின்னச் சின்ன முன்னேற்றம் இருக்கிறது. சில்லறைத் தெளிவுகள் கிடைக்கின்றன. சுவடியின் ஆரம்பத்தில் இருக்கும் இப்போதைக்கு அவசியமில்லாத பகுதிகள் எல்லாம் ஓரளவு நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் ரகசிய ஆவணத்தின் முக்கியமான பகுதிக்கு அவரால் வேகமாகப் போக முடியவில்லைஅதுவே அவருக்கு வருத்தமாக இருந்தது. விஸ்வத்தின் வேகத்திற்கு இணையாக இல்லாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்வு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இந்தக் கலையில் பொறுமை மிக முக்கியம். அவசரப்பட்டால் எதுவுமே நடக்காது என்பதை நினைவுபடுத்தி மனதைத் தேற்றிக் கொண்டு. மறுபடி அந்தப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தார். கண்டிப்பாக அதைக் கண்டுபிடிக்காமல் அவர் விட மாட்டார். கண்டுபிடித்து அவர் இல்லுமினாட்டியின் தலைமையிடம் அதைத் தெரிவித்த பின் விஸ்வம் அவரைக் கொன்றாலும் கவலையில்லை....

இந்த எண்ணம் வந்தவுடன் அவர் தன்னையே கடிந்து கொண்டார். இது போன்ற விசேஷப் பயிற்சிகள் செய்யும் போது ’விஸ்வம் அவரைக் கொன்றாலும் பரவாயில்லை’ என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் வந்தால் அவை பலிக்கும் வாய்ப்பு இருக்கிறது... அந்த எண்ணத்தை மனதிலிருந்து விலக்கப் பார்த்தார். ஆனால் அந்த எண்ணம் விலகவில்லை....  




(தொடரும்)
என்.கணேசன்  

3 comments:

  1. Very interesting. I loved Padmavathi and her sons dialogues. Ideal family.

    ReplyDelete
  2. எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் பத்மாவதி -உதய் convo குபீர்னு சிரிப்பு வந்துடுது.

    ReplyDelete
  3. கர்னீலியஸ் எப்போது தான் அந்த ரகசியத்தை கண்டு பிடிப்பார்? தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்...

    ReplyDelete