சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 6, 2020

இல்லுமினாட்டி 61



விஸ்வம்அவன் எனக்கு இணையானவனா?” என்று கேட்டதற்கு ஜிப்ஸி சிறிதாய் முறுவலித்து விட்டுச் சொன்னான். “உனக்கு இணையானவன் என்று அவனைச் சொல்ல முடியாது. ஆனால் அவனை அலட்சியப்படுத்தி விட முடிகிற அளவுக்கு அவன் சாதாரணமானவனும் அல்ல

அவனிடம் என்ன சிறப்பு இருப்பதாக எண்ணி இல்லுமினாட்டி அவனை வரவழைத்திருக்கிறது?” விஸ்வம் கேட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “அவன் காற்றின் வேகத்தில் இயங்கக்கூடியவன் என்று அவன் எதிரிகள் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல நரம்பு மண்டலத்தின் சூட்சுமங்களைத் துல்லியமாக அறிந்தவன் என்றும் சொல்கிறார்கள். அவன் ஒருவனைத் தொட்டு கண நேரத்தில் நரம்புகளில் முடிச்சு போட்டு கோமாவில் ஆழ்த்த வல்லவன் என்ற பெயர் எடுத்திருக்கிறான். அந்த முடிச்சை அவனே விலக்கி பழையபடி ஆக்குவதிலும் அவனுக்கு இணை யாரும் கிடையாது என்கிறார்கள். நவீன மருத்துவத்தில் கூட அவன் போட்ட முடிச்சை விலக்கி குணப்படுத்தி விட முடியாது என்று சொல்லப்படுகிறது. அப்படி எத்தனையோ பேரை பரலோகம் அனுப்பியிருக்கிறான் அவன்

விஸ்வம் கண்களை மூடிக் கொண்டான். அவன் பழைய உடலில் இருந்திருந்தால் அந்த அமானுஷ்யனை ஒரு கை பார்த்திருக்கலாம். இப்போது இந்த போதை மனிதனின் உடலில் நரம்பு மண்டலம் தான் மிகவும் பலவீனம் ஆக இருக்கிறது. ”எனக்கு அவனைப் பற்றிய எல்லாத் தகவல்களும் தெரிய வேண்டும்...” என்று சொன்னான்.

ஜிப்ஸி எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்தது போல் இருந்தது. இரண்டு நிமிடங்கள் மௌனமாய் இருந்து விட்டுச் சொன்னான். ”சிறிய வயதில் பெற்றவர்களிடமிருந்து பிள்ளை பிடிக்கும் கும்பலால் திருடப்பட்டவன் அவன். மும்பையில் தாதாவாக இருந்த ஒருவரிடம் தற்செயலாகப் போய் சேர்கிறான். குழந்தைகள் இல்லாத அவரும் அவர் மனைவியும் கடவுளே அனுப்பிய மகன் என்று எண்ணி அவனை வளர்க்கிறார்கள். அவன் முதுகில் கழுத்துக்குச் சற்று கீழே ஒரு பெரிய நாக மச்சம் இருந்தது. அதைப் பார்த்த பலர் அவன் அமானுஷ்ய சக்திகள் பலவற்றை வசப்படுத்திக் கொள்வான் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே வளர்ந்தான். ஹதயோகி ஆனான். பல மொழிகளில் விற்பன்னனாக இருந்தான். அவன் வளர்ப்புத் தந்தையின் கூட்டாளி ஒரு முஸ்லீம் தாதா.  அவர் குழந்தைகளுடன் சேர்ந்து குரான், உருது படித்து அமானுஷ்யன் இரண்டிலுமே அவர்களை விட அதிகமாக தேர்ச்சி பெற்றான். கீதை, புத்தமதம் இரண்டிலுமே கூட அவன் அறிவு பிரமாதமாக இருந்தது. திபெத்திய யோகிகளிடம் நிறைய கற்றுக் கொண்டான். அவனுக்குத் தந்தையின் தொழில் பிடிக்கவில்லை. மகன் விருப்பப்படவில்லை என்ற ஒரே காரணத்தால் அவரும் அத்தொழிலை விட்டுவிடத் தீர்மானித்தார். ஆனால் அவர் கூட்டாளியின் பிள்ளைகள் மூவர் அவர் பங்கைத் திருப்பித் தர மறுத்ததோடு அவரையும், அவர் மனைவியையும் கொன்றும் விடுகிறார்கள். அமானுஷ்யன்  வளர்ப்புப் பெற்றோரின் மரணத்திற்குக் காரணமான மூவரையும் கோமாவில் ஆழ்த்திப் பழி தீர்த்துக் கொண்டான். முதல் இருவருக்கு அறுவை சிகிச்சை செய்து பிழைக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அது அவர்கள் மரணத்தில் முடிகிறது. மூன்றாவது பிள்ளையையாவது பிழைக்க வைக்கும் படி அந்தக் கூட்டாளியின் மனைவி அமானுஷ்யனிடம் கெஞ்ச மனமிரங்கி அவனைப் பிழைக்க வைக்கிறான். பிறகு பிரபலமாகிறான். அவன் திறமைகளை இந்தியாவின் சிபிஐ பல கேஸ்களில் பயன்படுத்திக் கொள்கிறது. சிபிஐயில் அதிகாரியாக இருக்கும் ஒருவனது தம்பி தான் அவன் என்ற உண்மையும் அமானுஷ்யனுக்குப் பிற்பாடு தெரிகிறது. ஒரு கேஸில் தலிபான் தீவிரவாதிகளைப் பிடித்துக் கொடுத்து அவர்களுடைய எதிரியும் ஆகிறான். பிறகு மறைவான இயல்பான வாழ்க்கை வாழ்கிறான். திபெத்தில் புத்தரின் மறு அவதாரமாக எல்லோரும் நினைக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதைக் காப்பாற்ற தலாய் லாமாவுக்கு உதவுகிறான். சீனாவின் தற்போதைய உளவுத்துறைத் தலைவனாக இருக்கும் திறமைசாலி லீ க்யாங் கூட அவனைத் தடுக்க முடியவில்லை. பின் அவனுடைய நல்லபிப்பிராயத்தையும் அமானுஷ்யன் பெறுகிறான். மறுபடி இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். இப்போது இல்லுமினாட்டி அவனை அணுகி இருக்கிறது. அதிகாரத்தைக் காட்டிப் பேசியிருந்தால் இல்லுமினாட்டி அவனை வரவழைத்திருக்க முடியாது. க்ரிஷ் போய் பேசி தான் அவனைச் சம்மதிக்க வைத்திருக்கிறான்...”

விஸ்வம் அந்தத் தகவல்களை முழுவதுமாக உள்வாங்கினான். பின் மெல்லக் கேட்டான். “அக்ஷய் இது வரை தோற்றதேயில்லையா?”

அமானுஷ்யன் என்ற பெயரைத் தவிர்த்து அக்ஷய் என்ற இயற்பெயரிலேயே நின்றதை ஜிப்ஸி கவனித்தான். பின் புன்னகையுடன் சொன்னான். “பல ஆபத்துகளில் அவன் மாட்டியிருக்கிறான். பல அபாயங்களில் சிக்கியிருக்கிறான். இந்த முறை அவன் கண்டிப்பாகச் சிக்கிக் கொள்வான் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவன் அதிலிருந்தெல்லாம் தன் புத்திசாலித்தனத்தாலும், சமயோசித அறிவாலும் அனாயாசமாகத் தப்பி இருக்கிறான்.”

இல்லுமினாட்டி என்னை எதிரியாகப் பார்ப்பதும், நான் அதன் தலைவனைக் கொல்லப் போகிறேன் என்று நினைப்பதும் அனுமானத்தினாலே தானே. எதையும் நான் செய்யாமல் எனக்கு எதிராக அவர்கள் நினைக்கும் இந்த முட்டாள்தனத்தை அதிலிருக்கும் யாரும் யோசிக்கவே மாட்டார்களா?” விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டான்.

“உன்னை எதிரியாக நினைப்பதும், தலைவரைக் கொல்வாய் என்று எதிர்பார்ப்பதும் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் அல்ல. எர்னெஸ்டோவும், உளவுத்துறையும் தான். உறுப்பினர்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நான் உன்னிடம் அன்றே சொன்னது போல் தலைவரின் தவறான அபிப்பிராயங்கள் தெரிந்தாலும் அவர்கள் எதுவும் செய்ய முடியாது. இல்லுமினாட்டியைப் பொருத்த வரை அதன் தலைவர் தான் அதன் முடிசூடா சக்கரவர்த்தி. அவருடைய கருத்தே பிரதானம். எந்த ஒரு தனி உறுப்பினரும் அவருக்கு எதிராக நடந்து கொள்ள முடியாது. அப்படி நடந்து கொள்வது மரண தண்டனையை வரவழைக்கும். எர்னெஸ்டோவைப் பொருத்த வரை நீ இல்லுமினாட்டியை அழிவுக்குக் கொண்டு போக முடிந்தவன். அவர்கள் ஆரகிள் சொன்னதை கிழவர் பரிபூரணமாக நம்புகிறார். நீ அவரைக் கொல்லப் போகிறாய் என்ற நிலைப்பாட்டை எடுத்தது இல்லுமினாட்டியின் உளவுத்துறை. உன் கடந்த காலத்தில் எதிரிகள் யாரையும் முடிக்காமல் விட்டதில்லை என்பது அவர்கள் எடுத்த முடிவுக்குக் காரணம். இந்திய ரகசிய ஆன்மீகப் பேரவையின் குரு, தமிழக முதலைமைச்சர் ராஜதுரை மரணம் ஆகியவற்றை வைத்து நீ அடுத்து செய்யப் போவது இதுவாகத் தான் இருக்கும் என்று அவர்களை எண்ண வைத்திருக்கிறது.”

இது வரை இல்லுமினாட்டியின் தலைவரை யாரும் எதிர்த்ததோ, எதிராக யாரும் நடந்து கொண்டதோ கிடையாதா? ஒரு தவறான ஆள் இல்லுமினாட்டியின் தலைவனாக வந்தால் அவனிடமிருந்து தப்பிக்க இல்லுமினாட்டிக்கு வழியே கிடையாதா? இல்லுமினாட்டியின் விதிமுறைகள் என்ன சொல்கின்றன?”

இல்லுமினாட்டியின் தலைவருக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை  மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து எடுக்கலாம். அதை அவர்கள் இல்லுமினாட்டியின் உபதலைவரிடம் எழுத்து மூலம் தெரிவித்தால் அவர் இல்லுமினாட்டியின் முழு உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டுவார். அதில் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். தலைவர் தன் தரப்பு நியாயத்தை விளக்க அனுமதிக்கப்படுவார். பின் ஓட்டெடுப்பு நடத்தலாம். அந்த ஓட்டெடுப்பில் இல்லுமினாட்டியின் தலைமைக்கு எதிராக பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்தால் மட்டுமே அவரை அப்புறப்படுத்த முடியும். பின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க மறுபடி ஒரு தேர்தல் நடக்கும். அப்போது உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்....”

அப்படி இது வரை இல்லுமினாட்டியின் வரலாற்றில் நடந்திருக்கிறதா?”

இல்லை.... பெரும்பாலும் உபதலைவரைத் தேர்ந்தெடுப்பது தலைவர் தான். தலைவர் தனக்கு மிகவும் நம்பிக்கையான ஆளைத் தான் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பார் என்பதால் அந்த உபதலைவரிடம் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுடன் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து புகார் கூறும் வாய்ப்பே இல்லை. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எப்போதும் பதிவு செய்யலாம். ஆனால் முடிவில் எதையும் தீர்மானிப்பது தலைவரே. அதற்கு எதிராக யாரும் நடந்து கொள்ள முடியாது. அதனால் இல்லுமினாட்டியின் தலைவர் பதவி மிகவும் சக்தி வாய்ந்தது.”

அந்த சக்தி வாய்ந்த தலைவர் பதவியிலிருந்து எர்னெஸ்டோ ராஜினாமா செய்து ஓய்வெடுக்க நினைத்ததையும், மிகச் சரியான அந்த சமயத்தில் விஸ்வம் தன் சக்திகளைக் காட்டி இல்லுமினாட்டி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்ததையும் விஸ்வம்   நினைத்துப் பார்த்தான். க்ரிஷ் இடையில் வந்து பேசி குழப்பி இருக்காவிட்டால் இன்னேரம் அதன் சக்தி வாய்ந்த தலைவராகத் தான் இருந்திருக்கலாம் என்று நினைத்த போது விஸ்வத்திற்கு அவன் மீது கடுமையான ஆத்திரம் ஏற்பட்டது. சிறிது யோசனைக்குப் பின் கேட்டான். “ஒருவேளை இல்லுமினாட்டியின் தலைவர் திடீரென்று இறந்து போனால் என்ன நடக்கும்?”

உடனே உபதலைவர் தற்காலிகமாகத் தலைவராக ஆவார். தலைவர் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்படும். அதிகபட்சமாய் 46 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும்உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் அந்தப் பதவிக்குப் போட்டியிடலாம். ஆனால்...” என்று சொல்லி ஜிப்ஸி நிறுத்தினான்.



(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Going interesting. Unable to predict next move of Viswam.

    ReplyDelete
  2. ஆனால்...... இப்படி ஒரு இடத்தில் தொடரும் போட்டால்..... நாங்கள் பாவம் illaiyae??

    ReplyDelete
  3. விஸ்வமும் தலைவரை கொல்ல தயாராகிறான்... அக்ஷயும் வருகிறான்....கதை சூடு பிடிக்கப் போகிறது...

    ReplyDelete