சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 1, 2019

சத்ரபதி 79


சிதி ஜோஹர் யோசித்து விட்டு பேச்சு வார்த்தைக்கு வர சிவாஜிக்கு அழைப்பு விடுத்தான். அப்சல்கானைக் கொன்றது போல் சிவாஜி அவனைக் கொல்வான் என்று அவன் நினைக்கவில்லை. அப்சல்கான் மேல் அவனுக்கு முன்பே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. பல வருடங்களுக்கு முன் பேச்சு வார்த்தைக்கு ஒருவனை அழைத்து அப்சல்கான் கொன்றிருந்ததைக் கேள்விப்பட்டிருந்தவன் அவன். மேலும் வீரனான அவன் இது போன்ற தனிப்பட்ட தாக்குதலுக்குப் பயப்படவில்லை. பேச்சு வார்த்தைக்கு சிவாஜி இருவரை அழைத்து வரலாம் என்றும், தன்னுடனும் இருவர் இருப்பார்கள் என்றும் பேச்சு வார்த்தைக்கு வரும் போது சிவாஜிக்குத் தங்களால் எந்த ஆபத்தும் இருக்காது என்றும் சொல்லி அனுப்பினான். மனிதர்களை எடை போடுவதில் வல்லவனான சிவாஜி சிதி ஜோஹரைப் போன்ற ஒருவன் தந்திரமாகத் தனக்கு ஆபத்து விளைவிப்பான் என்று நினைக்கவில்லை. அவனுடைய திட்டமே வேறாக இருந்தது.

ஃபசல்கானுக்கு சிதி ஜோஹர் ஆபத்தை வரவழைக்கிறான் என்று தோன்றியது. அவன் பேச்சு வார்த்தையின் போது சிதி ஜோஹருடன் இருக்கப் பிரியப்படவில்லை. அதைத் தெரிவித்து விட்டு அவன் மனத்தாங்கலுடன் சொன்னான். “சிவாஜி பலவீனமான நிலையில் இருப்பதால் தான் பேச்சு வார்த்தை பற்றிப் பேசுகிறான். இன்னும் சில காலம் தொடர்ந்து தாக்கினால் அவன் வெளியே வந்து தான் ஆக வேண்டும். அப்போது அவனையும் சிறைப்படுத்தி இந்தக் கோட்டையையும் நாம் பிடித்து விடலாம். நிலைமை இப்படி இருக்கையில் பேச்சு வார்த்தைக்கு நீங்கள் உடன்பட்டிருக்கக்கூடாது”

சிதி ஜோஹர் சொன்னான். “படைவீரர்களை இதே உற்சாகத்துடன் எத்தனை நாளைக்கு நாம் வைத்திருக்க முடியும். படைத்தலைவர்களே பேசிப் பார்க்கலாம் என்கிற நிலை எடுத்ததை நீயே பார்த்தாய். இப்போது சிவாஜியின் ஒரு சிறுபடை பின்னால் இருந்து நம்மைத் தாக்கி வருகிறது. சமாளிக்கிறோம். சிவாஜிக்கு ஆபத்து என்றால் அவனுடைய மற்ற இடங்களில் இருக்கும் படைகளும் வர வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கூட்டம் கூடி இங்கே போரிடும் போது கோட்டையைப் பிடித்தாலும் சிவாஜி அந்த அமளியில் தப்பி விடுவதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அவனை எல்லோரும் மலை எலி என்கிறார்கள். எதிலிருந்தும் தப்பிப்பதில் வல்லவன் என்கிறார்கள். அதனால் பேசிப் பார்க்கலாம். அவன் மடலைப் பார்த்தால் அவன் இந்தக் கோட்டையை மட்டும் ஒப்படைத்து விட்டு இங்கிருந்து போக அனுமதி கேட்பான் போலத் தான் தெரிகிறது. அப்படி பன்ஹாலா கோட்டை நமக்குத் திரும்பக் கிடைத்தாலே சுல்தான் நோக்கில் நமக்கு வெற்றி தான். ஆனால் பேச்சு வார்த்தையின் போது அவனைச் சரணடையச் சொல்லிக் கேட்போம். அவன் புத்திசாலி. ஒத்துக் கொள்ள மாட்டான். அப்படி ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் கூடுதலாக கேல்னா கோட்டையையாவது ஒப்படைக்கும் படி நிர்ப்பந்தம் செய்து பார்க்கலாம். கிடைத்தால் லாபம்….”

ஃபசல்கானுக்கு கோட்டைகள் பெறுவதில் திருப்தி இருக்கவில்லை. சிவாஜியைச் சிறைப்படுத்த வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்பதே அவனுடைய ஆசையாக இருந்தது. ஆனால் சிதி ஜோஹர் சொன்னதிலும் தவறு காண முடியாததால் ஒத்துக் கொண்டான். ”ஆனால் பேச்சு வார்த்தை முடியும் வரை நான் கூப்பிடு தூரத்தில் தயாராக இருப்பேன். அவன் ஏதாவது தகிடுதத்தம் செய்தால் என்னை அழையுங்கள். நான் வந்து விடுகிறேன்” என்று சொன்னான்.

சிதி ஜோஹர் தலையசைத்தான். சிவாஜியுடன் இரண்டு பேர் தான் வரப்போகிறார்கள். அந்த மூவரை, பேச்சு வார்த்தையில் ஈடுபடும் தங்கள் மூவரால் சமாளிக்க முடியாதா என்ன என்கிற எண்ணமே அவனிடம் மேலோங்கி நின்றது.

சிவாஜி மதியமே பேச்சு வார்த்தைக்கு வந்தான். அவனுடன் பாஜி  தேஷ்பாண்டே என்ற மராட்டியப் படைத்தலைவனும், இன்னொருவரும் வந்தார்கள். சிதி ஜோஹர் தன் இரண்டு படைத்தலைவர்களுடன் பேச வந்தான். பன்ஹாலா கோட்டைக்கு வெளியே ஒரு கூடாரத்தில் சந்தித்துப் பேசினார்கள். அப்சல்கானைக் கட்டித் தழுவி வயிற்றைக் கிழித்துக் கொன்றிருந்த சிவாஜியை அவர்கள் மூவருமே அணைக்க விரும்பவில்லை. சாதாரண வணக்கமே இரு பக்கத்தினருக்கும் இசைவாக இருந்தது.

அனைவரும் அமர்ந்ததும் சிதி ஜோஹர் அலங்கார உபசார வார்த்தைகளிலோ, தேவையில்லாத மிரட்டல்களிலோ நேரத்தைச் செலவழிக்காமல் சிவாஜி எந்த விதமான சமரசத்திற்குத் தயாராக இருக்க விரும்புகிறான் என்பதைக் கேட்டான்.

“இந்தக் கோட்டையை தங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். நானும் என் படையும் இங்கிருந்து பாதுகாப்பாகச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்”

சிதி ஜோஹர் சொன்னான். “இந்த மூன்று மாதத்தில் பீஜாப்பூரின் ஆறு கோட்டைகளை நீ கைப்பற்றி இருக்கிறாய். அப்படி இருக்கையில் ஒரு கோட்டையை நீ ஒப்படைத்தவுடன் வாங்கிக் கொண்டு நீ பாதுகாப்பாகச் சென்று விட நான் அனுமதிப்பதை பீஜாப்பூர் சுல்தான் ஏற்றுக் கொள்வார் என்று நான் நினைக்கவில்லை”

சிவாஜி சொன்னான். “மனிதர்கள் மனம் எளிதில் திருப்தி அடையாதது. அவர்கள் அரசர்களாகவும் இருந்து விட்டால் திருப்தி என்பது அவர்கள் அற்ப நேரத்திற்கும் அறிய முடியாததாகவே இருக்கிறது. அதற்கு உங்கள் சுல்தானோ, நானோ, நீங்களோ விதிவிலக்கல்ல. இருந்த போதிலும் இரு பக்கமும் அதிருப்தியடையக் காரணமில்லாத நிலைப்பாட்டை நாம் எட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன். பன்ஹாலா கோட்டையை உங்களிடம் இருந்து எடுத்த நிலையிலேயே நான் வைத்திருக்கவில்லை. நிறைய செலவுகள் செய்து அதை மேலும் வலிமையாக்கி வைத்திருக்கிறேன். அந்த வலிமையுடன் திருப்பித் தருவதில் எனக்கு நஷ்டம் தான் என்றாலும் இந்தப் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதற்கே ஒத்துக் கொள்கிறேன். நான் தங்களிடம் முன்பே தெரிவித்தது போல இந்தக் கோட்டைக்குள் என்னால் இன்னும் சில மாதங்கள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் இந்த சீதோஷ்ண நிலையில் உங்கள் படை சில மாதங்கள் தாக்குப் பிடிக்க முடியாது. யோசியுங்கள்…”

சிதி ஜோஹர் சொன்னான். “முடிவெடுக்க வேண்டியது சுல்தான். நான் அவர் சார்பில் வந்தவன். அவ்வளவு தான். நீ சரணடைந்தாலோ அல்லது பிடித்த ஆறு கோட்டைகளையும் திருப்பிக் கொடுப்பதாக இருந்தாலோ அவர் ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லா விட்டாலும் குறைந்த பட்சமாக இந்தக் கோட்டையுடன் கேல்னா கோட்டையையுமாவது தந்தால் நான் ஒத்துக் கொண்டு அவரையும் சம்மதிக்க வைக்க முடியும். நீங்கள் அடைந்து கிடக்கும் கோட்டையை மட்டுமே இத்தனை மாத முற்றுகைக்குப் பின் திருப்பித் தருவது சரியான சமரசமாக எனக்குத் தோன்றவில்லை”

சிவாஜி சொன்னான். “கேல்னா கோட்டையை கிட்டத்தட்ட நான் முழுமையாகவே சீரமைத்திருக்கிறேன். அதற்கு விஷால்கட் என்ற பெயரும் வைத்திருக்கிறேன். அதைத் தர நான் சம்மதிக்க மாட்டேன். நீங்கள் இந்தப் பன்ஹாலா கோட்டையைப் பற்றிப் பேசுங்கள்….”

இரு தரப்பும் சொன்னதையே பல வார்த்தைகளில் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இருட்ட ஆரம்பித்து விட்டது. சிவாஜி சொன்னான். “நேரமாகி விட்டது. இனி இதைப் பற்றி நாளை நாம் பேசுவோம்….”

சிதி ஜோஹர் ஒத்துக் கொண்டான். பிரியும் போது சொன்னான். “கோட்டையில் இருந்து இறங்கி வருவது பெரிய விஷயமல்ல சிவாஜி. நின்ற நிலையில் இருந்தும் இறங்கி வந்தால் தான் பேச்சு வார்த்தை உடன்படிக்கையில் முடியும். நாளை வரும் போது சற்றாவது உன் பிடிவாதத்தைத் தளர்த்தினால் மனம் மகிழ்வேன்….”

சிவாஜி சிரித்துக் கொண்டே சொன்னான். ”அதையே நானும் தங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தாங்களும் நன்றாக யோசித்து எல்லாம் சுமுகமாக முடிய உதவுங்கள்”

சிவாஜி உடன் வந்த இருவரையும் அழைத்துக் கொண்டு கோட்டைக்குத் திரும்பினான். அவன் கோட்டை வாசலை அடைந்து உள்ளே நுழையும் வரை சிவாஜி மேல் வைத்திருந்த தன் பார்வையை சிதி ஜோஹர் விலக்கிக் கொள்ளவில்லை. அவன் சென்று கோட்டைக் கதவு மூடிக் கொண்ட பிறகே திரும்பினான். அவன் திரும்பிய போது ஃபசல்கான் அவனருகே நின்றிருந்தான்.

ஃபசல்கான் இப்படி இரு பக்கமும் பேச்சு வார்த்தையை முடித்து கொண்டு பிரச்சினை இல்லாமல் பிரிவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஆர்வத்துடன் சிதி ஜோஹரைக் கேட்டான். “என்ன சொல்கிறான்”

“கோட்டையைக் கொடுத்து விடுகிறேன். என்னை இங்கிருந்து போக விடுங்கள் என்கிறான்”

“நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“சமீபத்தில் பிடித்த ஆறு கோட்டைகளையும் கொடுத்து விடு. போக விடுகிறோம் என்றேன். அவன் ஒத்துக் கொள்ளவில்லை. கேல்னா கோட்டையையாவது இதோடு சேர்த்துக் கொடு என்று சொல்லி இருக்கிறேன். அவன் மாட்டேன் என்கிறான். பேச்சு வார்த்தை முடியவில்லை. நாளை காலை திரும்பவும் தொடர்வதாக இருக்கிறது. பார்க்கலாம் எவ்வளவு தூரம் இறங்கி வருகிறான் என்று….”


சிவாஜி பன்ஹாலா கோட்டையைத் திருப்பித் தந்து இங்கிருந்து செல்லத் தயாராக உள்ளான் என்ற செய்தி படையினர் மத்தியில் பரவியது. திரும்பவும் பேச்சு வார்த்தை நாளை தொடர இருக்கிறது என்றும் அது முடிவடைந்தால் நாளையே ஊர் திரும்பலாம் என்றும் படையினர் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். வந்த நாள் முதல் முந்தைய நாள் வரை கடும் மழையிலும், பெரும் வெயிலிலும், கொடுங்காற்றிலும் கூடத் தளராத கண்காணிப்பு அன்றிரவு தளர்ந்தது. அதற்கான அவசியத்தை யாருமே உணரவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. What will Sivaji do next? Eager to know.

    ReplyDelete
  2. பேச்சு வார்த்தை எந்த சண்டையும் இல்லாமல் முடிந்தது ஆச்சரியமாக உள்ளது.....
    படையின்....இந்த கண்காணிப்பு தளர்வில்... சிவாஜி கோட்டையை விட்டுவிட்டு... தப்பி ஓடிவிடுவான் என தோன்றுகிறது...

    ReplyDelete
  3. கண்கானிப்பு தளர்ந்ததா ?
    சரிதான். சிவாஜி நடவடிக்கையில் இறங்குவான்

    ReplyDelete