சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 27, 2019

இல்லுமினாட்டி 2

லைமை மருத்துவர் நீ யார், உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு அந்தப் போதை மனிதன் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சின்னதாய் புன்னகை அவன் உதடுகளில் வந்து மறைந்தது. ஏனோ அந்தப் புன்னகை அவர் ரத்தத்தை உறைய வைப்பது போல் வில்லத்தனமாய் இருந்தது. உடனே அவர் அப்படி உணர்வது அர்த்தமில்லாதது என்று நினைத்தார். உண்மையில் அவர் கேட்ட கேள்வி அவன் மூளையை எட்டியிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இது போன்ற அதிகபட்ச காய்ச்சல் சமயத்தில் இப்படி நடப்பதுண்டு. ஏதோ ஒரு கற்பனைக் காட்சியில் நோயாளி சஞ்சரிப்பதுண்டு. அவன் கற்பனையில் என்ன பார்த்துப் புன்னகைக்கிறானோ என்று எண்ணியவராக அவர் மறுபடி அவனிடம் கேட்டார். “நான் கேட்டது புரிகிறதா? நீ யார்? உன் பெயர் என்ன?”

அவன் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். களைத்திருக்கிறான் என்பதாகத் தலைமை மருத்துவர் புரிந்து கொண்டார். நினைவு திரும்பி அவன் பெயரைச் சொல்லும் வரை அவன் எக்ஸ் தான்… முதலில் அவன் காய்ச்சலைக் குறைக்க வேண்டும், பின் அவன் உடலில் சக்தியை அதிகரிக்க வேண்டும், பிறகு தான் அவனுக்குச் சரியாக நினைவு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது…. அதற்கான மருந்துகளை அவன் உடலில் ஏற்ற உதவி மருத்துவரிடம் உத்தரவிட்டு விட்டுத் தன் அறைக்கு அவர் திரும்பினார்.

மறுபடியும் தன் மேசையிலிருந்த எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் அவர் எடுத்துப் படித்தார். முன்பு அவர் அனுமானத்திற்கு வந்திருந்தபடியே ஒரு ரிப்போர்ட்டில் கூட அவன் உயிர்பிழைக்கும் வாய்ப்பின் தடயம் கூட இல்லை. இவன் பிழைத்துக் கொண்டால் மருத்துவ உலகில் ஒரு அதிசயம் நிகழ்த்தியவனாகக் கருதப்படுவான் என்று தோன்றியது. உடனே அவர் இண்டர்காமில் அழைத்து அவன் உடல்நிலை ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியவுடன் மறுபடியும் ஸ்கேன்கள் செய்யச் சொன்னார்.


அவர் பார்வை கண்ணாடி ஜன்னல் வழியே வீதிக்கு போனது. இப்போது விலை உயர்ந்த கார்கள் அந்தத் தெருக்கோடிக் கட்டிடத்திலிருந்து சாரை சாரையாக வெளியே வந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடி சிறிது நின்று விட்டுப் பின் மற்ற நோயாளிகளைப் பார்க்க அவர் கிளம்பினார். திடீர் என்று கிதார் இசை நினைவுக்கு வந்தது. இப்போது அது கேட்கவில்லை. எப்போது நின்றது என்று தெரியவில்லை… என்னவோ எல்லாமே விசித்திரமாய் நடக்கின்றன என்று எண்ணியவர் அடுத்த ஒன்றரை மணி நேரம் எல்லா நோயாளிகளையும் பார்த்து விட்டு வரும் வரை மற்ற எல்லாவற்றையும் மறந்திருந்தார். கடைசியாக மறுபடியும் எக்ஸ் அறைக்குப் போனார்.

அவரைப் பார்த்தவுடன் அந்த உதவி மருத்துவர் சொன்னார். “ஒரு கட்டத்தில் 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சல் இப்போது தான் குறைய ஆரம்பித்திருக்கிறது. 103 டிகிரிக்கு வந்திருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்த மூளையின் ஸ்கேன் ரிப்போர்ட்கள் குழப்புகின்றன டாக்டர். அசாதாரணமான அதிகப்படியான செயல்கள் மூளையில் தெரிகின்றன…..”

அவர் சொல்லிவிட்டு ஸ்கேன் படங்களைக் காட்டிய போது தலைமை மருத்துவர் திகைப்பின் எல்லைக்கே போனார். அவர் அறையில் இருந்த ரிப்போர்ட்டுகளுக்கு நேர்மாறாக உச்சக்கட்ட அளவில் மூளைச் செயல்பாடுகள் இருந்தன. அவர் சொன்னார். “ஸ்கேனிங் மெஷினில் ஏதாவது பிரச்னை இருக்குமோ?”

உதவி மருத்துவர் சொன்னார். “நானும் அதைத் தான் கேட்டேன். ஸ்கேன் ஆபரேட்டர் மெஷின் சரியாகத் தான் இருக்கிறது, இந்த எக்ஸ் சூப்பர் மேனாக இருக்கலாம். யார் கண்டது என்று கிண்டலாகச் சொல்கிறான்….”

எக்ஸ் விஷயத்தில் எங்கோ ஏதோ குழப்பும்படியான தவறுகள் அல்லது பிரமிக்கும்படியான அதிசயங்கள் நடந்திருப்பதாக தலைமை மருத்துவர் நினைத்தார். 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சலும், மூளையின் அளவுக்கதிகமான செயல்பாடுகளும், சாகக்கிடந்த அவன் உயிர் பிழைத்திருப்பதும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது தலைசுற்றியது. இவன் இயல்புநிலைக்குத் திரும்பி வாய்திறந்து பேசினால் தான் பல விஷயங்கள் புரியும் என்று அவருக்குத் தோன்றியது.

தலைமை மருத்துவர் எக்ஸ் அருகே சென்று பார்த்தார். இப்போது அவன் உடல் சீரடைந்து வருவதாகத் தோன்றியது. மூச்சு சீராக இருந்தது. அவர் உதவி மருத்துவரிடம் சொன்னார். “அவன் இரவு நன்றாக உறங்கி ஓய்வு எடுக்கட்டும். நாளை காலையில் அவனிடம் பேசுவோம்…..”

அவர் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். செல்வதற்கு முன் ரிசப்ஸனில் எக்ஸைக் கேட்டு யாராவது போன் செய்தார்களா என்று கேட்டார். இல்லை என்று பதில் வந்தது. அவன் வீட்டார், நெருங்கியவர்கள் யாரும் டிவியில் அவனைக் குறித்து வெளியிட்ட செய்தியைப் பார்க்கவில்லை போல் இருக்கிறது….


டுத்தநாள் அதிகாலையிலேயே அவருடைய அலைபேசி இசைத்து அவரை உறக்கத்திலிருந்து எழுப்பியது. அவர் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். காலை மணி 5.05. அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அழைப்பு மருத்துவமனையிலிருந்து தான் வருகிறது. பேசினார். “ஹலோ”

நர்ஸ் ஒருத்தி பேசினாள். “டாக்டர், அந்தப் போதை நோயாளி எக்ஸைக் காணோம்”

திகைத்த அவர் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். சில சமயங்களில் இது போன்ற ஆட்கள் மயக்கநிலையில் எழுந்து நடப்பதுண்டு. வேறெதாவது அறைக்குச் சென்று படுத்திருக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தவராக அவர் கேட்டார். “ஆஸ்பத்திரியில் எல்லா இடங்களிலும் தேடினீர்களா?”

“எல்லா இடங்களிலும் பார்த்து விட்டோம் டாக்டர். இங்கு எங்கும் இல்லை”

எக்ஸ் ஏன் இப்படிப் படுத்துகிறான் என்று எண்ணியபடி அவர் சொன்னார். “போலீஸுக்கும் போன் செய்து தகவலைத் தெரிவித்து விடுங்கள். நான் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்.”

அவர் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த சமயம் எக்ஸை அங்கு கொண்டு வந்த போலீஸார் இருவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் நேற்றைய அதிசய நிகழ்வுகளை அவர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். பின் எக்ஸை யார் கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்று விசாரித்தார்கள். உதவி மருத்துவர் இரவு 10.30க்கு காய்ச்சல் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதித்ததாகவும் அப்போது 99 டிகிரிக்கு காய்ச்சல் இறங்கி இருந்ததாகவும் சொன்னார். நர்ஸ் ஒருத்தி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த போது எக்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னாள்.

கடைசியில் ஒரு போலீஸ்காரர் சொன்னார். “அந்த நேரத்திற்குப் பிறகு சிசிடிவி காமிராவில் பார்த்தால் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும்.”

அறைகளில் சிசிடிவி காமிராக்கள் இல்லை என்றாலும் வராந்தாக்களில் அந்தக் காமிராக்கள் இருந்தன. அறையை விட்டு யார் வந்தாலும், அறைக்குள் யார் சென்றாலும் அந்தக் காமிராக்களில் கண்டிப்பாகப் பதிந்திருக்கும் என்பதால் பரபரப்புடன் அந்த அறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் இரவு ஒன்றரை மணிக்குப் பிறகு பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

காமிராப்பதிவுகள் காலி வராந்தாவையே அதிகம் காட்டியது. நீண்ட இடைவெளிகளில் ஒரு நோயாளியோ, அவர் உடனிருப்பவரோ, நர்ஸ்களோ வராந்தாவில் தெரிந்தார்கள். ஆனால் அவர்கள் வந்து போனது வேறு அறைகளிலிருந்து தான்… யாரும் எக்ஸ் அறையிலிருந்து வெளியே வரவோ, உள்ளே போகவோ இல்லை… திடீரென்று எக்ஸின் அறையிலிருந்து எக்ஸ் வெளியே எட்டிப் பார்ப்பது தெரிந்தது. உடனே அவர்கள் அந்தக் காமிராப்பதிவு காட்டிய நேரத்தைப் பார்த்தார்கள். காலை மணி 3.37.

வெளியே வராந்தாவில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் எக்ஸ் மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் வராந்தாவைத் தாண்டிய காட்சி முடிந்ததும் மற்ற தொடர்பகுதிகளின் காமிராப்பதிவுகளை அவர்கள் பார்த்தார்கள். அவன் ஒரே ஒரு பகுதியில் மட்டும் ஒரு நர்ஸ் வருவதைப் பார்த்து மறைந்து நின்றான். அவள் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் வேகமாக அந்த அறையைக் கடந்தான். கடைசியில் மணி 3.48ல் அவன் மருத்துவமனையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

ஒரு போலீஸ்காரர் சொன்னார். “கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஆஸ்பத்திரியை விட்டுப் போய் விட்டான்….”

இன்னொரு போலீஸ்காரர் தலைமை மருத்துவரிடம் சொன்னார். ”அவன் பிழைக்க வழியே இல்லை என்றீர்கள். ஆனால் அவன் பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல ஒரே நாளில் உங்கள் ஆஸ்பத்திரியை விட்டு அவனாகவே நடந்து வெளியே போயிருக்கிறான்”

தலைமை மருத்துவர் சொன்னார். “நேற்றிலிருந்து அவன் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இனி நான் அவன் சிகிச்சைக் கணக்கை எப்படி மூடுவது? அவன் செத்திருந்தாலாவது அனாமதேய போதை மனிதன், அனாதைப் பிணம் என்று எழுதி முடித்திருப்பேன்”

“கவலைப்படாதீர்கள். உயிர் போகிற அளவுக்கு போதை மருந்து சாப்பிட்ட ஆள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதால் கண்டிப்பாக சீக்கிரமே மறுபடி சாப்பிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பான். அல்லது செத்தும் கிடக்கலாம். அப்போது பார்க்கலாம்…. அவன் இங்கே இருந்த சமயத்தில் வேறெதாவது வித்தியாசமாக நடந்திருக்கிறதா?...”

தலைமை மருத்துவர் சொன்னார். “யாரோ நிறைய நேரம் கிதார் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அது ஆஸ்பத்திரிக்குள்ளேயே வாசித்தது போல் தான் இருந்தது. அது யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எக்ஸுக்கும் சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எல்லோரும் காதால் கேட்டும், ஒருவராலும் அது எங்கிருந்து கேட்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது விசித்திரமாக இருந்தது….”


(தொடரும்)
என்.கணேசன்

9 comments:

  1. Starting itself very thrilling. How can we wait till next Thursday?

    ReplyDelete
  2. சுஜாதாJune 27, 2019 at 6:47 PM

    சும்மா தெறிக்க விடறீங்க கணேசன் சார். சஸ்பென்ஸ் தாங்கல.

    ReplyDelete
  3. Very interesting ganesan sir...

    ReplyDelete
  4. மூளையின் செயல்பாடு அதிகமாக இருக்கிறது என்றால்? அவன் விஸ்வமாகவே இருக்க வேண்டும்....

    ஏதோ ஒரு காரணத்திற்காக தான் 'ஜிப்சி' முன்பே.....விஸ்வத்தை இல்லுமினாட்டி இருக்கும் இடத்திற்க்கு வர சொல்லியிருக்கிறார்....அடுத்து ஜிப்சியுடன் சேர்ந்து என்ன மாதிரியான திட்டம் தீட்ட போகிறான் என தெரியவில்லை...

    எலியனின் மறு வரவு எப்போது என காத்துக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
  5. இவ்வளவு நாளும் நீங்கள் எழுதுகிற கதைகளை படிக்கும் போதெல்லாம் அடுத்த வியாழன் எப்போ வரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்து படிப்பது போல் வேறு நாவல்களை படித்ததில்லை.மிக்க நன்றி அண்ணா.

    ReplyDelete
  6. starting very interesting sir...

    ReplyDelete
  7. எப்போது அடுத்த வியாழன் வரும் என்று இருக்கிறது...காத்திருக்க முடியவில்லை.

    ReplyDelete
  8. Epo book release sir. Paraman ragasiyam mari online also or only paperback.

    Why not adding Eshwar [Param Ragasiyam hero] in any of the novel he is also equally good in Meditation stuff is it.

    ReplyDelete