சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 25, 2019

இல்லுமினாட்டி 6


டேனியல் என்ற போதை மனிதனை அழைத்துப் போக மருத்துவமனைக்கு வெளியே யாரும் காத்துக் கொண்டிருக்க வழியே இல்லை. அவனுடைய நண்பர்களோ, வேண்டப்பட்டவர்களோ இருந்திருந்தால் அவர்கள் போதையில் மயங்கி விழுந்திருந்த அவனை போலீசார் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் போடும் வரை காத்திருந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை அவன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட பின் அறிய நேர்ந்திருந்தால் உடனே மருத்துவமனைக்கே சென்று அவனைப் பார்த்திருப்பார்கள். தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் அவனைப் பார்க்கப் போகாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

அவன் மயங்கி சாகும் நிலையில் விழுந்து கிடந்த போதும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் அறிவிப்புகள் வெளியிட்டபின்னும் அவனைப் பார்க்க வராதவர்கள், அவன் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அந்த  அதிகாலை 3.48 மணி நேரத்தில், கடுங்குளிரில் அவனுக்காகத் தயார்நிலையில் காத்திருந்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

ஜான் ஸ்மித் சொன்னார். “அவன் வெளியே போனவுடன் என்ன நடந்தது, ஏன் அதன் பிறகு யாரும் அவனைப் பார்க்க முடியவில்லை என்பது உடனே தெரிந்தாக வேண்டும். இது மிக முக்கியம்”

“ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துக் கட்டிடங்களில் கூட கண்காணிப்புக் காமிரா பொருத்தப்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் கூடப் பார்த்தால் என்ன நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமல்ல சார்…”

“உடனே அதைச் செய்யுங்கள்”


றுநாள் காலை பத்தரை மணிக்கு அந்தப் போலீஸ் உயரதிகாரி ஜான் ஸ்மித் வீட்டுக்கு நேரடியாகவே வந்தார். அந்த மருத்துவமனைக்கு பக்கத்துக் கட்டிடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் காமிராக்களிலிருந்தும், தெருமுனைச் சந்திப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் காமிராவிலிருந்தும் எடுத்த வீடியோக்களை இணைத்துக் கொண்டு வந்திருந்தார்.

மருத்துவமனை இருந்த தெருமுனைச் சந்திப்பில் இருந்த  வீடியோவில் அதிகாலை 3.30க்கு ஒரு கருப்பு நிறக்கார் அந்தத் தெருவில் நுழைந்தது தெரிந்தது. மருத்துவமனையிலிருந்து இரண்டு கட்டிடங்கள் தள்ளி எதிர்ப்புறம் நின்றது இன்னொரு வீடியோவில் தெரிந்தது. அப்போது மணி 3.31. அந்தக் காரிலிருந்து யாரும் இறங்கவில்லை. காரின் கதவுக் கண்ணாடிகள் கூட இறக்கப்படவில்லை. உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 3.48 லிருந்து 3.49 வரை டேனியல் நிதானமாக நடந்து சென்று, கார்க்கதவைத் திறப்பதும் காரில் ஏறுவதும் இரண்டு கட்டிடங்களிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களில் தெரிந்தன. கதவு திறக்கப்பட்டு மூடப்படுவதற்கு முன்னான சில வினாடிகளில் கூட காரின் உள்ளே இருப்பது யாரென்று தெரியவில்லை. 3.50க்கு கார் மருத்துவமனையைக் கடந்து சென்றது.

ஜான் ஸ்மித் திகைப்போடு வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பின் மெல்லக் கேட்டார். “இந்த வீடியோக்களில் காரின் ரெஜிஸ்டர்டு நம்பர் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?”

அந்தப் போலீஸ் உயரதிகாரி சொன்னார். “அதைக் கண்டுபிடிப்பது பெரிய கஷ்டமான காரியமில்லை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் காமிராக்களில் ஏதாவது ஒன்றில் பார்க்க முடியலாம். ஆனால் காரோட்டி வந்திருக்கும் ஆளின் உத்தேசம் தன்னைப் பற்றிய ரகசியத்தைக் காப்பது என்றிருக்குமானால் போலி நம்பர் ப்ளேட்டை மாட்டிக் கொண்டு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்…”  

ஜான் ஸ்மித் சிறிது நேரம் மௌனமாக யோசித்து விட்டுச் சொன்னார். ”டேனியல் ஃபிராங்பர்ட்டில் இருக்கும் அவன் நண்பர்களிடம் சென்றாலோ தொடர்பு கொண்டாலோ, வேறெங்கேயாவது தென்பட்டாலோ எனக்கு உடனடியாகத் தெரிவியுங்கள்.”

“அதற்கு நான் ஏற்பாடு செய்து விட்டுத் தான் வந்திருக்கிறேன் சார்”

“நன்றி. எனக்கு இன்னொரு உதவியும் தேவைப்படுகிறது….” என்று ஆரம்பித்தவர் மருத்துவமனையில் கேட்ட கிதார் இசையைப் பற்றிச் சொன்னார். அது ஆவியை வரவழைக்கும் இசையாக அந்த இசைப்பிரியர் சொன்னதை அவர் தெரிவிக்கவில்லை. அது தேவையில்லை என்று நினைத்தார். ”அந்த கிதார் இசையை வாசித்தது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் அதைக் கேட்டிருக்கிறார்கள். எனக்கேனோ அந்த கிதார் வாசித்த ஆளுக்கும் டேனியலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம் என்று உள்ளுணர்வு சொல்கிறது. அதை அந்த ஆஸ்பத்திரியில் வாசித்த ஆள் யார் என்று  கண்டுபிடிக்க முடியுமா?”

“கண்டிப்பாக முயற்சி செய்கிறோம் சார்” என்ற அந்தப் போலீஸ் உயரதிகாரி வணக்கம் தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.

அவர் போன பிறகு ஜான் ஸ்மித் கண்களை மூடிக் கொண்டு யோசித்தார். நடந்திருப்பது எதுவும் இயல்பாகத் தெரியவில்லை. டேனியலை அழைத்துச் செல்ல யாரோ அந்த அகால நேரத்தில் வந்திருப்பது ஆச்சரியம் என்றால், அவன் வந்த சிறிது நேரத்தில் டேனியல் மருத்துவமனையை விட்டு வெளியேறியது அதைவிடப் பெரிய ஆச்சரியம். காரில் வந்திருந்தது ஒருவரா, பலரா என்று தெரியவில்லை. அவர்கள் அலைபேசியில் அவனை அழைத்திருக்க வழியில்லை. ஏனென்றால் டேனியலிடம் அலைபேசி உட்பட எதுவுமே இருக்கவில்லை. ஆனாலும் கார் வந்திருப்பது தெரிந்தது போல டேனியல் கிளம்பியிருக்கிறான். இது டேனியலின் இயல்புக்கோ நிலைமைக்கோ பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை. டேனியலை அழைத்துச் செல்ல வந்த ஆளே அல்லது ஆட்களே கூட அந்தக் கிதார் வாசிப்புக்கும் காரணமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது…. மேலும் அந்த மருத்துவமனையில் நடந்திருப்பது எல்லாவற்றிலும் நேற்றைய இல்லுமினாட்டிக் கூட்டத்தில் இறந்து போன அசாதாரணமான மனிதனின் அடையாளமே தெரிவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. யோசிக்க யோசிக்க அந்தக் குளிரிலும் அவருக்கு வியர்த்தது. நடந்திருப்பதை இல்லுமினாட்டியின் தலைமைக்குத் தெரிவித்தே ஆக வேண்டும்…

இல்லுமினாட்டியின் தலைவர் எர்னெஸ்டோவின் உதவியாளருக்கு ஜான் ஸ்மித் போன் செய்தார். எர்னெஸ்டோவும், இல்லுமினாட்டியின் உபதலைவரும் வாஷிங்டன் போயிருப்பதாகவும், நாளை தான் இருவரும் திரும்பி வருவார்கள் என்றும் அந்த உதவியாளர் சொன்னார்.

எர்னெஸ்டோ வரும் வரை காத்திருப்பதைத் தவிர ஜான் ஸ்மித்துக்கு வேறு வழியில்லை….


றுநாள் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எக்ஸைச் சேர்த்த போலீஸ்காரர்களில் ஒருவருக்குப் போன் செய்து விசாரித்தார். “அந்த எக்ஸ் பற்றி எதாவது தகவல் தெரிந்ததா?”

“அந்த எக்ஸின் பெயர் டேனியல் என்றும், ஃபிராங்பர்ட்டில் வசிப்பவன் என்றும் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அவன் ஒரு ஸ்பெஷலான ஆளாய் இருப்பான் போலத் தெரிகிறது. அவனைக் கண்டுபிடிக்க மேலிடத்தில் எங்கள் டிபார்ட்மெண்டையே முடுக்கி விட்டு இருக்கிறார்கள்….”

தலைமை மருத்துவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஏன் அவன் பெயரில் பெரிய கேஸ் ஏதாவது இருக்கிறதா என்ன?”

”எங்களுக்குத் தெரிந்த வரை அப்படித் தெரியவில்லை. சின்னக் கேஸ்கள் இருக்கலாம். ஆனால் அவனோடு பெரிய ஆள் யாராவது சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்….”

அவன் பெயர் தெரிந்த பிறகும் தலைமை மருத்துவருக்கு அந்தப் பெயர் அன்னியமாகவே பட்டது. அவர் மனம் இன்னும் அவனை எக்ஸாகவே நினைத்தது. இந்த எக்ஸ் விஷயத்தில் எல்லாமே குழப்பமாகவே இருக்கிறதே. அவன் எந்தப் பெரிய ஆளோடு சம்பந்தப்பட்டிருப்பான் என்று யோசித்தபடி இருந்த போது போலீஸ் உயரதிகாரி ஒருவர் மிடுக்குடன் மருத்துவமனைக்கு வந்தார். அவர் எல்லோரையும் கேட்ட கேள்விகள் முந்தாநாள் மருத்துவமனையில் கேட்ட கிதார் இசையைப் பற்றியதாக இருந்தன.

தலைமை மருத்துவரை அதுவும் ஆச்சரியப்படுத்தியது. அந்தக் கிதார் இசை அவரிடம் எழுப்பிய ஆர்வத்தை போலீஸாரிடமும்  ஏற்படுத்தி இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படியானால் அதிலும் ஏதோ இருக்கிறது. ஏன் இந்த மருத்துவமனையில் என்னென்னவோ நடக்கிறது. எல்லாமே அமானுஷ்யமாக எல்லாம் நடக்கிறது…..  

அந்த உயர் போலீஸ் அதிகாரி ஒரு மணி நேரம் தான் அந்த மருத்துவமனையில் இருந்தார். அவர் தலைமை மருத்துவர் உட்பட பலரிடம் அந்த இசை கேட்ட விதம், இடம் பற்றி கேள்விகள் கேட்டார். அவர்கள் சொன்னதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்ட அவர் பிறகு போய் விட்டார்.




ந்தப் போலீஸ் உயரதிகாரி அடுத்த ஐந்தாவது நிமிடம் ஜான் ஸ்மித்துக்குப் போன் செய்து சொன்னார். “சார். உண்மையில் யாரும் அந்தக் கிதார் இசையை அந்த ஆஸ்பத்திரிக்குள் வாசித்த மாதிரி தெரியவில்லை. ரிகார்ட் செய்த இசையை யாரோ ஆஸ்பத்திரிக்குள் ஒலிக்க விட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இப்போது சவுண்ட் டெக்னாலஜி நிறைய முன்னேறி இருக்கிறது. அது எங்கிருந்து கேட்கிறது என்று தெரியாதபடி மறைத்து ஒட்டு மொத்தமாகக் கேட்பது போல் ஒலிக்க வைக்க முடியும். அது அங்கே நடந்திருக்க வாய்ப்பு அதிகம்…”

ஜான் ஸ்மித் திகைத்தார். அப்படியானால் டேனியலை அழைத்துப் போக வந்தது மட்டுமல்லாமல் முந்தின நாளே வந்து அந்த மருத்துவ மனையில் திட்டமிட்டு நுழைந்து யாரோ அந்தக் கிதார் இசையை ஒலிக்கவும் விட்டிருக்கிறார்கள். யாரது?

(தொடரும்)
என்.கணேசன்

9 comments:

  1. Very thrilling... Waiting for next episode eagerly as always..

    ReplyDelete
  2. அப்போது விஸ்வம் இறப்பான் என்று முன்கூட்டியே தெரிந்திருக்கிறது... படிக்கும் எங்களுக்கும் ஆச்சரியத்தை தருகிறது...

    ReplyDelete
  3. Mugundhan AnnaduraiJuly 26, 2019 at 8:41 AM

    யாரது?

    ReplyDelete
  4. Sir, I would frankly sat this is the worlds best thriller story. Hats off to you Sir!

    ReplyDelete
  5. That gitar person is that jipsi..he is driving the story right now... interesting

    ReplyDelete
  6. That gitar person is that jipsi..he is driving the story right now... interesting

    ReplyDelete
  7. Comment எழுதக்கூட எனக்கு நேரமில்லை. அவ்வளவு வேகமாக கதை செல்கிறது

    ReplyDelete