சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, July 24, 2019

இழப்பில்லாத உயர்பெரும் நிலை!



னிதன் தன் வாழ்க்கையில் அமைதியையும் ஆனந்தத்தையுமே தேடுகிறான். அதற்கான முனைப்பிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்கிறான். அவன் தேடும் அமைதியும் ஆனந்தமும் ஓரளவிலாவது சில சமயங்களில் கிடைக்கவும் செய்கிறது. ஆனால் கிடைத்தது எத்தனை காலம் நீடிக்கிறது? நீர்க்குமிழியில் தெரியும் வர்ண ஜாலங்கள் எப்படி நீடித்து நிற்காதோ அப்படியே அவனுடைய மகிழ்ச்சியும் நீடித்து நிற்பதில்லை. கண நேரத்தில் தாறுமாறாக ஏதாவது நடந்து காணாமல் போகிறது. கிடைத்து இழப்பது கூடுதல் கொடுமை. மகிழ்ச்சி கிடைப்பதற்கு முன்பிருந்ததை விட அதிக துக்கத்தில் அவன் ஆழ்ந்து போக நேரிடுகிறது.

ஓரளவு மகிழ்ச்சி கிடைப்பதைத் தக்க வைப்பதே பெரும்பாடு என்கிற நிலையில் கிடந்து உழலும் மனிதனுக்கு பேரானந்தமும், பேரமைதியும் இருக்கும் ஒரு உன்னத நிலைமை கிடைக்க வழி இருக்கிறது என்றும் கிடைத்ததை அவன் பிறகு என்றென்றைக்கும் இழக்க வேண்டியதில்லை என்றும் பகவத் கீதை சொல்கிறது. அதற்கு என்ன வழி? பிறவிப் பெருங்கடலுக்குத் திரும்பி வரவேண்டியிருக்காதபடி இறைவனுடைய பரமபதத்தைச் சென்றடைவது தான்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

எதை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லையோ, அந்த சுயப்பிரகாசமான பரமபதத்திற்கு சூரியன் ஒளிதருவதில்லை; சந்திரன் ஒளிதருவதில்லை; அக்னி தேவனும் ஒளிதருவதில்லை. அது என்னுடைய உயர்ந்த ஸ்தானமான பரமபதமாகும்.

அந்த உயர்ந்த நிலை தன்னிறைவானது. அதற்கு வெளியிலிருந்து எந்த உதவியும் தேவையில்லை. ஒளிமயமான அந்த இடத்திற்கு சூரியன் சந்திரன் அக்னி முதலானவர்கள் அவசியமில்லை. அந்தப் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைந்த பின் திரும்பி கீழ் இழுக்கப்படுவோம் என்ற பயமும் தேவையில்லை. 

சரி இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டி அந்த உயர்நிலையை எப்படி அடைவது? இப்போது மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய நிலை எப்படி இருக்கிறது? இந்த நிலையிலிருந்து அந்த உயர்நிலைக்கு எப்படிப் போய்ச் சேர்வது என்ற கேள்விகள் எழுகிறதல்லவா? அதற்கு அடுத்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் பதில் சொல்கிறார்:

இவ்வுடலில் என்றுமுள்ள ஜீவாத்மா எனது அம்சமே. அதுவே சரீரமாகிய பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களை இங்குமங்கும் இழுத்துச் செல்கிறது.

காற்று மலர்களிலிருந்து வாசனையை எப்படி எடுத்துச் செல்கிறதோ அப்படியே உடலை ஆளும் ஜீவாத்மாவும் அந்த உடலில் இருந்து கிளம்பி இன்னொரு உடலை அடையும் போது மனதோடு கூடிய புலன்களை எடுத்துச் செல்கிறது.

அங்கு இந்த ஜீவாத்மா காது, கண், சருமம், நாக்கு, மூக்கு, மனம் சார்ந்து கொண்டு அவற்றின் உதவியுடன் தான் புலன்நுகர்ப் பொருள்களை அனுபவிக்கிறது.

உடலை விட்டுச் செல்லும் போதும், உடலில் இருக்கும் போதும், போகங்களை அனுபவிக்கும் போதும் இந்த ஜீவனை அறிவிலிகள் அறிவதில்லை. ஞானக்கண் பெற்றவர்கள் தான் அதைக் காண்பார்கள்.
யோகிகளும் முயற்சி செய்தே தம் உடலில் உறைந்திருக்கும் ஆத்மாவை அறிகிறார்கள். மனம் பக்குவமடையாத அஞ்ஞானிகளோ முயன்றாலும் கூட இந்த ஆத்மாவை அறிவதில்லை.

அழியும் உடலில் அழியாமல் குடிகொண்டிருப்பது ஜீவாத்மா. அது பரமாத்மாவின் ஒரு அம்சமே. அது புலன்களோடு, மனமும் சேர்ந்து அரங்கேற்றும் நாடகத்தில் தன்னை மறந்து பாத்திரதாரியாக இருக்கிறது. அதன் சுகதுக்கங்களை அனுபவிக்கிறது. ஒரு பிறவி முடிந்து இன்னொரு பிறவிக்குள் புகும் போதும் பழைய கணக்கை, பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டே போகிறது. மறுபடியும் புதிய உடலில், புதிய சூழலில் இன்னொரு நாடகத்தில் வேறொரு பாத்திரதாரியாக மாறுகிறது. இந்தப் புதிய புதிய உடல்களில் புதிய புதிய நாடகங்களில் வேடங்களைத் தானாகவே பாவித்து மதிமயங்கும் ஜீவாத்மா அழிவில்லாத பரமாத்மாவின் ஒரு அம்சமே தான் என்பதைப் பக்குவமடையாத வரை உணர்வதில்லை.

சொல்லப் போனால் அமைதியும் ஆனந்தமும் ஆத்மாவின் இயல்புநிலையே. அந்த ஈர்ப்பு தான் அவற்றை மறுபடி பெற்றுக் கொள்ள மனிதனைத் தூண்டுகிறது. அதை நிரந்தரமாக மீட்டெடுக்க அவனுக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த இறைவனின் பரமபதமே. ஆனால் மனிதர்கள் அந்த ராஜபாட்டையை விட்டு விட்டு குறுக்கு வழிகளிலும் சந்து பொந்துகளிலும் போய் அடையப் பார்க்கிறார்கள்.

பரமாத்மாவின் அம்சமாகத் தன்னைச் சரியாக ஜீவாத்மா உணராத வரை மனம் பக்குவமடைவதில்லை. மனம் பக்குவமடையாத வரை ஐம்புலன்களால் கிடைக்கும் இன்பமே பெரிதென மயங்கிக் கிடக்கும். ஞானம் தன்னை அறிதலில் இருக்கிறது. தன்னை அறியும் போது என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் நிகழ்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிந்த பின் மனமும் ஒத்துழைக்க ஆரம்பித்து முறையான முயற்சிகள் சாத்தியமாகிறது. முறையான முயற்சிகளின் முடிவிலேயே பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடிகிறது.    

ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருப்பதில் இரண்டு மிக முக்கியமான தேவைகளாக இருக்கின்றன. ஒன்று தெளிவடைந்த மனம் இன்னொன்று முயற்சி. இரண்டில் ஒன்று இல்லா விட்டாலும் ஆத்மஞானமும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய நிலைத்த ஆனந்தமும் ஒருவன் அடைய முடியாது. இதற்கு எத்தனையோ நிகழ்கால உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியே பார்க்கலாம்.

சிலர் நிறைய படித்திருப்பார்கள். நிறைய அறிந்திருப்பார்கள். உதாரணங்களுடன் பேருண்மைகளைச் சொல்லக்கூடிய அளவு அறிவு முன்னேற்றமும் இருக்கும். ஆனால் அவர்கள் நடந்து கொள்வதும், வாழும் முறையும் அவர்கள் அறிந்ததற்குப் பொருத்தமில்லாததாக இருக்கும். காரணம் அவர்களிடம் அறிந்ததை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வரும் முயற்சியிருக்காது. வேறு சிலர் ஒன்றன் பின் ஒன்றாகப் பல முயற்சிகளில் தீவிரமாக இருப்பார்கள். இன்று யோகா பயிற்சிக்குப் போவதாகச் சொல்வார்கள். இன்னொரு நாள் விபாசனா தியானம் செய்வதாகச் சொல்வார்கள். பிறிதொரு சமயம் ஏதோ ஒரு புதிய இயக்கத்தில் சேர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். மாறி மாறி ஏதாவது செய்து கொண்டே இருந்தாலும் கூட அவர்கள் முயற்சிகள் தோல்வியிலேயே  முடியும். காரணம் மனதில் தெளிவோ, பக்குவமோ இல்லாதிருப்பதாகத் தான் இருக்கும்.

பாதை நீளும்….

என்.கணேசன்



1 comment:

  1. அருமையான விளக்கம்... நன்றி

    ReplyDelete