சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 3, 2019

சத்ரபதி 75


திப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களை எதிர்க்க நேர்வது மிகவும் தர்மசங்கடமானது. அதையே ஷாஹாஜியின் நெருங்கிய நண்பரும் மராட்டிய வீரருமான சுந்தர்ராவ் காட்கே விஷயத்திலும் சிவாஜியும் உணர்ந்தான். அவரை அவன் பீஜாப்பூரில் சந்தித்திருக்கிறான். அவருடன் பழகியிருக்கிறான். பீஜாப்பூர் சுல்தானுக்காகத் தீவிரமாகப் போராடித் தோற்ற அவரை அவன் படை கைது செய்த தகவல் கிடைத்ததும் சிறிதும் தாமதிக்காமல் சிவாஜி விரைந்து அங்கு சென்றான். கைதியாக நின்றிருந்த அவரது காலில் அவன் விழுந்து வணங்கிய போது பீஜாப்பூர் வீரர்கள் திகைத்து நின்றார்கள். தோற்றவர் காலில் வென்றவர் விழுந்து வணங்கி அவர்கள் இதுவரை கண்டதில்லை.

சுந்தர்ராவ் காட்கேயும் அவன் வணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. மனம் நெகிழ்ந்தவராக அவனை அவர் ஆசிர்வதித்தார். சிவாஜி உணர்வுபூர்வமாகச் சொன்னான். “ஐயா, தங்களது ஆசியை என் தந்தையே நேரில் வந்து வழங்கிய ஆசியாக உணர்கிறேன்”

சுந்தர்ராவ் காட்கே அவனைச் சிறுவனாக முதன் முதலில் பீஜாப்பூரில் பார்த்த நாட்களை நினைவுகூர்ந்தார். அவன் பீஜாப்பூர் அரண்மனையில் பேசிய அறிவார்ந்த பேச்சுக்கள் அவருக்கு இப்போதும் பசுமையாக நினைவு இருந்தன. தோற்றத்தில் சிவாஜி நிறையவே மாறிவிட்டான். கம்பீரமான இளைஞனாகவும், மாவீரனாகவும் உருவாகியிருக்கிறான்…. வெற்றியிலும் கர்வம் இல்லை. பணிவிருக்கிறது…. கண்டிப்பாக இவன் இன்னும் நிறைய உயர்வான் என்று அவருடைய அனுபவம் சொன்னது.

சுந்தர்ராவ் காட்கே சொன்னார். “வணங்கியவர்களை வெறும் கையில் ஆசி வழங்கும் வழக்கம் நம்மிடம் இல்லை என்றாலும் என் நிலைமை தற்போது அந்த வகையிலேயே இருக்கிறது சிவாஜி. உனக்குத் தர என்னிடம் ஆசியைத் தவிர வேறெதுவும் இல்லை”

“ஐயா. தாங்கள் நினைத்தால் இப்போதும் எனக்குப் பரிசு வழங்க முடியும்” என்று சிவாஜி புன்னகையுடன் சொன்னான்.

சுந்தர்ராவ் காட்கே குழப்பத்துடன் அவனைப் பார்த்த போது சிவாஜி சொன்னான். “என் பக்கம் நீங்கள் சேர்ந்தால் அதையே நான் பெரும்பரிசாக எண்ணுவேன் ஐயா….”

சுந்தர்ராவ் காட்கே சோகமாகப் புன்னகைத்தார். “வெற்றி தோல்விகள் வீரனுக்கு என்றும் சகஜம் தான். இரண்டில் எது வந்தாலும் தரம் தாழ்ந்து விடாமல் இருப்பதே ஒரு வீரனுக்குப் பெருமை சிவாஜி. நான் பீஜாப்பூர் சுல்தானிடம் பல காலமாகச் சேவகம் செய்தவன். அந்த அரசின் சுபிட்சமான காலங்களில் பல நன்மைகளை அங்கு அனுபவித்தவன். கஷ்ட காலத்தில் நான் அணி மாறினால் என்னையே என்னால் மன்னிக்க முடியாது. நீ வணங்கியதிலும், உன் அணிக்கு அழைத்ததிலும் மிக மகிழ்ச்சி. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நான் இல்லை.”

“சரியான இடத்திற்குக் காலம் கடந்தாவது சென்று சேர்வது நல்லதல்லவா ஐயா”

“சரியும், தவறும், இருந்து பார்க்கும் இடங்களுக்கேற்ப வித்தியாசப்படும் சிவாஜி. என்னைப் பொருத்த வரை நான் இருக்கும் இடமே எனக்குச் சரி. நீ இப்போது என்னைச் சிறைப்படுத்தினாலும் அதில் நான் தவறு காண மாட்டேன். ஒரு வீரனாக என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும்…. உன் வேண்டுகோளை ஏற்க முடியாததற்கு என்னை மன்னித்து விடு சிவாஜி….”

அவரிடம் அதற்கு மேல் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்த சிவாஜி அவருக்குப் பொற்காசுகளும், பரிசுகளும் தந்து கௌரவித்து, அவரை பீஜாப்பூர் எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அங்கு விட்டு வர ஆணையிட்டான்.

திகைத்து நின்ற சுந்தர்ராவ் காட்கேயை மீண்டும் வணங்கி விட்டு சிவாஜி அங்கிருந்து நகர்ந்தான். அங்கிருந்து வந்த சிவாஜி தன் படைத்தளபதிகளுக்குத் தெளிவாக ஆணையிட்டான். “சரணாகதி அடைபவர்கள் யாரையும் துன்புறுத்த வேண்டாம். அவர்களது ஆயுதங்களையும், குதிரைகள், யானைகளையும் பறித்துக் கொண்டு இங்கிருந்து செல்ல அவர்களை அனுமதியுங்கள். வரும் போது அளித்த உணவு உபசரிப்பே இங்கிருந்து செல்லும் வழியிலும் அவர்களுக்கு செய்து தாருங்கள். நம்முடன் இணைய விரும்புபவர்களை தரமறிந்து இணைத்துக் கொள்ளுங்கள். காயப்பட்ட நம்மவர்களுக்குச் செய்து தரப்படும் சிகிச்சை சரணடைந்தவர்களுக்கும் செய்து தர வேண்டும். நடக்க முடியாதவர்கள், காயப்பட்டவர்களுக்கு மட்டும் பயணிக்க அவர்களது குதிரைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்…..”

அப்சல்கானுடன் அங்கு வந்த அவனுடைய மூன்று மகன்களில் இருவர் சிறைப்படுத்தப்படுத்தனர். ஆனால் மூத்த மகன் ஃபசல்கான் காயப்பட்டும் சிக்காமல் தன் சில வீர்ர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிய செய்தி சிவாஜியை வந்து சேர்ந்தது.

சிவாஜி யோசனையுடன் கேட்டான். “அவனால் எப்படித் தப்பிக்க முடிந்தது? அது அவ்வளவு சுலபமில்லையே. அவர்களுக்கு இந்த மலைக்காடுகள் புதிது. வழியும் சரியாகத் தெரியாது. நம் ஆட்கள் அறியாமல் அவன் தப்பிக்க முடிந்திருக்காதே…”

செய்தியைக் கொண்டு வந்த வீரன் தயக்கத்துடன் சொன்னான். “ஃபசல் கான் நம் ஆள் கண்டோஜி கோபடேக்கு பொற்காசுகளும், நகைகளும் தந்து அவன் உதவியோடு தான் தப்பி ஓடியிருக்கிறான் என்ற தகவல் வந்திருக்கிறது மன்னா. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் அவன் கண்டோஜி கோபடேயின் கிராமம் தாண்டித் தான் போயிருக்கிறான் என்பது தெரிய வந்திருக்கிறது…”

கண்டோஜி கோபடே அந்த மலைக்காட்டுப் பகுதிக் கிராமம் ஒன்றின் தலைவன். சிவாஜி சொன்னான். “கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை வீரனே.   கண்டோஜி கோபடேயைத் தாண்டி அப்சல்கான் மகன் போயிருக்கிறான் என்றால் அது அவன் அனுமதியுடனேயே நடந்திருக்க வேண்டும்.”

சிவாஜி உடனடியாக கண்டோஜி கோபடேக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டான். எதிரி எதிரியைப் போல நடந்து கொள்வது வெறுக்கத் தக்கதல்ல. எதிர்ப்பதும், போராடுவதும், சூழ்ச்சி செய்வதும், சதி செய்வதும் எதிரி அவனுடைய தரத்திற்குத் தகுந்தாற்போல் செய்யும் காரியங்களே. அது எதுவும் நடக்கா விட்டால் அவன் எதிரியே அல்ல. ஆனால் உண்ட வீட்டில் இரண்டகம் நினைப்பதும், நம்பிக்கைத் துரோகம் செய்வதும், காட்டிக் கொடுப்பதும், பகைவனுக்கு உதவுவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். அதைக் கடும் தண்டனையுடன் ஒரு அரசன் தடை செய்ய வேண்டும். அலட்சியப்படுத்தினால் பலரும் அதைச் செய்யத் தைரியம் பெறுவார்கள். அதை அனுமதிக்க முடியாது.

சிவாஜி இந்த முறை பீஜாப்பூர் படையிலிருந்து பெற்றவை ஏராளம். நூறு யானைகள், ஏழாயிரம் குதிரைகள், ஆயிரம் ஒட்டகங்கள், ஏராளமான பணம், நகைகள், தங்கக்காசுகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆகியவற்றுடன் பீஜாப்பூர் படைவீரர்களும் கும்பல் கும்பலாக சிவாஜி படையில் இணைந்து கொண்டார்கள். காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தந்தது, தங்கள் நாட்டுக்குத் திரும்ப வசதிகள் செய்து தந்தது, மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டது எல்லாமாகச் சேர்ந்து புதியதொரு தரமான தலைவனை அவர்களுக்கு அடையாளம் காட்டியது. அதனால் பலர் மனம் மாறி சிவாஜி படையில் இணைந்தார்கள்.

எதிரணியில் இருந்து போராடித் தோற்ற பின்பும் அணிமாற விருப்பமில்லாத சுந்தர்ராவ் காட்கே சகல மரியாதைகளுடன் பீஜாப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டது, சொந்த அணியில் இருந்த போதும் துரோகம் இழைத்த கண்டோஜி கோபடேக்கு மரண தண்டனை விதித்தது, மஹாபலேஸ்வரில் அப்சல்கான் வீரனுக்குரிய கௌரவத்துடன், அவன் மத வழக்கப்படியே புதைக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் சிவாஜியை பல வித்தியாச கோணங்களில் அவனைச் சுற்றி உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தியது….


சிவாஜியிடமிருந்து ஒரு வீரன் வந்திருப்பதாக தாதிப் பெண் வந்து சொன்ன போது ஜீஜாபாய் பிரார்த்தனையில் இருந்தாள். சிவாஜியிடமிருந்து என்ன செய்தி வந்திருக்கும் என்ற கவலையில் அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. இறைவனைக் கைகூப்பி எழுந்தவள் வேகமாக வெளியே வந்தாள். சிவாஜியிடம் இருந்து வந்த வீரன் அவளுக்குப் பரிசுப் பொருள் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். ஆனால் அந்தப் பரிசுப் பொருளை அவள் கையில் தராமல் அவளுடைய காலடியில் அவன் வைத்த போது ஜீஜாபாய் அந்த வீரனைக் கேள்விக்குறியோடு பார்த்தாள்.

அவளை வணங்கி விட்டு அந்த வீரன் பட்டுத் துணியில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பரிசுப் பொருளை அவள் காலடியிலேயே பிரித்தான். அது அப்சல்கானின் தலையாக இருந்தது. அந்தத் தலையைப் பார்த்ததும் அவள் பின்னாலேயே ஆவலுடன் இருபக்கமும் வந்து நின்றிருந்த சாய்பாயும், சொர்யாபாயும் இரண்டு அடிகள் பின் வாங்கினார்கள். ஆனால் ஜீஜாபாய் பின் வாங்கவில்லை. அவளுடைய ஒரு மகனைக் கொன்று, இன்னொரு மகனைக் கொல்ல முயற்சித்தவனின் தலையை அவளுடைய காலடியில் பார்க்க முடிந்ததற்கு அவளும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தினாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோர்த்தது.


உணர்ச்சிப் பெருக்குடன் அந்த வீரனிடம் சொன்னாள். “சிவாஜியிடம் சென்று ’அவனைப் பெற்றதற்கு அவன் தாய் பெருமைப் படுகிறாள்’ என்று சொல் வீர்னே!”

 (தொடரும்)

என்.கணேசன்  

2 comments:

  1. Your writing style is great in the sense that you write like a impartial observer telling the plus and minus of both sides.Sivaji- Sundar Rao's dialogues are super sir. Very nice UD.

    ReplyDelete
  2. சிவாஜி வெற்றி பெற்றதும் 'வெற்றியின் தலைகணம்' ஏதுமின்றி செயல்பட்ட விதம் அற்புதம்... துரோகிக்கு மரண தண்டனை கொடுக்கும் இடமும் சிறப்பு....

    ReplyDelete