சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 15, 2019

சத்ரபதி 68

வர்களது ஆர்வத்தைக் கவனித்த கிருஷ்ணாஜி பாஸ்கர் திருப்தியுடன் தொடர்ந்தார்.

“இருபுறமும் பேரழிவை ஏற்படுத்தும் போரை மாவீரர் அப்சல்கானும் விரும்பவில்லை. போரில் அவர் பக்கம் வெற்றி நிச்சயம் என்று அறிந்தே இருந்தாலும் தன் நண்பரின் மகனான உங்கள் அழிவைக் காணவும் அவர் மனம் விரும்பவில்லை. ஏற்கெனவே ஒரு மகனைக் காலனுக்குப் பலி கொடுத்து அந்தத் துக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தங்கள் தந்தைக்கு மேலும் ஒரு துக்கத்தை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை.  தங்கள் தந்தை எந்தப் பக்கம் இருக்கிறாரோ அதே பக்கம் தாங்களும் இருப்பது தர்மமும் புத்திசாலித்தனமும் என்று நினைவுபடுத்தி போரையும், உங்கள் அழிவையும் தவிர்க்க அமைதி வழிக்குத் திரும்பச் சொல்கிறார்.”

”வாய் பகுதியில் தங்கியிருக்கும் மாவீரர் அப்சல்கானுடன் பேச்சு வார்த்தைக்கு அமைதிக்கரம் நீங்கள் நீட்டி வருவீர்களானால் தாங்கள் பிடித்த கோட்டைகளை தங்கள் வசமே வைத்துக் கொள்ள பீஜாப்பூர் சுல்தானிடம் தானே சிபாரிசு செய்து சகல மரியாதைகளுடன் பீஜாப்பூர் அரசவையில் தங்களுக்கு உயரிய பதவி ஒன்றையும் பெற்றுத் தர முயல்வதாய் மாவீரர் அப்சல்கான் உறுதியளிக்கிறார். இனி எந்த பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் பகுதியையும் கைப்பற்ற மாட்டேன் என்கிற ஒரு வாக்கை மட்டும் தாங்கள் பீஜாப்பூர் சுல்தானுக்குத் தந்தால் போதும் என்கிறார்.”

“அரசே! வாழ்வில் அதிர்ஷ்டம் அடிக்கடி வருவதில்லை. அமைதிப் பூங்கொத்தோடு அது எப்போதுமே வருவதில்லை என்பது யதார்த்தம். அப்படி இருக்கையில் அதி அபூர்வமாக அமைதியோடு வந்திருக்கும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருபக்கமும் அழிவைத் தவிர்க்க இந்தப் பேச்சு வார்த்தைக்கு உடனடியாக வரும்படி மாவீரர் அப்சல்கான் சார்பாக நான் தங்களிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

சிவாஜி கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் “மாலை நேரமாகி விட்டது. தாங்கள் தங்கி இளைப்பாறி விட்டு நாளை செல்லுங்கள் தூதுவரே. நான் என் பதிலை என் தூதுவர் மூலம் மாவீரர் அப்சல்கானுக்கு அனுப்புகிறேன். அவரும் நாளை உங்களுடனேயே அங்கு வருவார்” என்று சொன்னான்.

கிருஷ்ணாஜி பாஸ்கர் சிவாஜியை வணங்கி விட்டுச் சென்றார். அவர் சென்ற பின் தன் படைத்தலைவர்களிடமும், நண்பர்களிடமும் சிவாஜி கேட்டான். “என்ன நினைக்கிறீர்கள்?”

“பேச்செல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. நீ திட்டமிட்டபடியே நீ சமாதானத்தை விரும்புகிறாய் என்று நம்பி அவன் ஆள் அனுப்பி இருக்கிறான். பேச்சு வார்த்தை விஷயத்தில் அவனது உண்மை நோக்கம் என்ன என்று தெரியவில்லையே” என்றான் சிவாஜியின் நண்பன் தானாஜி மலுசரே.

“அதையும் தான் கண்டுபிடிப்போம்” என்று சிவாஜி யோசனையுடன் சொன்னான்.


கிருஷ்ணாஜி பாஸ்கர் குளித்து விட்டு சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்த போது அவர் சிறிதும் எதிர்பாராத விதமாக சிவாஜி உள்ளே வந்தான். ”மன்னியுங்கள் பெரியவரே. ஒருவன் இறை வழிபாட்டில் இருக்கும் போது இடையூறாக வருவது முறையல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் யாரும் அறியாமல் தங்களைத் தனியாகச் சந்திக்க வேண்டியிருந்ததால் தான் இந்த வேளையில் இங்கே வர வேண்டியதாகி விட்டது”

“சற்றே அமர்ந்திருங்கள் அரசே. நான் சந்தியாவந்தனத்தை முடித்து விட்டு இதோ வந்து விடுகிறேன்….”

“நீங்கள் இறை தொடர்பில் இருக்கும் போதே நான் சொல்ல வேண்டியதொன்று இருக்கிறது. அதனால் அவசரமாகச் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொள்ள வேண்டியதில்லை. நான் கூறுவதை நீங்கள் செவிமடுத்துக் கேட்க வேண்டும்… “ என்று சிவாஜி சொல்ல கிருஷ்ணாஜி பாஸ்கருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் வேறு வழியில்லாமல் “சரி சொல்லுங்கள் அரசே” என்றார்.

“பெரியவரே! தினமும் இரு வேளைகளில் சிரத்தையாக சந்தியாவந்தனம் செய்து இறைவனைத் தொழுகிறீர்கள். நீங்கள் தொழுது வணங்கும் இறைவனுடைய கோயில்களில் சிலைகளை இடித்து அட்டகாசம் செய்யும் ஒருவனிடம் சேவகம் செய்கிறீர்கள்….”

கிருஷ்ணாஜி பாஸ்கரின் தலை தானாகத் தாழ்ந்தது. அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. சிவாஜி தொடர்ந்தான். ”இது முரண்பாடு தான் என்றாலும் நான் அதில் குறை காணவில்லை. ஏனென்றால் அவரவருக்கு எங்கே வேலையை இறைவன் விதித்திருக்கிறானோ அங்கே தான் அவரவர் சேவகம் செய்ய முடியும். தொழும் இடங்களில் பக்தன் நுழையும் போது தான் தெய்வம் இருக்கும். பக்தியில்லாதவன் நுழைகையில் அது வெறும் கட்டிடமாகத் தான் இருக்கும். அதனால் நம்பிக்கையற்றவன் இடிப்பதும் கோயிலை அல்ல வெறும் கட்டிடத்தையே. அதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் இன்னொரு பக்தன் நாளை தொழ அங்கு செல்லும் போது கோயில் இருப்பதில்லை என்பதில் தான் எனக்கு வருத்தம்….”

கிருஷ்ணாஜி பாஸ்கர் அவன் வார்த்தைகளில் ஆழ்ந்த பொருளை உணர்ந்தார். ஆனால் ஒன்றும் சொல்லாமல் தலை தாழ்த்தியே இருந்தார்.

“என் மண்ணில் என் மக்கள் தாங்களாக இருக்கவும், தங்கள் நம்பிக்கைக்கேற்ப தொழவும் கூட வழியின்றி இருப்பதும், பயந்து வாழ்வதும் என்னால் சகிக்க முடியாமல் இருப்பதனாலேயே தான் நான் சுயராஜ்ஜியம் என்ற வேள்வியில் இறங்கியிருக்கிறேன் பெரியவரே. நான் அரசர்களிடம் நடந்து கொள்வதில் நேர்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் மக்களிடம் நான் ஒரு கணப்பொழுதும் நேர்மை இல்லாமல் இருந்ததில்லை. என் ஆசிரியர் அவருக்காக எதையும் என்னிடம் கேட்டதில்லை. ஆனால் சாதாரணக் குடிமகனை சுபிட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்படி இறக்கும் முன் கேட்டுக் கொண்டார். நீங்களும் நானும் வணங்கும் இறைவன் முன்னிலையில் சொல்கிறேன். நான் இது வரை அதில் என்றும் பிழைத்ததில்லை.”

சிவாஜி ஆத்மார்த்தமாகச் சொன்னான். அவன் சொல்லும் வார்த்தைகளில் சத்தியமே நிறைந்திருப்பதை கிருஷ்ணாஜி பாஸ்கரும் உணர்ந்திருந்தார்.  சிவாஜி மெல்ல விஷயத்திற்கு வந்தான். “என் சுயராஜ்ஜிய வேள்வியில் நான் வெகு தூரம் வந்து விட்டேன். ஆனால் அதை விடப் பலமடங்கு தூரம் நான் இனியும் போக வேண்டியிருக்கிறது. அந்த யாத்திரையின் நடுவே நீங்கள் வந்து அப்சல்கானிடம் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறீர்கள். இறைவணக்கத்தில் இருக்கிறீர்கள். அந்த இறைவன் முன்னிலையில் சொல்லுங்கள். அப்சல்கானின் உத்தேசம் தான் என்ன?”

கிருஷ்ணாஜி பாஸ்கர் திரிசங்கு நிலையை உணர்ந்தார். அவர் தொழில் தர்மப்படி அவர் அப்சல்கானின் உத்தேசத்தைச் சொல்லக்கூடாது. இவன் இறைவனை வைத்துக் கேட்கிறான். இறைவன் முன்னாலும் பொய் சொல்லக் கூடாது. என்ன தான் சொல்வது என்று தெரியாமல் விழித்த அவர் கடைசியில் கண்களை மூடிக் கொண்டு சொன்னார். “புலி பசுவின் வேடம் தரித்தாலும் உண்மையில் தன் குணம் மாறுவதில்லை அரசே”

அதற்கு மேல் சொல்ல அவர் விருப்பப்படவில்லை. சிவாஜியும் அந்தப் பதிலில் தான் அறிய வேண்டியதைத் தெளிவாகவே அறிந்ததால் அதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவரை மண்டியிட்டு வணங்கியபடி சொன்னான். “நன்றி பெரியவரே. நம் சத்தியம் நம்மைக் காக்கட்டும்”

அன்றிரவு சிவாஜியும், அவன் ஆலோசனைக் குழுவும் உறங்கவில்லை. இனி எப்படி இதைக் கையாள்வது என்று தீவிரமாக ஆலோசித்தார்கள். கடைசியில் சிவாஜி அவன் ஆலோசனைக் குழுவில் இருந்த மூத்தவரும், வெகுளியான தோற்றமும், விவகாரமான புத்திசாலி மனிதருமான பண்டாஜி கோபிநாத்தை அப்சல்கானிடம் அனுப்பி வைக்கத் தீர்மானித்தான். அப்சல்கானிடம் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்த சிவாஜி அப்சல்கான் தரப்பு நிலவரங்களைக் கூர்மையாகக் கவனித்து வந்து தெரிவிக்க வேண்டும் என்றும் சொன்னான்.

மறுநாள் அவன் கிருஷ்ணாஜி பாஸ்கருடன் பண்டாஜி கோபிநாத்தை அனுப்பி வைத்தான். அவர்கள் கிளம்புவதற்கு முன் மிக மரியாதையுடன் தலைவணங்கி பரிசுகள் பல வழங்கி கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் சொன்னான். “பெரியதொரு சேவையைத் தாங்கள் செய்திருக்கிறீர்கள்.  இந்தப் பேச்சு வார்த்தையால் இருபக்கப் படைகளும் போரின் அழிவில் இருந்து காக்கப்பட்டால் நானும் என் மக்களும் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்போம்”

கிருஷ்ணாஜி பாஸ்கர் ஒன்றும் சொல்லாமல் வணங்கி விட்டுக் கிளம்பினார். 


ப்சல்கான் சிவாஜியின் தூதுவரைச் சந்திக்கும் முன் கிருஷ்ணாஜி பாஸ்கரை வரவழைத்து சிவாஜியுடனான சந்திப்பைப் பற்றிக் கேட்டார். கிருஷ்ணாஜி பாஸ்கர் கவனமாகச் சொன்னார். “பிரபு. சிவாஜி என்னை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று நான் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டான். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நான் சொன்ன போது நம்ப முடியாதவன் போல் கேட்டான். இதெல்லாம் சாத்தியம் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது போல் தெரிந்தது. கிளம்புகையிலும் எனக்குப் பரிசுகள் எல்லாம் தந்து போர் மூளாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னான். அதிலிருந்து அவனும் பேச்சு வார்த்தைக்கு இணக்கமாக இருப்பதாகவே தெரிகிறது….. ஆனால் அவன் தூதுவரிடம் என்ன சொல்லி அனுப்பியிருக்கிறான் என்பது தெரியவில்லை”



(தொடரும்)

என்.கணேசன்  

4 comments:

  1. Super dialogues. Going excellently.

    ReplyDelete
  2. சிவாஜியின் திட்டம் தான் என்ன?என தெரிவதற்க்குள்... தொடர் முடிந்து விட்டதே...?
    அப்சல்கானின் தூதுவரிடம் சிவாஜி தகவல் பெறும் இடம் மற்றும் விதம் சிறப்பு...

    ReplyDelete
  3. "தினமும் இரு வேளைகளில் சிரத்தையாக சந்தியாவந்தனம் செய்து..."

    சந்தியாவந்தனம் மாலை நேர வழிபாடுதானே ?இருவேளைகளில் என்பது எவ்வாறு ?

    ReplyDelete
    Replies
    1. காலை மாலை இருவேளைகளிலும் செய்ய வேண்டும். பகலும் இரவும் சந்திக்கின்ற இரண்டு வேளைகள் தான் சந்தியா காலம். அந்த நேர வழிபாடே சந்தியாவந்தனம்.

      Delete