சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 4, 2019

இருவேறு உலகம் – 130



மாணிக்கம் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாகக் கூறி ராஜினாமா செய்ததுடன் ஆட்சிக்குத் தலைமை  ஏற்கத் தன் நண்பர் கமலக்கண்ணனையே அழைப்பதாகவும் அறிக்கை விட்டதால் கமலக்கண்ணன் வீட்டின் முன் கட்சித் தொண்டர்களும், பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்களும் குவிந்திருந்தனர். விஸ்வேஸ்வரய்யா க்ரிஷைச் சந்திக்க உள்ளே செல்வதற்குள் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த பரபரப்புகளால் பாதிக்கப்படாமல்,  பெருமை காட்டாமல் மரியாதையாக வரவேற்ற க்ரிஷால் விஸ்வேஸ்வரய்யா மிகவும் கவரப்பட்டார்.

பரஸ்பர வணக்கங்களுக்குப் பின் விஸ்வேஸ்வரய்யா இஸ்ரோவால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து பேச ஆரம்பித்தார். நாசா மற்றும் இஸ்ரோ ஏலியன்களால் ஏற்படும் அலைவரிசை மாற்றங்களையும், அமானுஷ்ய நிகழ்வுகளையும் கண்காணிக்க ஆரம்பித்து சில வருடங்கள் ஆகின்றன என்றும் இந்த வருடத்தில் அமேசான் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் சில ஆச்சரியகரமான மாற்றங்களைப் பதிவு செய்ததில் க்ரிஷ் பங்கையும் பார்க்க நேர்ந்தது என்றும் அது பற்றி நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அவன் நடந்ததை எல்லாம் அப்படியே சொல்வான் என்று அவர் நம்பவில்லை. இது வரை அவன் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசியதாகவும் அவருக்குத் தகவல் இல்லை. ஏதாவது சொல்லி மழுப்பக் கூடும் என்று எதிர்பார்த்தார்.

க்ரிஷ் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் யோசித்தான். நிக்கோலா டெஸ்லாவின் எழுத்துக்களை அவன் உத்வேகத்தோடு படித்துக் கொண்டு இருந்த போது தொடர்பு கொண்டவர் இந்த மனிதர். பிரபஞ்ச சக்தி அனுப்பியே வந்தவராகவே அவரைப் பார்ப்பது புத்திசாலித்தனமாகப் பட்டது.  அதனால் அவரிடம் நடந்ததை அப்படியே தெரிவிப்பது நல்லது என்று தோன்றியது. பல கோடிகள் செலவழித்து அவன் நாடு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒன்றில் அவன் சம்பந்தப்பட்டு விட்ட பிறகு தன் பங்கில் அறிந்ததை அவரிடம் தெரிவிப்பது தர்மம் கூட என்று நினைத்தான். அவன் சொல்வதை நம்புவதும் நம்பாததும் அவர் விருப்பம்….

அவன் நிக்கோலா டெஸ்லாவைப் படித்துக் கொண்டிருந்த போது அவன் கம்ப்யூட்டரில் மின்னிய வாசகத்திலிருந்து ஆரம்பித்து நடந்தது அனைத்தையும் அமைதியாகச் சொன்னான். விஸ்வேஸ்ரய்யா பிரமிப்புடன் முழுவதையும் கேட்டார். வேற்றுக்கிரகவாசிக்கும் க்ரிஷுக்கும் இடையே உருவான நட்பு,  பேசிய பேச்சுக்கள் எல்லாவற்றுடன் விஸ்வம், மாஸ்டர்  சம்பந்தப்பட்ட காட்சிகளும், அது பற்றி வேற்றுக்கிரகவாசி சொன்னதும் கூடத் தெரியவந்த போது விஸ்வேஸ்வரய்யா கூடுதல் கவனத்துடன் கேட்டார்.

விஸ்வத்தின் சக்திகளால் கவரப்பட்டவர்களில் அவரும் ஒருவர். மனிதன் எந்த அளவுக்கு அமானுஷ்ய சக்திகளை வசப்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய மனிதன் இல்லுமினாட்டிக்கு ஒரு சிறப்பான வரவே என்று நினைத்துக் கொண்டிருப்பவர் அவர்….

க்ரிஷ் வேற்றுக்கிரகவாசி விடைபெற்ற கணத்தோடு முடித்துக் கொண்டான். அவர்கள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவை தான். வேற்றுக்கிரகவாசி தொடர்பு கொண்டதிலிருந்து விடைபெற்றது வரை அவன் சொல்லி முடித்த பிறகு விஸ்வேஸ்வரய்யா ஒரு நிமிடம் அமைதி காத்தார். அவருக்கு அவன் சொன்னவை எதுவும் பொய்யல்ல என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வருவதற்கு முன் அவன் சம்பந்தப்பட்ட படங்களை எல்லாம் பல முறை பார்த்து மனதில் பதித்து விட்டு வந்திருக்கின்றார். அவன் சொன்ன விஷயங்கள் அவன் முக பாவனை உட்பட கணக்குப் போடுகையில் எல்லாம் கச்சிதமாகப் பொருந்துகிறது.
விஸ்வேஸ்வரய்யா தன் துறை சார்ந்த கேள்வியையே முதல் கேள்வியாகக் கேட்டார். “ஏலியன் எந்த வடிவம் வேண்டுமானாலும் எடுக்கத் தயாராக இருந்த போது நீங்கள் ஏன் உருவமில்லாமலேயே உணர்ந்தால் போதும் என்று ஒத்துக் கொண்டீர்கள்?”

க்ரிஷ் சொன்னான். “நாம் எல்லோரும் உருவங்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தோன்றியது. உருவம் இல்லாததை உணர்வதே இல்லை. பொய்யான ஒரு உருவத்தைப் பார்ப்பதை விட உருவமில்லாமலே உணர்வது நல்லது என்று தோன்றியது”

அவன் பதில் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு அறிவுஜீவியால் மட்டுமே அப்படி முடிவெடுக்க முடியும்.

விஸ்வேஸ்வரய்யா அவனிடம் கேட்டார். “நீங்கள் அந்த ஏலியன் சொன்னபடி உலகம் அழிந்து விடும் என்று நினைக்கிறீர்களா?”

“அப்படி ஆகி விடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன். ஆனால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாம் ஏதாவது செய்யா விட்டால் அவன் சொன்னது போல ஆகிவிடும் என்று பயப்படுகிறேன்…”

“இந்த உலகத்தைக் காப்பாற்றும் ஒட்டு மொத்த பொறுப்பை ஒருவனுக்குத் தருவது என்பது சற்று மிகையான விஷயம் அல்லவா?”

“உண்மை தான். ஆனால் பொறுப்புள்ள ஒவ்வொருவனும் அப்படி நினைத்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகக் கூட என்னிடம் அவன் அப்படிச் சொல்லியிருக்கலாம்”

அந்தப் பதிலை அவர் ரசித்தார். நான் சிறந்தவன், என் தகுதி பார்த்து அவன் சொன்னான் என்று க்ரிஷ் சொல்லவில்லை என்பதை அவரால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

”அந்த எதிரி யாரென்று தெரிந்ததா? அந்த எதிரியை நீங்கள் சந்திக்க முடிந்ததா?” மெல்ல விஸ்வேஸ்வரய்யா கேட்டார்.

அவன் பதில் சொல்லத் தயங்கினான். அவர் மெல்லச் சொன்னார். “இது எங்கள் ஆராய்ச்சி சம்பந்தப்படாத விஷயம் தான். நான் தனி ஆர்வத்தில் கேட்கிறேன். தயக்கம் இருந்தால் பதில் சொல்லத் தேவையில்லை”

க்ரிஷுக்கு அவரிடம் பதில் சொல்லத் தோன்றியது. சுருக்கமாக நடந்த மிக முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சொன்னான். கடைசியில் எதிரியாக விஸ்வத்தைக் கண்டுபிடித்ததையும், அவன் தீவிரவாத இயக்கங்களையும், இல்லுமினாட்டியையும் பயன்படுத்தி அதிகார ஏணியில் மேலேறப் போவதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லி முடித்தான். விஸ்வம் மற்றும் மாஸ்டர் இருவருடைய இமயமலைப் பயணங்களை அவன் சொல்லவில்லை. இஸ்ரோவும் நாசாவும் அவர்களுடைய முழுக்கவனத்தை இனி இமயமலையின் அந்தக் குகைக்குச் செலுத்தி மாஸ்டரின் வருங்கால தவத்தைக் கலைத்து விட வேண்டாம் என்று அவன் நினைத்தான்.

விஸ்வேஸ்வரய்யா முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டிக் கேட்டார். “நீங்கள் இல்லுமினாட்டி என்று ஒன்று இருப்பதை நம்புகிறீர்களா என்ன?”
.
உறுதியாகத் தெரியாத விஷயங்களைச் சொல்ல விருப்பப்படாத க்ரிஷ். “தெரியவில்லை. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்…” என்றான்.

விஸ்வேஸ்வரய்யா விடாமல் கேட்டார். “ஒருவேளை இல்லுமினாட்டி என்கிற சக்தி வாய்ந்த அமைப்பு இருந்து அதில் விஸ்வம் சேர்ந்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?”

“வெடிமருந்தோடு தீக்கதிர் சேர்ந்தால் என்ன ஆகுமோ அது தான் ஆகும். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னது போல அழிவு நிச்சயம். உலகமே சீக்கிரம் சுடுகாடாகும்….” க்ரிஷ் அமைதியாகச் சொன்னான்.

அவன் அதைச் சர்வசாதாரணமாகச் சொன்னது விஸ்வேஸ்வரய்யாவுக்கு என்னவோ போல் இருந்தது. “என்ன இப்படிச் சொல்கிறீர்கள். உங்கள் ஏலியன் நண்பன் உங்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டுப் போயிருக்கிற பொறுப்பு உங்களுக்கில்லையா?”

க்ரிஷ் வருத்தம் கலந்த குரலில் சொன்னான். “யாருமே முடிந்ததைத் தான் செய்ய முடியும். எனக்கு விஸ்வம் எங்கே என்று தெரியாது. இல்லுமினாட்டி இருக்கா இல்லையா என்றும் தெரியாது. இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் வழி தெரியாது. பிரபஞ்ச சக்திக்கு இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை இருந்திருந்தால் அது இதில் இடைப்பட ஏதாவது வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். எதுவுமே இல்லாத போது நான் ஒருவன் என்ன செய்ய முடியும்?”

சிறிது நேரம் மௌனம் சாதித்த விஸ்வேஸ்வரய்யா கண்ணில் க்ரிஷ் மேசையில் இருந்த நிக்கோலா டெஸ்லா புத்தகம் பட்டது. அவர் அவனிடம் நிக்கோலா டெஸ்லாவின் கருத்துக்கள் பற்றிக் கேட்டார். அவன் சுவாரசியத்துடன் நிக்கோலா டெஸ்லா பற்றி தான் உணர்ந்தவைகளைப் பேச ஆரம்பித்தான். கேட்க அவருக்கும் மிக சுவாரசியமாக இருந்தது. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விஸ்வேஸ்வரய்யா நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்.

ன்று இரவு ம்யூனிக்கில் எர்னெஸ்டோவுக்கு ஒரு போன் கால் வந்தது.  விஸ்வம் கையில் இல்லுமினாட்டி சின்னம் இருப்பதையும், இமயமலையில் உள்ள இல்லுமினாட்டி தவசி அவனுக்கு அதைத் தந்து விட்டு இறந்ததையும் விவரமாக ஒருவன் தெரிவித்தான். சுவாரசியத்துடன் அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து ஒருவன் ஒரு உறையைக் கொடுத்து விட்டுப் போனான். அதிலிருந்த பென் ட்ரைவில் விஸ்வேஸ்வரய்யாவுக்கும் க்ரிஷுக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு இருந்தது. அதை  கண்களை மூடிக் கொண்டு எர்னெஸ்டோ கேட்டார்.

அன்றிரவு அவருக்கு உறங்க முடியவில்லை.

(தொடரும்)

என்.கணேசன்

9 comments:

  1. What will Illuminati do? Curious to know.

    ReplyDelete
  2. என்.க.அவர்களே,,,
    இலுமினாட்டி என்ற ஒன்று நிஜமாகவே இருக்கா ...

    ReplyDelete
    Replies
    1. உறுதியாகத் தெரியவில்லை.

      Delete
    2. இல்லுமினாட்டி இருப்பதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தீர்களே..! ஐயா... (தங்களின் அடுத்த தொடர் சம்பத்தப்பட்ட நேர்காணலில்)

      Delete
    3. இல்லுமினாட்டி ஆரம்பிக்கப்பட்டது உண்மை. ஆனால் இப்போதும் சர்வபலத்துடன் இருக்கிறது, உலக நிகழ்வுகளை அதுவே நிச்சயிக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த நாவலும், இதன் தொடர்ச்சியான ‘இல்லுமினாட்டி’ நாவலும் இல்லுமினாட்டி உள்ளதாகவே எடுத்துக் கொண்டு சொல்லப்படுகின்றன.

      Delete
  3. காத்திருந்து படிக்கும் விறுவிறுப்பு வீண் போகாமல் அருமையாய் இருந்தது - நன்றிகள்

    ReplyDelete
  4. கிரிஷ்... இல்லுமினாட்டி தலைவர்... அடுத்து என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்?னு தெரியலையே....!!!!

    ReplyDelete