காவல்
வீரன் சொன்னான். “அவர் நம் ஒவ்வொரு படைப்பிரிவிலும் போய் சிவாஜி தந்த சிறு சிறு பரிசுகளை
அளித்துக் கொண்டிருக்கிறார் பிரபு”
அப்சல்கான்
கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் கேட்டான். “சிவாஜிக்கு இந்தக் கோமாளியை விட்டால் வேறு ஆளே தூதுவனாக
அனுப்பக் கிடைக்கவில்லையா?”
கிருஷ்ணாஜி
பாஸ்கர் புன்னகைத்தார். “இந்த ஆள் எல்லோரிடமும் வளைந்து குழைந்து பேசி காரியம் சாதித்து
விட்டு வருவார் என்று சிவாஜி நினைக்கிறான் போல் தெரிகிறது. எப்பாடுபட்டாவது உங்களுடனான
போரைத் தவிர்க்க நினைக்கிற சிவாஜிக்கு பணிவாய் பேசி விட்டு வரக்கூடிய இந்த ஆள் சரியான
ஆள் என்று தோன்றியிருக்கிறது போல் இருக்கிறது…”
அப்சல்கான்
அந்த முட்டாள்தனத்தை எண்ணிச் சிரித்தான்.
அப்சல்கானால் கோமாளி என்றழைக்கப்பட்ட பண்டாஜி கோபிநாத் ஒவ்வொரு
படைப்பிரிவிலும் உள்ளே நுழைந்து பரிசுகள் தரும் சாக்கில் படைப்பிரிவின் அளவு, பலம்,
பலவீனம், அந்தப் பிரிவுத் தலைவர்களின் பிரத்தியேக குணாதிசயங்கள் பற்றி எல்லாம் அறிய
முயன்று கொண்டிருந்தார். அப்சல்கானின் காவல் வீரன் தேடி வந்து “தலைவர் உங்களை அழைக்கிறார்”
என்று சொல்லும் வரை வேண்டிய அளவு தகவல்கள் சேகரித்திருந்த பண்டாஜி கோபிநாத் வயதிற்கு
மிஞ்சிய வேகத்தோடு அப்சல்கானைச் சந்திக்க விரைந்தார்.
அப்சல்கானைச்
சந்தித்தவுடன் மறுபடி காலில் தடால் என்று விழுந்து வணங்கிய பண்டாஜி கோபிநாத்தை ஒற்றைக்
கையால் எழுப்பி நிறுத்திய அப்சல்கான் அவரிடம் சிவாஜிக்குத் தன் செய்தியைச் சொல்லி அனுப்பினான்.
“….. பேச்சு வார்த்தை நடத்த பிரதாப்கட்டுக்கு வருவதில்
எனக்கு மட்டும் அல்லாமல் என் பெரும்படைக்கும் சிக்கலும் சிரமங்களும் அதிகம் என்றாலும்
அழைத்திருப்பது என் மேல் நம்பிக்கையும், அன்பும் கொண்ட நீ என்பதால், உனக்கு இங்கு வருவதில்
தயக்கமும் அச்சமும் இருப்பதால், சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நான் அங்கு வரச் சம்மதிக்கிறேன்.
ஆனால் நாங்கள் அந்தப் பகுதிக்கு வர வழியில் தகுந்த ஏற்பாடுகளை நீ செய்வாய் என்று நம்புகிறேன்.
முறையான ஏற்பாடுகளையும், சௌகரியங்களையும் செய்து முடித்த பிறகு நீ செய்தி அனுப்பினால் பின் உனக்கு அறிவித்து விட்டு
நான் இங்கிருந்து கிளம்புகிறேன். நீயும் பிரதாப்கட் கோட்டையிலிருந்து இறங்கி வா. இருவரும்
ஏற்றுக் கொள்ளும்படியானதொரு இடத்தில், அதற்கேற்ற ஒரு சூழலில் சந்தித்துப் பேசுவோம்.
அது குறித்து நம் இரு பக்க அதிகாரிகளும் கூடிப் பேசி முன்பே ஒரு முடிவை எட்டுவோம்.
இப்படி
உன் நலம் விரும்பி
அப்சல்கான்”
அப்சல்கானின் செய்தி கிடைத்தவுடன் சிவாஜி தன் ஆலோசகர்களுடனும்,
படைத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினான். அப்சல்கானின் படை பிரதாப்கட் வரை வருவதற்கு எல்லா
வசதிகளும் செய்து தரும் யோசனையை சிவாஜியின் சில படைத்தலைவர்கள் ஏற்கவில்லை. ஒருவர்
சொன்னார். ”மன்னா. மலைக்காடுகளுக்கு நடுவே இருக்கும் இந்த இடத்தின் மிகப்பெரிய பலமே
எதிரிகள் இங்கே ஊடுருவுவதில் இருக்கும் கடுஞ்சிரமங்கள் தான். அப்படி இருக்கையில் அவர்களுக்கு
இங்கே வரவும் நாம் ஏற்பாடு செய்து தந்தோமானால் அது முட்டாள்தனம் அல்லவா?”
சிவாஜி
அமைதியாய்ச் சொன்னான். “இதே எண்ணம் அப்சல்கான் மனதிலும் ஏற்பட வேண்டும் என்பது தான்
என் உத்தேசம். இந்த முட்டாள் தனம் தான் அவனை இங்கே வரை இழுத்து வரும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் சொன்னது போல் இதில் ஆபத்து இல்லாமல் இல்லை. ஆனால் அப்சல்கானைச் சந்திக்க இதைத்
தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. வேறெதாவது வழி இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்”
அந்தப்
படைத்தலைவருக்கும் வேறு வழி தெரியவில்லை. மற்றவர்களுக்கும் தெரியவில்லை. சிவாஜி தொடர்ந்து
சொன்னான். “அவனை அப்புறப்படுத்தினால் ஒழிய நாம் வெளியே போக முடியாது. அவனுக்குப் பயந்து
வெளியே போகாமல் இங்கேயே நாம் எத்தனை காலம் அடைந்து கிடக்க முடியும்? யோசியுங்கள்”
அவர்கள்
அனைவரும் அவன் சொன்னதில் இருந்த யதார்த்த நிலையை உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் அப்சல்கானின்
சொந்த பலமும், படைப் பலமும் அவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததை சிவாஜியால்
உணர முடிந்தது. சிவாஜி மெல்லச் சொன்னான். “மகாபாரதம் படித்திருக்கிறோம். அதில் அபிமன்யுவுக்கு
சக்கரவியூகத்தின் உள்ளே போக முடிந்தது. ஆனால் உள்ளே நுழைய முடிந்த அவனுக்கு வெளியே
போக முடியவில்லை. அந்தச் சிரமத்தில் அவன் உயிரையும் இழக்க வேண்டி வந்தது. நாமும் உள்ளே
நுழைந்த அப்சல்கான் பின் தப்பித்துப் போய் விடாதபடி வியூகம் அமைப்போம். இப்போது இதை
விட்டால் நமக்கு வேறு வழியில்லை. பவானி தேவியின் துணையும், அந்த மலைக்காடுகளின் துணையும்
இருக்கும் வரையில் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.”
அவன்
அளவுக்கு அவர்களில் சிலருக்கு இப்போதும் தைரியம் வரவில்லை. சிவாஜி மெல்லத் தன் சக்கர
வியூகத்தை அவர்களிடம் விவரித்தான். அவன் திட்டம் மிகவும் புத்திசாலித்தனமாகவே இருந்தது.
எல்லா விஷயங்களையும் யோசித்து எந்த முக்கிய அம்சத்தையும் விட்டு விடாமல் குழப்பமில்லாமல்
மிகத் தெளிவாக அவன் திட்டமிடும் விதம் அவர்களைப் பிரமிக்க வைத்தது. இவன் ஆளப்பிறந்தவன்
என்பதைப் புரிய வைத்தது. ஆனால் அவன் சொன்னச் சக்கர வியூகம் அப்சல்கான் மரணத்திற்குப்
பின் தான் வேலை செய்ய முடியும். அப்சல்கான் மரணம் அவ்வளவு சுலபமாகச் சம்பவிக்க முடிந்தது
அல்ல…. ஆனாலும் முடிவில் அவர்கள் தைரியம் அடைந்தார்கள். அவர்கள் இதற்கு முன் முடியவே
முடியாது என்ற நிலைமைகளில் அவன் சாதித்து முடித்ததைப் பார்த்தவர்கள்….. இப்போதும் அவன்
ஏதாவது அற்புதம் நிகழ்த்த முடியலாம்….. வாய்ப்பு இருக்கிறது….
அப்சல்கான் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொண்டு சிவாஜி அனுப்பிய
மடல் மூன்று நாட்களில் அப்சல்கானை வந்தடைந்தது.
“….
தங்களது பேரன்பும் பெருந்தன்மையும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. தாங்கள் என் தந்தையின்
நண்பர் என்பதையும், என் நலம் விரும்பி என்பதையும் என் அழைப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம்
சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபித்து விட்டீர்கள். இதற்கு தங்களுக்கு என்ன கைம்மாறு
செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.
தாங்களும், தங்கள் படையும் எந்த விதமான தடங்கல்களுமின்றி
இங்கே வர அனைத்து வசதிகளும் நாங்கள் செய்து தர வேண்டியது எங்களது கடமை மட்டுமல்ல தர்மமும்
கூட. இந்த மலைக்காட்டுப் பகுதிகளின் வழித்தடங்களை
விரிவுபடுத்தியும் சீர்ப்படுத்தியும் தங்களை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அந்தப் பணிகளைச் செய்து முடிக்க பதினைந்து நாட்கள் அவகாசம் மட்டும் தாருங்கள் என்று
தங்களிடம் பணிவுடன் நான் வேண்டிக் கொள்கிறேன். அதை முடித்து விட்டு உடனடியாகத் தெரிவிக்கிறேன்.
அதற்குப் பிறகு தாங்கள் கிளம்பினால் போதும்.
இப்படிக்கு,
தங்களைக் காணவும், தங்களுடன் பழகவும் பேராவலுடன்
காத்திருக்கும் சிவாஜி.”
சிவாஜியின்
மடலைப் படித்து விட்டு கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் அப்சல்கான் கேட்டான். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
கிருஷ்ணாஜி?”
கிருஷ்ணாஜி
பாஸ்கர் கவனமாகச் சொன்னார். “எல்லாம் நமக்குச் சாதகமாகவே தோன்றுகிறது பிரபு. ஆனாலும்
சிவாஜி சொன்னது போலவே செய்கிறான் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்ட
பிறகே நாம் செல்வோம். அது நமக்குப் பாதுகாப்பும் கூட….”
அப்சல்கானுக்கு
அங்கு செல்வதில் உள்ள சிரமங்கள் தான் பிரச்னையாகத் தெரிந்ததேயொழிய மற்றபடி அவன் சிவாஜியிடம்
எந்த ஆபத்தையும் உணரவில்லை. இருந்தாலும் அஜாக்கிரதை எப்போதுமே நல்லதல்ல என்பதால் கிருஷ்ணாஜி
பாஸ்கர் சொல்வதைப் போல் எல்லா விஷயங்களிலும் அலட்சியத்தைத் தவிர்க்க நினைத்தான். தங்கள்
பயண வழியில் மலைக்காட்டுப் பகுதிகளின் ஆரம்பத்தை அடைந்தவுடன் அடுத்த கட்டம் செல்வதற்கு
முன் அங்கே செய்திருக்கும் ஏற்பாடுகள் சரியாகவும், ஆபத்தில்லாமலும் இருக்கின்றனவா என்று
உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே செல்ல ஆரம்பிப்பது என்று முடிவு செய்தான்.
சிவாஜியின் ஆட்கள் பிரதாப்கட் கோட்டை அமைந்திருக்கும் மலைக்காட்டுப்
பகுதிகளில் அங்கங்கே இருக்கும் கிராம மக்களுடன்
இணைந்து, அப்சல்கானின் படை வரத் தேவையான வேலைகளை இரவு பகலாகச் செய்ய ஆரம்பித்தார்கள்.
வழியில் தடங்கல்களாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. பாதைகள் அகலப்படுத்தப்பட்டன.
வருபவர்கள் தங்கி இளைப்பாற அங்கங்கே வசதியான முகாம்கள் அமைக்கப்பட்டன. எந்தவொரு இடத்திலும்
எந்த விதமான அசௌகரியமும் ஏற்படாத அளவு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று சிவாஜி கட்டளையிட்டிருந்தான்.
அப்படியே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு
சிவாஜி அப்சல்கானுக்குத் தகவல் அனுப்பினான்.
அப்சல்கான்
தன் ஆட்களை உடனே அனுப்பி சிவாஜி ஏற்பாடுகளைச் சிறந்த முறையில் செய்திருக்கிறானா என்று
உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுத் தன் பெரும்படையுடன் கிளம்பினான்.
(தொடரும்)
Very interesting. Scenes are unfolding in front of us. Eager to know Sivaji's plan
ReplyDeleteசினிமா பார்ப்பது போல் சுவாரசியமாக இருக்கிறது.
ReplyDeleteஒரு திட்டம் தீட்டி அதில் வெற்றி பெற...எந்த அளவு உழைக்கிறார்கள்..? எத்துனை கச்சிதமான வேலை செய்கிறார்கள்?..என்பதை படிக்கும்போதே பிரமிப்பு தோன்றுகிறது....
ReplyDeleteசிவாஜியின் திட்டத்தின் செயல்பாட்டினை படிக்க காத்திருக்கிறேன்....
குள்ள நரி சிங்கத்தின் குகையை நோக்கி பயணிக்கிறது
ReplyDelete