சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 25, 2019

இருவேறு உலகம் – 133


ர்னெஸ்டோவின் குழப்பம் அந்தப் பழஞ்சுவடியைப் படித்த பின்னும் தீரவில்லை. அவர் கடந்த 35 வருடங்களாக இல்லுமினாட்டியின் தலைவராக இருக்கிறார். அவர் தலைமையில் இல்லுமினாட்டி கண்ட வளர்ச்சி சாதாரணமானதல்ல. அவர் மிகச் சுறுசுறுப்பான செயல்வீரர் என்று சொல்ல முடியாது. ஆனால் குறைந்த நேரத்தில் மிக முக்கியமான செயல்கள் எதையும் தவறவிடாமல் முழுமனதோடு ஈடுபட்டு தவறில்லாத முடிவுகள் எடுத்து படிப்படியாக இல்லுமினாட்டியின் சக்தியையும், அதிகாரத்தையும் உச்சத்துக்குக் கொண்டு வந்தவர் அவர். இப்போது பதவி விலகப் போகும் நேரத்தில் இந்த இயக்கத்தை எந்த வகையிலும் சிறப்பு குறையாமல் இன்னும் மேலே உயர்த்திப் போகும் தகுந்த மனிதனிடம் ஒப்படைத்து விட ஆசைப்பட்டார்.

விஸ்வம் இல்லுமினாட்டிக்கு அறிமுகமான போது எல்லோரிடத்திலும் ஒரு பிரமிப்பையே ஏற்படுத்தினான். அவன் அடைந்திருந்த சக்திகள் அவன் தெரிவித்ததை விட அதிகமாய் இருந்தன. இல்லுமினாட்டி இது வரை இப்படிப்பட்ட மனிதனைப் பார்த்ததில்லை. அமானுஷ்ய சக்திகளை வசப்படுத்திக் கொண்டவர்களாகச் சொல்லும் எத்தனையோ பேர் அதை வெளிக்காட்ட ஏமாற்று வழிகள் எத்தனையோ உபயோகிப்பதை அவர் பார்த்துச் சலித்திருக்கிறார். அவன் அலட்டிக் கொள்ளாமல் கூர்மையான அறிவுபடைத்த இல்லுமினாட்டி மனிதர்களிடம் தன் சக்திகளை நிரூபித்து இருக்கிறான். அவர் இம்மாதம் பதவி விலக இருப்பதாக மூன்று மாதங்கள் முன்பே அறிவித்திருந்ததால் அவன் சேர்ந்தவுடனேயே பலரும் அவன் அந்தப் பதவிக்குப் பொருத்தமாய் இருப்பான் என்று நினைக்கவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்கள். இவ்வளவு விரைவாக ஆரம்பத்திலேயே தலைமைப்பதவி தரும் அளவுக்கு ஒருவரை நினைக்க ஆரம்பித்தது இல்லுமினாட்டியின் சரித்திரத்திலேயே முதல் முறை. அதற்கு அவனுடைய சக்திகள், ஆளுமை மட்டுமல்லாமல் ஆரகிள் சொல்லி குறித்துக் கொண்ட பழஞ்சுவடிகள் அவனையே அடையாளம் காட்டுவதாக அவர்கள் நினைத்ததும், அவன் தற்போது இமயத்தில் இருந்து கொண்டு வந்திருப்பதாகச் சொல்லும் பிரமிடுக்குள் கண் சின்னமும் தான். அது ஒளிர்வதாக சில உறுப்பினர்கள் நேரில் பார்த்துச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு இல்லுமினாட்டிக்குத் தேவையான உறுதியான மனமும், பேரறிவும் அவனுக்கு இருக்கிறது. சொல்லப்போனால் விஸ்வம் அவர் எதிர்பார்த்த எல்லாவற்றிலும் எதிர்பார்ப்புக்கு பலபடிகள் மேலேயே இருந்தான்.

அவன் தலைமைப் போட்டிக்கு நின்றால் எதிர்த்து நிற்கப் பலரும் தயங்கும் நிலைமை இப்போது உருவாக்கி இருக்கிறது. அவன் ஆளுமை, அவன் அடைந்திருக்கும் சக்திகள், அவன் வந்த நேரம், அவன் சொன்ன செய்திகள், அவன் கொண்டு வந்திருக்கும் சின்னம் எல்லாமே பூரண கச்சிதமாக இருக்கிறது. இந்த வேகமான முன்னேற்றம், இந்தக் கச்சிதத் தன்மை எல்லாம் அவரைக் கொஞ்சம் பயமுறுத்தவும் செய்தது. இல்லுமினாட்டியின் அழிவுக்காலம் இது என்று கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள். இவன் சரியான நேரத்தில் அந்த அழிவில் இருந்து காப்பாற்ற வந்தவனா, இல்லை சரியான நேரத்தில் அழிக்கவே வந்தவனா? அழிக்க வந்தவன் இவனல்ல என்றால் அழிக்கப் போகிற சக்தி எது? அல்லது யார்? அந்தக் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

மீண்டும் ஒரு முறை விஸ்வேஸ்வரய்யா-க்ரிஷ் உரையாடலின் ஒரு பகுதியைக் கண்களை மூடிக் கொண்டு கேட்டார்.

“ஒருவேளை இல்லுமினாட்டி என்கிற சக்தி வாய்ந்த அமைப்பு இருந்து அதில் விஸ்வம் சேர்ந்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?”

“வெடிமருந்தோடு தீக்கதிர் சேர்ந்தால் என்ன ஆகுமோ அது தான் ஆகும். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னது போல அழிவு நிச்சயம். உலகமே சீக்கிரம் சுடுகாடாகும்….”  

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள். உங்கள் ஏலியன் நண்பன் உங்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டுப் போயிருக்கிற பொறுப்பு உங்களுக்கில்லையா?”

“யாருமே முடிந்ததைத் தான் செய்ய முடியும். எனக்கு விஸ்வம் எங்கே என்று தெரியாது. இல்லுமினாட்டி இருக்கா இல்லையா என்றும் தெரியாது. இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் வழி தெரியாது. பிரபஞ்ச சக்திக்கு இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை இருந்திருந்தால் அது இதில் இடைப்பட ஏதாவது வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். எதுவுமே இல்லாத போது நான் ஒருவன் என்ன செய்ய முடியும்?”

இந்தக் கடைசி வாக்கியம் அவரை ஏனோ தொந்திரவு செய்தது. உடனே தலைமை செயற்குழு உறுப்பினர்களையும், வேறு சில முக்கிய உறுப்பினர்களையும் உடனடியாகத் தன் வீட்டுக்கு வரச் சொன்னார்.

அன்று இரவு ஏழு மணிக்கு வழுக்கைத் தலையர் உட்பட அவர் அழைத்திருந்த பன்னிரண்டு பேர் அவர் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடம் எர்னெஸ்டோ தன் மனப்போராட்டத்தைச் சொன்னார். அவர்களில் மூன்று பேருக்கு அவர் எண்ண ஓட்டம் சரி என்று தோன்றியது. மூன்று பேருக்குக் குழப்பமாக இருந்தது. மீதி ஆறு பேர் விஸ்வத்துக்கு ஆதரவாக நினைத்தனர். அந்த அறுவரில் ஒருவர் சொன்னார். “எனக்கென்னவோ விஸ்வம் முழுப் பொருத்தமாகவே தோன்றுகிறான்”

எர்னெஸ்டோ சொன்னார். “அது தான் என்னைப் பயமுறுத்துகிறது”

சிறிது நேரம் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். அனைவருக்கும் எர்னெஸ்டோ மீது பெருமதிப்பு இருந்தது. சிக்கலான நேரங்களில் கூட அவர் சரியான முடிவெடுத்தவர். அவர் எடுக்கும் முடிவு பல நேரங்களில் எல்லோராலும் ஏற்கப்படாததாக இருந்தாலும்கூட  சரியானதாகவே பிற்பாடு நிரூபணம் ஆகியிருக்கிறது….

வழுக்கைத் தலையர் மெல்லக் கேட்டார். “நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?”

”விஸ்வத்தைப் போலவே க்ரிஷும் இமயமலைக்குத் தெற்கிலிருந்து வந்தவனாக இருக்கிறான். அதனால் ஏலியன் என்ற ’உயர்சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட’வனாக இருக்கிற க்ரிஷ் என்ன சொல்கிறான் என்பதையும், நம் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் கையிலிருந்து ’எல்லாம் பார்க்கும் விழி’ வாங்கி வந்திருக்கிற விஸ்வம் என்ன சொல்கிறான் என்பதையும் திறந்த மனதோடு கேட்கலாம். கடைசியில் எது சரி என்று நமக்குத் தோன்றுகிறதோ முடிவெடுப்போம்…”

ஒரு உறுப்பினர் தயக்கத்தோடு சொன்னார். “இது வரை நாம் இல்லுமினாட்டி அல்லாத ஒருவனை நம் சபைக்கு வரவழைத்துப் பேசவிட்டுக் கேட்டதில்லை…. க்ரிஷ் நாம் அழைத்தாலும் வருவான் என்பதும் நிச்சயமில்லை…..”

எர்னெஸ்டோ சொன்னார். “அவசியம் வரும் போது அபூர்வமானதையும் சிலசமயம் செய்ய வேண்டியிருக்கிறது. நாம் அழைத்து அவன் வராவிட்டால் அது அவன் விருப்பம். ஆனால் அழிவு வரலாம் என்று எச்சரிக்கப்பட்ட காலத்தில், ஏலியனால் தேர்ந்தெடுக்கப்பட்டு எச்சரிக்கும் ஒருவனுடைய கருத்தைக் கேட்க முயற்சி செய்யாமல் போனோமே என்ற உறுத்தல் நமக்கு பிற்காலத்தில் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்……”


ர்னெஸ்டோவின் முடிவு நவீன்சந்திர ஷா மூலமாக விஸ்வத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. விஸ்வம் முதலில் உணர்ந்தது ஆத்திரம் தான். எர்னெஸ்டோ அந்தப் பழஞ்சுவடியில் படித்ததை இரண்டாகப் பிரித்து இருவருக்குமாய் பிரித்துக் கொடுத்த விதம் அவனை மனம் கொதிக்க வைத்தது. ’தேர்ந்தெடுக்கப்பட்டவன் க்ரிஷாம்….. அடையாளம் காட்டப்பட்டவன் விஸ்வமாம்…… ஏன் இந்தக் கிழவன் இப்படித் தேவை இல்லாமல் பிரச்னை செய்கிறான்…..’ என்று மனதிற்குள் வெடித்தாலும் வெளிக்காட்டாமல் நவீன்சந்திர ஷாவிடம் கேட்டான். “க்ரிஷ் வருவதாக ஒத்துக் கொண்டானா?”

“அது தெரியவில்லை. விஸ்வேஸ்வரய்யாவிடம் பேசச் சொல்லி இருக்கிறார்கள். க்ரிஷ் என்ன சொல்கிறான் என்று இனிமே தான் தெரியும்”

விஸ்வம் சொன்னான். “அவன் வந்தாலும் நேர்மை, நீதி, நியாயம் என்று தத்துவம் தான் பேசுவான். அறிவாளி ஆனாலும் செண்டிமெண்ட் டைப்…”

நவீன்சந்திர ஷா சொன்னான். ”அப்படிப் பேசினால் இல்லுமினாட்டியில் எடுபடாது. இங்கே அறிவும், உறுதியும், சக்தியும் தான் முக்கியம். மென்மையான ஆட்களையும், அந்த மாதிரியான பேச்சையும் பலவீனமாகவே தான் எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள். அதனால் உனக்கு வெற்றி நிச்சயம். நீ இல்லுமினாட்டி தலைமைப்பதவிக்கு உன்னை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போட்டியில் ஈடுபட்டுப் பேச வேண்டிய பேச்சை இந்த முறையே பேசிவிடு. உன்னை எதிர்த்துப் பேச அவனை அழைப்பார்கள். பின் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். இதில் நீ ஜெயித்து விட்டால் இல்லுமினாட்டி தலைமைப் போட்டியில் நீ நின்றால் உனக்கு எதிராகக் கண்டிப்பாக யாரும் நிற்கக்கூட மாட்டார்கள். காரணம் நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன், பிரமிடு-கண் சின்னத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன். உன்னை எதிர்த்து போட்டி போட யாரும் முன் வரமாட்டார்கள். போட்டியில்லாமல் நீ ஜெயித்து விடுவாய். ஒரு விதத்தில் எர்னெஸ்டோ க்ரிஷை வரவழைப்பது கூட உனக்கு அனுகூலம் தான்”

விஸ்வத்துக்கு அவன் சொல்வது சரியே என்று தோன்றியது. ஆனால் க்ரிஷுக்கு இல்லுமினாட்டி சபையில் பேச அனுமதி கொடுப்பதே தேவை இல்லாத அதிகப்படியான மரியாதை என்றும் தோன்றியது. அவன் தன் பலத்த சந்தேகத்தைக் கேட்டான். “இல்லுமினாட்டி ஒரு ரகசிய இயக்கம். இதில் எப்படி வெளியாளைக் கூப்பிட்டு பேச வைக்க முடியும்? அவன் மூலம் ரகசிய விஷயங்கள் வெளிப்பட்டு விடாதா?”

“அவன் வந்தாலும் யாரையும், எதையும் தெரிந்து கொண்டு விடாதபடி ஏற்பாடுகள் செய்து விட்டுத் தான் பேச விடுவார்கள். அவன் ஏதாவது விதத்தில் முரண்டு பிடித்தாலோ, ரகசியம் எதையாவது தெரிந்து கொண்டாலோ உயிரோடு திரும்பிப் போக முடியாது”

(தொடரும்)
என்.கணேசன் 

3 comments:

  1. மிக நீண்ட இடைவேளைக்கு பின் க்ரிஷ் தொடர இருப்பது மகிழ்ச்சி - காத்திருக்கின்றோம் - நன்றி

    ReplyDelete
  2. Thrilling and Superb.

    ReplyDelete
  3. க்ரிஷ்ஷோட பேச்சில் தான் அனைத்தும் உள்ளது... ஆபூர்வ சக்தி இல்லாத ஒருவனை ஏன் ஏலியன் தேர்ந்தெடுத்தான்? என்பது இப்போது ஓரளவு புரிகின்ற மாதிரி உள்ளது....

    தலைவரின் சிந்திக்கும் விதத்தை சரியாக கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்... நான் அதை திரும்ப..திரும்ப படித்துதான் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது...

    அடுத்து என்ன? என்பதற்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete