சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 22, 2018

இருவேறு உலகம் – 75

 மாஸ்டரிடம் ஹரிணி பேசிவிட்டுப் போன அன்று மாலையிலேயே அவரிடம் மறுபடியும் பேச க்ரிஷ் வந்தான். இவனுக்குக் கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைக்கையில் மாஸ்டருக்கு தன்னுடைய இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. குருவிடம் சீடனாகச் சேர்ந்த பிறகு அவரும் குருவிடம் விடாமல் கேள்வி கேட்பார். குரு ஒரு முறை கூட சலிப்பைக் காட்டியதில்லை. பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதில் சொல்வார். குருவின் நினைவு மனதை லேசாக்கியது.....

“ஹரிணி உங்க கிட்ட ஏடாகூடமா கேள்வி எதுவும் கேட்டுடலயே மாஸ்டர்என்று க்ரிஷ் முதலில் கேட்டான்.

“உண்மையாகவே தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு ஆர்வமா கேட்கற கேள்வி எதுவுமே ஏடாகூடமில்ல க்ரிஷ்.என்று மாஸ்டர் சொன்ன போது க்ரிஷ் அந்தப் பதிலை ரசித்தான்.  எவ்வளவு உண்மை! ஆனால் இதை எத்தனை பேரால் ஒத்துக்கொள்ள முடியும்?

மாஸ்டர் புன்னகையுடன் கேட்டார். “நான் உன்னை புதன்கிழமை காலைல அல்லவா வரச்சொன்னேன்?

“பாடத்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அது சம்பந்தமா முக்கியமா உங்க கிட்ட ஒன்னு கேட்க வேண்டி இருக்கு. அதை நான் நேத்து கேட்க மறந்துட்டேன்.....என்று க்ரிஷ் தயக்கத்தோடு சொன்னான்.

கேளு

“நீங்க சொல்லிக் கொடுக்கறதை நான் வேகமா கத்துக்க ஏதாவது வழி இருக்கா மாஸ்டர். எவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கத்துக்க வேண்டிய நிலைமைல இருக்கேன்....

மாஸ்டர் அமைதியாகச் சொன்னார். “ஒரு அஞ்சு வயசுப் பையன்  எவ்வளவு சீக்கிரம் பதினெட்டு வயசுப் பையனாய் மாற முடியும் க்ரிஷ்? அவனுக்கு வளர்ந்து பெரிசாக அவசரம். என்ன பண்ணலாம்....?

க்ரிஷ் வாய் விட்டுச் சிரித்தான். மாஸ்டர் புன்னகையுடன் சொன்னார். “அவசரம் இந்தக் காலத்தின் கட்டாயமாக மாறி விட்டது. எல்லோருக்கும் எல்லாமும் அவசரம். ஆனால் இயற்கை தன் இயல்பான வேகத்தில் தான் எதையும் செய்கிறது. நீ படிக்க விரும்பும் கலையும் இயற்கை விதிகளின் ஒரு அம்சம் தான்.... இயற்கையை நாம் அவசரப்படுத்த முடியாது

அவர் சொன்ன உவமானம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்த்து. அருமையான உண்மை. ஆனால் அவனுடைய அவசரம் அறியாமையால் வந்த அவசரம் அல்ல.... இந்தக்கால இளைஞனின் அவசரமும் அல்ல. அவன் எதிரி என்ன செய்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவும் இந்தக் கலையை வேகமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறான். என்ன செய்வது?

க்ரிஷ் அவரிடம் சொன்னான். “மாஸ்டர். எல்லாருக்கும் காலம் பொதுவானது. அதனால ஒரே கால இடைவெளில தான் வயசு கூடுது. ஆனா படிக்கறதுக்கும், புரிஞ்சுக்கறதுக்கும் அப்படி பொதுவான காலம் இல்லை அல்லவா? அதனால தான் இதுல எதாவது விரைவு வசதி இருக்கான்னு கேட்டேன்…. உதாரணத்துக்கு ஆதிசங்கரர் அஷ்டமகாசித்திகளையும் தன்னோட 32 வயசுக்குள்ளே அடைஞ்சிருந்தார்னு சொல்றாங்க. அந்த மாதிரி சித்திகள்ல ஆர்வம் இருந்து கத்துக்க ஆரம்பிக்கற எத்தனை பேருக்கு 32 வயசுல எட்டுல ஒன்னாவது என்னன்னு சரியா புரியும்….”

மாஸ்டருக்கு அவன் உதாரணத்தோடு கேட்ட விதம் ரசிக்க வைத்தது. அவனிடம் பொறுமையாகச் சொன்னார். “ஆழமா ஆர்வம் இருந்து, அதுவே எல்லாத்தையும் விட முக்கியமா நமக்கு மாறிடறப்ப, கத்துக்கறது வேகமா சாத்தியமாகுது. பொதுவான காலம் கிடையாதுன்னாலும் மனசளவிலயும், அறிவின் அளவிலயும் கடக்க வேண்டிய பொதுவான தூரம் இதுலயும் கண்டிப்பா இருக்கு க்ரிஷ். நீ கேட்டது சரி தான். ஆதிசங்கரர் தன்னோட 32 வயசுக்குள்ள எல்லா சித்திகளையும் அடைஞ்சு கற்பனையால கூட நினைக்க முடியாத சாதனைகளை எல்லாம் அந்தச் சின்ன வயசுல செஞ்சு முடிச்சார். அவர் கூட போன பிறவிகள்ல அந்தப் பொதுவான தூரத்தைக் கடந்திருப்பார். முதல்லயே படிச்சு ஆழமா புரிஞ்ச பாடம் பரிட்சைக்கு முதல் நாள் ஒரு தடவை புரட்டிப் பார்க்கறப்பவே முழுசா ஞாபகம் வருமில்லையா அப்படித் தான் இதுவும், போன பிறவிகள்ல அவர் அடைஞ்ச ஞானம் இந்தப் பிறவில நினைவுபடுத்திகிட்ட மாதிரின்னு வெச்சுக்கோயேன்…..”

க்ரிஷ் கேட்டான். “அப்படின்னா நானும் போன பிறவிகள்ல இது சம்பந்தமா எதாவது கத்துகிட்டிருந்தா இந்தப் பிறவில சீக்கிரமா கத்துக்கலாம்னு சொல்லுங்க”

மாஸ்டர் புன்னகைத்தார். இவனை நேசிக்காமல் இருப்பது கஷ்டம் தான் என்று தோன்றியது. வேகமாகச் சிந்திப்பது, சரியாகப் புரிந்து கொள்வது, எல்லா நேரங்களிலும் ‘பாசிடிவ்’ ஆகவே யோசிப்பது இதெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்லவே! சிரித்துக் கொண்டே அவனிடம் சொன்னார். “நீயும் போன பிறவில எதாவது இது சம்பந்தமா கத்துகிட்டிருந்தா இந்த பிறவில ரொம்ப சுலபமா ஞாபகப்படுத்திக்கலாம். பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு”

க்ரிஷ் அப்படி எதாவது சென்ற பிறவியில் கற்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டான். கிளம்பும் முன் அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டுக் கேட்டான். ”மாஸ்டர், நீங்க குருதட்சிணை என்ன, எவ்வளவுன்னு சொல்லவேயில்லையே”

மாஸ்டர் சொன்னார். “அதை நான் கடைசியில் சொல்கிறேன்.”


செந்தில்நாதன் அகமதாபாதிலிருந்து மவுண்ட் அபுவுக்கு காரில் போய்க் கொண்டிருக்கையில் அந்தக் கார் டிரைவரிடம் மவுண்ட் அபு பற்றிய தகவல்களை ஹிந்தியில் கேட்டார். அவன் தில்வாரா ஜெயின் கோயில், நாக்கி லேக், ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான “குரு ஷிகார்” சிகரம், அச்சால்கர் கோட்டை, அச்சாலேஸ்வரர் சிவன் கோயில் என்று சொல்லிக் கொண்டே போனான். அதெல்லாம் அவனுக்கு மனப்பாடமாக இருந்ததால் ஒவ்வொன்றையும் அதன் சிறப்பான அம்சங்களோடு படபடவென்று சொல்லிக் கொண்டே போனான். ஆனால் அவர் தேடி வந்த குருகுலம் பற்றிச் சொல்லவே இல்லை.

பின் அவராக மெல்லக் கேட்டார். “அங்கே ஏதோ ஒரு குருகுலம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேனே”

“சதானந்தகிரி சுவாமிஜியோட ஆசிரமம் பத்திக் கேக்கறீங்களா…. அது குரு ஷிகார் போகிற வழியில் இருக்கு. அது டூரிஸ்ட்கள் பார்க்கிற இடமில்லை. அங்கே பார்க்க ஒன்னுமில்லை. வேடிக்கை பார்க்கப் போகிறவங்களை அந்த சுவாமிஜி அனுமதிக்கிறதில்லை. பத்தோட பதினோராவது இடமா இந்தப் பக்கம் வராதீங்கன்னு துரத்திடுவார்…..” சொல்லி விட்டு டிரைவர் சிரித்தான்….

“சுவாமிஜி எப்படி?”

“நல்ல ஆள்….” என்று மிக மரியாதையுடன் டிரைவர் சொன்னான்.

“போகிற டூரிஸ்ட்களைத் துரத்தி விடுவார்னு சொன்னாயே”

“அவர் தன்னோட ஆசிரமத்தைக் கட்டுப்பாட்டோட நடத்தறவர். அங்கே விளையாட்டாவோ, வேடிக்கை பார்க்கவோ ஆள்கள் வர்றதை அவர் அனுமதிக்கறதில்லை. அங்கேயே இருந்து படிக்கறவங்க கூட ஒழுங்கீனமா இருந்தா உடனடியா துரத்திடுவார். மத்தபடி ஆள் ஞானி….. அவருக்கு நிறைய சக்திகள் இருக்கறதாவும் சொல்றாங்க…..”

“நான் முக்கியமா அங்கே தான் போகணும்…..”  


தானந்தகிரி சுவாமிஜியின் ஆசிரமம் ஆரவல்லி மலைத்தொடரில் அமைதியான பகுதியில் இருந்தது. ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடனேயே காவியுடை அணிந்த ஒரு இளைஞன் வந்து செந்தில்நாதன் வந்த நோக்கம் என்ன என்று விசாரித்தான். சுவாமிஜியைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கிறீர்களா என்று கேட்டான். இல்லை என்று சொன்ன போது ஏதோ குற்றம் செய்து விட்டு வந்தவர் போல அவரைப் பார்த்தான்.

செந்தில்நாதன் தன் போலீஸ் அடையாள அட்டையை அவனுக்குக் காண்பித்தார். ”நான் ஒரு ஆள் பத்தி அவருக்குத் தெரியுமான்னு கேட்கணும். இது ஒரு ரகசிய விசாரணை. அதனால தான் முதல்லயே பேசிட்டு வரலை…”

அவன் தலையாட்டி விட்டுப் போனான். ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தான். “சுவாமிஜி பாடம் நடத்திகிட்டு இருக்கார். இன்னும் அரை மணி நேரத்துல முடியும். முடிஞ்சவுடன் வந்து பார்க்கிறதா சொன்னார்.”

செந்தில்நாதன் காத்திருந்தார். ஆசிரமம் மிகப் பெரியதாக இருந்தது. அங்கங்கே குடில்கள் நிறைய இருந்தன. சுற்றிலும் இயற்கை செழிப்பாக இருந்தது. வாசலில் நின்றபடி ரம்யமான சூழலை ரசித்தார். நகர நெருக்கடி இல்லாத அமைதியான இது போன்ற இடங்களில் மனம் தானாய் அமைதி அடைவதை அவரால் உணர முடிந்தது.

அரை மணி நேரத்தில் சுவாமிஜி வந்தார். நீண்ட வெண்தாடி வைத்திருந்த வயதான அந்த சுவாமிஜியைப் பார்த்து அவர் கைகூப்ப, சுவாமிஜியும் கைகூப்பினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட செந்தில்நாதன் சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“சுவாமிஜி. நான் அமானுஷ்ய சக்திகள் நிறைய இருக்கிற ஒரு ஆளைப் பற்றி விசாரிக்க வந்திருக்கேன். நீங்களும் அதுமாதிரியான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறவர்னு கேள்விப்பட்டேன்…. நீங்கள் அப்படி ராஜயோகப் பயிற்சிகள் கொடுத்தவர்களில் பிரமிக்கற அளவுக்கு கத்துகிட்டவங்க யாராவது இருக்காங்களா?”

சுவாமிஜி கண்ணில் ஒரு மின்னல் வந்து போனது போல் செந்தில்நாதனுக்குத் தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன் 


7 comments:

  1. Conversation between Master and Krish contains many profound truths. Excellently said sir. Swamiji might have known about marma manithan. Eagerly waiting to know what is next.

    ReplyDelete
  2. அமர்க்களமான பதிவு சார். பிரமிக்கிறேன் உங்கள் எழுத்தாற்றல் கண்டு.

    ReplyDelete
  3. பிரமிக்க வைக்கும் எழுத்தாற்றல் சார். அதிசயிக்க வைக்கும் நடை.

    ReplyDelete
  4. அருமை மாஸ்ட்டரின் பேச்சு கற்று கொள்ளும் கலையை பற்றி நீங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமை கிரிஷ்யை காண்பிக்கும் விதமும் அப்ப்பா சூப்பர்

    ReplyDelete
  5. கிரிஷ் மற்றும் மாஸ்டரின் தத்துவ உரையாடல்கள் அருமை ஐயா....
    மர்ம மனிதன் பத்தி சுவாமிஜி என்ன சொல்லுவார்? என்பதை அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete