சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 15, 2018

இருவேறு உலகம் – 74


மாஸ்டரிடம் ஹரிணி மேலும் ஒரு மணி நேரம் இருந்து பேசி விட்டுப் போனாள். அவளிடம் க்ரிஷ் வேற்றுக்கிரகவாசியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது தெளிவாகவே அவருக்குத் தெரிந்தது. அவள் அவனை மிகவும் ஆழமாகக் காதலித்தாலும் அவன் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் எதிர்பார்க்காமல் இருந்தது ஒரு வித்தியாசமான பக்குவமான மனப்போக்காக அவருக்குத் தோன்றியது. அவள் அவரிடம் அபூர்வசக்திகளைப் பற்றி ஆர்வமாக விளக்கங்கள் கேட்டாள்.

நினைக்கிற எண்ணங்கள் உட்பட எல்லாமே அலைகள் வடிவில் தங்கி விடுகின்றன என்றும் எதுவுமே அழிந்து விடுவதில்லை என்றும் மாஸ்டர் சொன்னார். பலவீனமான, குழப்பமான எண்ணங்கள் எல்லாம் அந்தந்த நிலைகளிலேயே பலவீனமாகவோ, குழப்பமாகவோ தங்கி விடுகின்றன என்றும் அடிக்கடி நினைக்கிற தெளிவான எண்ணங்கள் தெளிவாகவே தங்கி விடுகின்றன என்றும் சொன்னார். அதைப் படிக்கத் தெரிந்தவன் அதை எப்போதும் படிக்கலாம் என்றும் அடிக்கடி எண்ணும் பெரும்பாலான எண்ணங்கள் அவரவரைச் சுற்றியே இருக்கின்றன என்றும் அவரைப் பார்க்கும் போது அவரது எண்ணங்களைப் புரிந்து கொள்வது ராஜயோகத்தின் ஒரு மிகச்சிறிய பகுதி என்றும் அவர் சொன்னார். இதன் நீட்சியாக தூரத்தில் இருக்கும் போதும் ஒருவரைத் தொடர்பு கொண்டு அவர் எண்ணங்களை அறிய முடியும் என்றும் சொன்னார்.

அவள் குழந்தைகளின் குதூகலத்தோடு அந்தப் புதிய தகவல்களைக் கேட்டாள். அவர் சொன்னார். “ஒருத்தரைப் பத்தி நினைக்கறப்ப அவர் போன் வர்றது, நாம சொல்ல நினைச்சதை அந்த சமயத்திலேயே அடுத்தவங்க சொல்றது எல்லாம் நம்ம தினசரி வாழ்க்கைலயே நடக்கிற விஷயங்கள். அதை எதோ தற்செயல்னு நினைச்சுக்கிறோம். அது அந்த எண்ண அலைகளோட சங்கமத்தால நடக்கிற சம்பவம்னு தெரியறது இல்லை…. இது தானா நடக்கறது. தானா நடக்கறதை எப்பவுமே நம்மால செய்ய முடியற கலையா மாத்திக்கறது ராஜயோகத்தோட தத்துவம்….”

“இதையெல்லாம் தெரிஞ்சுக்க அடிப்படையா என்ன தேவை மாஸ்டர்…”

“தெரிஞ்சுக்க பெரிய அளவுல ஆர்வம் இருக்கணும்….. அதுவும் தொடர்ந்து சலிக்காம இருக்கணும். அதற்குத் தேவையானதை சேர்த்துகிட்டு, எதிரானதை விலக்கிகிட்டுப் போகணும்….. அவ்வளவு தான்…….”

“சுலபமா சொல்றீங்க. அது தானே மாஸ்டர் சாதாரண மனுஷனுக்குக் கஷ்டம்….. க்ரிஷ் மாதிரி அந்தந்த நேரத்துல அதுவே எல்லாம்னு மூழ்கிட எல்லாருக்கும் முடியறதில்லையே மாஸ்டர்”

அவனைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் சூரியனின் பிரகாசம் அவள் முகத்தில் தெரிந்தது. அவர் புன்னகைத்தார்.


செந்தில்நாதன் தீர்த்த யாத்திரை போவதாகச் சொல்லி ஒரு மாதம் லீவு போட்டார். உடனே அனுமதியும் கிடைத்தது. தன்னிடம் கொடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் எந்த இடத்திற்கு முதலில் செல்வது என்று யோசித்தார். திருவண்ணாமலை தான் அருகில் உள்ள இடம். அங்கு மாதா மாதம் பௌர்ணமி அன்று சென்று கிரிவலம் செல்லும் நண்பர் ஒருவரைப் போனில் தொடர்பு கொண்டு சித்தர்கள் பற்றி விசாரித்தார். அவர் மலை அடிவாரத்தில் சித்தர்களாக கருதப்படும் சிலர் இருப்பது பற்றிச் சொன்னாரேயொழிய மலை மேல் திரியும் அபூர்வ சக்தி படைத்த சித்தர் பற்றித் தெரியாது என்றார். நிரந்தரமான இடம் இல்லாமல் சுற்றித் திரியும் ஒரு சித்தர், அதுவும் அவராக விரும்பினால் ஒழிய கண்பார்வைக்கே தெரியாத சித்தர் ரகசியக்கலையை ஒருவனுக்கு சொல்லிக் கொடுப்பார் என்று ஏனோ தோன்றவில்லை. ஒருமுறை பார்ப்பதே அபூர்வம் என்றால் தொடர்ந்து கூட இருந்து சொல்லிக் கொடுப்பதெல்லாம் அந்தச் சித்தர் மூலம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் தோன்றியது. அதனால் தேவைப்பட்டால் கடைசியாக திருவண்ணாமலைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தார். மற்ற இடங்களில் அடுத்தபடியாக அருகில் இருப்பது மவுண்ட் அபுவும், தார்ப்பாலைவனமும். முதலில் இந்த இரண்டு இடங்களுக்குப் போய்ப் பார்க்கலாம் என்றும், அதிலும் எதுவும் அறிய முடியாவிட்டால் மேலும் வடக்கே பயணித்து மற்ற இடங்களுக்குச் செல்வோம் என்றும் அவர் முடிவெடுத்தார்.


ங்கரமணி  மருமகனிடம் பரபரப்போடு சொன்னார். “அந்த செந்தில்நாதன் தீர்த்த யாத்திரை போறதுக்கு ஒரு மாசம் லீவு போட்டிருக்கான். நான் கூட லீவு போட்டுட்டு வேண்டாத வேலையில் எதாவது இறங்கிடுவானோன்னு பயந்தேன். டிபார்ட்மெண்ட்ல விசாரிச்சப்ப வட இந்தியாவுக்கு யாத்திரை போறான்னு சொன்னாங்க….. ஆனாலும் கண்காணிக்கச் சொல்லிருந்தேன்…. அகமதாபாத்துக்கு விமானத்துல நாளைக்குப் போக டிக்கெட் புக் பண்ணியிருக்கறதாவும், அங்கே இருந்து மவுண்ட் அபுங்கற இடத்துக்கு கார் புக் பண்ணியிருக்கறதாவும் சொன்னாங்க. விமானநிலையம் வரைக்கும் போய் விமானம் ஏறுறாங்கறதைப் பார்த்துட்டு தான் திரும்பனும்னு ஆளுங்க கிட்ட சொல்லிருக்கேன்….. செந்தில்நாதனுக்கு தமிழ்நாட்டுக் கடவுள்கள் மேல எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு போல் இருக்கு. எல்லாரும் கைவிட்டுட்டாங்களே வடநாட்டு சாமிகளையாவது பாத்து கும்பிட்டு வருவோம்னு கிளம்பியிருக்கான்….”

மாணிக்கம் சொன்னார். “தமிழ்நாட்டை விட்டுத் தொலைஞ்சா சரி….”


ர்ம மனிதன் எகிப்திலிருந்து இந்தியா வந்து சேரும் வரை அலெக்சாண்ட்ரியாவின் மூதாட்டி சொன்னதையே மனதில் அலசிக் கொண்டிருந்தான்.

“மிக வயதானவன்……. இடுப்பில் ஆரஞ்சு நிறத்துணியை உடுத்தியிருக்கிறான்….. கண்களை மூடித்தியானத்தில் இருக்கிறான்…… வேறு உடை எதுவும் உடலில் இல்லை…. ஆனால் இந்தக் குளிரிலும் அவன் உடம்பு நடுங்கவில்லை…. பல நிமிடங்களுக்கு ஒரு முறை தான் மூச்சு விடுகிறான் …… அதுவும் ஒரு மூச்சு தான் விடுகிறான்……..”

இமயத்தின் கடும்பனி உறைவு பத்தடிக்குக் கீழ் ஒரு பாறையின் அடியில் உள்ள ஒரு குகையில் வயதான ஒரு மனிதன் தியானத்தில் அமர்ந்திருக்கிறான் என்றாலே அந்த மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. பல நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு மூச்சு விட்டு அந்த மனிதன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் தந்திருக்கலாம். ஆனால் உயிரோடு ஆள் ஒருவன் அங்கு இருக்கிறான் என்ற செய்தி தான் மர்ம மனிதனுக்கு ஆச்சரியமே ஒழிய பல நிமிடங்களுக்கு ஒரு முறை மூச்சு விட்டு வாழ்வது ஆச்சரியமில்லை. விலங்குகளில் சில வகை ஆமைகள் நீண்ட இடைவெளிகளில் மட்டும் மூச்சு விட்டு கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. தவளைகளும் தண்ணீருக்குள் சில மணி நேரங்கள் மூச்சு விடாமலேயே வாழ முடிந்தவை….. யோகிகளும் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள்…. இதனாலேயே மிக நீண்ட காலம் வாழ முடிந்தவர்கள் அவர்கள்…..

அந்த ஆள் யார், எதற்காக அப்படி அந்தக் குகைக்குள் அமர்ந்து தியான நிலையில் இருக்கிறான், அவன் எப்போதிருந்து அந்தக் குகையில் இருக்கிறான், இந்த ரகசிய ஆன்மிக இயக்கத்திற்கு அவன் தொடர்பு உடையவனா, இல்லை இவர்கள் உதவி எதிர்பார்க்கும் நபர் அந்த ஆளா என்ற கேள்விகளுக்கு அவன் பதில் தேடிக் கொண்டிருந்தான்.

இன்னொரு விஷயம் அவனைக் குழப்பியது. அந்த வரைபடத்தில் கருப்புப் பறவை இருந்த போதிலும் அந்த அலெக்சாண்ட்ரியா பெண்மணி அந்தக் கருப்புப் பறவையை அங்கு பார்க்கவில்லை. இதற்குத் தனி அர்த்தம் ஏதாவது இருக்கிறதா, இல்லையா?....

அவன் புதுடெல்லி விமானம் வந்து சேர்ந்த போது க்ரிஷ் புதன்கிழமை காலையிலிருந்து தன் புதிய கல்வியை மாஸ்டரிடம் ஆரம்பிக்கிறான் என்ற குறுந்தகவல் அவன் செல் போனிற்கு மனோகரிடமிருந்து வந்து சேர்ந்தது.

(தொடரும்)
என்.கணேசன்  

5 comments:

  1. மர்ம மனிதனுக்கு அவனுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை....
    பனிப் பாறையின் கீழ் தியானத்தில் இருக்கும் வயதானவரை,ஏன் ஒரு யோகியாக
    நினைக்க தோன்றவில்லை....? இனி வரும் பதிவுகளில் அவர் வருவாரோ...?

    ReplyDelete
  2. conversation between harini and master is very nice

    ReplyDelete
  3. very thrilling in all tracks.

    ReplyDelete
  4. மாஸ்டர் அபூர்வ சக்திகள் பற்றி சுருக்கமாக நினைவூட்டியது அருமை....
    செந்தில்நாதன் தன் பயணத்தில் என்னென்ன சந்திப்பார்? இதை மர்ம மனிதன் கண்டறிவானா...?

    வரைபடம் பற்றிய மர்மம் எப்ப விடுபடும்... ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. ஹரிணி சூப்பர் மாஸ்டரையும் பிரமிக்க வைக்கும் காதல் மர்ம மனிதனின் சாவி கிடைக்காத வாசல் கதவுமுன் குழப்பத்துடன் நல்ல போகுது G திரிலிங்குடன்

    ReplyDelete