சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 12, 2018

சத்ரபதி – 11


ஜீஜாபாயின் புதிய இருப்பிடத்தில் வசதிகளில் குறைவில்லை. மொகபத்கான் அவளை அனுப்பியிருந்த கொண்டானா கோட்டை முகலாயர்கள் வசம் இருந்தது என்பதைத் தவிர குறை சொல்ல எதுவுமில்லை. அவளுக்குத் தங்க ஒரு அரசகுடும்பத்து பெண்ணுக்குரிய வசதிகள் இருந்தன. பணிவிடை செய்ய ஆட்கள் இருந்தார்கள். எல்லா வசதிகளுக்கும் பின்னும் அவளுக்கு அவள் தாய் தெரிந்தாள். அவள் தாய் சொல்லி, பிறந்த வீட்டார் தலையீட்டிலேயே, கொண்டானா கோட்டைக்கு மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதையும், இப்போதைய சிறைவாசம் கூட வசதியாகவும் கௌரவமாகவும் இருப்பது தாய்வீட்டால் தான் என்பதையும் அவள் உணர்ந்தேயிருந்தாள். இத்தனை வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்த போதிலும், அவள் சிறைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்தும் கூட அவளுடைய சித்தப்பா அவளை வந்து பார்க்கவேயில்லை. அவள் தாயார் அவரைத் தடுத்திருக்க வேண்டும். குடும்ப கௌரவம் மால்ஸாபாய்க்கு என்றுமே முதல் முக்கியமாய் இருந்திருக்கிறது….. ஜீஜாபாயும் தந்தை அழைத்தும் பிறந்த வீட்டுக்குப் போகவில்லை….. தந்தையின் மரணத்திற்கும், சகோதரன் மரணத்திற்கும் துக்கம் விசாரிக்கக்கூடப் போகவில்லை. அவர்களை நினைத்து அழுததோடு சரி…..  திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எத்தனையோ நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது என்று நினைத்து ஜீஜாபாய் பெருமூச்சு விட்டாள்….



கொண்டானா கோட்டை முகலாயர் வசம் இருந்த போதிலும் அவள் தந்தையின் படைவீரர்களில் சிலர் கோட்டையின் காவலர்களாய் இருந்தது ஒருவிதத்தில் அவளுக்கு உபயோகமானதாய் இருந்தது. கோட்டைக்கு வெளியே அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அவ்வப்போது அவளுக்குத் தெரியப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் மூலம் அவள் அறிந்த செய்திகள் அனுகூலமானதாக இருக்கவில்லை….

ஷாஹாஜி முதலாம் நிஜாம் ஷாவின் வம்சாவளிக் குழந்தை ஒன்றை அகமதுநகர் அரசனாக அறிவித்ததையும் அந்தக் குழந்தையை அரியணையில் இருத்தி அதன் பாதுகாவலனாக நின்று ஆட்சி செய்யத் தீர்மானித்ததையும் சொன்னார்கள். இச்செயலுக்கு அவர் பீஜாப்பூர் சுல்தானின் ஆதரவையும் பெற்றிருப்பதாகச் சொன்னார்கள். சில நாட்கள் கழித்து அவள் கணவர் படை முகலாயப் படையை பரெண்டா என்ற இடத்தில் வென்று அங்கிருந்து விரட்டியதையும் சொன்னார்கள். கணவரின் வெற்றி ஜீஜாபாய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் முகலாயர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரேயடியாகப் போய் விட மாட்டார்கள் என்று அறிந்திருந்ததால் கவலைப்பட்டாள். அவள் மகன் அவளை வந்து சேரும் நாள் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறானோ?..... மகன் நினைவு கண்களை நிறைத்தது. மனம் கனத்தது…..


சிவாஜி மலையாடுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டு  சத்யஜித் சற்றுத் தள்ளி ஒரு பாறையில் அமர்ந்திருந்தான்.  சத்யஜித் எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கிறான். ஆனால் இப்படி ஒரு சிறுவனைப் பார்த்ததில்லை. தாயை விட்டு விலகி இருக்கும் குழந்தை போல் ஒரு முறை கூட சிவாஜி நடந்து கொண்டதில்லை. தாயை நினைத்து அழுததில்லை. சகாயாத்திரி மலைத்தொடரின் கரடுமுரடான வாழ்க்கைக்கு முகம் சுளித்தது கூட இல்லை. கூட விளையாட பல நேரங்களில் அவனுக்கு வேறு குழந்தைகள் கிடைத்ததில்லை. அப்போதெல்லாம் கூட அவன் குறைப்பட்டுக் கொண்டதில்லை. மலையாடுகள், அணில்கள், மலை எலிகள் என எந்த விலங்குகள் கிடைக்கிறதோ அந்த விலங்குகளைத் துரத்தி விளையாடினான். சில அபூர்வமான சமயங்களில் அமைதியாக அவன் அமர்ந்திருப்பான். அவன் விழிகள் தூரத்துத் தொடுவானத்தில் நிலைத்திருக்கும். ஏதோ ஒரு சிந்தனையில் அவன் அமர்ந்திருப்பான். அப்போதெல்லாம் ‘சிவாஜி நீ என்ன யோசிக்கிறாய்?’ என்று கேட்க சத்யஜித்துக்குத் தோன்றும். ஆனால் அவன் வாய்விட்டுக் கேட்டதில்லை. சிவாஜி சொல்கிற பதில் சோகமானதாக இருந்து விட்டால் அதைத் தாங்கக் கூடிய சக்தி சத்யஜித்துக்கில்லை.

சில நேரங்களில் சத்யஜித்தைக் குற்றவுணர்ச்சி அழுத்தும். ஷாஜாஜி ஆட்கள் அனுப்பிக் கேட்ட போது சிவாஜியை அவரிடம் ஒப்படைத்திருக்கலாமோ என்று கூடத் தோன்றும். அப்படி ஒப்படைத்திருந்தால் இந்த மலைத்தொடரில் அடிக்கடி இடம் மாறி மறைவான கஷ்டமான வாழ்க்கை சிவாஜி அனுபவிக்க நேர்ந்திருக்காதே, பாதுகாப்பாகவும் வசதியாகவும் ஏதோ ஒரு மாளிகையில் சிவாஜி உண்டு உடுத்து விளையாடி உறங்கியிருக்கலாமே என்று தோன்றும். ஆனால் அப்படி ஒப்படைத்திருந்தால் ஜீஜாபாய்க்கு ஒரேயடியாக சிவாஜி கிடைக்காமல் போய் விடுவான் என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. ஜீஜாபாய் மகனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிலைமை சரியானவுடன் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தாளேயொழிய ஷாஹாஜியிடம் கூட ஒப்படைக்கக் கூடாது என்று சொல்லியிருக்கவில்லை. ஆனால் சத்யஜித் உள்ளுணர்வு உணர்த்தியபடியே நடந்து கொண்டான்.

ஷாஹாஜி அவன் மறுத்தவுடன் சும்மா இருந்து விடவில்லை. எப்படியாவது மகனை மீட்டு வரும்படித் தன் ஆட்களை மறுபடி அனுப்பினார். ஆனால் அவர்கள் வரும் முன் சத்யஜித் தன் இருப்பிடத்தை மாற்றி விட்டான். சகாயாத்திரி மலையில் எத்தனையோ மறைவிடங்கள்… அவற்றில் சில அவன் மட்டுமே அறிந்தவை. ஷாஹாஜியின் ஆட்கள் அந்த இடங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாம் முடிந்து சிவாஜியை ஜீஜாபாயிடம் ஒப்படைக்கையில் அவள் கூட அவனைக் கோபித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஷாஹாஜி அவனை எதிரியாகவே கருதவும் வாய்ப்பிருக்கிறது…. ஆனால் சகோதரனாக நினைத்து ஜீஜாபாய் அவனிடம் ஒப்படைத்த அவள் குழந்தையை அவளிடம் மட்டுமே சேர்ப்பதென்று சத்யஜித் உறுதியாக இருக்கிறான்….


ஜீஜாபாய்க்கு மொகபத்கான் ஏதோ நோய்வாய்ப்பட்டு இறந்து போன தகவல் கிடைத்தது.  அவனுடைய மகன் தலைமையில் முகலாயப்படை ஷாஹாஜியை எதிர்த்துக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள். அவனும் ஷாஹாஜியை வெல்ல முடியவில்லை என்றும் இந்தத் தகவல் முகலாயப் பேரரசரைப் பெருங்கோபமடையச் செய்துள்ளது என்றும் சொன்னார்கள். பேரரசர் அடுத்தது என்ன செய்வது என்று சீக்கிரமே கட்டளை பிறப்பிக்கக்கூடும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள்.

கொண்டானா கோட்டையில் அடைபட்டிருந்த ஜீஜாபாய் அந்தக் கட்டளை என்னவாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வடக்கின் செழிப்பான மிகப்பரந்த பகுதியை ஆண்டு கொண்டிருக்கும் ஷாஜஹான் தற்போது மழையும் பெய்யாமல் பஞ்சத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தென்பகுதியை இப்போதாவது விட்டுத் தொலைக்கும் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாள். முகலாயர்கள் போய் விட்டால் எல்லாமே சரியாகி விடும். அவள் கணவரின் கை அகமதுநகரில் ஓங்கியே இருக்கும். போர் தற்காலிகமாகவாவது நின்று விடும். அவள் குழந்தை அவளிடம் வந்து சேர்வான்……

ஆனால் ஷாஜஹான் ஞானத்தை வயோதிகத்தில் தான் பெற வேண்டும் என்று விதி எழுதப்பட்டிருந்தது. இப்போதைக்குத் தோல்வியை ஒப்புக் கொண்டு படைகளைத் திரும்பப்பெறும் மனநிலையில் ஷாஜஹான் இருக்கவில்லை. ஷாஹாஜியின் கை ஓங்குவதைப் பொறுக்க முடியாத ஷாஜஹான் ஆழ்ந்த ஆலோசனைக்கு பிறகு பெரும் படையை கூடுதலாகத் தென்பகுதிக்கு அனுப்பினார். இருந்த படையும் வந்த படையும் சேர்ந்து மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

முதல் படைப்பிரிவு ஷாஹாஜி இருந்த கோட்டையை மட்டும் குறி வைத்தது. ”ஷாஹாஜியை வெல்லா விட்டாலும் பரவாயில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஷாஹாஜி அங்கிருந்து தன் மற்ற கோட்டைகளுக்கோ, பீஜாப்பூருக்கோ தப்பி விடாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பது அந்த படைப்பிரிவுக்கு சக்கரவர்த்தியின் கட்டளையாக இருந்தது.

இரண்டாம் பகுதிப் படை ஷாஹாஜி வென்றிருந்த மற்ற கோட்டைகளைத் தாக்குவதில் கவனம் செலுத்த வேண்டுமென கட்டளையிருந்தது. ஷாஹாஜி என்ற தலைவனின் வழிநடத்துதல் இல்லாமல் அந்தக் கோட்டை வீரர்கள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்று ஷாஜஹான் கணக்குப் போட்டார்.  

மூன்றில் பெரியதான மூன்றாம் படைப்பிரிவு பீஜாப்பூர் மீது படையெடுக்க உத்தரவிடப்பட்டது. ஷாஹாஜிக்கு உதவும் பீஜாப்பூர் சுல்தானை அடக்கி ஷாஹாஜியிடம் இருந்து விலக்கி வைப்பது முக்கியம் என்று ஷாஜஹான் முடிவு செய்திருந்தார். ஷாஹாஜிக்குக் கிடைக்கும் உதவிகளை நிறுத்தி தனிமைப்படுத்தினால் ஒழிய அடக்குவது முடியாத காரியம் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.

இந்த மும்முனைத் தாக்குதல் முகலாயர்களுக்கு வெற்றிகரமாக அமைய ஆரம்பித்தது. ஷாஹாஜியை வெல்ல முடியாவிட்டாலும் அவரை கோட்டைக்குள்ளேயே அடைத்து வைக்க முடிந்ததில் அவர் கட்டுப்பாட்டில் இருந்த மற்ற கோட்டைகள் சிறிது சிறிதாக பலமிழக்க ஆரம்பித்தன. ஒவ்வொன்றாக முகலாயர் அதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் மூன்றாவது படை பீஜாப்பூர் சுல்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளைத் தன் வசமாக்கியது. தங்களிடம் சிக்கியவர்களை அடிமைகளாக்கி முகலாயர்கள் விற்க ஆரம்பித்தனர். ஷாஹாஜியைத் தாண்டி நேரடியாகத் தங்களை முகலாயர்கள் தாக்க வருவார்கள் என்று எதிர்பார்க்காத பீஜாப்பூர் சுல்தான் நடுநடுங்கிப் போனார். முகலாயப்படை பூஜாப்பூரில் வெற்றிகரமாக உள்ளே நுழைந்தது. பீஜாப்பூர் சுல்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு எந்த விதமான ஒப்பந்தத்திற்கும் தயாரான செய்தி ஜீஜாபாயை வந்தடைந்தது.


ஜீஜாபாய் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள். இனி ஷாஹாஜியும் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை. ஷாஹாஜியை ஷாஜஹான் சிறைப்படுத்துவாரா, இல்லை கொன்றே விடுவாரா என்றும் தெரியவில்லை…. பிரார்த்தனையைத் தவிர அவளால் செய்ய முடிந்தது வேறு எதுவும் இல்லை. பிரார்த்தித்தாள்!

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. சுஜாதாMarch 12, 2018 at 6:50 PM

    ஜீஜாபாயின் துயரங்கள் மனதை உருக்குகின்றது. சிவாஜியின் தனிமையும் தான். எப்போது அவர்களுக்கும் விடிவுகாலம் வரும் என்று மனம் ஏங்குகிறது.

    ReplyDelete
  2. History of that time and feelings of the concerned people were penned by you beautifully sir.

    ReplyDelete
  3. I woսld like to thank you forr tһe efforts you've put
    in writing this website. I ɑm hoping tߋo view the same
    high-grade content from you in the future as well.
    In fact, your creative wrtіng abilіties has
    motivated me to get my ѵery own wesbsite
    now ;)

    ReplyDelete
  4. நிறைய தகவல்கள் சேகரித்து எழுதியிருக்கிறீர்கள், சார். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தங்கள் வழக்கமான நடையில் இந்த கதை வரவில்லை என்பதுதான் குறை.

    ReplyDelete
  5. சரளமாக, எந்த வித குழப்பமும் இல்லாத எழுத்து நடை.....
    படிப்பவர்களுக்கு அந்த காலத்திற்கே கொண்,டு செல்கிறது....நன்றி....G

    ReplyDelete
  6. ஜீஜாவும்... சிவாஜியும் சேருவார்களா?
    ஷாஹாஜியின் நிலைமை என்னவாகும்...?
    சோகம் கலந்த பரபரப்புடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete