சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 3, 2017

இருவேறு உலகம் – 41



ங்கரமணியின் முகத்தில் இருந்த ரத்தம் ஒரேயடியாக வழிந்து போனது. அவர் பேச்சிழந்து செந்தில்நாதனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

செந்தில்நாதன் தொடர்ந்து சொன்னார். “....அதான் அங்கே வித்தியாசமா நீங்க எதாவது பார்த்தீங்களான்னு உங்க கிட்ட கேட்டுகிட்டு போலாம்னு வந்தேன்.

சங்கரமணி தன்னை மெள்ள சுதாரித்துக் கொண்டார். “பார்த்தவனுக்குப் பார்வைக்கோளாறு இருந்திருக்கும். யாரையோ பார்த்துட்டு நானுன்னு நினைச்சிருக்கான் பாவம்

மனிதரின் ஆரம்ப அதிர்ச்சியை மனதில் அடிக்கோடிட்ட செந்தில்நாதன் ஒன்றும் சொல்லாமல் அவரையே கூர்ந்து பார்த்தார்.

சங்கரமணி நட்புத் தொனியில் சொன்னார். “முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னால் எல்லாம் வாரம் ரெண்டு நாளாவது செகண்ட் ஷோ போயிடுவேன். அப்படி ஒரு சினிமாப் பைத்தியம். இப்ப எல்லாம் ராத்திரி ஒன்பதரை ஆச்சுன்னா கண்ணு தானா மூடிக்குது. வயசாயிடுச்சுல்லியா.... அதனால நான் ராத்திரி எங்கயும் போறதில்லை

செந்தில்நாதன் அவருடைய மலரும் நினைவுகளில் அக்கறை காட்டவில்லை. யோசனையில் ஆழ்ந்தவர் போலக் காட்டிக் கொண்டு சத்தமாகவே முணுமுணுத்தார். “ நீங்க கார்ல வந்ததாகவும், டிரைவருக்குப் பக்கத்து சீட்டுல உட்கார்ந்திருந்ததாகவும்  அந்த ஆள் உறுதியா சொன்னாரே

சங்கரமணி முகத்தில் திகில் எட்டிப்பார்த்து மறைந்தது. “சொன்னது யாரு?கோபத்தோடு கேட்டார்.

செந்தில்நாதன் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அவரையே சில வினாடிகள் பார்த்து விட்டு எழுந்தார். “சரி சார். பார்க்கலாம்  

சங்கரமணி முடிந்த வரை நிதானத்திற்கு வர முயன்றார். செந்தில்நாதன் அங்கிருந்து  நிதானமாக வெளியேறினார்.

ங்கரமணிக்கு செந்தில்நாதன் போனவுடன் ஒரு கணம் கூட வீட்டில் இருக்க இருப்பு கொள்ளவில்லை. பலவித உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட அவர் காரில் ஏறி டிரைவரை உச்சக்கட்ட வேகத்தில் மருமகன் வீட்டுக்குப் போகச் சொன்னார். வந்து சேர்ந்தவுடன் காரிலிருந்து தாவிக்குதித்து வெளிவந்து மாணிக்கத்தின் வீட்டினுள் நுழைந்தவர் செந்தில்நாதன் வந்து போன விவரங்களை மருமகனிடம் படபடப்புடன் தெரிவித்தார்.

மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு மாணிக்கம் சலிப்புடன் சொன்னார். “நீங்க அந்த மலைக்கு வாடகைக்கொலையாளியோட ஏன் போனீங்க. அதனால் தானே இத்தனை பிரச்னையும்?

அதை அப்போதும் ஏற்றுக் கொள்ளாத சங்கரமணி மருமகனிடம் சொன்னார். “நான் போகாம இருந்திருந்தா இன்னும் அதிகமாய் தான் குழப்பம் இருந்திருக்கும். யோசிச்சுப் பார். மலையடிவாரம் வரைக்கும் போன நான்  மலை மேல் போகாததால, மேல என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியலை. நான் அவன் கூட மலையடிவாரம் வரை கூட போகாம இருந்திருந்தா அவன் அங்கே வரைக்கும் போனான்கிறதுக்குக் கூட நமக்கு ஆதாரம் இருந்திருக்காது.  போகறதுக்கு முன்னாடியே பாம்பு கடிச்சு செத்துப் போயிட்டான்னு கூட நினைச்சிருப்போம். உண்டா இல்லையா?... போன இடத்துல என்னை எந்த நாசமா போனவனோ பார்த்திருக்கான்னு செந்தில்நாதன் சொல்றான்.... மலைக்குப் போற தெருவோட ஆரம்பத்துலயே தடுப்பு போட்டிருந்ததால அதைத்தாண்டி வந்து யாரும் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் திரும்பி வர்றப்ப தடுப்பு தாண்டி வந்த பிறகு யாராவது என்னைப் பார்த்திருக்கலாம். ஆனா அப்படி பக்கத்துல யாரும் பார்த்திருந்தா என் கவனத்துக்கு வராம போயிருக்காது...   என்ன நடந்திருக்கும்னு இந்த விஷயத்துலயும் எனக்கு ஒரு எழவும் புரியல.....

அவர் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தவராக சிறிது யோசித்து விட்டு மாணிக்கம் சொன்னார். அப்படித் திரும்பி வந்தப்ப தூரத்துல இருந்து யாராவது உங்களை பார்த்திருக்கலாம். அதுவும் நீங்கன்னு தெளிவா சொல்லாம, உங்க முடியை மட்டும் சொல்லியிருக்கலாம். செந்தில்நாதன் ஒரு யூகத்துல வந்து தான் உங்க கிட்ட பேசியிருக்கார்னு நினைக்கிறேன்

மணீஷ் சொன்னான். “இருக்கலாம். தாத்தா முடி எந்த இருட்டுலயும் பளிச்சுன்னு தெரியும்

தலையைக் கோதியபடியே சங்கரமணி யோசித்தார். அவர்கள் இருவரும் சொல்வது சரியென்றே தோன்றியது. “அப்படின்னா அவன்  யூகத்துல தான் வந்து அந்தப் போடு போட்டானா பாவி? அவனை இப்படியே விடறது நமக்கு நல்லதில்லையே!

மாணிக்கம் சொன்னார். “இந்தக் கேஸுக்கு சி எம் நியமிச்ச ஆளு அவரு.  மறந்துடாதீங்க. நாம எச்சரிக்கையா இருக்கறது நல்லது. சந்தேகம்னு வந்துடுச்சுன்னா அந்த ஆள் சும்மா விட மாட்டார். நம்மள கண்காணிச்சுட்டு தான் இருப்பார்.

செந்தில்நாதனால் தொடர்ந்து கண்காணிக்கப்படலாம் என்கிற எண்ணமே சங்கரமணிக்குக் கசந்தது. அவர் மனம் நொந்து போய் பெருமூச்சு விட்டபடி சொன்னார். “இவ்வளவு பிரச்னைய உண்டாக்கிட்டு எங்கிருக்கானோ க்ரிஷ் மகராசன்


தாசிவ நம்பூதிரியின் ஆராய்ச்சி மறுநாள் நள்ளிரவு வரையும் கூட நீண்டது. அவரைச் சுற்றி ஏராளமான தாள்கள், சில பழைய ஜோதிட நூல்கள் கிடந்தன. அவ்வப்போது மாடிக்கு வந்து எட்டிப்பார்த்த அவர் மகன் சங்கர நம்பூதிரிக்கு இரண்டு நாட்கள் அலச இரண்டு ஜாதகங்களில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை. அவருக்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஒரு ஜாதகத்தைப் பார்க்க முடிவதில்லை. அப்பா இந்த அளவு ஆழமாய் பார்க்கக்கூடியவர் என்று தெரிந்து தான் அந்த ஆள் நாற்பதாயிரம் ரூபாய் தந்து விட்டுப் போனானோ....

மகன் அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்ததை சதாசிவ நம்பூதிரி கவனிக்கவில்லை.  அவர் மனதில் இரண்டு ஜாதகர்களும் இப்போது உயிர் உருவம் பெற்று விட்டிருந்தார்கள். அவர் இருவரையும் மிக நெருங்கியவர்கள் அறிந்திருப்பது போல் அறிந்திருந்தார்.  மிக நல்ல மனிதர்கள், பேரறிவாளர்கள், தற்போது ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள், இப்போது உயிரோடு இருந்தாலும் இன்னும் சில நாட்கள் மரணத்தின் விளிம்பிலேயே நின்று கொண்டிருக்கக் கூடியவர்கள், விளிம்பைத் தாண்டிப் போனாலும் கூடப் போகலாம்.....

திடீரென்று அவரை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் அவர் உணர்ந்தார்.  பலமான உணர்வு. வெளியே இருந்து தான் யாரோ அவரை கவனிக்கிறார்கள். கடிகாரத்தை அவர் பார்த்தார்.  மணி நள்ளிரவு 12.46. மெல்ல எழுந்து மாடி வராந்தாவில் நின்று பார்த்தார். எப்போதும் எரியும் தெரு விளக்கு இன்று ஏனோ எரியவில்லை. அதனால் வெளியே கும்மிருட்டு. அந்தக் கும்மிருட்டில் இருந்து தான் யாரோ அவரைப் பார்க்கிறார்கள். இப்போது அந்த இருட்டில் யாராவது நின்று கொண்டிருந்தால் அவரை நேரடியாகப் பார்க்க முடிவது இயல்பான விஷயமே. ஆனால் வீட்டின் உள்ளே அமர்ந்திருக்கும் போதும் அவர் அந்தப் பார்வையை உணர்ந்தாரே....

வெளியே கும்மிருட்டில் மறைவாய் நின்றபடியே அவரை அந்த மர்ம மனிதன் பார்த்துக் கொண்டிருந்தான். அவருடைய எண்ண அலைகளை அவன் படிக்க முயன்று கொண்டிருந்தான். சதாசிவ நம்பூதிரி உள்ளுணர்வால் உந்தப்பட்டவராக உள்ளே இருந்த விளக்கை அணைத்து விட்டு மறுபடி வந்து வராந்தாவில் இருட்டில் நின்றார்.  அவரும் இருட்டில் நின்றால் வெளியே இருட்டில் நிற்பவனும் அவரைப் பார்க்க முடியாது. ஒருவேளை அவனுக்குப் பார்க்க முடிந்தால் அவருக்கும் அவனைப் பார்க்க முடியும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.

ஆனால் அது தப்புக்கணக்காக இருந்தது. மர்ம மனிதனுக்கு இருட்டின் மீது இருந்த ஆதிக்கம் அபாரமானது. இருட்டில் அவன் பார்வை மிகத் துல்லியமானது. அவன் இருட்டை விரும்புபவன். இருட்டில் பல காலம் இருந்தவன். இப்போதும் தனித்திருக்கும் சமயங்களில் எல்லாம் விளக்கை ஒரு இடைஞ்சலாக நினைத்து அணைத்து விட்டு இருட்டிலேயே இருக்கப் பிரியப்படுபவன்.... அப்படி இருட்டில் மிக நீண்ட காலம் இருந்து பழக்கப்பட்டதால், அவனுடைய  இயல்பான சக்திகள் அவன் கண்களை மேலும் கூர்மைப்படுத்தியதால் அவனால் வெளிச்சத்தில் அவரைப் பார்ப்பது போலவே இருட்டிலும் பார்க்க முடிந்தது. ஆனால் அவரால் அவனை அப்படிப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பார்க்கப்படுகிறோம் என்கிற எண்ணம் மிக வலுவாகவே தங்கியதால் உடனடியாக அவர் உதடுகள் சில மந்திரங்களை உச்சரித்தன.....  

அவன் புன்னகைத்தான். கிழவர் மந்திரங்களால் தன்னைக் காத்துக் கொள்ள நினைக்கிறார். மந்திரங்கள் புனிதமான ஆத்மாக்களால் உச்சரிக்கப்படும் போது மாபெரும் கவசமாக ஒருவனைக் காக்கக்கூடியவை. கிழவர் புனிதமான ஆத்மா. அதனால் புதுடெல்லி அதிகாரியை சர்ச்சில் ஆக்கிரமித்தது போல அவர் மனதை அவனால் ஆக்கிரமிக்க முடியவில்லை. ஆனால் அவனது அபார சக்தியால் அவருக்கு எந்தக் கெடுதலையும் விளைவிக்காமல் அவர் மன இடுக்கில் நுழைந்து அவருடைய சமீபத்திய எண்ணங்களைப் படிக்க முடிந்தது. இரண்டு ஜாதகங்கள் குறித்து அவர் இது வரை அவர் கணித்திருந்ததை அவனால் அறியவும் முடிந்தது. இனியும் அவர் முடிவை எட்டவில்லை. இன்னும் சில கணக்குகள் அவருக்குப் போட வேண்டியிருந்தது....

சதாசிவ நம்பூதிரிக்கு அதிக நேரம் அந்த இருட்டில் நிற்க முடியவில்லை. மெல்ல உள்ளே வந்தார். வெளியே யாரோ கண்காணிக்கிறார்கள் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. இந்த வீட்டில் திருட விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாதது ஊருக்கே தெரியும் என்பதால் வெளியே கண்காணிப்பவன் திருடனாக இருக்க வாய்ப்பில்லை. பின் யார்? இந்த ஜாதகர்கள் சம்பந்தப்பட்ட யாரோவாகத் தான் இருக்க வேண்டும்...... அதை உணர்கையிலேயே ஏனோ அவர் உடல் ஒரு கணம் சில்லிட்டது....  


தே நேரத்தில் அமேசான் காடுகளின் எல்லைக் காடு ஒன்றில் மயங்கியிருந்த க்ரிஷ் மெல்ல கண் விழித்தான். சுற்றிலும் கும்மிருட்டாக இருந்தது. இது வரை இடையிடையே அரை மயக்கத்தில் அவன் கண்விழித்து இருக்கிறான். அப்போதெல்லாம் கூட இதே போன்ற கும்மிருட்டைத் தான் அவன் உணர்ந்திருக்கிறான். இறந்து போய் இன்னொரு உலகில் விழித்திருக்கிறோமா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. இந்த இருட்டைப் பார்த்தால் இது நரகமாகவே இருக்கும் என்று தோன்றியது. சொர்க்கம் ஒளிமயமானது என்று அறிஞர்கள் சொன்னதாக நினைவு. ஹரிணி மனதை அவன் நோகடித்ததைத் தவிர நரகத்திற்கு வந்து சேரும்படியான பெரிய  தீமைகளை அவன் செய்ததாய் நினைவில்லை. அவள் முகத்தில் தெரிந்த வலி, அதிர்ச்சி, திகைப்பு, துக்கம் எல்லாம் இன்னும் அவனுக்கு மிக நுட்பமான அளவில் நினைவிருந்தது. அன்றே அவன் நரகத்தை அனுபவித்து விட்டான். அது நினைவுக்கு வந்த கணங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப தொடர்ந்த நாட்களிலும் அனுபவித்து விட்டான். இப்போது நினைவுபடுத்திக் கொள்ளும் போதும் வலிக்கிறது. இங்கிருந்து உலகத்தைப் பார்க்க முடியுமானால், ஹரிணி அந்த வலியிலிருந்து மீண்டு பழைய ஹரிணியாக மாறிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகளையாவது அவனால் பார்க்க முடியுமானால், இந்த நரகத்தில் கூட அவன் சந்தோஷப்படுவான்.....

“ஏய் சும்மா கதை வசனம் எழுதிகிட்டே போகாதே. இது நரகம் அல்ல.... அமேசான் காடுகள்

க்ரிஷ் திடுக்கிட்டான்.       

(தொடரும்)


என்.கணேசன்

4.8.2017 முதல் 15.8.2017 வரை நடைபெறும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 91 ல் என் நூல்கள் சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும். 

8 comments:

  1. செம...., parallel riding…. மிக அருமை சார்.....

    ReplyDelete
  2. Simply superb and amazing. Tension at all levels. The problem is Thursdays are coming once in a week only.

    ReplyDelete
  3. பரபரப்பூட்டும் மர்ம நாவலாக அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கும் வண்ணம் சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. சுஜாதாAugust 3, 2017 at 6:29 PM

    அருமையோ அருமை. முதல் தடவையா க்ரிஷ் நேரடியா வந்திருக்கான். ஒரே பரபரப்பா இருக்கு.

    ReplyDelete
  5. Appa.... Villan antha marma maithan thano....?

    ReplyDelete
  6. செம G நரகத்தின் சொர்க்கத்தின் கலந்துரை இவ்வளவு நுட்பமான திரிலிங்கிலும் நூல் இழையாய் காதல் உணர்வு எதையும் விட்டுவிடாமல் குறையில்லாமல் கதை பயணம் நடக்கிறது கடைசியில் ஹாஸ்யமும் எதிர்பார்ப்பை ஏற்றி .....

    ReplyDelete
  7. 41-வது அத்தியாயத்தில் நமது கதாநாயகன் வந்து விட்டான் !

    ReplyDelete