கேட்டது குரல் அல்ல. காதிலும் விழுந்ததல்ல.
மனதில் நேரடியாக இடைமறித்த வாசகம் அது. உடனே நினைவு வந்தது.
வேற்றுக்கிரகவாசி. அது நினைவுக்கு வந்தவுடன் அதனைத் தொடர்ந்து கடைசியாய் அமாவாசை
இரவு நடந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன. அந்தப் பெரிய கரும்பறவை மலையை
வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவன் டெலஸ்கோப்பில் அந்தப் பறவையைப் பார்த்துக்
கொண்டிருக்கையில் அந்தப் பறவை மலையுச்சிக்கு இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாய்
அவன் உணர்ந்தது வலதுகால் பெருவிரலில் சுளீர் என்ற வலியை. அடுத்த கணம் நினைவிழந்திருந்தான்...
என்ன தான் நடந்தது?...
இப்போது இருப்பது அமேசான்
காடுகளில் என்று வேற்றுக்கிரகவாசி சொல்கிறானே, விளையாட்டுக்குச் சொல்கிறானா இல்லை
நிஜமாய் தான் சொல்கிறானா என்று யோசித்தவனாய் தன் புலன்களைக் கூர்மையாக்கினான். குளிரை உணர்ந்தான். தாவரங்களின் மணத்தைத்
துல்லியமாக மூக்கு உணர்ந்தது. சிறு பூச்சிகள் எழுப்பிய வித்தியாசமான ஒலிகள்
காதுகளை நிறைத்தது. இது அமாசான் காடுகளாகவே இருக்க வேண்டும். பார்வைக்கு மட்டும்
இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ’இரவு வேளை போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டான்.
”இந்த இடத்தில் இரவு பகலுக்குப் பெரிய வித்தியாசமில்லை.
இரண்டும் ஒன்று தான். சூரிய ஒளி இங்கு ஊடுருவுவதில்லை....” வேற்றுக்கிரகவாசி
தெரிவித்தான்.
க்ரிஷுக்கு
அமேசான் காடுகளின் பல பகுதிகளில் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை. அந்த அளவு மிக
நெருக்கமான மரங்கள், மற்றும் தாவர வகைகள் என்பது நினைவுக்கு வந்தது.
“இங்கே
எப்படி வந்தோம்?” க்ரிஷ் கேட்டான்.
“நான்
தான் உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்....”
“ஏன்?”
”உன் உடம்பில் ஏறிய கடுமையான விஷத்தை இறக்க இங்கு ஒரு
சக்தி வாய்ந்த மூலிகை இருக்கிறது. அதை உடனடியாக உன் உடம்பில் ஏற்றியிருக்கா
விட்டால் நீ உயிர்பிழைத்திருக்க முடியாது”
காலின் கட்டைவிரலில்
கடித்தது கடுமையான விஷமுள்ள பாம்பு என்பது க்ரிஷுக்கு இப்போது தான் தெரிந்தது.
வேற்றுக்கிரகவாசி தன்னைக் காப்பாற்றியிருக்கிறான் என்று புரிந்தவுடன் மனம்
நெகிழ்ந்து சொன்னான். “தேங்க்ஸ்”.
கூடவே க்ரிஷுக்கு
சந்தேகம் வந்தது. சென்னையில் பாம்பு கடித்ததற்கு மூலிகை பயன்படுத்த உடனடியாக அமேசான்
காடுகளுக்கு எப்படி வர முடியும். ”அமேசான் காடுகளுக்கு வர எத்தனை நேரமானது?”
”இரண்டு
நிமிடங்கள்”
க்ரிஷ் திகைத்தான்.
சென்னையிலிருந்து அமேசான் காடுகள் சுமார் 15800 கிலோமீட்டர் இருக்குமே, இரண்டு நிமிடத்தில் இந்தத் தொலைவை எப்படிக் கடந்திருக்க முடியும்…
”இதிலென்ன ஆச்சரியம். வினாடிக்கு 132 கிலோமீட்டர் தூரம்
எல்லாம் எங்களுக்குப் பெரிய விஷயமல்ல”
’இவனுக்கு எதுவுமே பெரிய விஷயமில்லை’ என்று க்ரிஷ் நினைத்தான். ஆரம்பச் சந்திப்பிலிருந்து இப்போதைய கணம் வரை
எத்தனை எத்தனையோ பிரமிப்புகளை இவன் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் எல்லாவற்றையும்
சாதாரணமானதாகவே காட்டியிருக்கிறான். எதற்குமே க்ரிஷ் விளக்கம் கேட்காமல்
இருந்ததில்லை. தெரிந்து கொள்ள ஒன்று இருந்து அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால்
அவனுக்கு இருப்பு கொள்ளாது என்பதால் ஏராளமான கேள்விகள் க்ரிஷ் கேட்டிருக்கிறான்.
சிலவற்றை வேற்றுக்கிரகவாசிக்கு ஒரு மானுடனுக்கு விளங்குமாறு விளக்க முடிந்ததில்லை.
ஆனாலும் பொறுமையாக முடிந்த வரை விளக்கி இருக்கிறான்.
“வேகமாகப்
பயணிக்க முடியாவிட்டால் நாங்கள் வேற்றுக்கிரகங்களுக்கு எப்படிப் பயணம் செய்து
விட்டுத் திரும்ப முடியும்? யோசித்துப் பார்.” என்றான்.
அவன்
சொல்வதும் உண்மை தான் என்று தோன்றியது. மனிதர்களால் போக முடிந்த வேகத்திலேயே அவன்
செல்ல முடிந்தவனாக இருந்திருந்தால் இந்தப் பூமிக்கு வந்து சேர்வதற்கே அவன்
வாழ்நாள் போதுமானதாக இருந்திருக்காது. பறவை வடிவத்தில் வந்த வேற்றுக்கிரகவாசி என்னை
எப்படித் தூக்கிக் கொண்டு வந்திருப்பான் என்ற சந்தேகம் க்ரிஷுக்கு வந்தது.
“அணிமா” என்ற பதில் வேற்றுக்கிரகவாசியிடமிருந்து வந்தது.
உடனடியாக
க்ரிஷுக்கு விளங்கவில்லை. “என்னது?”
“உங்கள் சித்தர்கள்
அறிந்த அஷ்டமகாசித்திகளில் முதல் சக்தி... எதையும் அணு அளவுக்குச் சிறிதாக்க
முடிவது. என்னையும் அப்படி ஆக்கிக் கொண்டேன். உன்னையும் அப்படி ஆக்கி விட்டேன்.
அப்படித்தான் உன்னை சுமந்து கொண்டு இங்கு வரை வந்தேன்.....”
அவன் பெருமூச்சு
விட்டான். எத்தனையோ சக்திகள் கடலளவு சூழ்ந்திருக்க, அந்தக் கடலின் சக்திகளையும்,
அதன் ஆழத்தையும் உணராமலேயே கரையில் அலைகளில் விளையாடிக் கொண்டிருப்பது போல அல்லவா
நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.
”நேற்று இங்கே வந்தோமா?” க்ரிஷ் கேட்டான்.
“இங்கே வந்து ஆறு நாட்களாகின்றன. நீ ஆறு நாட்களாய் மயக்கமாய் இருக்கிறாய்...”
’ஆறு நாட்களா?’ க்ரிஷ் கவலையில் ஆழ்ந்தான். வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டு
இருப்பார்களே!
வேற்றுக்கிரகவாசி
தெரிவித்தான். “உன் அண்ணன் மொபைலுக்கு நீ நலமாய் இருப்பதாக நீயே அனுப்புவது போல்
தகவல் தெரிவித்து விட்டேன்.....”
இவனுக்கு நிறையவே
தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக க்ரிஷுக்குத் தோன்றியது. அவன் உயிரைக்
காப்பாற்றியதற்கு மட்டுமல்ல, முதல் சந்திப்பு முதல் இன்று வரை காட்டிய
அக்கறைக்கும், அன்புக்கும் நன்றியை வாய்விட்டுத் தெரிவிப்பது கூட சம்பிரதாயமாய்
இருந்து விடுமோ என்று க்ரிஷ் அதைத் தெரிவிக்காமல் இருந்தான்.
”க்ரிஷ்”
“என்ன?”
“உனக்கு இன்னும்
நிறைய ஆபத்து காத்திருக்கிறது” வேற்றுக்கிரகவாசி மிகுந்த அக்கறையுடன் சொன்னான்.
“இப்போது ஒரு
ஆபத்தில் இருந்து நான் தப்பி விடவில்லையா? நீ இருக்கிற வரை நான் பயப்பட என்ன இருக்கிறது?”
“நான் சீக்கிரமே போய்
விடுவேன். இனி நீ தனியாகவே எல்லாவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும். நீ மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் உன் எதிரியைச் சந்தித்து
விடவில்லை....”
சதாசிவ நம்பூதிரிக்கு அந்த இருட்டில் அதிக
நேரம் நிற்க முடியவில்லை. அவரை இரண்டு விழிகள் துளைத்து விடுவது போல் இருட்டிலிருந்து
பார்த்துக் கொண்டிருந்ததை அவர் தொடர்ந்து உணர்ந்தார். தன்னிடம் இருக்கும் இரண்டு
ஜாதகங்களுக்கும் இப்போது தன்னைக் கவனிப்பவனுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்கிற
எண்ணம் மேலும் வலுவடைந்த போது மூளையில் ஏதோ ஒரு பொறி தட்டியது.... உடனே விறுவிறுவென்று
உள்ளே வந்தவர் நேரத்தைப் பார்த்தார். மணி 1.13. இது அல்ல ஆரம்பம். ஆரம்பம் தான்
முக்கியம்....
உடனே அவர் ஒரு தாளை
எடுத்து 12.46 என்று எழுதினார். ஆரம்பத்தில் அவர் தன்னை யாரோ கவனித்தது போல்
தோன்றிய முதல் கணம் அது. அவர் காலத்தின்
குறிப்பை மிகச் சரியாக உணர்ந்தவர். எதுவுமே தன்னுடைய காலம் வராமல் எங்கும்
வருவதில்லை. இதில் விதிவிலக்குகள் கிடையாது. எதுவுமே தனக்குரிய காலத்திலேயே
வருவதால், அந்தக் காலம் பற்றிய நுணுக்கங்கள் அறிந்தால் அந்தக் காலத்தில் வருபவன்
பற்றிய தகவல்களையும் அறிய முடியும்.
உடனடியாகக் கட்டங்கள்
போட்டவர் யோசித்து, கணக்குப் போட்டு, மறுபடி யோசித்து உறுதிப்படுத்திக் கொண்டு
அந்தக் கட்டங்களில் கிரகங்கள் பெயர்களை எழுத ஆரம்பித்தார். இப்போதும் அவர் போடும்
கட்டங்களை உன்னிப்பாக வேறு இரண்டு கண்கள் கவனிப்பது போல உணர்வு தொடர்ந்து அவருக்கு
இருந்து கொண்டிருந்தது. ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை.
மர்ம மனிதன் நின்ற இடத்தில்
இருந்தபடியே அவர் போடும் கட்டங்களையும், கணக்குகளையும் தன் சக்தியால் கண்ணாடியில்
பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான். நிமிட முட்கள் நகர நகர சதாசிவப்
பணிக்கரின் கணிப்பும் ஒரு வடிவத்தை எட்டிக் கொண்டிருந்தது. மனிதர் கிட்டத்தட்ட
அவன் ஜாதகத்தையே கணித்து விட்டிருந்தார்.
மர்ம மனிதன் கிழவரின்
திறமையைக் கண்டு ஒரு கணம் அசந்து போனான். இது போன்ற திறமைகள் அடிக்கடி
ஒருவருக்குக் காண முடிவதில்லை. சராசரிகளில் தங்கி அதிலேயே சாதித்து விட்டதாய் திருப்தியடைந்து
விடும் மனிதர் கூட்டத்தின் நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெருந்திறமைகள்
அபூர்வமாய் மின்னுகின்றன. அதைக் காணும் சிரமத்தையும் அந்த சராசரிப் பொதுஜனங்கள்
எடுத்துக் கொள்வதில்லை. கண்டும் காணாமலும் தாண்டிப் போய் விடுகிறார்கள்....
மர்ம மனிதன் கிழவரின்
ஜோதிடத் திறனுக்கு மனதில் சபாஷ் போட்டான். அதே நேரத்தில் அவனுடன் பல காலம்
பழகியும் அவனைப் பற்றி முற்றிலும் அறிந்தவர்கள் யாரும் இல்லாமல் இருக்கையில் ஒரு
முறை கூட சந்திக்காமல் இந்தக் கிழவர் இந்த அளவு எட்டியது அவனுக்குள் அபாயச் சங்கை
ஊதியது.....
காத்திருக்கும்
ஆபத்தை உணராதவராய் சதாசிவ நம்பூதிரி அந்த ஜாதகத்தில் மூழ்கிப் போயிருந்தார்....
(தொடரும்)
என்.கணேசன்
Super ji..
ReplyDeletedhik dhik dhik. superb.
ReplyDeleteசூப்பர் சார். சஸ்பென்ஸோட புது புது கான்செப்டையும் இந்த நாவல்ல சொல்லி வியக்க வைக்கிறீங்க. நன்றீங்க சார்.
ReplyDeleteஉண்மை சில அபூர்வ திறமைகள் சராசரி மக்களால் பூஜிக்க படாமலோ உணரப்படாமலோ போய்விடுகிறது
ReplyDeleteகரையிலேயே நின்று கொண்டு வரும் அலைகளிலேயே சமாதானம் ஆகிவிடுகிறோம் அல்லது அதுவே மிரளச்செய்வதாக ஆகிவிடுகிறது
சஸ்பென்ஸ் தாங்கல ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பு கூடிக்கிட்டே போகுது
ReplyDeleteSathish
வேற்று கிரக வாசிக்கு பெயர் ஒன்றும் கிடையாதா...?
ReplyDeleteஅவனால் கிரிஷ்க்கு உதவியா இல்லை உபத்திரமா...?
மர்ம மனிதன்,மாஸ்டர்,வே.கி.வா.....இடையில் கிரிஷ்.....
என்ன நடக்கப் போகுது......!!!!!?????
சதாசிவ நம்பூதிரி ....attakasam..... Ponga
ReplyDelete