சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 29, 2016

இருவேறு உலகம் – 10



க்ரிஷ் காணாமல் போனது பற்றித் துப்பறிய செந்தில்நாதனை முதலமைச்சர் நியமித்ததில் உதய்க்கு ஆரம்பத்தில் சிறிதும் உடன்பாடிருக்கவில்லை. தந்தையிடம் அவன் பொரிந்து தள்ளினான். “அவர் ஏன் அந்த ஆளையே இதில் நுழைக்கிறார். முதல்லயே அந்த ஆள் திமிர் பிடிச்சவன். இப்ப விசாரணைன்னு வந்து பந்தா பண்ணுவான்...

அண்ணன் எதையும் யோசிக்காம செய்ய மாட்டார்டா. யாரை எதுக்கு எப்படிப் பயன்படுத்தணும்னு முடிவெடுக்கறதுல அவர மிஞ்ச ஆள் கிடையாதுடா....”  என்று கமலக்கண்ணன் பொறுமையாகச் சொன்னார். உதய்க்கு அவர் சொன்னதில் இருந்த உண்மையை மறுக்க முடியவில்லை. ராஜதுரை அந்த விஷயத்தில் தனித்திறமை வாய்ந்தவர் என்பதில் அவனுக்கும் சந்தேகமில்லை. அவரது அரசியல் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனால் செந்தில்நாதனுடன் ஏற்பட்ட பழைய உரசலை மறப்பதும் உதய்க்கு சுலபமாக இல்லை. ஆனால் அந்த மலைக்குப் போய் திரும்பி வந்ததில் இருந்து மனம் படும் அவஸ்தையில் க்ரிஷ் திரும்பி வர செந்தில்நாதன் உதவ முடியும் என்றால் அந்த ஆள் காலில் விழுவது கூடத் தப்பில்லை என்று தோன்ற ஆரம்பித்தது.

தம்பியை உதய் அந்த அளவு நேசித்தான். தம்பியைச் சீண்டியும், கிண்டல் செய்தும், சண்டை போட்டும், சேர்ந்து விளையாடியும் வளர்ந்த நாட்கள் அவன் மனதில் இனிமை மாறாமல் இன்னமும் இருக்கின்றன. சந்தேகம் வரும் போதெல்லாம் நிவர்த்தி செய்த தம்பி, தவறு செய்த போதெல்லாம் சுட்டிக் காட்டிய தம்பி, கலப்படமில்லாத அன்பு காட்டிய தம்பி திடீர் என்று மாயமானதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த மலையடிவாரத்தில் நின்றிருந்த தம்பியின் பைக்கைப் பார்த்த போதும், மலையில் அவன் ஆட்கள் எடுத்து வைத்திருந்த தம்பியின் டெலஸ்கோப்பைக் கையில் வாங்கிக் கொண்ட போதும் அவனால் கண்கள் ஈரமாவதைத் தடுக்க முடியவில்லை.

அவன் பாராளுமன்றத்தில் பேசிய கன்னிப்பேச்சை எழுதிக் கொடுத்தவன் க்ரிஷ் தான். “சும்மா ஏனோ தானோன்னு பேசக்கூடாது. பேசி அசத்தணும்என்றவன் அண்ணனுக்கு மிக நேர்த்தியான பேச்சை எழுதிக் கொடுத்து அதைப் பல முறை வீட்டிலேயே பேச வைத்தான். பேசும் போது உச்சரிப்புகளிலும், சொல்லும் முறைகளிலும் அங்கங்கே திருத்தம் செய்து திரும்பத் திரும்ப சொல்ல வைத்தான். உதய் பாராளுமன்றத்தில் தன் முதல் பேச்சைப் பேசி முடித்த போது கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் பாராட்டிக் கைதட்டினார்கள். பிரதமர் “யாரந்தப் பையன்?என்று தன் கட்சிக்காரர்களிடம் விசாரித்தார். பாராளுமன்ற ஜாம்பவான்கள் சிலர் நேரடியாக வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். மறுநாள் முக்கியப் பத்திரிக்கைகளில் அவன் புகைப்படத்தோடு செய்தி வந்தது. உதய்க்கு இந்த வகை அங்கீகாரம் புதிது. வீட்டுக்கு வந்தவுடன் தம்பியை  முத்தமிட்டு தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆடினான். கமலக்கண்ணனும், பத்மாவதியும் தங்கள் பிள்ளைகளை பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி சந்தோஷத்தால் நிரம்பி இருந்த வீடு இப்போது சுடுகாடு போல் இருக்கிறது. பத்மாவதி சாப்பிடாமல் அழுதபடி இருந்தாள். கமலக்கண்ணன் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். உதய்க்கு அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தால் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. செந்தில்நாதன் தனக்குத் தரப்பட்ட வேலையை எப்போது எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பார் என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த ஆள் உடனடியாக ஆரம்பித்தால் நல்லது என்று தோன்றியது....



ISTRAC யில் இருந்த அந்த ஆராய்ச்சியாளனுக்கு அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த அழைப்பு இரண்டு மணி நேரம் கழித்து தான் வந்தது. மறுபக்கத்துப் பெண்மணி “ஹலோ”  என்றவுடன் அவன் பரபரப்புடன் ஆங்கிலத்தில் கேட்டான். “எங்கே இருக்கீங்க?

அந்தப் பெண்மணியும் ஆங்கிலத்தில் பதிலளித்தார். “புனேயில். இப்ப தான் டைரக்டருடனான மீட்டிங் முடிஞ்சுது. உன் மெசேஜ் பார்த்தேன். நீ சொன்ன அசாதாரண நிகழ்வு நல்லதா, கெட்டதா?....

அவன் உண்மையைச் சொன்னான். “தெரியல.

“ஏனப்படிச் சொல்கிறாய்? என்ன விஷயம்....

அவன் அந்தப் புகைப்படங்களில் பார்த்ததை விவரமாகச் சொன்னான். எல்லாவற்றையும் இடைமறிக்காமல் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அந்தப் பெண்மணி கடைசியில் மெல்லச் சொன்னார். இதை டைரக்டரிடமும் தெரிவிக்கறது தான் நல்லதுன்னு தோணுது.... நான் அவர் கிட்ட பேசிட்டு உன்கிட்ட பேசறேன்....

அவளது மறு அழைப்பு பதினைந்து நிமிடங்களில் வந்தது. “டைரக்டர் அந்தப் படங்களைப் பார்க்கணும்கிறார்

அவன் மெல்லக் கேட்டான். “அவர் பர்சனல் மெயிலுக்கு அனுப்பட்டுமா?

அந்தப் பெண்மணி கோபித்துக் கொண்டார். “முட்டாள் மாதிரி பேசாதே. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த டேட்டாக்கள் வெளியே போகக்கூடாதுங்கறது நம்ம பாலிசி. அதை நாம அவருக்காகக் கூடத் தளர்த்தறத அவரே விரும்பல. ஹேக்கிங் எல்லாம் சர்வசகஜமாய் நடக்கிறது. ISTRAC க்குள்ள இருக்கற பாதுகாப்பு வசதி வெளியே இல்லை. அதனால அவரும் நானும் அடுத்த விமானத்துல பெங்களூர் வர்றோம். என்னேரமானாலும் நீ அங்கேயே இரு. .. பிறகு முடிவு செய்வோம்....

அவன் அவர்களுக்காகக் காத்திருந்தான்.


ஞ்சுத்தலையரிடம் அந்த இளைஞன் சொன்னான். முதல்வர் க்ரிஷ் காணாம போனதை ரகசியமா விசாரிக்க செந்தில்நாதனை நியமிச்சிருக்கார்

அந்தச் செய்தி பஞ்சுத்தலையருக்குக் கசந்தது. ‘இதென்ன கேள்விப்படுகிற எல்லாமே தலைவலி தருவதாகவே இருக்கின்றனவேஎன்று நினைத்துக் கொண்ட அவர் அந்த இளைஞனிடம் சொன்னார். “அந்த செந்தில்நாதன் ஒரு மாதிரி ராங்கி பிடிச்சவனாச்சே.  உதய் கிட்ட கூட எதோ ப்ரச்னை செஞ்சவன் தானே அவன். அவனை எப்படி இந்தக் கேஸ்ல ராஜதுரை ஒட்ட வெச்சான்... கமலக்கண்ணன் எப்படி ஒத்துகிட்டான்?

அவர் சொல்ற பேச்சுக்கு இவர் எப்ப மறுப்பு தெரிவிச்சிருக்கார்....

பஞ்சுத் தலையர் மனதில் ஒரு நப்பாசை எழுந்தது. அதை அவர் வாய்விட்டுச் சொன்னார். செந்தில்நாதனும், உதயும் இந்த விசாரணை நேரத்துல முட்டிகிட்டு அந்த ஆள் விசாரணல இருந்து விலகிட்டா நல்லது. செந்தில்நாதன் ஜாதகமே அப்படித்தான். எல்லா ஆட்சிலயும், எல்லாக் கட்சிலயும் அவனுக்குப் பிரச்சன தான்....

அவனுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. தலையசைத்து விட்டு மன ஆறுதலுக்காக அவரிடம் தன் பழைய சந்தேகத்தையே மறுபடியும் கேட்டான். “இதுல நம்மள அவங்க கண்டுபிடிக்க வாய்ப்பில்ல தானே...

பஞ்சுத்தலையர் சொன்னார். “முதல்ல இதுல நாம என்ன செஞ்சிருக்கோம்கிறது நமக்கே தெரியலையே. என்ன ஆச்சுன்னு தெரிஞ்ச அந்தப் பாழா போன வாடகைக் கொலைகாரன் செத்துத் தொலைஞ்சுட்டான். உன் ஃப்ரண்டு க்ரிஷ் செத்துத் தொலைஞ்சானா, சாகாமயே தொலைஞ்சானாங்கிறது நமக்கே விளங்கல. என்ன தான் நடந்துருக்குன்னு தெரியாம நாமளே குழம்பிகிட்டிருக்கைல அவனுக என்னத்த கண்டுபிடிக்கறது, நாம என்னத்தச் சொல்றது?

அவர் புலம்பியதில் இருந்த உண்மை அவனுக்கு வேடிக்கையாகவும் இருந்தது. கவலையையும் தந்தது. மிகவும் கச்சிதமாகத் தோன்றிய இந்தத் திட்டம் இப்படி வில்லங்கமாக மாறும் என்று யாருக்குத் தெரியும்? க்ரிஷை வேறு விதமாகக் கையாண்டிருக்கலாமோ என்று இப்போது தோன்ற ஆரம்பித்தது.  

அவனைப் போல் கவலையில் தங்காமல் பஞ்சுத்தலையர் அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தவராக செல்போனை எடுத்து ஒருவரிடம் பேச ஆரம்பித்தார். “என்ன சுந்தரம் சௌக்கியமா? ... ஏதோ இருக்கேம்ப்பா.... எனக்கு உன்னால ஒரு வேலை ஆகணும்.... எனக்கு ஒரு நம்பர்ல இருந்து இன்னைக்கு நியூசன்ஸ் கால் ஒன்னு அடிக்கடி வருது... அந்தக் கால் எங்கே இருந்து வருதுன்னு கண்டுபிடிச்சு சொல்லணும்.... அதிகாரபூர்வமாவே கேக்க முடியும்னாலும் அது வேண்டாம்னு பாக்கறேன்.... அந்த நம்பரச் சொல்றேன் நோட் பண்ணிக்கோ...என்று சொன்னவர் அந்த எண்ணைச் சொல்லி விட்டுத் தொடர்ந்தார். “அடுத்த தடவை அந்த நம்பர்ல இருந்து கால் வர்றப்ப அதை ட்ரேஸ் செஞ்சு சொன்னாய்னா அத முறைப்படி நான் பாத்துக்கறேன்.... நான் சொன்ன நம்பரத் திரும்பச் சொல்லு பார்க்கலாம்....உம்... உம்.... கரெக்ட். தனியா உன்னை கவனிச்சுக்கறேன்... சரியா

பேசி முடித்து செல்போனைக் கீழே வைத்த போது அவருக்கு மனம் சற்று திருப்தி அடைந்திருந்தது. அவரது இந்த நடவடிக்கைக்கு அந்த இளைஞன் பார்வையாலேயே அவருக்கு சபாஷ் போட்டான்.

(தொடரும்)
என்.கணேசன் 


7 comments:

  1. முற்றிலும் மாறுபட்ட கதையமைப்பு. பரபரப்பு காட்சிகள். அடுத்தது என்ன என்று கொஞ்சமும் யோசிக்க முடியவில்லை. செம சார்.

    ReplyDelete
  2. Superb. Eagerly waiting for next episode. Adding ISTRAC and Astrosat gives scientific angle also to this novel. Nice sir. I have no clue what will happen next.

    ReplyDelete
  3. Oralavuku puriya arambikuthu but too much of suspense

    ReplyDelete
  4. //முதல்ல நாம என்ன செஞ்சுருக்கோம்கிறது நமக்கே தெரியலையே // நினைத்து நினைத்து சிரித்த வரிகள்...எந்த வில்லனுக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்துருக்காது :)
    முக்கோண தேடல்கள்... செந்தில் நாதன் , பஞ்சுத்தலையர் மற்றும் ISTRAC group ....

    பஞ்சுத்தலையர் பாத்திர படைப்பை visualize பண்ணினா, முதல்வன் ரகுவரன் கேரக்டர் பொருத்தமாக இருப்பார்னு தோணுது...

    மலைப்பகுதியில் டெலஸ்கோப் கிடைத்ததை வைத்து பார்த்தா , Astrosat எடுத்த படத்தில் பதிவான அசாதாரண நிகழ்வை தான், க்ரிஷும் ஆராய்ச்சி பண்ணி இருப்பானோ ... அந்த அசாதாரண நிகழ்வு என்னவாக இருக்கும்???





    ReplyDelete
  5. பஞ்சுத்தலையர் super ji...

    ReplyDelete
  6. Ama new year bonusa yalla episodum post pannidunga.... atleast weekly oncea daily one episoda potingana parava illa....

    ReplyDelete