என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, December 15, 2016

இருவேறு உலகம் – 8செல்போனை வாங்கும் போது அந்த இளைஞனின் கைகளும் நடுங்கின. எச்சிலை விழுங்கி விட்டுப் பேசினான். “ஹலோ

மறுபக்கம் பேசவில்லை. இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. அவன் கைகள் நடுங்க செல்போனை அவரிடம் கொடுத்தான். “கட் பண்ணிட்டான்....

பஞ்சுத்தலையருக்கு மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. “யாராயிருக்கும்?என்று அவனைக் கேட்டார். அவனுக்குப் பதில் தெரியா விட்டாலும் அவன் தன் யூகங்களைச் சொன்னால் மேற்கொண்டு சிந்தித்து அலச உதவியாக இருக்கும் என்று அவர் நினைத்தார். அவன் புத்திசாலி. க்ரிஷின் நண்பனாக இருந்தவன்.... அவர் மனதிலும் பல யூகங்கள் உருவாகி இருந்தன. அவனும் சொன்னால் ஒத்துப் போகிறவற்றைப் பற்றி கூடுதலாக யோசிக்கலாம் என்று நினைத்தார்.

அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “தெரியல. யாரோ நம்ம கூட விளையாடறாங்க....

அவர் விடவில்லை. “க்ரிஷ்ஷா இருக்குமோ?”. அந்தக் கோணத்தை இப்போது அவரால் முற்றிலும் விலக்கி விட முடியவில்லை. அவன் பிணம் இன்னும் கிடைத்து விடவில்லை.....

க்ரிஷ் உயிரோடு இருக்கக்கூடும் என்று அவர் நினைப்பதே அவனுக்கு திகிலை ஏற்படுத்தியது. அவன் முகம் வெளிறியது. சில வினாடிகள் யோசித்து விட்டு உறுதியாகச் சொன்னான். “க்ரிஷ்ஷா இருக்க வழியே இல்லை. உயிரோட இருந்தான்னா முதல்ல அவன் வீட்டுக்குப் போன் பண்ணி சொல்லி இருப்பான்....

“பின்ன வேற யாரா இருக்கும்?

எழுந்த கோபத்தை அவன் அடக்கிக் கொண்டான். “எனக்கென்ன தெரியும்?

தெரியலைன்னு விட்டுடற நெலமையில் நாம இல்லை. யோசி. எதையாவது சொல்லு. பரவாயில்லை..... யோசிக்க யோசிக்க தான் ஏதாவது முடிவுக்கு வர முடியும்.... அவருக்கு நடந்து கொண்டிருப்பது பற்றி ஒரு தெளிவான அபிப்பிராயத்திற்கு வந்தால் மேற்கொண்டு எடுக்க  வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பது வசதியாக இருக்கும் என்று தோன்றியது.

அவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். க்ரிஷ் இல்லன்னா இதுல யாரோ மூனாவது மனுஷன் சம்பந்தப்படறான்னு அர்த்தம். ஒருவேளை அந்தக் கொலைகாரன் கொலை செஞ்சதப் பாத்த ஆளா கூட இருக்கலாம்...

“அந்த இடத்துக்கு க்ரிஷுக்கு அப்புறம் யாரும் போகலைன்னு என்னோட ஆளே சொன்னானே?

அவன் கேட்டான். “ஒருவேளை க்ரிஷுக்கு முன்னாடியே அந்த ஆள் வேற எதாவது காரணம் வச்சு அங்கே போயிருந்தா? அந்தக் கொலையப் பாத்துட்டு நம்ம வாடகைக் கொலையாளியையே ப்ளாக்மெயில் பண்ணியிருந்தா? அவன் கூட பேரம் ஒத்து வரலைன்னு அவன தீர்த்துக்கட்டிட்டு, வாடகைக் கொலையாளியோட செல்போன எடுத்துகிட்டு உங்க கிட்ட பணத்தைக் கறந்துறலாம்னு உங்களுக்குப் போன் பண்ண ஆரம்பிச்சிருக்கலாம்....

இவன் யூகங்களே வில்லங்கமாக இருக்கிறதே என்று நினைத்தாலும் அந்த யூகத்தை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி விட அவரால் முடியவில்லை. “அப்படின்னா அதையாவது கேட்டுத் தொலைய வேண்டியது தானே? பேசாமயே பயமுறுத்தறான்

“முதல்லயே பயமுறுத்தி வச்சா, பிறகு கேக்கற தொகைய அதிகப்படுத்தலாம்னு கூட நினைச்சிருக்கலாம்

அவருக்கு அதைக் கேட்கையிலேயே ரத்தம் கொதித்தது.  இதெல்லாம் பொதுவாக அவர் விளையாடும் விளையாட்டு. பயமுறுத்துவதும், அடுத்தவர் பயப்படுவதைப் பார்த்து ரசிப்பதும் அவருக்கு மிகப்பிடித்த பொழுதுபோக்கு. அப்படியெல்லாம் செய்து எத்தனையோ பேருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் அவர். அவரிடமேயா?

அப்படின்னா அவனுக்குக் கேடுகாலம் ஆரம்பிச்சிருச்சுன்னு அர்த்தம்...என்று மனக்கொதிப்போடு சொன்னார். என் கிட்ட விளையாடினா என்ன ஆகும்னு அவன் தெரிஞ்சுக்குவான்.....சொல்லும் போதே வார்த்தைகளில் உஷ்ணத்தோடு குரூரமும் தெரிந்தது.

முதல்ல ஆள் யாருன்னு தெரியணுமே”  என்று சொல்லிப் பெருமூச்சு விட்ட அவன் தொடர்ந்து சொன்னான். “முதல்ல அந்த மலை மேல நேத்து ராத்திரி என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா தான் மத்த முடிச்சுகளை அவிழ்க்க முடியும்

பஞ்சுத்தலையர் சொன்னார். “அவங்க என்ன முடிவெடுக்கறாங்க, எப்படி விசாரணை பண்றாங்கன்னு பார்ப்போம்....  அதுல எதாவது தெரிய வரலாம்....

அவன் சந்தேகத்தோடு கேட்டான். “அதுல நம்மள அவங்க கண்டுபிடிக்க வாய்ப்பிருக்காதில்லையா...?

வாய்ப்பே இல்லைஎன்று அவர் வாய் சொன்னாலும், போன் செய்த மனிதன் அவர் மனதில் நெருடலை ஏற்படுத்தி விட்டிருந்தான்....


ராஜதுரையிடம் கமலக்கண்ணன் சொல்லிக் கொண்டிருந்தார். ...இல்லண்ணே. எத்தனையோ தடவ வெளியிடங்கள்ல அவன் ஆராய்ச்சில இருந்தப்ப, எதையாவது படிச்சுட்டு இருந்தப்ப அங்கேயே உலகத்தையே மறந்து இருந்ததுண்டு. ஆனா அதுல இருந்து வெளிய வந்தவுடனே முதல்ல அம்மாவுக்கு போன் பண்ணிடுவான். அம்மா வந்துட்டிருக்கேன்னோ, நாளைக்கு தான் வருவேன்னோ பொறுப்பா சொல்லிடுவான். இந்த தடவ போனும் வரல. ஆளும் அங்க இல்லை. அவன் பைக்கும் அங்கயே இருக்கு. அது தான் கவலையா இருக்கு.... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல  சொல்லச் சொல்ல அவருக்குக் குரல் உடைந்தது.

அரசியலில் வேகமாக வளர்ச்சியடைந்து, ஆட்சியமைத்து, முதலமைச்சராக வெற்றிகரமாக நிர்வாகம் செய்து கொண்டிருந்த ராஜதுரை அடிப்படையில் மிக எளிமையானவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர். முடிந்த வரையில் தெரிந்தவர்களுக்கு உதவக்கூடியவர். அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக மிகச்சிலரைக் கண்டு வைத்திருந்தார். அவர்கள் மீது அவர் பிரத்தியேக அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார். அரசியல் வானிலைகளுக்கேற்ப மாறாமல், கிடைக்கும் லாபங்களுக்காக இல்லாமல் உண்மையாகவே அவரை நேசிப்பவர்கள் என்றும், எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் அவரை விட்டு விலகாதவர்கள் என்றும், அவருக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்றும் கணித்திருந்த அவர் அவர்களுக்காக தானும் எதையும் செய்வார்.  அந்த மிகச்சிலரில் கமலக்கண்ணனும் ஒருவர்....  

ராஜதுரை கேட்டார். “உன் பையனுக்கு எதிரிகள் இருக்காங்களா கண்ணன்?

“அப்படி யாரும் இருக்கற மாதிரி தெரியலண்ணே. தோணறதை பட்டுன்னு சொல்லிடுவானே ஒழிய பகைய வளர்க்கற ரகமல்ல அவன்...

உனக்கு எதிரிகள்?

“அரசியல்ல என்னத்த சொல்றதுண்ணேஎன்று கமலக்கண்ணன் யதார்த்தமாய் கேட்ட போது ராஜதுரை மெல்லியதாய் புன்னகை செய்தார்.

பின் யோசித்தபடி சொன்னார். “பத்மா சொன்னபடி அவனை யாராவது கடத்திட்டு போயிருக்கவும் வாய்ப்பிருக்கு.... ஆனா உனக்கு யாரும் போன் செய்யலை இல்லையா?

“இல்லைண்ணே

“அப்படின்னா பொறுத்துப் பார்ப்போம்.... வழக்கமான போலீஸ் விசாரணைன்னா மீடியா கவனத்துக்குக் கண்டிப்பா வந்துடும்.... மீடியா நமக்கு உபகாரமா இருக்கறத விட இந்த மாதிரி நேரங்கள்ல இடைஞ்சலா தான் இருக்கும். அதனால இப்போதைக்கு ஒரு திறமையான தனி போலீஸ் அதிகாரிய ரகசியமா துப்பு துலக்கச் சொல்லலாம்... என்ன சொல்ற கண்ணன்...?

“நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யலாம்ணே.....”

“இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் செந்தில்நாதன் பொருத்தமான ஆளுஎன்று ராஜதுரை சொன்னபோது கமலக்கண்ணன் தர்மசங்கடத்துடன் நெளிந்தார். சென்ற ஆண்டு தான் அவருக்கும் செந்தில்நாதனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. உதயின் அடியாட்கள் ஒரு வழக்கில் சிக்கிக் கொள்ள அவர்களை செந்தில்நாதன் கைது செய்திருந்தார். உடனே உதய் செந்தில்நாதனிடம் போனில் பேசி அவர்களை விடுவிக்கச் சொன்னான். நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பேர் போன அவர் அது முடியாது என்று சொல்லவே, அவன் தன் எம்.பி பதவி போதவில்லையோ என்று நினைத்து தன் தந்தை தான் பேசச் சொன்னார் என்று சொல்லிப் பார்த்தான்.

“உங்கப்பா என்ன சட்டத்தை விடப் பெரிய ஆளா?என்று அவர் காட்டமாகக் கேட்ட போது உதய் ஆத்திரமடைந்து கமலக்கண்ணனிடம் சொல்ல கமலக்கண்ணன் ராஜதுரையைத் தொடர்பு கொண்டார். ராஜதுரை செந்தில்நாதனுக்குப் பதவி உயர்வு தந்து வேறு துறைக்கு உடனடியாக மாற்றினார். மறுநாளே உதயின் ஆட்கள் வழக்கில்லாமல் வெளியே வந்தார்கள்.

தன் உத்தேசம் நிறைவேறிய போதும் செந்தில்நாதனுக்குப் பதவி உயர்வு தந்தது உதய்க்கு பெரும் அதிருப்தியைத் தந்தது. “உங்கப்பா என்ன சட்டத்தை விடப் பெரிய ஆளா?என்று கேட்ட ஆளுக்குப் பதவி உயர்வா என்று கொதித்த அவன் உடனடியாக ராஜதுரையிடம் போனில் பேசினான். என்ன அங்கிள். அப்படி திமிரா பேசின ஆளுக்குப் பதவி உயர்வா?

“நேர்மையும் திறமையும் இருக்கற அதிகாரிங்க நிர்வாகத்தோட அஸ்திவாரம் மாதிரி. அவங்களை ஒரேயடியா அவமானப்படுத்தி ஒதுக்கிட்டா நிர்வாகம் ஆட்டம் கண்டுடும். உன் வேலை ஆயிடுச்சுல்ல. அதோட விட்டுடு உதய்என்று ராஜதுரை உறுதியாகச் சொல்லவே உதய்க்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.  ஆனால் தந்தையிடம் இரண்டு மூன்று நாட்கள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அதே அதிகாரியிடம் இந்த ரகசியத் துப்பறியும் வேலையை ஒப்படைப்பதா என்று தர்மசங்கடப்பட்ட கமலக்கண்ணன் தயக்கத்துடன் சொன்னார். “அண்ணே அந்த ஆளுக்கும் எங்களுக்கும் இடையில் போன வருஷம் தான் ப்ரச்ன வந்தது. இப்ப அவர் கிட்டயே...

“அதெல்லாம் அரசியல்ல சகஜம் தான். நமக்கு இப்ப வேண்டியது உச்சத் திறமை இருக்கற ஆளு. அவர் அதுல பொருந்தறார். அவ்வளவு தான்.

“அண்ணே அவர் ஒத்துக்குவாரா?கமலக்கண்ணன் அதே தயக்கத்துடன் கேட்டார்.

“அவர் அரசு ஊழியர். அரசாங்கம் சொல்றதைக் கேட்பார்என்று அது சம்பந்தமான பேச்சிற்கு ராஜதுரை முற்றுப்புள்ளி வைத்தார்.

(தொடரும்).

என்.கணேசன்


2 comments:

  1. You make your characters lively and make us see them as real taking care of all subtle nuances. Hats off sir.

    ReplyDelete
  2. சுவாரசிய கேரக்டர்கள். திகிலான நிகழ்வுகள். அருமை சார். அடுத்த வியாழனுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete