என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, September 19, 2016

ஜாதி பேசுகிறதா கீதை?


கீதை காட்டும் பாதை 42
  
கவத் கீதையை மேற்போக்காகப் படிக்கையில் சில சுலோகங்கள் பிற்போக்கான, சமத்துவம் அற்ற கருத்துக்களைச் சொல்வது போலவும், பாரபட்சம் இல்லாத பரமாத்மா அதைச் சொல்லி இருக்கக்கூடாது என்பது போலவும் தோன்றும். ஒன்பதாம் அத்தியாய முடிவில் அப்படி இரண்டு சுலோகங்கள் ஸ்ரீகிருஷ்ணரால் சொல்லப்படுகிறது.  

அர்ஜுனா! தாழ்ந்த பிறவிகளென்று கூறப்படுபவர்களும், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் கூட என்னை சரணடைந்தால் பரமகதியை அடைய முடியும்.

அப்படியிருக்க புண்ணியப் பிறவிகளான பிராமணர்களும், பக்தர்களான ராஜரிஷிகளும் பரமகதியடைவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே நிலையற்றதும், சுகம் அற்றதுமான இந்த உலகை அடைந்த நீ எனது அன்புத் தொண்டில் ஈடுபடுவாயாக.

பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் தாழ்ந்தவர்களா? பிராமணர்களும், ராஜரிஷிகளும் உயர்ந்தவர்களா? யாரேயானாலும் என்னைச் சரணடைந்தால் பரமகதி அடைவார்கள் என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்து விட்டுப் போக வேண்டியதை இப்படி பிரித்துப் பேசி உயர்வு தாழ்வைக் குறிப்பிடுவது சரி தானா? என்ற கேள்விகள் ஒருவருக்கு அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் எழலாம்.

ஆழமாகப் பார்த்தால் மட்டுமே உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். பிறப்பால் தீர்மானிக்கப்படுவது பற்றி இங்கு பகவான் பேசவில்லை. பொதுவாக அன்பும், பாசமும் பெண்களுக்கு அதிகம். பிரியத்தால் பலவீனப்படும் தன்மை உடையவர்களைத் தான் இங்கு பகவான் பெண்களாகக் குறிப்பிடுகிறார். அதே போல வியாபாரிகள் என்றும் சுய லாப நஷ்டக் கண்ணோட்டத்திலேயே எதையும் அணுகும் தன்மை உடையவர்களை. அந்தத் தன்மை உடையவர்களைத் தான் வைசியர்களாகக் குறிப்பிடுகிறார். அதே போல் உயர்ந்த இலக்குகளோ, ஞானமோ, வேட்கையோ இல்லாமல் அடிமட்ட வாழ்க்கை வாழும் தன்மை உடையவர்களை பகவான் சூத்திரர்களாகக் குறிப்பிடுகிறார்.

அதே போல் பிரம்ம ஞானத்தில் நாட்டம் கொண்டு வாழ்பவர்கள் பிராமணர்கள் என்றும், உயர் பதவிகளில் இருந்தாலும் அந்தப் பதவிகளில் கர்வம் அடைந்து விடாமல் கர்ம யோகிகள் போல் சேவை புரிபவர்கள் ராஜரிஷிகள் என்றும் பகவான் குறிப்பிடுகிறார்.

ஆக இங்கு எல்லாமே அவரவர் தன்மையால் மட்டுமே சொல்லப்பட்டு இருக்கின்றன. பிறப்பினால் அல்ல. பிறப்பினால் பிராமணனாக இருப்பவன் தன்மையால் சூத்திரனாகத் திகழ முடியும். அதே போல பிறப்பினால் சூத்திரனாக இருப்பவன் பிராமணனாகவும் இருக்க முடியும். உயர்வு தாழ்வைத் தீர்மானிப்பது அவரவர் தன்மையே ஒழிய பிறப்பு அல்ல.

அந்த வகையில் தாழ்வான தன்மை உடையவர்களாக இருந்தாலும் கூட இறைவனைச் சரணடைந்தால் தங்கள் தாழ்வான தன்மைகள்,  பலவீனங்கள், நீங்கி பரமகதி அடையலாம். அப்படி இருக்கையில் உயர் தன்மை கொண்டவர்கள் பக்தர்களாய் இருந்தால் சொல்ல வேண்டியதே இல்லை. நீக்கிக் கொள்ளக் கூட பலவீனங்கள் நிறைய இல்லாத அவர்கள் இன்னும் சுலபமாகப் பரமகதி அடைவார்கள்.

இந்த உண்மையை மகாபாரதத்தை ஆழமாகப் படிப்பவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடியும். சில உதாரணங்களையும் பார்ப்போம்.

மகாபாரதத்தில் ஜனக ஸுலபா சம்வாதம்என்ற அத்தியாயம் இருக்கிறது. அதில் சாதாரணப் பெண்ணான சுலபை என்பவளைத் தேடி சக்கரவர்த்தியான ஜனகர் செல்கிறார். ஞானம் தேடிப் போன ஜனகருக்கு அந்தப் பெண் பிரம்ம வித்தை போதிக்கிறாள்.    

துலாதரன் என்ற வைசியனிடம் ஜாஜலி என்ற பிராமணன் ஞானம் பெறுவதற்காகப் போகிறான். என் தராசுக் கோல் என்னிடம் பொருள் வாங்க யார் வந்த போதும் சமநிலையிலேயே இருக்கும்என்று துலாதரன் சொல்கிறான். அறிந்தவர், அறியாதவர், சிறியவர், பெரியவர், என யார் பொருள் கொள்ள வந்தாலும் நேர்மையாக ஒரே போல் தராசுக் கோல் நிறுத்தி வணிகம் செய்வதிலே தன் தர்மமும், ஞானமும் இருப்பதாக துலாதரன் சொல்லி ஜாஜலிக்கு ஞானம் போதிக்கிறான்.

அதே போல் தர்மவியாதன் என்ற கசாப்புக்கடைக் காரனிடம் கௌசிகன் என்ற அந்தணன் ஞானோபதேசம் பெறுகிறான். மாமிசத்தை வெட்டுவதும், கழுவுவதும், கழுவியதை விற்பனைக்கு எடுத்து வைப்பதுமாக இருக்கும் தர்ம வியாதன் தனக்கு விதிக்கப்பட்டிருந்த கர்மத்தை முடிந்த வரை தர்மம் பிறழாமல் செய்வதாகவும், அப்படிச் சம்பாதித்துத் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதாகவும் கூறுகிறான்.

இப்போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருக்கும் சுலோகங்களையும் படித்துப் பாருங்கள். பெண்ணிடம் ராஜரிஷியான ஜனகர் உபதேசம் பெற்றதும், வைசியன், சூத்திரன் ஆகியோரிடம் ஜாஜலி, கௌசிகன் போன்ற பிராமணர்கள் உபதேசம் பெற்றதும் கீதை இடம் பெற்ற மகாபாரதத்திலேயே இடம் பெற்றிருக்கிறதா இல்லையா? பிறப்பால் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுவர்களிடம், பிறப்பால் உயர்ந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் தேடிச் சென்று ஞானம் பெற்றதை நச்சென்று சொல்கிறதல்லவா மகாபாரதம்.

அது மட்டுமல்ல மகாபாரதம் எழுதிய வியாசரே சத்யவதி என்ற மீனவப் பெண் வயிற்றில் பிறந்தவர். கீதை சொன்ன ஸ்ரீகிருஷ்ணரே இடையராக வாழ்ந்தவர். எனவே இறைவன் ஞானம் பெற்றதையே உயர் பிறவியாகவும் ஞானக்குறைவையே தாழ்பிறவியாகவும் சுட்டிக் காட்டுகிறார் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளக் கூடாது.

கடைசியில் ஒன்பதாம் அத்தியாயத்தை இப்படிச் சொல்லி பகவான் முடிக்கிறார்.

என்னிடமே மனதை அர்ப்பித்தவனாக இரு. எனக்கே பக்தனாக இரு. எனக்கே வந்தனை செய்து என்னை வழிபடு. இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்தாயானால் என்னையே நீ வந்தடைவாய்.

சதாகாலம் ஒரு மனிதன் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, எதை உத்தமம் என்று கொண்டாடுகிறானோ, எதில் மனம் லயிக்கிறானோ அதுவாகவே மாறி விடுகிறான் என்பது பேருண்மை. அதனால் இறைவனையே எண்ணி, வழிபட்டு, அவனிடமே மனதை அர்ப்பித்து, முழுமையாக மனமும் லயித்தால் அந்த இறைநிலையை எட்டுவது இயற்கை தானே.

இத்துடன் கீதையின் ஒன்பதாம் அத்தியாயமான ராஜவித்தியா, ராஜகுஹ்ய யோகம் நிறைவு பெறுகிறது.

கீதையின் சரி பாதி முடிந்து விட்டது. இனி பத்தாவது அத்தியாயத்திற்குள் நுழைவோம்.

பாதை நீளும்....


என்.கணேசன் 

4 comments:

 1. excellent but now people are differentiated by caste how did it happen?, so many years, people have this kind of strong impression when do we realize and remove these

  ReplyDelete
 2. வணக்கம்,
  கீதையில் கூறப்பட்டுள்ளதாகக் கருதும் 'சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம்' என்பதன் விளக்கம் என்ன?

  ReplyDelete
 3. ஞானம் கிடைத்தாலும் வைராக்கியம் வரலையே. தூக்கம் சாப்பாடு இதுதான் பெரும் கவலையாயிருக்கு

  ReplyDelete
 4. சாதி பற்றி விளக்கம்... வேறொரு கோணத்தில் புதுமையாக கொடுத்துள்ளீர்கள்...‌‌‌நன்றி...

  ReplyDelete