லீ க்யாங் உடனே ராஜினாமா கடிதம் எழுதி அதை எடுத்துக் கொண்டு உளவுத்துறை தலைவரைப் பார்க்கக் கிளம்பினான். அவன் கார் காற்றின் வேகத்தில் சாலைகளைக் கடந்து உளவுத்துறைத் தலைவரின் வீட்டின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கி வேகமாக வெளி கேட்டில் இருந்து உள்ளே நுழைந்த லீ க்யாங்கை நிறுத்தி ‘தலைவர் தூங்குகிறார். பிற்பாடு வருகிறீர்களா?’ என்று கேட்க நினைத்து நெருங்கிய காவலாளி லீ க்யாங்கின் பார்வையிலேயே சுடப்பட்டு பின் வாங்கினான்.
லீ க்யாங் கோபமாக வருவதை உளவுத்துறைத் தலைவர் தனதறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். “கடவுளே இவனிடம் இருந்து என்னைக் காப்பாற்று” என்று வாய் விட்டுப் பிரார்த்தித்த அவர் அறையிலிருந்து வெளியே வரும் போதே லீ க்யாங் முன்னறைக்குள் நுழைந்திருந்தான். அவரைப் பார்த்தவுடன் இறுகிய முகத்துடன் ராஜினாமா கடிதம் நீட்டினான்.
”என்ன இது லீ க்யாங்” என்று கேட்டவரிடம் “ராஜினாமா கடிதம்” என்றான்.
தலைவர் அதைக் கையில் வாங்கவில்லை. “ராஜினாமா செய்கிற அளவுக்கு என்ன நடந்து விட்டது. முதலில் உள்ளே வா. உட்கார்” என்று தனதறைக்குள் அவனை வரவழைத்து இருக்கையில் இருத்தினார்.
வேண்டா வெறுப்பாக உட்கார்ந்த லீ க்யாங் கொதித்தபடி சொன்னான். “நான் மைத்ரேயனுக்கு ஏற்பாடு செய்திருந்த காவலை எனக்குத் தெரியாமல் நீங்கள் அப்புறப்படுத்தினால் பின் எனக்கு இங்கே என்ன மரியாதை இருக்கிறது?”
அவர் அவன் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னார். “பொதுச்செயலாளரே போன் செய்து சொல்லும் போது நான் என்ன செய்ய முடியும்?”
சீனாவின் அதிகார மையமான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பெயரைக் கேட்டதும் லீ க்யாங் அதிர்ச்சி அடைந்தான். இன்றைக்கு காலையில் கேட்ட அதிர்ச்சித் தகவலுக்குப் பின் கிடைப்பதெல்லாம் அதிர்ச்சித் தகவல்களாகவே இருக்கின்றன! பொதுச் செயலாளர் தான் ஆரம்பத்தில் மைத்ரேயன் பற்றி அவனிடம் சொன்னவர். அவரிடம் சொல்லி விட்டுத் தான் ”மைத்ரேய புத்தா” என்ற இந்த ரகசியத்திட்டத்தை அவன் மூளை உருவாக்கியது....
லீ க்யாங் திகைப்புடன் கேட்டான். “அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?”
அவன் அருகில் அமர்ந்த அவர் அமைதியாக விளக்கினார். “சீனாவில் மாரா மற்றும் அவன் ஆட்களின் முதலீடு பல்லாயிரம் கோடிகள் இருக்கின்றன. அவனை அனுசரிக்கா விட்டால் அவன் முதலீட்டை இந்த நாட்டிலிருந்து விலக்கிக் கொள்வான். இந்த நாடு ஒரு பொருளாதார நெருக்கடியைத் தாங்கும் நிலையில் இப்போது இல்லை.....”
லீ க்யாங்கின் திகைப்பு அதிகரித்தது.
“வெளியுலகில் மாராவுக்கு வேறு பெயர். அவன் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவன்....” என்று சொன்ன தலைவர் சமீபத்திய ‘நியூ வீக்லி” (New Weekly) என்ற பிரபல சீனப்பத்திரிக்கையை எடுத்து லீ க்யாங் கையில் கொடுத்தார். அதில் அட்டைப் படத்தில் மாரா இருந்தான். ’வணிக அரசன்’ என்று கொட்டை எழுத்தில் வர்ணனை இருந்தது. லீ க்யாங் அதை முன்பே படித்திருக்கிறான். அழகும் அறிவும் பணமும் எப்படி ஒருவனிடமே சேர்ந்து இருக்கிறது என வியந்தும் இருக்கிறான். அவன் தான் மாரா என்று தான் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவர் தொடர்ந்து சொன்னார். “எல்லாம் நீ நினைத்தபடி தான் நடந்திருக்கிறது. மைத்ரேயன் அழிக்கப்பட வேண்டும் என்று தான் நினைத்தாய். அதைச் செய்து தர மாரா முன்வந்திருக்கிறான். டோர்ஜேயை மைத்ரேயனாக அறிவிப்பது உன் மூளையில் உதித்த திட்டம். அப்படியே செய்வதாக மாரா உறுதி அளித்திருக்கிறான்....”
“ஆனால் எல்லாமே அவன் தீர்மானிக்கும் விதங்களில். நாம் அவன் இஷ்டப்படி ஆட வேண்டி இருக்கிறது” லீ க்யாங் வறண்ட குரலில் சொன்னான்.
தலைவர் பொறுமையாகச் சொன்னார். “அதை ஏன் அப்படி எடுத்துக் கொள்கிறாய்? அவன் நம் எதிரியல்ல. நண்பன். இங்கு பெரும் முதலீடு செய்திருக்கிறான். வளர்ச்சிப் பாதையில் போய்க்கொண்டிருக்கும் நமக்கு அவன் முதலீடு தேவை. அவன் இங்கு இதுவரை எந்தக் கெடுதலையும் செய்ததில்லை. பிரச்னை உண்டாக்கியதில்லை....”
லீ க்யாங் கூர்மையாக அவரைப் பார்த்துச் சொன்னான். “ஆனால் அவன் சொல்கிறபடி கேட்காவிட்டால் பிரச்னை உண்டாக்கி விடுவேன் என்று பயமுறுத்தி இருக்கிறான்.... நம் உளவுத்துறைக்குள்ளேயே ஒரு உயரதிகாரியை அவன் உளவாளியாக வைத்திருக்கிறான்....”
அவரால் உடனே எதையும் சொல்ல முடியவில்லை. பின் தர்மசங்கடத்துடன் சொன்னார். “ஆனால் அந்த ஆள் நம் எதிரி நாட்டிடம் நம் தகவல்களை விற்று விடவில்லையே. நம் நாட்டுக்கு எந்த பிரச்னையும் உருவாக்கி விடவில்லையே. மைத்ரேயன் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் தான் மாராவுக்கு தந்திருக்கிறான். மைத்ரேயன் விஷயத்தில் நாம் செய்ய நினைத்த காரியத்தை மாரா செய்ய ஆசைப்படுகிறான். நமக்கும் காரியமானால் சரி தானே. இந்த நேரத்தில் இந்த சின்ன விஷயத்தில் “ஈகோ” எல்லாம் பார்த்து அவனை எதிர்க்க முடியாது லீ க்யாங். தயவு செய்து புரிந்து கொள். நன்றாக அமைதியாக யோசி. இது வரை இந்த நாட்டின் நலனே உன் நலன் என்று வாழ்ந்தவன் நீ. அந்த அடிப்படையிலேயே யோசித்தால் இன்று எதுவுமே உன் கொள்கைக்கு எதிர்மாறாக நடந்து விடவில்லை என்பது புரியும்” சொன்னவர் அவன் அமைதியை சாதகமாக்கி மெல்ல அவன் கையில் இருந்த ராஜினாமா கடிதம் பிடுங்கி அவசரமாகக் கிழித்துப் போட்டார்.
லீ க்யாங் ஒன்றுமே சொல்லாமல் தளர்ச்சியுடன் எழுந்தான். அவன் மனதில் பெரியதொரு உணர்ச்சிப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஒன்றுமே சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.
திரும்பிப் போகையில் கார் வேகம் மிகவும் குறைந்து போயிருந்தது. சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் சென்ற முறை சந்தித்தபோது சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது. “கடவுளிடமும், அவதார புருஷர்களிடமும் நாம் எப்படியும் இருக்கலாம். ஆனால் சைத்தானிடமும், அவன் வாரிசுகளிடமும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன்”
அவர் சொன்னது உண்மையாகி விட்டது. மைத்ரேயனைச் சிறை பிடித்தான். ஒன்றுமே பிரச்னை இல்லை. ஆனால் சைத்தான் அப்படி இல்லை. சத்தம் இல்லாமலேயே அவனை ஜெயித்திருக்கிறான். நேராக லீ க்யாங்கை சந்திக்கும் சிரமத்தைக் கூட அவன் எடுத்துக் கொள்ளவில்லை.....
லீ க்யாங் காரை சீன உளவுத்துறையின் முந்தைய தலைவரின் வீட்டை நோக்கி ஓட்ட ஆரம்பித்தான். அவன் மனதில் உள்ளதைக் கொட்ட, புரிந்து கொண்டு வழிகாட்ட நம்பகமான நல்ல மனிதர் அவர். சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் தன் வீட்டு முன் இருந்த தோட்டத்தில் களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்.
அவனைப் பார்த்தவுடன் “அன்று நான் தூங்கும் நேரத்தில் வந்தாய். இன்று தூங்கி எழுந்தவுடனே வந்து விட்டாய். உன்னோடு பெரிய தொந்திரவாகப் போய் விட்டது” என்று பொய்க் கோபத்தோடு சொன்னார். அவன் முகம் வெளிறி இருந்ததை அவன் நெருங்கியவுடன் தான் பார்த்தார். உடனடியாக அங்கிருந்த குழாயில் கைகழுவிக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். “வா உள்ளே. என்ன ஆயிற்று லீ க்யாங். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?”
உள்ளே சென்றமர்ந்ததும் ’மைத்ரேயா புத்தா’ என்ற தன் திட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்று நடந்தது வரை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி மனச்சுமையை இறக்கி வைத்தான். அவர் தன்னை மறந்து அவன் சொன்னதில் ஒன்றிப் போனார்.
கடைசியில் லீ க்யாங் சொன்னான். “எல்லாம் நான் நினைத்தது போலத் தான் நடக்கிறது என்று தலைவர் சொல்கிறார். ஒரு விதத்தில் அது உண்மையும் கூட. ஆனால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. மைத்ரேயன் அன்று என்னைக் கேட்டான். “அடுத்தவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதை விட அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதல்லவா ஒருவருக்கு சிறப்பு?” இப்போது அந்த வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் முழுமையாக விளங்குகிறது. ‘திபெத் விவகாரத்தையும், மைத்ரேயன் வாழ்க்கையையும் நான் தீர்மானிக்க நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் சொந்த வாழ்க்கையும், என் நாட்டு விவகாரமுமே என் தீர்மானத்தில் இல்லை. அதை மாரா தீர்மானிக்கிறான். அவன் பணம் தீர்மானிக்கிறது....”
அவர் அவனை மென்மையாகப் பார்த்தார். கசப்பான உண்மைகளை மகன் கஷ்டப்பட்டு ஜீரணிக்க வேண்டி வரும் போது அவனுக்காக உருகும் ஒரு தந்தையின் மனநிலையாக அது இருந்தது.
சிறிய மௌனத்திற்குப் பின் அவர் சொன்னார். “லீ க்யாங். உலக அரசியலே இன்று பணத்தை மையமாக வைத்து நடக்கிறது. உலகப் பொருளாதாரமும், அரசியலும் இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட் முதலாளிகளின் எண்ணப்படி தான் சென்று கொண்டிருக்கிறது. முடிவில் பார்த்தால் எதையும் தீர்மானிப்பது அவர்களே. அதனால் எந்த நாட்டிலும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் பெரிதாக மாறுவதில்லை. மாற்றம் ஏற்படுத்த புதிய ஆட்சிகள் நினைத்தாலும் அவர்களுக்கு அனுகூலமாய் இருந்தால் ஒழிய அதற்கு அந்த கார்ப்பரேட் முதலாளிகள் அனுமதிப்பதில்லை. இன்று மாரா நினைத்ததை சாதிப்பதும் அந்தக் கார்ப்பரேட் முதலாளியாகத் தான். நாடுகளே அவன் பகடைக்காய்களாய் இருக்கும் போது நம்மைப் போன்றவர்கள் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று வருத்தப்படுவது குழந்தைத்தனம்...”
லீ க்யாங் கரகரத்த குரலில் தலை குனிந்து சொன்னான். “உண்மை சார். ஆனாலும் என்னை மாரா தன் கைப்பாவையாக பயன்படுத்தி இருக்கிறான் என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவனுக்காக நான் கஷ்டப்பட்டு மைத்ரேயனைக் கடத்தி அவனிடம் ஒப்படைத்தது போல் இருக்கிறது.”
இது வரை நான் என்று என்றுமே தலைநிமிர்ந்து இருந்த லீ க்யாங் தலை குனிந்ததைப் பார்க்கையில் உளவுத்துறையின் முந்தைய தலைவருக்கு மனவருத்தமாய் இருந்தது. சிறிது நேரம் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
லீ க்யாங் வருத்தத்துடன் சொன்னான். “தலைவர் என்னிடம் சொன்னார். ”மாரா இங்கு இதுவரை எந்தக் கெடுதலையும் செய்ததில்லை. பிரச்னை உண்டாக்கியதில்லை” என்று. ஆனால் அவர் சொல்ல மறந்த ஒரு உண்மை என்னைப் பயமுறுத்துகிறது சார். கெடுதலையும், பிரச்னையையும் எந்த நேரத்திலும் ஏற்படுத்த முடிந்த வல்லமையோடு அவன் இருக்கிறான் என்பதே அபாயம் தானே. இது எதில் கொண்டு போய் முடியும்?”
அவர் மென்மையாக அவனிடம் சொன்னார். “தீய சக்திகள் இப்படி விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்த முடிந்த தெய்வீக சக்திகளும் விஸ்வரூபம் எடுக்கின்றன. இது காலம் காலமாக நடப்பது தான் லீ க்யாங். பௌத்தம் மைத்ரேயனையே அந்த விதமாகத் தான் அடையாளம் காட்டுகிறது....”
லீ க்யாங் விரக்தியுடன் சிரித்தான். “அந்தச் சிறுவன் மாராவுக்கு எதிராய் என்ன செய்ய முடியும்? மாரா கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுவான்”
அவர் புன்னகையுடன் சொன்னார். ”பிறப்பதற்கு முன்பே எதிரி என்று சீனாவின் பலம் பொருந்திய லீ க்யாங்கால் முத்திரை குத்தப்பட்ட அந்தச் சிறுவனைக் கண்டுபிடிக்கவே லீ க்யாங்குக்கு பத்து வருடங்கள் முடியவில்லை. கண்டுபிடித்த பின்னும் அந்தச் சிறுவனை லீ க்யாங்கால் அழிக்க முடியவில்லை”
லீ க்யாங் ரோஷத்தோடு சொன்னான். “எனக்கு முடியாமல் போகவில்லை. நான் டோர்ஜே அவனிடமிருந்து சிலதாவது கற்றுக் கொண்டால் தான் அவனை நான் மைத்ரேயனாக வெளிப்படுத்தும் போது உண்மையின் சாயலாவது இருக்கும் என்று நினைத்தேன். அவனைப் பொறியாக வைத்து மாராவையும் பிடித்து விடலாம் என்றும் நினைத்து தான் விட்டு வைத்தேன்”
“நான் காரணம் கேட்கவில்லை, விளைவை சுட்டிக்காட்டினேன் அவ்வளவு தான். உன்னை சமாளித்தவன், அவனையும் சமாளிப்பான்....”
லீ க்யாங் மனதார சொன்னான். “அப்படி ஆனால் நான் சந்தோஷப்படுவேன். இந்தக்கணம் உண்மையான எதிரியாய் நான் நினைப்பது மாராவைத்தான்.... ஆனால் மைத்ரேயனை மாராவுக்கு இணையான பலசாலியாய் என்னால் நம்ப முடியவில்லை சார்”
“ஆனால் மாரா நம்புகிறான். அதனால் தான் தன் பிரதான எதிரியாய் அவனை நினைக்கிறான். அவனால் உன்னையும், உன் உளவுத்துறையையும், பொதுச்செயலாளரையும் ஆட்டி வைப்பது போல் மைத்ரேயனை ஆட்டிப்படைக்க முடியவில்லை. காரணம் உங்களுக்கு இழப்பதற்கு நிறைய இருக்கின்றது. அதனால் பயப்படுகிறீர்கள். மைத்ரேயனுக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. அவன் அப்படி எதையுமே வைத்துக் கொள்ளவில்லை. அது தான் மைத்ரேயனின் பெரும்பலம். அதில் தான் மாரா அபாயத்தை உணர்கிறான்.”
(தொடரும்)
என்.கணேசன்
(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)
fantastic episode
ReplyDeleteமைத்ரேயன் அன்று என்னைக் கேட்டான். “அடுத்தவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதை விட அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதல்லவா ஒருவருக்கு சிறப்பு?” இப்போது அந்த வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் முழுமையாக விளங்குகிறது.
ReplyDeleteGolden words excellent Sh.Ganeshan
jet speed ..
ReplyDeleteExcellent. Even the characters' change of mind also came out beautifully. ”உங்களுக்கு இழக்க நிறைய இருக்கிறது. அது தான் பயப்படுகிறீர்கள். மைத்ரேயனுக்கு இழக்க எதுவும் இல்லை. அது தான் அவன் பலம். அதில் தான் மாரா அபாயத்தை உணர்கிறான்.” Excellent narration sir.
ReplyDeletenice one. Illuminati coming into the picture
ReplyDeleteஅருமை...
ReplyDeleteWonderful Sir
ReplyDelete