சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 22, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 117

ன்றிரவு லீ க்யாங்குக்கு உளவுத்துறை தலைவர் போன் செய்தார். “உன் திட்டம் வரும் வியாழக்கிழமை நிறைவேறப் போகிறது லீ க்யாங். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். டோர்ஜேயை மைத்ரேயனாக அன்று மாரா அரங்கேற்றம் செய்யப் போகிறான். பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அவன் கைவசம் உள்ளன. புத்தமத அறிவுஜீவிகளும் கூட அவன் பக்கம் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து அவனை மைத்ரேயனாக ஆக்கப் போகிறார்கள். அது உன் திட்டம், டோர்ஜே நீ தேர்ந்தெடுத்தவன் என்பதால் நீயே வெற்றி பெற்றதாக உணர்கிறேன்....”

“சரி” என்று மட்டும் லீ க்யாங் சொன்னான்.

மெல்ல தலைவர் சொன்னார். “இது விஷயத்தில் இனி உன் குறுக்கீடு இருக்காதல்லவா என்று அவன் பொதுச்செயலாளரிடம் கேட்டிருக்கிறான். இருக்காது என்று அவரும் வாக்களித்திருக்கிறார். நானும் அவரிடம் உறுதி அளித்திருக்கிறேன்.”

“கவலைப்படாதீர்கள். வாங் சாவொவையும் பீஜிங் வரச்சொல்லி விட்டேன். இனி இந்த விஷயத்தில் என் குறுக்கீடு இருக்காது. எனக்கு என் தேசத்தை விட எதுவுமே முக்கியமல்ல!” சொன்ன லீ க்யாங் பேச்சை வளர்த்தாமல் இணைப்பைத் துண்டித்தான்.

தலைவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ’இப்படி ஒருவனைப் பெற என் தேசம் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறது!’

லீ க்யாங் அன்றிரவு உறங்கவில்லை. அன்று காலை அவனும் உளவுத்துறையின் முந்தைய தலைவரும் நிறைய மனம் விட்டு பேசியிருந்தார்கள். அவர் நிறைய தத்துவங்கள் பேசினார். காயப்பட்ட மனதுக்கு அவை இதமாக இருந்தன. அவர் மைத்ரேயன் மேல் ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார். சிறிதும் பயப்படாமல் அவனைப் பார்த்துப் பேசிய அந்தச் சிறுவனைப் பற்றி நிறைய நேரம் லீ க்யாங் நினைத்துக் கொண்டிருந்தான்.....



சைத்தான் மலையில் ரகசிய குகைக்கோயிலின் உள்ளே மைத்ரேயனுடன் நுழைந்த போது மாரா ஒரு சின்னத் திருப்தியை அடைந்தான். அவன் தெய்வத்திடம் நேற்றிரவு தந்த வாக்கின் முதல்பகுதி நிறைவேறி விட்டது. மைத்ரேயனை இங்கு கொண்டு வந்து விட்டான். மைத்ரேயன் முகத்தை வெற்றிக்களிப்புடன் மாரா பார்த்த போது மைத்ரேயனிடம் சலனமேயில்லை. அவன் அந்தக் குகையை நின்ற இடத்திலிருந்தே நோட்டமிட்டான். வரும் வழியிலும் சத்தமோ, சலசலப்போ இல்லாமல் அவன் அமைதியாக வந்தது மாராவை மனதிற்குள் மெச்ச வைத்தது. மாராவின் கண்ணசைவில் துப்பாக்கி வீரர்கள் குகையிலிருந்து வெளியே போய் விட்டார்கள். கௌதமும், டோர்ஜேவும் இன்னும் மயக்க நிலையில் தான் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

மாரா ஒன்றுமே பேசாமல் அங்கே வஜ்ராசனத்தில் அமர்ந்து கண்களை மூடினான். கண்கள் மூடினாலும் அந்த குகைக்கோயிலுக்குள் நடப்பது அவன் மனத்திரையில் தெரிந்து கொண்டே இருந்தது. மைத்ரேயனும் ஒரு மூலையில் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்க ஆரம்பித்தான். ஒரே நிமிடத்தில் அவன் தியான நிலையை எட்டி விட்டது தெரிந்தது.

கௌதம் தான் முதலில் விழித்தவன். மெல்ல எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கிருந்த தீபங்களின் வெளிச்சத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த மைத்ரேயன், மாராவையும், பக்கத்தில் படுத்திருந்த டோர்ஜேவையும் பார்த்து தாங்கள் மறுபடி கடத்தப்பட்டு இருப்பதைப் புரிந்து கொண்டான்.

டோர்ஜேயும் மெல்ல கண்விழித்தான். அவன் பயந்து போனான். பக்கத்தில் இருந்த கௌதமிடம் “என்ன ஆனது? நாம் எங்கிருக்கிறோம்” என்று திபெத்திய மொழியில் சைகையோடு கேட்டான். சைகையை வைத்துக் கேள்வியைப் புரிந்து கொண்ட கௌதம் “கடத்திக் கொண்டு வந்து விட்டார்கள்....” என்று தமிழில் சைகையோடு சொல்லிப் புரிய வைத்தான்.

டோர்ஜே அழ ஆரம்பித்தான். கௌதம் சொன்னான். “அழாதே. எங்கப்பா வந்து நம்மைக் காப்பாற்றி விடுவார்” என்றான்.

டோர்ஜேக்கு அவன் அழாதே என்று சொன்னது புரிந்தது. மீதி புரியவில்லை. அவன் தொடர்ந்து அழ ஆரம்பித்தான். கௌதமுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எழுந்து போய் மைத்ரேயனைத் தட்டினான். அவன் கண்விழித்த போது “அவனை அழ வேண்டாம் என்று சொல். என் அப்பா வந்து நம்மை எல்லாம் காப்பாற்றி விடுவார்” என்று சொல்” என்றான்.

மைத்ரேயன் முகத்தில் புன்னகை பூத்தது. கௌதம் சொன்னதை டோர்ஜேக்கு மொழி பெயர்த்துச் சொன்னான்.

டோர்ஜே திகைப்புடன் கேட்டான். “இவன் அப்பா எப்படி வருவார்?”

மைத்ரேயன் இதையும் மொழிபெயர்த்தான். கௌதம் சொன்னான். “எப்படியாவது வருவார். என் அண்ணன் கூடச் சின்ன வயதில் கடத்தப்பட்டானாம். அப்பா போய் காப்பாற்றி இருக்கிறார். என் அப்பாவால் முடியாததே ஒன்றுமில்லை என்று என் அண்ணனே சொல்லி இருக்கிறான்”

மைத்ரேயன் அதையும் மொழிபெயர்த்த போது டோர்ஜே திகைப்புடன் பார்த்தான். அவனுக்கு நம்பிக்கை வராவிட்டாலும் அழுகை நின்றது.

கௌதம் மாராவைப் பார்த்தபடி சொன்னான். “எனக்குத் தெரிந்து கடத்தல்காரர்கள் தியானம் செய்ய மாட்டார்கள். இந்த ஆள் செய்கிறான். ஒரு வேளை கடத்தியது இவனில்லையோ, இவனையும் கடத்திக் கொண்டு வந்து விட்டார்களோ?”

இதை மைத்ரேயன் மொழிபெயர்க்கவில்லை. புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டான்.

கௌதம் மெல்ல டோர்ஜேயிடம் சொன்னான். “அந்த ஆள் கண் விழித்தால் இங்கே விளையாட ஏதாவது இருக்கிறதா என்று கேட்போம் பொறு”

மாராவுக்கே சிரிப்பை அடக்குவது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் கண் திறக்கவில்லை. சிரிப்பையும் வெளியே காண்பிக்கவில்லை. இந்தச் சிறுவனைக் கொல்லப் போகிறோம் என்பது இப்போது அவனுக்கே சின்ன சங்கடத்தைத் தந்தது.



“அதோ அந்த வீடு தான்” என்று தொலைவில் இருந்தே ஆசான் கைகாட்டினார். மைத்ரேயன் என்ற பெயருடைய வேறொரு சிறுவனை அந்த வீட்டில் கண்டதாக முன்பே சொல்லி இருந்த ஆசான் அங்கேயே மைத்ரேயனையும் சிறை வைத்திருக்கக்கூடும் என்று சொன்ன போது அக்‌ஷய்க்கும் இருக்கலாம் என்று தோன்றியது. அந்த வீடு இருக்கும் பகுதி லாஸா விமான நிலையத்திற்கும் அருகில் என்பதால் லீ க்யாங் அடிக்கடி வந்து போகவும் வசதி என்பதால் அங்கேயே மைத்ரேயனும், கௌதமும் இருக்க வாய்ப்பு அதிகம் என்று அக்‌ஷயின் உள்ளுணர்வு சொன்னது.

ஆனால் இப்போது நேரில் பார்க்கையில் அக்‌ஷய்க்குச் சந்தேகம் வந்தது. அந்த வீட்டுக்கு முன் காவல் எதுவும் இல்லை. லீ க்யாங் அப்படி காவல் இல்லாத வீட்டில் கண்டிப்பாக மைத்ரேயனை சிறை வைத்திருக்க மாட்டான்.... முடிந்தால் அந்தப் பகுதியையே கூட காவலர்களால் நிரப்புபவன் ஆயிற்றே அவன்... அக்‌ஷய் கேட்டான். “ஒரு வேளை இங்கிருந்து இடம் மாற்றி இருப்பார்களோ? வீட்டுக்குக் காவல் கூட இல்லையே!..”

ஆசானும் அவன் சந்தேகத்தை உணர்ந்தார். என்ன செய்வது என்று கவலைப்பட்டவராக ஒன்றும் சொல்லாமல் அவனுடன் நடந்தார். வீட்டை நெருங்குகையில் வீட்டு ஜன்னல் வழியே ஒற்றைக்கண் பிக்குவின் கவலை நிறைந்த முகம் தெரிந்தது. சென்ற முறை போல் ஒளிந்து நிற்காமல் ஆசானைப் பார்த்தவுடன் ஒற்றைக்கண் பிக்கு வீட்டிலிருந்து கீழே ஓடி வந்தார். தெருவிலேயே ஆசான் முன் மண்டியிட்டு வணங்கிய ஒற்றைக்கண் பிக்குவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிய ஆரம்பித்தது. “ஆசானே.... ஆசானே... ஆசானே.... என்னை மன்னியுங்கள் ஆசானே....”

அவரை ஒருவழியாக எழுப்பி வீட்டுக்கு அழைத்துப் போன போது மண்டையில் கட்டுப் போட்ட சமையல்காரனும் அங்கு இருந்தான். நடந்ததை இருவரும் மாறி மாறித் தெரிவித்தார்கள். ஆசானும், அக்‌ஷயும் சிறுவர்கள் பேராபத்தில் இருப்பதை உணர்ந்தார்கள்....

சமையல்காரன் சொன்னான். “நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள் என்றும் வந்தால் தன்னிடம் பேசும் படியும் லீ க்யாங் சொல்லி இருக்கிறார்”

அவனே லீ க்யாங்கை அலைபேசியில் அழைத்து ”சார் ஆசானும் அவருடன் நீங்கள் சொன்ன ஆளும் வந்திருக்கிறார்கள்” என்று சொல்லி விட்டு அலைபேசியை ஆசான் கையில் தந்தான்.

லீ க்யாங் உடனடியாக விஷயத்திற்கு வந்தான். “வணங்குகிறேன் ஆசானே. வியாழக்கிழமை டோர்ஜேவை மைத்ரேயனாக மாரா அரங்கேற்றப் போகிறான். மைத்ரேயனைக் கொல்லாமல் அந்த வேலையைச் செய்ய மாட்டான் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் என் திட்டமே அதுவாகத் தான் இருந்தது. உங்கள் மைத்ரேயனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் உடனே ஏதாவது செய்தாக வேண்டும் என்று அமானுஷ்யனிடம் சொல்லுங்கள். நடந்த எதையும் மாற்றும் சக்தி எனக்கில்லை.  முடிந்தால்.... முடிந்தால்... மன்னியுங்கள்”


(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

8 comments:

  1. Really superb... But romba sekaram thodarum potutengale...

    ReplyDelete
  2. அர்ஜுன்September 22, 2016 at 7:13 PM

    பரபரப்பு தாங்க முடியவில்லை. சூப்பர் கணேசன் சார்.

    ReplyDelete
  3. பிரமாதம்! ஒன்றை வார்த்தை என்று எண்ணிவிடவேண்டாம். பாராட்ட சொற்கள் தேட முயவில்லை. முயன்றால் தோன்றுவிடுவேன் என்று தோன்றியது. அத்தனை(யும்) பிரமாதம்.

    ReplyDelete
  4. very interesting. Goutham's innocent observations made me smile. You make us see the scene. You are really a master story teller sir.

    ReplyDelete
  5. No words to type. Waiting for next Thursday. Seems difficult to pass another week.

    ReplyDelete
  6. லீ க்யாங் உடனடியாக விஷயத்திற்கு வந்தான். “வணங்குகிறேன் ஆசானே. வியாழக்கிழமை டோர்ஜேவை மைத்ரேயனாக மாரா அரங்கேற்றப் போகிறான். மைத்ரேயனைக் கொல்லாமல் அந்த வேலையைச் செய்ய மாட்டான் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் என் திட்டமே அதுவாகத் தான் இருந்தது. உங்கள் மைத்ரேயனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் உடனே ஏதாவது செய்தாக வேண்டும் என்று அமானுஷ்யனிடம் சொல்லுங்கள். நடந்த எதையும் மாற்றும் சக்தி எனக்கில்லை. முடிந்தால்.... முடிந்தால்... மன்னியுங்கள்” I can understand change in cook and pikku. Sudden Change in Lee's mind is not believable. Is his personal ego against Mara is now bigger than his country's interests. Enjoying your writing and waiting for next Thursday

    ReplyDelete
    Replies
    1. By not involving directly in this matter Lee upholds his country's interests. At the same time he could not digest the way Mara treats him and his country. That's why he secretly desires Mara's downfall and acts accordingly.

      Delete
  7. லீ க்யாங் உடனடியாக விஷயத்திற்கு வந்தான். “வணங்குகிறேன் ஆசானே. வியாழக்கிழமை டோர்ஜேவை மைத்ரேயனாக மாரா அரங்கேற்றப் போகிறான். மைத்ரேயனைக் கொல்லாமல் அந்த வேலையைச் செய்ய மாட்டான் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் என் திட்டமே அதுவாகத் தான் இருந்தது. உங்கள் மைத்ரேயனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் உடனே ஏதாவது செய்தாக வேண்டும் என்று அமானுஷ்யனிடம் சொல்லுங்கள். நடந்த எதையும் மாற்றும் சக்தி எனக்கில்லை. முடிந்தால்.... முடிந்தால்... மன்னியுங்கள்” I can understand change in cook and pikku. Sudden Change in Lee's mind is not believable. Is his personal ego against Mara is now bigger than his country's interests. Enjoying your writing and waiting for next Thursday

    ReplyDelete