ஒரு மனிதனை மிகச்சரியாகப் புரிந்து கொள்வது சாதாரண சமயங்களில் சாத்தியமல்ல. பெரும் பிரச்னைகளை அவன் எதிர் கொள்ளும் காலங்களில் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே அவனது ஆழத்தையும் அடையாளம் காட்டும். அப்படித்தான் அக்ஷயை மாதவன் அறிந்து பிரமித்தார். வருணை அவன் கையில் சுமந்து கொண்டு வந்து உதவி கேட்ட நேரத்திலிருந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே காத்திருந்த இந்தக் கணம் வரை அவனைக் கவனித்துக் கொண்டிருக்கும் அவர் மனதில் அவன் இமயமென உயர்ந்து போனான். அந்தப் பாசம், அந்த துக்கம், அதை எல்லாம் மீறீய நிதானம், தைரியம், பொறுமை எல்லாம் அந்த சில மணி நேரங்களில் அவரால் உணர முடிந்தது.
அவன் வருணின் தந்தை அல்ல என்பதை எந்த விதத்திலும் ஒருவரால் யூகிக்க முடியாது. அழுது கொண்டிருந்த சஹானாவை அணைத்துக் கொண்டு அவன் சொன்னான். “அழாதே சஹானா. என்னை விட்டு என் மகனைப் பிரிக்க எமனால் கூட முடியாது.” சாதாரண ஆசுவாசப்படுத்தும் வார்த்தைகள் அல்ல அவை. ஆத்மார்த்தமாய் இதய ஆழத்திலிருந்து உறுதியாக வந்த வார்த்தைகள் அவை. அதன் பிறகு தான் சஹானாவின் துக்கம் குறைந்தது. அவள் அனுபவத்தில் அவன் அந்த அளவு உறுதியாகச் சொல்லி இருந்தவற்றில் ஒன்று கூட இது வரை பொய்த்ததில்லை. அக்ஷய்க்கும் வருணுக்கும் இடையே இருந்த பந்தம் தந்தை-மகன் என்பதையும் தாண்டி ஆழமானது. அந்த ஆழத்தில் அவள் கணவன் உணர்ந்து சொல்வது பொய்க்காது....
வந்தனா வந்து தந்தையுடன் அமர்ந்து கொண்டாள். சோகத்தில் இருந்த அவள் முகத்தை மாதவனுக்குப் பார்க்கவே சகிக்கவில்லை. என்ன தான் கோபம் என்றாலும் உண்மையான அன்பிருக்கையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் கரைந்து போய் அன்பு மாத்திரமே மிஞ்சுகிறது என்று அவர் நினைத்துக் கொண்டார்.
டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்து வருணின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதைச் சொன்னார். வாந்தியிலேயே முக்கால் பாக விஷம் வெளியேறி விட்டதென்றும் மீதியையும் அப்புறப்படுத்தி விட்டதாகவும், தெரிவித்து விட்டுப் போனார். அக்ஷய் சஹானாவைப் பார்க்க அவள் கணவனின் கைகளை நன்றியுடன் இறுக்கப் பிடித்துக் கொண்டாள். மறுபடி கண்ணீர் வழிந்தது. அவளைப் போலவே ஆனந்தக் கண்ணீர் விட்ட இன்னொருத்தி வந்தனா.
மாதவன் எழுந்து நிம்மதியாக மகளுடன் கிளம்பினார். அக்ஷயும், சஹானாவும் அவரிடம் ஆத்மார்த்தமாய் நன்றி சொன்னார்கள்.
மாதவனும், வந்தனாவும் வீடு வந்து சேர்ந்த போது ஜானகி இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“என்ன தலைவலியா?” என்று மாதவன் கேட்டார்.
“வலி இல்லை. இடியே விழுந்த மாதிரி இருக்கிறது....” என்ற ஜானகி ஆத்திரத்துடன் நடந்ததை எல்லாம் அழாதகுறையாகச் சொன்னாள். அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவள் காரித்துப்பியதைச் சொன்ன போது மாதவன் முகம் சுளித்தார்.
அதைப் பார்த்த ஜானகி ஆத்திரத்துடன் சொன்னாள். “அந்த நேரத்தில் கையில் விளக்குமாறு கிடைத்திருந்தால் அதிலேயே நாலடி கொடுத்தும் இருப்பேன்....”
மனைவி அதைச் செய்யக்கூடியவள் தான் என்பதில் மாதவனுக்கு சந்தேகம் இல்லை. அவர் மனம் அக்ஷயை நினைத்துப் பார்த்தது. இப்போது அக்ஷயைப் பற்றி எண்ணிய போது அவர் மனதில் அவன் மேலும் உயர்ந்து போனான். அவனுடைய உண்மையான மகன் கடத்தப்பட்ட நேரத்தில் கூட வருண் மீது இப்படி பாசம் கொட்டி அங்கே அமர்ந்திருக்க அவனால் எப்படி முடிந்தது?
மாதவன் மனைவியிடம் கேட்டார். “மேலே அந்த ஆள் இன்னும் இருக்கிறானா, போய் விட்டானா?”
“அவன் நான் துப்பி ஐந்து நிமிடத்தில் போய் விட்டான். கதவைப் பூட்டக்கூட இல்லை. அவனை விடுங்கள். வருண் எப்படி இருக்கிறான்....?” ஜானகி கேட்டாள்.
“ஆபத்து இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார்...” என்று மாதவன் சொன்னார். ஜானகி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் காதுகளில் இப்போது மரகதம் சேகரிடம் சொன்ன வார்த்தைகள் ரீங்காரம் செய்தன. “என் பேரன் பிழைப்பான். என் இன்னொரு பேரன் திரும்பக் கிடைப்பான். இது வரைக்கும் எங்களைக் கைவிடாத கடவுள் இனியும் கைவிட மாட்டார். உன்னைப் பெற்றதைத் தவிர நான் எந்தப் பாவமும் செய்ததில்லை. அந்தப் பாவத்திற்கு பலனை நான் எப்பவோ அனுபவித்து முடித்தும் விட்டேன். என் மகனும் மருமகளும் எந்தப் பாவமுமே செய்யாதவர்கள். அதனால் சீக்கிரமே எல்லாம் சரியாகி நான், என் மகன், மருமகள், பேரன்கள் நன்றாகத் தான் இருப்போம்...”
நன்மையை மட்டுமே செய்து வரும் நல்ல உள்ளம்
மட்டுமே இப்படி உறுதியாகச் சொல்ல முடியும். சொன்னபடி நடக்கவும் நடக்கும்.....
ஜானகி தர்மசங்கடத்துடன் கணவனிடம் சொன்னாள்.
“அந்த நாசமாய் போன நாதாரி நாய் சொன்னதை நம்பி வருண் வீட்டுக்காரர்களிடம்
எப்படியெப்படியோ நடந்து விட்டேன்.... நான் இனி எப்படி அவர்களிடம் மன்னிப்பு
கேட்பேன்?....”
மாதவன் சொன்னார். “நான் அன்றைக்கே
சொன்னேன். ஓடி ஒளிகிற ஆள் நல்லவனாய் இருக்க மாட்டான்னு...”
ஜானகி முறைத்தாள். “ இந்த அளவு மோசமான
மனசாட்சியும் இல்லாத புளுகனை நான் இது வரைக்கும் பார்த்ததில்லை. அதனால் நான்
ஏமாந்துட்டேன்.... அதைச் சொல்லிச் சொல்லிக் காட்ட வேண்டுமா? நீங்கள் இது வரைக்கும்
யார் கிட்டயும் ஏமாந்ததே இல்லையா...”
எல்லா நேரங்களிலும் அம்மாவிடம் திட்டு
வாங்கும் அப்பாவை வந்தனா புன்னகையுடன் பார்த்தாள்...
ஆசான் கோயமுத்தூரை அடைந்த போது அவருடைய புதிய அலைபேசி எண்ணுக்கு
அழைப்பு வந்தது. மைத்ரேயனும், கௌதமும் கடத்தப்பட்ட தகவலையும், நடந்த சூழலையும்
உளவுத்துறை அதிகாரி சுருக்கமாகச் சொல்லி விட்டு எல்லா இடங்களிலும் தீவிர சோதனை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்தான்.
ஆசான் பேரதிர்ச்சியில் தளர்ந்து போனார்.
தலாய் லாமாவின் கனவு பலித்து விட்டது.....
வருண் நினைவு தெளிந்த பிறகு அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கி
மன்னிப்பு கேட்க முற்பட்ட போது அக்ஷய் மகனைப் பேச விடவில்லை. “வருண் உன்னை இந்த
அப்பாவுக்குப் புரியும்..... நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை…..”
என்றைக்குமே அவனுக்குக் குற்ற
உணர்ச்சியையோ, தர்மசங்கடத்தையோ ஏற்படுத்தாத அந்த மாமனிதனை அளவில்லாத பாசத்தோடு
வருண் பார்த்தான். இவர் எங்கே? அந்த விஷ ஜந்து எங்கே? சந்தித்த முதல்
கணத்திலிருந்து இந்தக் கணம் வரை நல்லதைத் தவிர வேறெதையும் நினைக்கும் சந்தர்ப்பமே
ஏற்பட்டதில்லையே! திடீர் என்று தம்பியின் நினைவு வந்தது. மனம் பாரமானது.... தந்தையிடம்
மெல்லக் கேட்டான். “தம்பி?”
அக்ஷய் தன்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாகச் சொன்னான். “தகவல் இதுவரை இல்லை.
மைத்ரேயனைக் கடத்தியவர்கள், கூட அவனையும் கடத்தினால் நம் மீது கட்டுப்பாடு
வைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவனை
ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதனால் பயப்பட ஒன்றும் இல்லை....”
வருண் தம்பியை நினைத்துப் பார்த்தான்.
கௌதம் ஒரு நாளும் அம்மாவை விட்டு இருக்காதவன். பெரிதாய் பேசினாலும் பயந்த சுபாவம்
தான். கண்கலங்க வருண் சொன்னான். “ஆனால் கௌதம் பயப்படுவானேப்பா...”
”மைத்ரேயன் கூட இருக்கிறான். அவன் பார்த்துக்
கொள்வான்...”
வருணுக்கு சந்தேகம் வந்து அக்ஷயைக்
கேட்டான். “மைத்ரேயனுக்கு அடுத்தவர் மனதில் இருக்கிறதெல்லாம் தெரியும் என்று
அன்றைக்குச் சொன்னீர்கள். அது உண்மையென்று எனக்கும் படுகிறது. அப்படிப்பட்டவனை கடத்த ஒருவர் நெருங்கினால்
அதற்கு முன்னேயே அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தானேப்பா. அவன் ஏன்
கத்தவில்லை. ஏன் வேறு எதாவது செய்யவில்லை......?”
”எனக்குத் தெரிந்து அவன் எந்த சக்தியையும் பயன்படுத்தி
எதையும் செய்ததாய் நினைவில்லை....” ஒரே ஒரு முறை சம்யே மடாலயத்தில் தலைமைபிக்குவின்
வீக்கம் குறைந்ததையும் அவனுக்கு மைத்ரேயனின் திட்டமிட்ட செயலாய் நினைக்கத்
தோன்றவில்லை.
“பயன்படுத்தாத சக்தி இருந்து என்ன
பிரயோஜனம்ப்பா” வருண் ஆற்றாமையுடன் கேட்டான்.
அவனுக்கு அக்ஷய்
பதில் சொல்லவில்லை. கௌதம புத்தருடைய சீடர்கள், வழி வந்தவர்கள் எல்லாம்
மகாசக்திகளைப் படைத்தவர்களாயும், அவற்றைப் பயன்படுத்தியவர்களாயும்
இருந்திருக்கிறார்கள். பத்மசாம்பவா, போதி தர்மர் என்று எத்தனையோ பேரைச் சொல்லலாம். ஆனால் புத்தர் எந்த
மகாசக்தியையும் பயன்படுத்தி அற்புதங்கள் புரியவில்லை என்று சொல்கிறார்கள். புத்தரின்
அவதாரமும் அப்படியே இருக்க முயல்கிறதோ?
சிவப்பு ஸ்கார்ப்பியோ கார் கொச்சின் நகரத்தை நோக்கி வேகமாய் போய்க்
கொண்டிருந்தது. தேவ் வயதான தோற்றத்தில் இருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண்ணும்
பாட்டியாக மாறியிருந்தாள். திட்டத்தின் அடுத்த
பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கையில் மனம் கூர்மையாய், எச்சரிக்கையாய்,
இளைப்பாறாமல் இருக்க வெளி இருட்டையே பல யோசனைகளுடன் தேவ் பார்த்துக் கொண்டு வந்தான்.
வழியில் ஒரு இடத்தில் ஒளிவெள்ளம்
பாய்ச்சும் தெருவிளக்கை அந்தக் கார் கடக்கையில் தேவின் பார்வை அவன் காலடியில் விழுந்தது.
மைத்ரேயன் கண்விழித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவின் இதயம் ஓரிரு
துடிப்புகளை மறந்து ஸ்தம்பித்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Going excellently. Can't wait for next.
ReplyDeleteமைத்ரேயனின் திட்டம் என்ன பிடிபடவில்லையே கணேசன் சார். பரபரப்பு தாங்கவில்லை.
ReplyDeleteKalakkareenga sir.. Fantastic!!
ReplyDeleteநீங்கள் ஏன் வாரமிருமுறை நாவலை வெளிய்ட கூடாது.....
ReplyDeleteசஸ்பென்ஸ் தாங்க முடியலை சார்...
அன்பின் கணேசன், நாற்பதாண்டு காலமாக நாவல்கள் தொடர்ந்து படிப்பவள் நான். அதனால் பெரும்பாலும் இப்படித்தான் போகும் என்கிற வகையில் கதையை முன்பே கணித்து விடுவேன். ஆனால் உங்கள் நாவல்களில் பரமன் ரகசியத்தையும் இந்த நாவலையும் என்னால் கணிக்க முடியவில்லை. அருமையாக சுவாரசியமாக சொல்கிறீர்கள். நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வு வருகிறது. பாராட்டுகள்
ReplyDeleteIt is interesting
ReplyDeleteSuperb Anna..:-)
ReplyDeleteGratitude for sharing..