வருண் வீடு திரும்பிய போது அக்ஷய் வாசலிலேயே மகனுக்காகக் காத்திருந்தான். பின்னாலேயே சஹானாவும் மரகதமும் நின்றிருந்தார்கள். ஆட்டோரிக்ஷாவில் இருந்து இறங்கிய மகனை அக்ஷய் ஆரத்தழுவிக் கொண்டான். வருணுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த அன்புக்கு நான் இவருக்குத் திருப்பித் தந்ததெல்லாம் என்ன என்ற கேள்வி மட்டுமே மனதில் மேலோங்கி கனமாய் நின்றது.
எதுவும் பேசாமல் அக்ஷய் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்த போது அவனுக்கு வயிறு குமட்டிக் கொண்டு வந்தது. அங்கேயே வாந்தி எடுத்தான்.
அக்ஷய் வருணிடம் சந்தேகத்துடன் கேட்டான். “என்ன வருண்..... அந்த ஆள் ஏதாவது சாப்பிடக்கொடுத்தானா?”
வருணுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. “அவன்.... தரவில்லை.... நான் தான் விஷம் சாப்பிட்டேன். எனக்கு உங்க மடியிலயே சா...க.....” என்று சொன்னபடியே மயங்கி கீழே விழ பதறிப் போன அக்ஷய் மகனை அப்படியே இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.
எதிர் வீட்டில் மாதவன், ஜானகி, வந்தனா மூவரும் எங்கோ போய் விட்டு அப்போது தான் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். சஹானா பின் தொடர அக்ஷய் ஓடித் தெருவைக் கடந்து மாதவனிடம் கெஞ்சும் குரலில் சொன்னான். “அவசரமாய் ஆஸ்பத்திரிக்குப் போகணும்.... வருண் உயிருக்கே ஆபத்து....”
மாதவன் அடுத்த வார்த்தை கேட்க நிற்கவில்லை. காரின் பின் கதவைத் திறந்து கை காண்பித்து விட்டு வேகமாக டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். வருணோடு அக்ஷயும், சஹானாவும் பின் சீட்டில் உட்கார கார் வேகமாகச் சென்றது.
வந்தனாவும், ஜானகியும் திகைப்புடன் சிறிது நேரம் அப்படியே நின்றார்கள். ஜானகி சீக்கிரமே திகைப்பில் இருந்து மீண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அவள் மகள் அவளைப் பின் தொடரவில்லை. பிரமை பிடித்தவளாய் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ஜானகி வெளியே வந்து மகள் தோளைத் தொட்டு உள்ளே வர சைகை செய்தாள். வந்தனா நடைப்பிணமாய் உள்ளே நுழைந்தாள்.
சேகர் மாடியில் இருந்து நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். கோயமுத்தூரை விட்டுப் போகும் முன் தன் எதிரி வீடு துக்கத்தில் மூழ்குவதைப் பார்த்து ரசித்து விட்டுப் போக அவன் மனம் ஆசைப்பட்டது. வருண் தற்கொலைக்கு முயல்வான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சின்ன மகனை இழந்து சஹானாவும், அவளது கணவனும் தவிப்பதை மட்டும் தான் பார்த்து ரசிக்க அவன் அங்கே வந்திருந்தான். ஆனால் அவன் வார்த்தைகளைப் பின்பற்றி வருண் விஷம் சாப்பிட்டு வீடு போய் சேர்ந்தது கூடுதல் போனஸாக அவனுக்கு இருந்தது. அவனை அப்பாவாக ஏற்றுக் கொள்ளாத அந்த தறுதலை சாவதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. எப்போதுமே எதற்குமே கலங்காமல், வணங்காமல் இருந்த சஹானா உடைந்து போவதை இப்போதாவது பார்த்து ரசிக்க நினைத்தவனுக்கு இப்போதும் அவள் முகத்தில் துக்கம் இருந்தாலும் அவன் எதிர்பார்த்த அளவு அது தாங்க முடியாததாய் இல்லை. ஏதோ இன்னும் நம்பிக்கை பாக்கி இருப்பது போல் தான் இருந்தாள். அவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் போகப் போக உடைந்து உருகி அழிந்து போவாள்.... அழிந்து போக வேண்டும்... என்று நினைத்தவனாய் அவனுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
கீழே வந்தனா அலைபேசியில் பேசுவது கேட்டது. “அப்பா எந்த ஆஸ்பத்திரிப்பா.... நான் வர்றேன்ப்பா”
தாயிடம் எதுவுமே சொல்லாமல் வந்தனா தன் ஸ்கூட்டியில் வேகமாகப் போனாள். வெளி கேட் வரை வந்த ஜானகி திகைத்து நிற்பது தெரிந்தது.
மரகதமும் ஜன்னல் வழியே வந்தனா செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மகள் தன் பார்வையில் இருந்து மறைந்த பிறகு ஜானகி உள்ளே போய் விட்டாள். அப்போது தான் எதிர் வீட்டு மாடி ஜன்னலில் நிழலாய் ஒரு உருவம் தெரிவதை மரகதம் கவனித்தாள். சேகர் இன்னமும் அங்கே தான் இருக்கிறானா? அவள் மனதுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் அலைமோதின. அவள் ஒரு முடிவெடுத்தவளாய் வீட்டைப் பூட்டிக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி நடந்தாள்.
அவள் தன் வீடு தேடி வருவதை ஜன்னல் வழியாகப் பார்த்த ஜானகி தர்மசங்கடப்பட்டாள். அந்தம்மாள் வந்தால் அவரிடம் எப்படிப் பேசுவது, என்ன சொல்வது என்றெல்லாம் மனம் குழம்பியது. ஆனால் மரகதம் வெளி கேட்டைத் திறந்த பிறகு அவள் வீட்டு அழைப்பு மணியை அழுத்தாமல் பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளில் ஏறுவதைப் பார்த்த போது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. வருணின் அப்பா மேலே குடியிருக்கிறார் என்பதை அக்ஷயின் பெரியம்மாவான இந்தக் கிழவி கண்டுபிடித்து விட்டாளோ? சரி மேலே கதவு பூட்டியிருக்கும், அதைப் பார்த்து விட்டுப் போய் விடுவாள் என்று காத்திருந்தாள். ஆனால் மரகதம் கதவைத் தட்ட சில வினாடிகள் கழித்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது....
சேகர் கதவைத் தட்டியது மரகதம் என்பதை அறியவில்லை. வந்தனா போவதைப் பார்த்து விட்டுத் திரும்பிய அவன் மரகதம் தெருவைக் கடந்து வருவதைப் பார்த்திருக்கவில்லை. கதவைத் தட்டுவது ஜானகி என்று நினைத்தான். அவன் நடந்த சத்தம் கேட்டு அவள் மேலே வந்திருக்க வேண்டும். அவன் மகன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறான் என்பதைச் சொல்ல வருகிறாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். சோகமாய் கேட்டுக் கொண்டு சகிக்க முடியாமல் ஊரை விட்டுப் போவது போல நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தான். வாசலில் அவனைப் பெற்றவள் நின்றிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்தான். மெல்ல பின் வாங்கினான். மரகதம் உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள் அவனையே கூர்மையாகப் பார்த்தாள்.
அவன் தாய் முன்பெல்லாம் அவன் எதிரில் வந்து நிற்கக் கூடத் தயங்குவாள். இன்று அவனை அளவெடுப்பது போல பார்க்கும் அளவு அவள் மாறியதை அவன் ரசிக்கவில்லை. ”என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்று அவன் எரிச்சலோடு கேட்டான்.
“உயிரோடு இருக்கும் போதே செத்துப் போனதாய் நாடகம் ஆடிக் காணாமல் போனவன், பெற்ற தாய், கட்டிய மனைவி, ஒரே பிள்ளை – மூன்று பேரையும் அனாதரவாய் தவிக்க விட்டுப் போனவன், ஏன் திரும்பி வந்தாய்? ஏன் உன் மகனையே கடத்திக் கொண்டு போனாய்? அவன் தற்கொலை செய்யப் போகும் அளவு ஏன் நடந்து கொண்டாய். என்ன சாதனை இது சேகரா? உனக்கு எப்படி மனம் வந்தது?”
இரண்டு மூன்று வார்த்தைகள் கூட அவன் முன் சேர்ந்து பேசியிராதவள் நீதிபதி போல நின்று விசாரணை தொனியில் இவ்வளவு கேட்டது அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
“உன் மருமகள் கூட வாழ எனக்குப் பிடிக்கவில்லை.... அதனால் தான் செத்த மாதிரி நாடகமாடி போனேன்.,,,” சேகர் அலட்சியமாய் சொன்னான்.
“விவாகரத்து செய்திருக்கலாமே? உங்கள் காலம் எங்கள் காலம் போல அல்லவே?”
“விவாகரத்து செய்தால் அவளுக்குப் பணம் தர வேண்டும். எனக்கு அவளுக்கு ஒரு பைசா கொடுக்கவும் விருப்பமில்லை....”
“அவளைப் பிடிக்கவில்லை சரி. உன் மகன் என்ன செய்தான். நான் என்ன செய்தேன்.....?”
“அவள் வயிற்றில் பிறந்த அவனும் அவள் மாதிரி தான் இருந்தான்...”
“நான்....?”
அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. மரகதம் பதில் எதிர்பார்த்து நின்றாள். பதில் வராமல் போகவே சொன்னாள். “சஹானா என்னை கூட வைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், உன் மேல் இருக்கும் வெறுப்பை உன்னைப் பெற்ற என் மேல் காட்டி இருந்தால், நான் நடுத்தெருவில் பிச்சை அல்லவா எடுக்க வேண்டியிருந்திருக்கும்....”
“உனக்கு கை கால் எல்லாம் நன்றாகத் தானே இருந்தது. நாலு வீட்டில் வேலை செய்து பிழைத்திருக்கலாமே. இப்போதும் சரி, அப்போதும் சரி வீட்டு வேலை செய்கிறவர்களுக்கு நல்ல வருமானம் தானே”
வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த ஜானகிக்கு வினாடிக்கு வினாடி அதிர்ச்சியும், இரத்தக் கொதிப்பும் அதிகரித்துக் கொண்டே போனது. இவன் மகா அயோக்கியன், இந்தம்மாள் அக்ஷயின் பெரியம்மா அல்ல, இந்த அயோக்கியனைப் பெற்றவள், சஹானா ஓடிப்போகவில்லை, இவன் தான் ஓடிப்போனவன் என்கிற உண்மைகள் எல்லாம் அவளை அதிர வைத்துக் கொண்டிருந்தன. இவ்வளவு செய்து விட்டு இப்போதும் எப்படி கொடூரமாய் பேசுகிறான்....
மரகதம் மகனை இகழ்ச்சியுடன் பார்த்தபடி சொன்னாள். “சஹானா நல்லவள். என்னை அந்த நிலைமைக்கு விட்டு விடவில்லை. சரி நீ ஏன் திரும்பி வந்தாய்?”
“உன்னை ஒருநாள் வழியில் பார்த்தேன். பின்னாலேயே வந்து வீட்டைக் கண்டுபிடித்தேன். நான் போன பிறகு நீயும், உன் மருமகளும் எப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று பார்க்க வந்தேன். சரி நீ எதற்கு இப்போது வந்தாய்?”
”நீ போன பிறகு தான் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் எனக்கு மகனாகவும், அவளுக்கு கணவனாகவும், வருணுக்கு அப்பாவாகவும் வந்தான். எங்களுக்கு சந்தோஷம்னா என்ன என்றே அதற்குப் பிறகு தான் தெரிய வந்தது. இதெல்லாம் நீ போனதால் தான் கிடைத்தது. அதனால உனக்கு நன்றி சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன்....”
”உன் பேரன் உயிர் ஊசலாடுது. அவளோட இன்னொரு பையன் காணோம். இப்பவும் இவ்வளவு திமிராய் பேசுகிற உனக்கு மூளை வேலை செய்யலைன்னு நினைக்கிறேன்....”
“என் பேரன் பிழைப்பான். என் இன்னொரு பேரன் திரும்பக் கிடைப்பான். இது வரைக்கும் எங்களைக் கைவிடாத கடவுள் இனியும் கைவிட மாட்டார். உன்னைப் பெற்றதைத் தவிர நான் எந்தப் பாவமும் செய்ததில்லை. அந்தப் பாவத்திற்கு பலனை நான் எப்பவோ அனுபவித்து முடித்தும் விட்டேன். என் மகனும் மருமகளும் எந்தப் பாவமுமே செய்யாதவர்கள். அதனால் சீக்கிரமே எல்லாம் சரியாகி நான், என் மகன், மருமகள், பேரன்கள் நன்றாகத் தான் இருப்போம். நீ தான் ஜாக்கிரதையாய் இருக்கணும். உனக்கு அனுபவிக்க நிறைய இருக்கு....”
சொல்லி விட்டு மரகதம் வெளியேறினாள். வெளியே சற்று தள்ளி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஜானகியை அவள் கவனிக்கவில்லை. பேரனுக்காக கந்தர்சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்து விட்டிருந்தாள்.
மரகதம் போனவுடன் ஜானகி ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தாள். சேகர் அவளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பேசியதைக் கேட்டிருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவளை அவன் பார்த்தான். அவள் முகத்தைப் பார்த்தால் எல்லாவற்றையும் கேட்டிருப்பது போலத்தான் தோன்றியது.
எப்போதும் மணிக்கணக்கில் பேசும் ஜானகி அந்த ஜந்து முன் அரை கணமும் நிற்கப் பிடிக்காததால் அந்த நேரத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் “த்தூ” என்று காரி அவன் முகத்தில் துப்பி விட்டுப் போனாள்.
(தொடரும்)
என்.கணேசன்
மரகதம் பேச்சு செம. ஆனால் மைத்ரேயன், கௌதம், வருண் நிலமை என்ன என்று தெரியாம மண்டை வெடிச்சுடும் போல இருக்கே.
ReplyDeleteமரகதம் சேகர் சம்பாஷணை அபாரம். மரகதம் அக்ஷய் என் மகன் என்று சேகரிடமே சொல்வது நல்ல சவுக்கடி. தொடருங்கள் இப்படியே அமர்க்களமாக.
ReplyDeleteExcellent narration
ReplyDeleteAwesome writing Na...:-):-)
ReplyDelete