என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, February 15, 2016

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் யோகசக்தி!மகாசக்தி மனிதர்கள்-50

மிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த எத்தனையோ மகான்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். 1595 ஆம் ஆண்டில் சிதம்பரத்திற்கு அருகே இருக்கும் புவனகிரியில் பிறந்த அவருக்கு அவருடைய பெற்றோர் திம்மண்ண பட்டரும், கோபிகாம்பாளும் இட்ட பெயர் வேங்கடநாதன். திருப்பதி யாத்திரை போய் வேண்டிக் கொண்டு பிறந்த பிள்ளை என்பதால் அந்த ஏழுமலையான் பெயரையே மகனுக்கு வைத்திருந்தனர். வேங்கடநாதனின் தாத்தா கிருஷ்ண பட்டர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் வீணை வித்வானாக இருந்தவர். அந்த வீணை புலமையும், பெற்றோரின் ஆன்மிக தாகமும் வேங்கடநாதனுக்கு சிறு வயதிலேயே வந்து சேர்ந்திருந்தது. துவைத வேதாந்தத்தை கும்பகோணத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் என்பவரிடம் கற்றுத் தேர்ந்த வேங்கடநாதன் தகுந்த வயதில் சரஸ்வதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனையும் பெற்றுக் கொண்டார்.

புனித நூல்களில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றிருந்த வேங்கடநாதன் வேத பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லித்தரும் பணியை மேற்கோண்டார். ஆனால் செய்த பணிக்கு பணம் வசூல் செய்யும் வித்தை மட்டும் வேங்கடநாதன் அறியாததால் வறுமை நிரந்தரமாகவே அவரிடம் தங்கி இருந்தது. ஆனால் அவரிடம் பிற்காலத்தில் பெரிய யோகியாகும் லட்சணங்கள் இளமைக்காலத்திலேயே தெரிய ஆரம்பித்தன.

கும்பகோணத்தில் அவர் வசிக்கையில் ஒரு செல்வந்தரின் வீட்டில் நடக்கும் ஒரு விருந்துக்கு அவருக்கு அழைப்பிருந்தது. அவர் அங்கே தன் மனைவியை அழைத்துக் கொண்டு போனார். அந்தச் செல்வந்தரின் மகன் உணவுக்காக வந்த ஏழை அந்தணன் என்று அவரை எண்ணி சாப்பிடப் போகும் உணவுக்காக இந்த அந்தணன் உழைக்கட்டுமே என்று நினைத்தான். அங்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்குப் பூச சந்தனத்தை அரைத்துத் தரும்படி அவரிடம் சொன்னான்.

வேங்கடநாதனும் முகம் சுளிக்காமல் சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கில் விருந்தாளிகள் இருந்ததால் மணிக்கணக்கில் சந்தனம் அரைக்க வேண்டி இருந்தது. மந்திரங்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வேங்கடநாதர் தேவையான அளவு சந்தனத்தை அரைத்து முடித்தார்.  அந்த சந்தனத்தைப் பூசிக் கொண்ட விருந்தினர்களும், வீட்டார்களும் தீயால் சுடப்பட்ட எரிச்சலை உணர ஆரம்பித்தார்கள். குளிர்ச்சியான சந்தனத்தைப் பூசிக் கொள்கையில் இந்த உஷ்ணம் உருவாக என்ன காரணம் என்று ஆச்சரியப்பட்ட அந்த செல்வந்தர் நடந்தது என்ன என்று விசாரித்தார். நடந்ததை அறிந்த அந்தச் செல்வந்தருக்கு வேங்கடநாதன் அறிஞர் மட்டுமல்ல தெய்வாம்சம் பொருந்தியவரும் கூட என்பது விளங்க ஆரம்பித்தது. உடனடியாக வேங்கடநாதனிடம் சென்று அவர் மனம் கலங்கி மன்னிப்பு கோரினார்.

வேலை செய்வதை ஒரு கவுரவக்குறைவாக எண்ணாத வேங்கடநாதன் தான் வேண்டுமென்றே சந்தனத்தில் உஷ்ணத்தை உருவாக்கவில்லை என்று சொல்லி சந்தனம் அரைக்கையில் மனதில் சொல்லிக் கொண்டிருந்த அக்னி சுக்த மந்திரமே அந்த உஷ்ணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.  அனைவருக்கும் ஒரே வியப்பாக இருந்தது. வேங்கடநாதன் அவர்கள் மனதில் எழுந்த வியப்பையும், அவர்கள் உடலில் உணர்ந்த உஷ்ணத்தையும் போக்க அவர்கள் முன்னிலையிலேயே மழைக்கடவுளான வர்ண தேவனுக்கான வேத மந்திரங்களைக் கூறிக் கொண்டே சந்தனத்தை அரைத்துக் கொடுத்தார். அதைப் பூசிக் கொண்ட போது மிகுந்த குளிர்ச்சியை அனைவரும் உணர ஆரம்பித்தனர். இறையருள் பரிபூரணமாகப் பெற்ற ஞானி அவர் என்பதை உணர்ந்து பக்தியுடன் வணங்கவும் செய்தனர்.

தூய்மையான மனதுடன் மந்திரங்களை உச்சரிக்கையில் அந்த மந்திரங்கள் எந்த மாதிரியான சக்தி வாய்ந்த விளைவுகளை உருவாக்குகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். பெரும்பாலான மனிதர்கள் எந்திரத்தனமாகவே இறைவனுடைய நாமத்தையும், மந்திரங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார்கள். பின் இத்தனை ஜபித்தும் எந்த நல்ல பலனும் விளையவில்லையே என்று வருந்தவும் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நல்லதோர் பாடம்!

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் வேங்கடநாதனின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவருடைய குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் வேங்கடநாதனே தனக்குப் பின் தன் மத்வபீடமடத்தின் மடாதிபதியாக வர வேண்டும் என்று விரும்பினார். மடாதிபதியாக வேண்டும் என்றால் துறவறம் பூண வேண்டும். வேங்கடநாதன் தன் மனைவியையும் மகனையும் துறந்து விட்டு துறவியாக விரும்பவில்லை.

அவருடைய குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆரம்பித்தது. அவர் மீண்டும் தன் பிரியமான சீடனிடம் வேண்டிக்கொண்டார். அன்று இரவே சரஸ்வதியே கனவில் வந்து இல்லறத்தில் இருந்து ஒருசிலரின் பொறுப்புகளை மட்டும் மேற்கொள்ளப் பிறந்தவனல்ல நீ. துறவறம் பூண்டு லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டப் பிறந்தவன் நீஎன்று சொல்லி விட்டு மறைய தனக்கென்று இறைவன் வகுத்திருக்கும் விதி என்னவென்று வேங்கடநாதர் உணர்ந்தார். விரைவில் தன் மகனுக்கு உபநயனம் செய்து விட்டு மடத்திற்குச் சென்று துறவறம் மேற்கொண்டார். அப்போது அவருடைய குரு ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்று பெயரைச் சூட்டினார்.

கணவர் துறவியாகும் செய்தியால் மனம் வருந்திய அவர் மனைவி சரஸ்வதி கடைசியாக ஒரு முறை தன் கணவர் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள். உடனே மடத்தை நோக்கி ஓடினாள். மடத்தினர் அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.  மனமுடைந்து போன அவள் திரும்பி வரும் வழியில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.  கடைசி ஆசையும் நிறைவேறாமல் ஆவியாக அவர் மனைவி மடத்திற்குப் போனாள். ஆனால் ஆவி உருவிலும் அவளால் அவரை நெருங்க முடியவில்லை.

மனைவி மரணித்து ஆவியாக வந்திருக்கிறாள் என்பதைத் தன் யோகசக்தியால் அறிந்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை அவள் ஆவியிருந்த பக்கம் தெளிக்க மனைவி ஆவி நிலையிலிருந்து விடுபட்டு, பிறப்பு இறப்பு இரண்டையும் அறுத்த மோட்ச நிலையை அடைந்து விட்டாள். பல பிறவிகள் எடுத்து அடைய முடிந்த மோட்ச நிலை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மனைவியாக இருந்து செய்த சேவையால் அப்பிறவியிலேயே அவளுக்குக் கிடைத்து விட்டது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் மத்வபீடத்தை ஒப்படைத்த பின் அவர் குரு ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் இறைவனடி சேர்ந்தார். துவைத சித்தாந்த்ததையும், மெய்ஞானத்தையும் பரப்புவதில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தீவிரமானார்.  துறவுக்கு முன்பே சக்திகளைப் பெற்றிருந்த அவர் துறவுக்குப் பின் மகாசக்தி வாய்ந்தவராக உருவானார்.

பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யாமல் கடும்பஞ்சம் தஞ்சாவூர் பகுதியில் நிலவியது. அப்போது தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த சேவப்ப நாயக்கர் மகானாகிய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் உதவியை நாடினார். மழை வேண்டி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் செய்த வேள்வியால் உடனே பெருமழை பெய்ய ஆரம்பித்தது.

நாட்டின் பஞ்சநிலை போய் செழிப்புநிலை உருவாகியதால் உவந்து போன மன்னர் சேவப்ப நாயக்கர் விலை உயர்ந்த தங்கச்சங்கிலி ஒன்றை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்குப் பரிசாகத் தந்தார். துறவிக்கு தங்கமென்ன வைரமென்ன! ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அந்தத் தங்கச் சங்கிலியை அப்படியே நன்றாக எரிந்து கொண்டிருந்த ஹோம குண்டத்தில் போட்டு விட்டார். மன்னருக்கு அதில் மனவருத்தம் ஏற்பட்டது. அவருடைய மனவருத்தத்தைக் கண்ட ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் உடனே ஹோமகுண்டத்தில் கையை விட்டு அந்தத் தங்கச் சங்கிலியை வெளியே எடுத்தார். என்னவொரு ஆச்சரியம் என்றால் அவர் கையிலும் தீக்காயம் இல்லை, தங்கச் சங்கிலியும் சிறிதும் கருகவில்லை.  பிரமித்துப் போன மன்னர் அந்த மகானைத் தொழுது விட்டுச் சென்றார். அவர் ஸ்ரீ ராகவேந்திரரின் பரம பக்தராகவும் மாறினார்.

அதன் பின்னர் தென்னிந்தியாவில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். சென்ற வழிகளில் எல்லாம் அவர் அற்புதங்கள் தொடர்ந்தன. ஒரு நாட்டில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது அந்த நாட்டு இளவரசன் பாம்பு கடித்து விஷமேறி இறந்து போனான். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சக்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மன்னர் அவரிடம் வந்து கதறியழ, சுவாமிகள் அந்தப் பாம்பையே இளவரசன் உடம்பில் இருந்த விஷத்தைத் திரும்பவும் எடுக்க வைத்து அவனைப் பிழைக்க வைத்தார்.

இந்தச் செய்தியும் நாடெங்கும் பரவியது. இதை நம்பாத சில குறும்புக்கார இளைஞர்கள் அவர் போலி என்பதை வெளிப்படுத்த திட்டமிட்டனர். அதன்படி அவர்களில் ஒருவன் இறந்தது போல் நடிக்க வேண்டும் என்றும் அவர் எழு என்று சொல்கிற போது எழக்கூடாது என்றும் அவர்கள் சொல்கிற போது மட்டும் எழ வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி  சுவாமிகள் வரும்போது அவனைப் படுக்க வைத்து அவன் மேல் வெள்ளைத் துணி போர்த்தி அழுது புலம்பி அவரிடம் உயிர் திருப்ப வேண்டினார்கள். அவர் “அவன் ஆயுட்காலம் முடிந்தது. ஒன்றும் செய்ய முடியாதுஎன்று சொல்லவே அவர்கள் அவரைக் கேலி பேசி அவனை எழுந்திருக்கச் சொன்னார்கள். ஆனால் அவன் எழவில்லை. உண்மையாகவே இறந்து போயிருந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி-3.7.2015

2 comments: