என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, February 25, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 87சானிடம் பேசும் போதே அக்‌ஷய் ஆபத்தை உணர்ந்தான். காரணம் அலைபேசியில் அவன் காதில் மிக மெல்லியதாய் கேட்ட கூடுதல் ஒலி. கிட்டத்தட்ட காற்றின் மெல்லிய் ‘ஸ்..ஸ்...ஸ்’ இரைச்சலில் பத்தில் ஒரு மடங்காய் கேட்ட அந்த ஒலி மிக நுட்பமான காதுகளுக்கே எட்டக்கூடியது. அவனது முந்தைய அனுபவங்களில் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படும் போதெல்லாம் அந்தக் கூடுதல் ஒலி அவன் காதுகளுக்குக் கேட்டிருக்கிறது. அதனாலேயே அவன் ஆசானிடம் பேசும் போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. மைத்ரேயன் பெயரைச் சொல்லாமல் பூஜைப் பொருள் என்றே குறிப்பிட்டான். சூட்சும புத்தி கொண்ட ஆசான் அதைப் புரிந்து கொண்டு அதே வழியில் பதில் பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது. ஒட்டுக் கேட்கும் அளவு உஷாராய் இருப்பவர்கள் அவர்கள் பேச்சைப் புரிந்து கொள்ளாமல் போய் விடப்போவதில்லை என்ற போதும் முழுமையாக உறுதிப்படுத்தி விடுவதும் இல்லை அல்லவா?

பேசி முடித்த பின் அந்த அலைபேசியில் இருந்து ‘சிம்’மை அகற்றி ஒரு மரத்தடியில் கையால் சின்னதாய் பள்ளம் செய்து அதில் போட்டு மறுபடி மண்ணால் மூடி, அருகில் பரவி இருந்த உலர்ந்த இலைகளை காலால் இழுத்து இங்கும் பரப்பி விட்ட அக்‌ஷய் தன் பையில் இருந்து வேறொரு ’சிம்’மை எடுத்து அலைபேசியில் பொருத்தினான்.

மைத்ரேயனை அழைத்துக் கொண்டு மரங்கள் உள்ள பகுதியிலேயே ஓரமாக நடந்தபடியே அலைபேசி மூலம் இன்னொரு எண்ணை அக்‌ஷய் அழைத்தான். அலைபேசி எடுக்கப்பட்டு சுமார் முப்பது வினாடிகள் வரை எந்த சத்தமும் எதிர்ப்புறத்தில் இருந்து இல்லை.

அக்‌ஷயாகப் பேசினான். “நேபாளம் வந்து சேர்ந்து விட்டோம்.....”

உடனடியாக எதிர்தரப்பு கேட்டது. “எங்கே?”. குரல் அவனுக்குப் பரிச்சயமான குரல். இந்திய உளவுத்துறை மைத்ரேயன் விவகாரத்தில் அக்‌ஷய்க்கு உதவி செய்ய ஏற்பாடு செய்திருந்த அதே மனிதனின் குரல் தான்.

அக்‌ஷய் அந்த இடத்தைச் சொன்னான்.

“இன்னும் இரண்டு மணி நேரத்தில் நம் ஆள் ஜீப் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கே வந்து சேர்வான். அவன் வரும் போது உங்களுக்கு வேறெதாவது கொண்டு வர வேண்டுமா?”

“முதலில் நாங்கள் குளிக்க வேண்டும். நாங்கள் ஆட்டிடையர்கள் உடையில் இருக்கிறோம்.... எங்களுக்கு சாதாரண உடைகள் வேண்டும்.... முதலில் நாங்கள் புத்தகயாவுக்குப் போக வேண்டும்....”

அவன் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை..... அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். “உன்னை பத்திரமாக திபெத்தில் இருந்து அழைத்துக் கொண்டு வந்தால் முதலில் புத்தகயாவுக்கு அழைத்து வருவதாக வேண்டி இருக்கிறேன்....”

மைத்ரேயன் தலையசைத்தான். அக்‌ஷய் தொடர்ந்து சொன்னான். “புத்த கயாவில் இருந்து என் வீட்டுக்கே போகப் போகிறோம்....”

மைத்ரேயன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். அக்‌ஷய்க்கு அவன் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. “நான் உங்கள் வீட்டுக்கே வருகிறேனே.... எனக்கு எந்த மடாலயமும் வேண்டாம்.....” .

எல்லாம் அவன் நினைக்கிறபடியே நடக்கிறது. இனி என்ன நினைத்து வைத்திருக்கிறானோ!


சேகரைச் சந்தித்து வந்ததில் இருந்து வருண் தனதறையில் தான் அதிகம் இருக்கிறான். யாரிடமும் பேசுவதைத் தவிர்த்தான். யாராவது அவனிடம் பேசினால் அவர்களிடம் எரிந்து விழுந்தான். அவனைப் புரிந்து கொள்ள வீட்டில் யாருக்கும் முடியவில்லை.

ஆரம்பத்தில் எதிர் வீட்டுப் பெண்ணிடம் சண்டை போட்டு விட்டு மனநிலை சரியில்லாமல் இருக்கிறான் என்று சஹானா நினைத்தாள். ஆனால் ஒரு இரவு நேரத்தில் பேயைப் பார்த்தது போல அவன் ஓடி வந்து வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திய போது ப்ரச்னை வேறு ஏதோ என்பதை உணர்ந்தாள்.

“என்னடா? யாரைப் பார்த்து இப்படி ஓடி வருகிறாய்?” என்று மகனைக் கேட்டாள்.

சந்தோஷமாக வாழ்ந்து வரும் அம்மாவிடம் அவன் கண்டிப்பாக அதைச் சொல்லி விடக்கூடாது என்பதை மட்டுமே எல்லாவற்றிலும் அதிமுக்கியமாக அவன் அந்தக் கணம் நினைத்தான். சேகர் என்ற அந்த மனிதனுடன் வாழ்ந்த போது அம்மா எப்படி இருந்தாள் என்பது இப்போதும் நன்றாக அவனுக்கு நினைவிருக்கிறது. அவளை இனி ஒரு கணமும் அப்படி அவன் பார்க்க விரும்பவில்லை.

“ஒரு தெரு நாய்.....” என்று மட்டுமே சொல்லி விட்டுத் தன் அறைக்குள் அடைக்கலம் புகுந்த வருண் அன்றிரவு உறங்கவில்லை. இதை எப்படி இனி சமாளிப்பது என்று பல விதங்களிலும் யோசித்தான். நடந்ததை எல்லாம் சிந்தித்துப் பார்த்த போது அந்தத் ‘தெரு நாய்’ வந்தனா வீட்டு மாடியில் தான் குடியிருக்க வேண்டும் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. வந்தனாவிடம் அந்த நாய் தான் அந்தப் புகைப்படத்தைத் தந்திருக்க வேண்டும்...

முடிந்து போனதாகவே இருந்த போது கூட அவனால் அந்த மனிதனை தகப்பன் ஸ்தானத்தில் நிறுத்த முடியவில்லை. அக்‌ஷயை அப்பா என்று அழைக்க ஆரம்பித்த பின் அவன் மனதில் இருந்து அந்த ஆள் பலவந்தமாய் அழிக்கப்பட்டு விட்டான். முந்தைய தந்தையாகக் கூட அவனால் அந்த ஆளை நினைக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் இப்போது திரும்பி உயிரோடு வந்து உரிமை கொண்டாடுவதை அவன் எப்படி ஏற்க முடியும்?

மறு நாள் மாலை அவன் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய போது ’ஒரு மாமா இந்தக் கடிதத்தை உங்களிடம் தரச் சொன்னார்’ என்று சொல்லி ஒரு சிறுவன் கொடுத்து விட்டுப் போனான். அறைக்குள் வந்து பிரித்துப் படித்தான்.

“என்னிடம் இன்று நிறைய பணம், நிலங்கள், வசதி எல்லாம் இருக்கிறது. இல்லாமல் இருப்பது உறவு மட்டும் தான். உரிமையோடு வீட்டுக்கு வந்து உன்னை அழைக்க முடியாத சூழ்நிலை என்றாலும் உலகில் எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் கடைசியாக ஒரு முறை உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடன் வருகிறாயா? வந்தால் ஒரு ராஜகுமாரனைப் போல் உன்னை நான் பார்த்துக் கொள்வேன்.... நீ காதலிக்கும் வந்தனாவை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்.... என் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என்று இனி வாழ ஆசைப்படுகிறேன்.

நீ என்னுடன் வருவதாக இருந்தால் நாளை காலை ஏழு மணிக்கு விமான நிலையத்துக்கு வா. வரவில்லை என்றால் எனக்கு விதித்தது இவ்வளவு தான் என்று போய் விடுவேன். இனி எந்தக் காரணம் கொண்டும் உன்னை வந்து தொந்தரவு செய்ய மாட்டேன்.....”

கடிதத்தில் கையெழுத்து கூட இல்லை. வருண் மறு நாள் நான்கு மணியில் இருந்தே எதிர்வீட்டை ரகசியமாய் கண்காணித்தான். காலை ஆறு மணிக்கு எதிர்வீட்டு முன் கால் டாக்சி வந்து நின்றது. கையில் ஒரு சூட்கேஸோடு வெளியே வந்த சேகர் ஒரு கணம் எதிர் வீட்டைப் பார்த்தான். வருணின் இதயத்துடிப்பு அந்தக் கணம் நின்று போனது. சேகர் கால் டாக்சியில் ஏறினான். கால் டாக்சி போன பிறகு கூட சிறிது நேரம் ஜன்னல் அருகே நின்று கொண்டே இருந்தான். போன கார் திரும்பி வந்து விடுமோ என்ற பயம். நல்ல வேளையாக அப்படி அது திரும்பி வரவில்லை. இரவு எதிர் வீட்டைக் கண்காணித்தான். கீழே வந்தனா வீட்டில் தான் நடமாட்டம் தெரிந்ததே ஒழிய மாடியில் இல்லை. ஆனாலும் கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எல்லாரிடமும் சகஜமாய் பழக முடியவில்லை.....

திடீர் என்று பாட்டி ஓட்டமும் நடையுமாய் அவன் அறைக்குள் நுழைந்தாள். “வருண் உன் அப்பா கிட்ட இருந்து தகவல் வந்திருக்குடா”. அவளுக்கு  மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வருணின் குழப்பமான மனநிலை சேகரிடமிருந்து தகவல் வந்திருப்பதாக அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டது. எழுந்து நின்று மரகதத்தின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கடுமையாகச் சொன்னான். “அந்த ஆளை என் அப்பா என்று சொல்லாதீர்கள் என்று எத்தனை தடவை சொல்வது.....”

மரகதம் திகைத்துப் போனாள். “டேய். அக்‌ஷயை சொன்னேன்....”

அவன் கைகளின் இறுக்கம் தானாகத் தளர்ந்தது. மரகதம் சொன்னாள். “அவன் இந்தியா வந்து விட்டானாம். நாளை வீட்டுக்கு வரப் போகிறான்.....”

பாட்டியின் கைகளை வருண் கண்களில் ஒத்திக் கொண்டான். அவன் கண்கள் ஆனந்தமாய் கலங்கின.புத்தகயா மண்ணில் மைத்ரேயனுடன் சேர்ந்து கால் வைத்தது முதல் மனம் லேசானது போல் அக்‌ஷய் உணர்ந்தான். மைத்ரேயன் புத்தரின் அவதாரம் என்பதாலோ? மைத்ரேயன் உணர்வுகள் எப்படி இருக்கின்றன என்று அறிய அவனைக் கூர்ந்து பார்த்தான்.

மைத்ரேயன் ஏதோ நினைவுகளில் ஆழ்ந்திருந்ததாகத் தோன்றியது. மகாபோதி ஆலயத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. அக்‌ஷய் மைத்ரேயன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். உள்ளே அவனுடன் நடக்கும் போதும் மனம் மிதப்பதைப் போல அக்‌ஷய் உணர்ந்தான்...

மகாபோதி மரத்தருகே வந்த போது காலம் அறுபட்டது. சுற்றிலும் இருந்த ஆட்கள் மறைந்தார்கள். அந்த மரத்தைத் தவிர எல்லாமே மறைந்தன. உற்றுப் பார்த்தால் முன்னால் தெரிந்த போதி மரம் கூட மாறித் தெரிந்தது. அந்த மரத்தின் கிளைகளினூடே சூரியனின் பிரகாசம் தங்கமென மின்னியது. இயற்கை அந்தக் கணத்தைக் கொண்டாடியது போல் எல்லாமே பேரழகாய் மாறின. திடீரென மைத்ரேயன் அந்த மரத்திற்குக் கீழே தனியாகத் தெரிந்தான். அடுத்த சில கணங்கள் எல்லாமே வெறுமையாயின. நிகழ்காலக் காட்சியும் இல்லை. கனவுக் காட்சி போல தெரிந்த அந்தக் காட்சியும் இல்லை. ஏதோ மாயத்திரையைப் போட்டு யாரோ மறைத்தது போல் இருந்தது. திடீரென்று திரை விலகியது போல் நிகழ்காலத்தில் இருந்தான். பிரமிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தான். நின்ற இடத்திலேயே தான் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சுற்றி இருந்த யாரும் எந்த வித்தியாசமும் பார்த்திராதது போல தான் இருந்தது. இன்னும் மைத்ரேயன் கை அவன் கைப்பிடிக்குள் தான் இருந்தது. எதுவுமே அங்கே ஆகி இராதது போலத் தான் இருந்தது. காலமும் ஓரிரு வினாடிகளைத் தாண்டி இருக்க வழியில்லை. ஆனால்.... ஆனால்....

(தொடரும்)

என்.கணேசன்

6 comments:

 1. aaha , arumaiyana padhivu ..eppovum ippide suspenselaye vittuteengana , adutha vaaram varai kathirukka porumaiye illa :)

  ReplyDelete
 2. ஆனால்.... ஆனால்....
  நாங்கள் இன்னும் ஓரு வாரம் காத்திருக்க வேண்டுமே அண்ணா. . .

  அதுதான் சற்று கடினமாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றி அண்ணா.

  ReplyDelete
 3. Fantastic sir. beautiful writing.

  ReplyDelete
 4. எவ்வளவு அருமையாக இருக்கிறது மைத்ரேயனின் அருகாமை! நாங்கள் எல்லோருமே ஒருகணம் புத்தகயாவில் இருப்பதுபோல் உணர்ந்தோம்!

  ReplyDelete
 5. சரோஜினிFebruary 25, 2016 at 6:40 PM

  அன்பின் கணேசன், எழுத்து உங்களுக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம். ஒவ்வொரு வியாழனும் இது போல் காத்திருந்து படிக்கும் அளவுக்கு ஒரு சிறப்பான நாவலைத் தருவதற்கு என் பாராட்டுகள்.

  ReplyDelete
 6. Will expect the ebooks or Kindle or newshunt book sir. It will helpful for us who are in abroad. :)

  ReplyDelete