சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 11, 2016

தத் வாலே பாபாவின் மற்ற சக்திகள்!


47 மகாசக்தி மனிதர்கள்

ராட்சஸ நாகத்துடன் வாழ்ந்த தத் வாலே பாபாவின் காலம் முடிந்த பிறகும் அந்தக் குகைக்கு நாகங்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றன என்று அந்தக் குகையில் தற்போது வாழும் அவரது சீடர் சுவாமி சங்கரதாஸ்ஜீ, வின்செண்ட் ஜே டேக்சின்கி (Vincent J. Daczynski) என்ற ஆன்மிக எழுத்தாளரிடம் கூறுகின்றார். அந்த எழுத்தாளர் எழுதிய யோக குரு ஸ்ரீ தத் வாலே பாபா-இமாலயத் துறவி (YOGA GURU SRI TAT WALE BABA - RISHI OF THE HIMALAYAS) என்ற நூலில் சுவாமி சங்கரதாஸ்ஜீ மூலமாக அறிந்து கொண்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

வின்செண்ட் ஜே டேக்சின்கி யோகாவை அமெரிக்காவில் பிரபலப்படுத்திய மகரிஷி மகேஷ் யோகி இந்தியாவில் கங்கைக்கரையில் ஒரு ஆசிரமத்தில் இருந்து கொண்டு யோகாவைக் கற்றுக்கொடுத்த காலத்தில் யோகாவை 1969 ஆம் ஆண்டு கற்றவர். அப்போது அந்த ஆசிரமத்திற்கு தத் வாலே பாபா வருகை புரிந்த போது அவருடைய தியானம் குறித்த உரையைக் கேட்டு ரசித்தவர். அவர் இருபது வருடங்கள் கழித்து இந்தியா வந்த போது தத் வாலே பாபா உயிரோடு இல்லை. ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் தத் வாலே பாபா சக்திகள் பற்றி பலர் மூலமாக கேள்விப்பட்டிருந்ததால் அவர் வாழ்ந்த குகைக்கு வருகை புரிந்த போது தான் தத் வாலே பாபாவின் சீடர் சுவாமி சங்கரதாஸ்ஜீயைக் கண்டு பேசி இருக்கிறார்.

சுவாமி சங்கரதாஸ்ஜி தன் குருவின் காலத்திற்குப் பின்னும் அந்தக் குகைக்கு நாகங்கள் வருகை தரும் என்றும் தன் குரு அளவுக்கு அந்த நாகங்களை ரசிக்க முடிந்ததில்லை என்றும் வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார். நான் தியானத்தில் மூழ்கி இருந்து விட்டு கண் விழிக்கையில் ஒன்று அல்லது இரண்டு நாகங்கள் என் காலடியில் கிடந்ததைக் கண்டு நான் கதிகலங்கிப் போயிருக்கிறேன். குருவின் அருளால் அவை நம்மை துன்புறுத்துவதில்லை என்றாலும் அவை நம்முடன் இருப்பது அசௌகரியமாகவே இருக்கின்றது

சுவாமி சங்கரதாஸ்ஜீயிடம் அவர் குருநாதரின் அபூர்வ சக்திகளைப் பற்றிக் கேட்ட போது தன் சொந்த அனுபவத்தையே அவர் சொன்னார்.
ஒரு முறை நான் கடுமையான தலைவலியால் பீடிக்கப்பட்டேன். இரவு நேரத்தில் தலையின் இருமருங்கிலும் இரண்டு ஈட்டிகளால் குத்துவது போலத் தாங்க முடியாத வலி. உடலெல்லாம் எரிவது போல் ஒரு உணர்வு. தலையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்த எனக்கு எழுந்து கழிப்பறைக்குச் செல்லக்கூட முடியவில்லை. படுக்கையிலேயே அசுத்தம் செய்து கொண்டேன். என்ன ஆகிறது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாய்க் கழிந்து கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி இருக்கும். அந்த வேளையில் திடீரென்று என் அறைக்கு என் குரு தத் வாலே பாபா வந்தார். தாளிட்டு இருந்த அறைக்குள் அவர் எப்படி வந்தார் என்று நான் அந்தக் கணத்திலும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் தலைவலி உயிர் போவது போல இருந்ததால் அதைப்பற்றி நான் அதிகம் யோசிக்க முடியவில்லை

“என் குருநாதர் ஒரு கிண்ணத்தை எடுத்து என் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைத்தார். உடனே பாலைப் போன்ற வெண்ணிற திரவம் என் தலையிலிருந்து அந்தக் கிண்ணத்தில் விழ ஆரம்பித்தது. அது என்ன, எப்படி விழுகிறது என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. அந்தக் கிண்ணம் நிரம்பியவுடன் அந்தக் கிண்ணத்தை அவர் அருகில் இருந்த ஒரு நபரிடம் என் குருநாதர் தந்தார். அவருடன் இன்னொருவர் எப்படி வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த இன்னொருவர் குருநாதரின் ஒரு சீடராக இருக்க வேண்டும். அந்த சீடர் அந்தக் கிண்ணத்தைக் காலி செய்து விட்டு கிண்ணத்தை மறுபடியும் தந்தார். அந்தக் கிண்ணத்தை மறுபடி என் புருவங்களின்  மத்தியில் நெற்றியில் என் குருநாதர் வைத்தார். மறுபடி என் தலையிலிருந்து வெண்ணிற திரவம் அந்தக் கிண்ணத்தில் விழ ஆரம்பித்தது. அது நிரம்பியவுடன் குருநாதர் அதைப் பழையபடி அந்தச் சீடரிடம் கொடுத்தார். சீடர் அதைக்காலி செய்து தர மறுபடி என் நெற்றியில் என் குருநாதர் வைத்தார். இப்படி நான்கு முறை அந்தக் கிண்ணத்தில் வெண்ணிற திரவம் விழுந்து அது காலி செய்யப்பட்டது.

“அந்த செய்கையால் என் அனைத்து கர்மங்களும் பாவங்களும் என்னிடமிருந்து எடுத்துவிடப் பட்டது போல நான் லேசாக உணர்ந்தேன். பிறகு என் நெற்றியை என் குருநாதர் லேசாக அழுத்தி விட்டார். அத்துடன் என் தலைவலி முற்றிலுமாக நீங்கி விட்டது. அதற்குப்பின் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.  இப்போது என் தலைவலி முற்றிலும் நீங்கி விட்டிருந்தபடியால் அவர் தாளிட்ட கதவு வழியாகவே செல்வதை நான் பார்க்க முடிந்தது.

சுவாமி சங்கரதாஸ்ஜீ சிலிர்ப்புடன் சொன்னார். “அவர் எப்படி வந்து போனார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் நான் இன்று வரை என்றும் நோய்வாய்ப்பட்டதில்லை.

இந்த வெண்ணிற திரவத்தைத் தலையில் இருந்து கிண்ணத்தில் எடுக்கும் நிகழ்ச்சி இது வரை வேறு யாரும் பயன்படுத்திய ஒரு யுக்தியாக நாம் இது வரை படித்ததோ கேட்டதோ இல்லை. யோகிகளின் வழிகளை யாரே அறிவார்? ஆனால் அந்த நிகழ்வுக்குப் பின் உடனடியாக சுவாமி சங்கரதாஸ்ஜீயின் தலைவலி நிவாரணம் அடைந்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு ஒரு முறை கூட நோய்வாய்ப்பட்டதில்லை என்ற நிஜம் நம்மை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.

காலப்போக்கில் தத் வாலே பாபாவின் புகழ் இமயம் தாண்டி இந்தியா முழுவதும் பரவியதும் அல்லாமல் வெளிநாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அவரைப் பற்றிப் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்த ஒரு புத்தகத்தை ஒரு கனடா நாட்டுக் காரர் படித்திருக்கிறார். அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வயிற்று வலி எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாமல் போய் தத் வாலே பாபா பற்றி நினைத்தபடியே உறங்கி இருக்கிறார். அவர் கனவில் தத் வாலே பாபா வந்து ஒரு குறிப்பிட்ட மருந்தை வாங்கிச் சாப்பிடும்படி சொல்லி இருக்கிறார். ஆச்சரியப்பட்டு விழித்த அந்தக் கனடா நாட்டுக்காரர் அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டு முற்றிலுமாக வயிற்று வலியிலிருந்து குணமடைந்திருக்கிறார். அவர் சில ஆண்டுகள் கழித்து இந்தியா வருகையில் தத் வாலே பாபாவின் குகையைத் தேடிக்கண்டுபிடித்து வந்திருக்கிறார். அப்போது தத் வாலே பாபா உயிருடன் இல்லா விட்டாலும் குகையில் ஒரு மாத காலம் தங்கி விட்டுப் போயிருக்கிறார். அங்கு தினமும் தியானம் செய்கையில் ஒரு நாள் தத் வாலே பாபாவின் திவ்ய தரிசனமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இவ்வளவு சக்தி வாய்ந்த தத் வாலே பாபா கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பது தான் திடுக்கிட வைக்கும் செய்தி. அவர் குகைக்கு சற்றுத் தள்ளி இருந்த காட்டில் ஒரு போலி துறவி ஆசிரமம் வைத்துத் தங்கி இருந்திருக்கிறான். தத் வாலே பாபாவைத் தேடி உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்கள் வந்த போதும் அவன் ஆசிரமத்திற்கு அதிகம் ஆட்கள் வராததும், வந்தாலும் கூட அதிக நாட்கள் தங்காததும் பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவன் அவரை 1974 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி சுட்டுக் கொன்றிருக்கிறான். இந்த வகை மரணமே தனக்கு வரும் என்று சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பே தன் குருநாதர் சொன்னதாக சுவாமி சங்கரதாஸ்ஜீ குறிப்பிடுகிறார். ஆனால் எவருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத தன் குருநாதரைச் சுட்டுக் கொல்ல என்ன காரணம் யாருக்கும் கிடைக்க முடியும் என்று எண்ணி அதை அலட்சியம் செய்து விட்டதாக சுவாமி சங்கரதாஸ்ஜீ சொல்கிறார்.

மரணம் இயற்கை, அது எந்த வகையில் வந்தால் என்ன என்று அந்த யோகி எண்ணி இருக்கக்கூடும். ஒவ்வொரு வருடமும் அவர் இறந்த டிசம்பர் இரண்டாம் தேதி வெளிநாட்டு, உள்நாட்டு பக்தர்கள் இமயமலையில் இருக்கும் அவருடைய குகைக்கு வந்து விட்டுப் போவது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

அடுத்த வாரம் இன்னொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்.    

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 10.7.2015

(சென்னை YMCA ராயப்பேட்டை மைதானத்தில் 13.01.2016 முதல் 24.01.2016 வரை நடக்கவிருக்கும் புத்தகக்கண்காட்சியில் என் நூல்கள் அரங்கு எண் 104ல் கிடைக்கும்.   - என்.கணேசன்)
  

3 comments: