அக்ஷயின் வருகையை உணர்ந்தவனாய் மைத்ரேயன் திரும்பினான். ஏதோ ஒரு இழை விடுபட்டது போல அக்ஷய் உணர்ந்தான். அப்படி உணர்ந்தது அவன் மட்டுமல்ல போலிருந்தது. ஆடுகள் மெல்ல எழுந்து மேயக்கிளம்பின. மைத்ரேயனின் நட்பு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆடுகளைக் கட்டிப் போட்டுத் தான் தங்களுடனேயே தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்று அக்ஷய் நினைத்தான்.
மைத்ரேயனை நெருங்கியவுடன் அக்ஷய் சொன்னான். “இனி நம் முக்கிய வேலை நாளை அதிகாலையில் தான். நீ சிறிது நேரம் தூங்குவதானால் தூங்கலாம்....”
மைத்ரேயன் சொன்னான். “எனக்கு தூக்கம் வரவில்லை. நீங்கள் உங்கள் சின்ன மகன் கௌதம் பற்றிச் சொல்லுங்கள்...”
அவனருகே அமர்ந்தபடி அக்ஷய் சொன்னான். “அது தான் சொன்னேனே. எப்போது பார்த்தாலும் விளையாட்டில் தான் ஆர்வமாக இருப்பான்.”
அவன் மீது சாய்ந்து கொண்டபடியே மைத்ரேயன் ஆர்வத்துடன் கேட்டான். “என்னவெல்லாம் விளையாடுவான்”
“வெளியே விளையாடினால் கிரிக்கெட்.... வீட்டுக்குள்ளே கேரம் போர்டு, செஸ், வீடியோ கேம்ஸ்......”
“அவனுடன் விளையாட அங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள்....”
“அந்த வீதியிலேயே நாலைந்து பையன்கள் இருக்கிறார்கள். பக்கத்து வீதியில் இருந்தும் ஐந்தாறு பேர் வருவார்கள்....”
“நீங்கள் அங்கு என்ன மொழி பேசுவீர்கள்?”
“தமிழ்”
“எனக்கும் தமிழ் பேசச் சொல்லித் தருகிறீர்களா?”
”எப்போது?”
“இப்போது தான்”
அக்ஷய் சிரித்து விட்டான். உயிருக்கே ஆபத்து என்கிற சூழ்நிலையில் மைத்ரேயனால் தியானம் செய்ய முடிந்தது மட்டுமல்ல, தியானம் முடிந்தவுடன் புதிய மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்ளவும் முடிகிறது. அக்ஷய் புன்னகையோடு கேட்டான். “நாம் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறோம், தெரியுமா?”
“எந்த சூழ்நிலையும் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை அல்ல” மைத்ரேயன் சளைக்காமல் சொன்னான்.
அந்த பதிலை அக்ஷய் ரசித்தான். நன்றாகப் பேசத் தெரிகிறது. ஆனால் சமயங்களில் எதுவுமே புரியாதவன் போல் மந்தபுத்திக்காரன் போல் பேசாமல் விழிக்கவும் தெரிகிறது என்று நினத்தபடியே மெல்ல சொன்னான். “காகிதம் பென்சில் பேனா எதுவுமே இங்கில்லையே”
”எனக்கு தமிழ் பேச மட்டும் சொல்லிக் கொடுங்கள். எழுதப்படிக்க சொல்லித்தர வேண்டியதில்லை...”
அக்ஷய் சரியென்றான். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவன் யோசிப்பதற்குள் மைத்ரேயனே தான் அறிந்து கொள்ள நினைக்கும் வாசகங்களைக் கேட்க ஆரம்பித்து விட்டான். “நாம் விளையாடலாமா?”, ”என்ன விளையாடலாம்?” , “இந்த விளையாட்டை விளையாடுவது எப்படி?” , “இதை நீ எனக்குக் கற்றுத் தருகிறாயா?”.....
அக்ஷய் சற்று திகைத்து தான் போனான். ஏதோ ஒரு மடாலயத்தில் புத்தரின் அவதாரமாக நுழையப் போகும் மைத்ரேயன் அறிய வேண்டியதல்ல அவை எதுவும். ஆனாலும் தன் திகைப்பை வெளியே காட்டாமல் அந்த வாசகங்களைத் தமிழில் சொல்லித் தந்தான். அவன் சொல்லும் போது மிகவும் கூர்மையாக கவனித்துக் கொண்ட மைத்ரேயன் கச்சிதமாக அதே உச்சரிப்பில் சொல்ல வரும் வரை சலிக்காமல் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
விளையாட்டு சம்பந்தமானவை முடிந்தவுடன் “எனக்குப் பசிக்கிறது”, “போதும்”, “வேண்டும்”, “தேவையில்லை” போன்ற வார்த்தைகளைத் தமிழில் கற்றுக் கொண்ட மைத்ரேயன் “கவலைப்படாதே”, “கோபப்படாதே”, ”மன்னித்து விடு”, ”சந்தோஷமாக இரு” என்ற வார்த்தைகளுக்கு வந்தான். ஒருமையில் பேசுவது எப்படி, பன்மையில் பேசுவது எப்படி என்பதையும் சேர்ந்தே அவன் கேட்டுத் தெரிந்து கொண்டான். வேகமாக கற்றுக் கொண்ட போதும் மைத்ரேயனிடம் அவசரம் என்பதே துளியும் இருக்கவில்லை. ஒன்றை சரியாக அறிந்து, பேசவும் முடிந்த திருப்தி வராத வரை அடுத்ததற்கு அவன் செல்லவில்லை.
சுமார் இருபது வாசகங்கள், வார்த்தைகள் முடிந்த பிறகு நிறுத்தி “இது வரை சொல்லிக் கொடுத்தவற்றில் ஏதாவது கேளுங்கள். சரியாகச் சொல்கிறேனா என்று பாருங்கள்” என்று அவனாகவே தன்னைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டான். அப்படி அக்ஷய் சோதித்துப் பார்த்த போது அபூர்வமாகத்தான் மைத்ரேயன் தவறு செய்தான்.
மதியம் வரை கற்றுக் கொள்வது தொடர்ந்தது. பின் அவன் கற்றுக் கொள்ள அந்த ஆடுகள் அவனை விடவில்லை. அவனை வந்து முட்டி விளையாட அழைத்தன. அவற்றோடு அவன் விளையாடப் போனான். அக்ஷய் அவன் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் அவனது தியானம், பின் தமிழில் கற்ற விதம், தற்போது ஆடுகளுடன் ஆனந்தமாக விளையாடும் விதம் மூன்று வித்தியாசமான செயல்பாடுகளிலும் அவன் முழுமையாக ஈடுபட்டதை அக்ஷயால் கவனிக்க முடிந்தது. ஒன்றைச் செய்யும் போது அதைத் தவிர உலகில் வேறெதுவும் இல்லை என்பது போல அவன் இருந்தான். அது எத்தனை கஷ்டமான விஷயம் என்பதை அறிந்திருந்த அக்ஷயால் மைத்ரேயனை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
அக்ஷய் இடையிடையே பைனாகுலரில் எதிரே இருந்த மலையையும் கண்காணித்தான். நேபாள வீரர்களின் காவல் அதே இராணுவ ஒழுங்குடன் தான் இருந்தது. அவர்கள் அந்தப் பகுதிக்கு வருவதில் அதிகபட்சமாய் ஒரு நிமிடம் 40 வினாடிகளுக்கு மேல் வித்தியாசம் இருக்கவில்லை.
மறுநாள் அதிகாலை விடிவதற்கும் முன்பே கிளம்பிய அக்ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். “நாம் இனி அந்த மலைக்குப் போகப் போகிறோம். யார் கண்ணிலாவது நாம் பட்டு அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் நீ வாயையே திறக்காதே. நானே பேசி சமாளித்துக் கொள்கிறேன்....”
மைத்ரேயன் சரியெனத் தலையசைத்தான். ஆனால் நாம் எப்படி இந்த மலையிலிருந்து அந்த மலைக்குப் போகப் போகிறோம் என்கிற கேள்வி அவனிடமிருந்து வரவில்லை. தமிழ் கற்கும் ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட தப்பிப்பது எப்படி என்பதில் அவனுக்கு இல்லை....!
அந்த சாறை உடல் முழுவதும் பூசிக் கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள். மேல் நோக்கிச் செல்லும் வழியில் வழுக்கும் இடம் ஆரம்பித்தவுடன் மைத்ரேயனை அக்ஷய் தூக்கிக் கொண்டான். எத்தனையோ கடுமையாக ஒரு காலத்தில் செய்திருந்த பயிற்சிகளைப் பிற்காலத்திலும் அவன் முழுமையாக அலட்சியப்படுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வந்தது இன்றும் அவனுக்கு மைத்ரேயனைச் சுமந்து கொண்டு நடக்கும் போதும் வழுக்கி விடாமல் காத்தது. அவன் தனக்கு பயிற்சிகள் அளித்த ஆசிரியர்களுக்கு இந்தக் கணத்தில் மானசீகமாக நன்றி சொல்லத் தோன்றியது. ஆடுகள் இரண்டும் அனாயாசமாக அவர்களைப் பின் தொடர்ந்தன.
அந்தத் துவாரத்தை அடைந்தார்கள். அக்ஷய் மைத்ரேயனின் முதுகிலும், கைகளின் பின்பகுதிகளிலும் கூடுதல் துணிகள் வைத்துக் கட்டினான். “இந்த சுரங்கப்பாதையின் கீழ்பக்கம் மட்டும் தான் கரடுமுரடாக இல்லாமல் வழுவழுவென்று இருக்கும். மேல் பாகம் அப்படி இருக்காது. அதனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கையையோ காலையோ மேலே தூக்காதே”
மைத்ரேயன் தலையசைத்தான். அக்ஷய் அந்த ஆடுகளுக்குப் பிடித்த புல்கட்டில் இருந்து சிறிது எடுத்து மைத்ரேயன் கையில் தந்தான். ஆடுகள் அவர்களைத் தொடர்ந்து வரும் என்று நினைத்தாலும் கூட அவை தயங்கி மேலேயே நின்று விடும் வாய்ப்பு இருப்பதால் அவன் அதற்கு வழி வகுக்க விரும்பவில்லை.
“முதலில் நான் போகிறேன். இந்தப் புல்கட்டையும் பிடித்துக் கொண்டு என் பின்னாலேயே நீயும் வா.....”
அக்ஷய் முதலில் சுரங்கத்தில் சறுக்க ஆரம்பிக்க மைத்ரேயன் பின் தொடர்ந்தான். பெரிய ஆடு அவன் கையில் இருந்த புல்லை ருசித்தபடியே பின் தொடர்ந்தது. அவர்களைப் போல் அது சறுக்கவில்லை. குட்டி பின் தொடர அது கவனமாக நடந்தது. சில இடங்களில் குழிகளும் இருந்தன. அந்த இடங்களில் ஏதாவது ஒரு கல்லில் காலை நிறுத்தி மைத்ரேயன் அந்தக் குழியைத் தாண்ட உதவி விட்டு மறுபடி அக்ஷய் சறுக்க ஆரம்பித்தான். சீக்கிரமாகவே அவர்கள் கீழே வந்து சேர்ந்தார்கள்.
அக்ஷயின் கை கால்களில் சின்ன சிராய்ப்புகள் இருந்தாலும் அவன் அதை பொருட்படுத்தவில்லை. மைத்ரேயன் எந்த பாதிப்பும் இல்லாமல் வந்ததில் திருப்தி அடைந்த அவன் அங்கிருந்த ஒரு புதரின் பின் மைத்ரேயனுடன் ஒதுங்கினான். அவன் கையில் கடிகாரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தான். இன்னும் ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் மலை உச்சியில் நேபாள எல்லைப்படை வீரன் வருவான். பெரும்பாலும் அந்த வீரன் பக்கத்து மலையின் மேல் பகுதியைப் பார்ப்பானே ஒழிய மலை அடிவாரத்தை எட்டிப் பார்ப்பதில்லை. என்றாலும் அக்ஷய் கவனக்குறைவாக இருக்க விரும்பவில்லை.
அந்தக் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் அவர்கள் கிளம்பினார்கள். குளிரின் கடுமையை அவர்கள் நன்றாகவே உணர்ந்தார்கள். அந்த ஓடையில் தண்ணீர் சில இடங்களில் ஐஸ்கட்டியாக ஆரம்பித்திருந்தது. மைத்ரேயனைத் தூக்கியபடியே தாவிக் குதித்துக் கடக்க முடிந்ததை விட ஓடையின் அகலம் அதிகம் இருந்தது.
அக்ஷய் மைத்ரேயனைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு ஓடையை நடந்து கடந்தான். அவன் இடுப்பு வரை தண்ணீர் இருந்தது. இடுப்பில் இருந்து கால் வரை சில்லிட்டுப் போனது. ஆனாலும் அவன் வேகமாகக் கடந்தான். ஆடுகள் ஒரே தாவலில் ஓடையைக் கடந்தன. அந்த மலையில் பயணிக்க ஆரம்பித்தார்கள். மூன்று முறை நேரம் பார்த்து மரம், புதர், பாறை ஆகியவற்றின் பின் அவர்கள் ஒதுங்க வேண்டி வந்தது.
விடிய ஆரம்பிக்கின்ற வேளையில் அவர்கள் மலை உச்சியில் இருந்த கம்பி வேலியை அடைந்தார்கள். மைத்ரேயனை ஓரிடத்தில் மறைவில் நிறுத்தி விட்டு அக்ஷய் வேலியோரம் நடந்தபடியே அந்த வேலியை ஆராய்ந்தான். ஓரிடத்தில் குறுக்குக் கம்பி அறுபட்டு இருந்தது. அந்தக் கம்பியை மேலே இழுத்து விலக்கி நிறுத்திய போது ஏற்பட்ட அகலம் அவர்கள் போக முடிந்த அளவு தாராளமாகவே இருந்தது. அதை முன்பு போலவே இருத்தி விட்டு அக்ஷய் மைத்ரேயனை நிறுத்தி இருந்த மறைவிடத்திற்குப் போனான்.
மணி ஏழானவுடன் அங்கிருந்து கிளம்பி வேகமாக அவர்கள் இயங்கினார்கள். அந்த அறுபட்ட கம்பியை வளைத்து விலக்கி மைத்ரேயனை முதலில் உள்ளே போக விட்டு அக்ஷய் பின் தானும் நுழைந்தான். தான் உள்ளே போன பிறகு ஆடுகளை ஒவ்வொன்றாக உள்ளே தூக்கி வைத்தான். உள்ளே நுழைந்தவுடன் முதல் வேலையாக அந்த அறுந்த கம்பியை நீட்டி முந்தைய நிலையிலேயே அக்ஷய் நிறுத்தி வைத்தான். பின் வேகமாக அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.
அந்த நேரத்தில் தான் வேறொரு காலடி ஓசை கேட்டது. இராணுவ வீரனின் பூட்ஸ் காலடி ஓசை. எதிர்பார்த்த குறைந்த பட்ச நேரத்தையும் விட சுமார் இரண்டு நிமிடங்கள் முன்பாகவே அந்த வீரன் வந்திருக்கிறான். ஒளியக் கூட அருகே தகுந்த இடமில்லை.... அவன் பார்வையில் படாமல் இருக்க வாய்ப்பே இல்லை....
(தொடரும்)
என்.கணேசன்
செம த்ரில்லிங்கான நேரத்துல தொடரும் போட்டுட்டிங்களே :(
ReplyDeleteஇந்த இடத்துல போய் தொடரும் போடறீங்களே நியாயமா சார்
ReplyDeleteஅடுத்த வியாழனுக்குள் என் மண்டை வெடித்தால் என்.கணேசன் சார் தான் பொருப்பு என்று டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
ReplyDeleteinteresting
ReplyDeleteAnna , idhu enna ? thik thik nu irukku .. ippide oru idathula thodaruma ? aah..mudincha naalaike oru update kuduthrunga :)
ReplyDeleteI like the way you write your novels. Almost all areas whether it is philosophy or suspense or characterization are written brilliantly, that is rare nowadays. Well done. Keep it up.
ReplyDeleteArumai vaalthukal
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஅசத்தலாய் போகுது ஐயா...
வாழ்த்துக்கள்.
Excellent narration. Thanks
ReplyDeletesuperb...
ReplyDelete