அக்ஷய் கண்விழித்த போது மைத்ரேயன் பைனாகுலரில் கவனமாகவே கண்காணித்துக் கொண்டிருந்தான். அந்தக் கடுங்குளிரில் அக்ஷய் அவனுக்குப் போர்த்தி விட்டிருந்த கம்பளி இப்போது அவன் உடலில் இல்லை. திரும்பிப் பார்த்த போது அந்தக் கம்பளியை மைத்ரேயன் இரண்டு ஆடுகளுக்கும் போர்த்தி விட்டிருப்பது தெரிந்தது. அக்ஷய் புன்னகைத்தபடி எழுந்து உட்கார்ந்தான்.
“உனக்குக் குளிரவில்லையா? அந்தக் கம்பளியை ஆடுகளுக்குப் போர்த்தி இருக்கிறாய்?”
மைத்ரேயன் அக்ஷயைத் திரும்பிப் பார்த்தான். ”பாவம் இரண்டும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவை நமக்காகத் தான் இந்த அதிகக் குளிரிலும் இங்கே இருக்கின்றன. இல்லா விட்டால் இரவு நேரத்தில் குறைவான குளிர் தேடி மலையின் கீழ்ப்பகுதிக்குப் போயிருக்கும். கம்பளியைப் போர்த்திய பிறகு தான் நிம்மதியாகத் தூங்கின....”
அவன் தனக்குக் குளிர்வதைப் பற்றிப் பேசாததை அக்ஷய் கவனிக்கத் தவறவில்லை. விடிய ஆரம்பித்திருந்தது. அக்ஷய் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆறரை. மைத்ரேயன் தான் கண்காணித்து குறித்து வைத்திருந்ததைத் தெரிவித்தான். முந்தைய கால அளவுகளில் பெரிய வித்தியாசம் இல்லை.
இராணுவ வேலை ஆபத்துக் காலங்களில் மட்டுமே வீரர்களை திடீர் திடீர் மாறுதல்களுக்குத் தயார்ப்படுத்தி வைக்கிறது. மற்ற சாதாரண சமயங்களில் இராணுவ ஒழுங்குடன், அதாவது மாறாத இயந்திரத்தனத்துடன் தான் எல்லா வேலைகளும் சீராக நடக்கும். அதை இது வரை நடந்த கண்காணிப்பு உறுதிப்படுத்தி விட்டது. அக்ஷய் திருப்தி அடைந்தான்.
காலை ஏழு மணிக்கு புதிய வீரர்கள் வந்து பழைய வீரர்கள் செல்லும் நேரத்தில் மட்டும் சில நிமிட இடைவெளி அதிகமாக இருந்தது. அந்த நேரம் தான் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் என்று அக்ஷய் முடிவெடுத்தான்.
பின் மைத்ரேயனிடம் சொன்னான். ”நீ இங்கேயே இரு. நான் சிறிது தூரம் போய் நம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார்ப்படுத்த வேண்டும். ஏதாவது ஆபத்து வந்தால் குரல் கொடு”. மைத்ரேயன் தலையசைத்தான்.
நீலக்கரடிகளுக்குப் பிடிக்காத நெடி உடைய சாறை மீண்டும் தன் உடலில் பூசிக் கொண்டு அக்ஷய் மலையில் இன்னும் மேலே ஏற ஆரம்பித்தான். மேலே ஏறுவது இது வரை இருந்தது போல சுலபமாக இருக்கவில்லை. இது வரை மனிதர்கள் அடிக்கடி நடந்த தடமாவது இருந்தது. இப்போது அவன் போகும் பாதையில் தடத்தின் தடயம் கூடத் தெரியவில்லை. காலை ஆகியிருந்த போதும் கடுங்குளிரின் தாக்கம் போகின்ற வழியில் அதிகமாகவே அவனுக்குத் தெரிந்தது. சில இடங்களில் வழுக்கியது. சுதாரித்துக் கொண்டு கவனமாக நடந்தான். மைத்ரேயனை இங்கு அழைத்து வரும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டவன் அந்த இடங்களை மனதில் குறித்துக் கொண்டான். அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் அவன் ஒரு இடத்தை அடைந்தான். மலையில் சற்றே பள்ளமான இடம் என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசமும் பார்ப்பவர்களுக்கு அங்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அது தான் அவன் தேடி வந்த வித்தியாசமான இடம். அந்த இடம் தானா என்பதை அவன் ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டான். சுமார் பதினைந்து ஆண்டுகளில் அந்த இடம் பெரிய மாற்றத்தைச் சந்தித்து விடவில்லை.....
சுமார் 25 அடிகள் தள்ளி இருந்த மலைப்பாறையில் அமர்ந்து தான் அவன் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கோடை காலத்தில் தியானம் செய்ய வந்திருந்தான். அந்த இடம் அந்த மலையின் கிட்டத்தட்ட மையப்பகுதியில் இருந்தது. அப்போது அதையும் தாண்டிப் போக முயற்சித்தும் அவனால் முடியவில்லை. அதனால் தன்னால் போக முடிந்த அதிகபட்ச உயரமான அந்த இடத்திலேயே தியானம் செய்ய முடிவு செய்து அங்கே இரண்டு நாள்கள் அவன் அந்த சமயத்தில் தங்கி இருந்தான்.
இரண்டாவது நாள் தான் அந்த அதிசய நிகழ்வு நடந்தது. அப்போது அவன் தியானத்தில் இருக்கவில்லை. தன் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய குரு என்னவெல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்று எதிர்பார்த்து அந்தக் கேள்விகளுக்கான பதில்களை மனதில் சேகரித்துக் கொண்டிருந்தான். எத்தனையோ விஷயங்கள் கவனம் அதிகமாய் தர தரத்தான் விளங்க ஆரம்பிக்கின்றன என்பதை அவன் அந்த குருவிடம் வந்த பிறகு தான் சிலாகிக்க ஆரம்பித்திருந்தான். உலகில் எத்தனையோ அதிசயங்களை கவனிக்காமலேயே மனிதன் தன் கவனக்குறைவால் கடந்து போய் விடுகிறான் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஒரு ஆடு சற்று தள்ளி பாறைகள் பெரிய பெரிய கற்களாய் உடைந்து போயிருந்த பகுதிக்கு வந்தது.
அந்த ஆடு சற்று தள்ளி பெரிய பாறை ஒன்றில் அமர்ந்திருந்த அவனைக் கூர்ந்து பார்த்தது. அவன் நண்பனா, பகைவனா என்று அது எடை போட்டுக் கொண்டிருந்தது போல அவனுக்குத் தோன்றியது. தியானத்தில் இருந்தவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி அமைதி அலைகளையே பரப்புபவர்கள் என்பதால் அந்த அலைகளை அந்த ஆடும் உணர்ந்திருக்க வேண்டும். அதன் பிறகு அந்த ஆடு அவனை லட்சியம் செய்யவில்லை. கற்களின் இடையில் இருந்த புற்களை மேய ஆரம்பித்தது. அப்படியே சற்று நகர்ந்து சற்று பள்ளமான பகுதிக்கு வந்த ஆடு பள்ளத்தில் படர்ந்திருந்த ஒரு செடியின் இலைகளை சாப்பிட ஆரம்பித்தது. ஒரு பக்கத்து இலைகளைச் சாப்பிட்டு விட்டு மறுபக்கத்து இலைகளை சாப்பிட யத்தனித்த போது கால் தடுக்கி தடுமாறி விழுந்த ஆடு அடுத்த கணம் காணவில்லை. சின்னதாய் ஒரு சறுக்கல் சத்தம் மட்டுமே அவனுக்கே கேட்டது.
மலை ஆடுகள் தடுக்கி விழுவது அபூர்வம். அதன் கால்கள் மற்றும் பாதங்களின் அமைப்பு சமவெளி ஆடுகளிடம் இருந்து பெரிதும் வித்தியாசப்படுபவை. அப்படியே தடுக்கி விழுந்தாலும் சுதாரித்து பாறைகளைப் பற்றிக் கொண்டு விடுபவை. அதனால் அது அப்படி சுதாரித்து வந்து விடும் என்று கணக்குப் போட்ட அக்ஷய்க்கு அது உடனடியாக அப்படி வராதது ஆச்சரியமாய் இருந்தது. ஏதாவது பாறை இடுக்கில் சிக்கி இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அதைக் காப்பாற்ற எண்ணி அவன் பாறையின் மீது எழுந்து நின்று கிளம்ப யத்தனித்த போது மலையின் அந்தப் பக்கத்து அடிவாரத்தில் ஆடு நிலைகுலைந்து விழுந்து தடுமாறி எழுந்து நிற்பது தெரிந்தது. அது வேறு ஆடாக இருக்குமோ என்று ஆரம்பத்தில் அவன் சந்தேகப்பட்டான். ஆனால் அல்ல என்பது கூர்ந்து பார்த்த போது அவனுக்குத் தெரிந்தது.
திகைத்துப் போன அக்ஷய் மெள்ள கவனமாக வந்து ஆடு சறுக்கிய இடத்தை ஆராய்ந்தான். மெள்ள ஆடு சாப்பிட்டுக் கொண்டிருந்த செடியின் கொடிகளை விலக்கிப் பார்த்த போது அங்கே சுமார் மூன்றரை அடி அகலத்தில் பெரியதாய் ஒரு துவாரம் தெரிந்தது. பார்க்க ஒரு குகையின் துவாரம் போலத் தெரிந்தாலும் அது குகையல்ல, மலையடிவாரம் வரை செல்லும் இயற்கைத் துவாரம் என்பது புரிந்தது. அதனால் தான் அதில் தடுமாறி விழுந்த ஆடு அடித்தளம் வரை போயிருக்கிறது. கவனமாக மேலும் அந்த துவாரத்தை ஆராய்ந்தான். அதன் அடிப்பகுதி கரடுமுரடாய் இல்லாமல் வழுவழுவென்று இருந்தது. மேலும் ஆராய்ந்து சிந்தித்த போது விளங்கியது. மலையின் பனிப்பகுதி உருகும் போது நீர் பள்ளப்பகுதியில் இருக்கும் அந்த துவாரத்தின் வழியாகவே சென்று சென்று காலப்போக்கில் அந்த அடிப்பகுதி மென்மையாகி விட்டிருக்க வேண்டும். இயற்கையாக ஏற்படுத்தி இருக்கும் ஒரு அபூர்வ சுரங்கப் பாதை....
மேலே இருந்து அந்த ஆட்டைக் கவனித்தான். ஆடு மேலே செங்குத்தாய் தெரிந்த மலையில் மீண்டும் ஏறவில்லை. சறுக்கிய பாதையில் மீண்டும் மேலே ஏறி வருவதும் அதற்கு முடிகிற விஷயமில்லை. ஆடு மேலும் கீழே பயணித்து குறுக்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு ஓடையை ஒரே எட்டில் கடந்து நேபாளப் பகுதியில் இருக்கும் மலையில் ஏற ஆரம்பித்தது. அரை மணி நேரத்தில் நேபாள எல்லை வேலியைத் தாண்டி உள்ளே சென்றது. அன்று அக்ஷய் அந்தக் காட்சியை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தன் குருவிடம் திரும்பிச் சென்ற போது அந்த சம்பவம் பற்றிய ஏதாவது ஒரு கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்த்தான். வேறுபல கேள்விகளைக் கேட்டாரே ஒழிய இது பற்றிக் கேட்கவில்லை. அவரிடம் அவனாகவே அந்த சம்பவத்தைச் சொன்னான். அவர் அவனை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சொன்னார். “எதுவுமே உலகில் தற்செயலாக நடப்பதில்லை....!”
அது அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் என்பதால் அவன் அதற்கு தனி அர்த்தம் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாங் சாவொவின் தீவிரத் தேடுதல் ஆரம்பித்தவுடன், எல்லா எல்லைப் பகுதிகளும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது தெரிந்தவுடன், அவனுக்கு அன்று அவன் குரு சொன்ன வாசகத்தின் உள்ளர்த்தம் தெரிய ஆரம்பித்தது.
குருவுக்கு இன்று மானசீகமாக வணக்கம் தெரிவித்த அக்ஷய் அந்தப் பள்ளப்பகுதியில் மிகவும் எச்சரிக்கையாக அந்த துவாரத்தைத் தேட ஆரம்பித்தான். அந்த ஆட்டைப் போல தடுமாறி சறுக்கி இப்போது கீழே போய் விடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். சறுக்கி கீழே போவது சுலபம். அத்தனை உயரத்திற்கு அந்த வழியில் மேலே வருவது அவனுக்கே கூடச் சுலபமல்ல. இன்றும் அந்த துவாரத்தைப் பல தாவரங்கள் மறைத்திருந்தன. அந்தத் தாவரங்களை அப்புறப்படுத்தி ஒரு வழியாக துவாரத்தைக் கண்டுபிடித்தான். ஒரு பெரிய கல்லைத் தூக்கி அந்த துவாரத்தில் வீசினான். உடனடியாக தள்ளி இருந்த பாறை ஏறி அந்தப் பக்கத்து அடிவாரத்தைக் கவனித்தான். சிறிது நேரத்தில் அந்தக் கல் கீழே சென்று விழுந்தது சின்னதாகத் தெரிந்தது. துவாரத்தில் எந்த அடைப்பும் இல்லை.
திருப்தி அடைந்த அக்ஷய் திரும்பினான். சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டு ஒரு நீலக்கரடி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தது அவன் நடக்க ஆரம்பித்தவுடன் அது அந்த நெடி தாளாமல் ஓடிப் போனது.
கீழே இறங்க ஆரம்பித்த அக்ஷய் மனதில் பிரதானமாய் இப்போது இருந்தது பக்கத்து மலையில் இருந்த நேபாள எல்லை வீரர்கள்.....!
மாரா எல்லா அலுவல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு கடுமையான தொடர் பூஜையில் இருந்தான். அவன் இந்த கடந்த 12 மணி நேரமாக தண்ணீர் குடிக்கவில்லை, எதுவும் சாப்பிடவில்லை, யாரிடமும் பேசவில்லை. பூஜை முடிந்த பின்னும் அரை மணி நேரம் கண்களை மூடியபடி தன் சக்திகளைக் குவித்து யோசித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் சம்யே மடாலயத்தில் இருக்கும் தன் ஆளுக்குப் போன் செய்து கேட்டான்.
“சம்யே மடாலயத்தில் மைத்ரேயன் உபயோகித்த பொருள் எதாவது இன்னமும் அங்கே இருக்கிறதா?”
“தலைமை பிக்கு தனதறையில் புத்தனின் சிலையருகே ஒரு காவியுடையை மடித்து வைத்திருக்கிறார். அதற்கும் பூஜை செய்கிறார். அது மைத்ரேயன் உடுத்திய உடையாகத் தான் இருக்க வேண்டும்.....”
“உடுத்திய உடையாக இருந்தால் மிக நல்லது.....” என்று மெல்ல சொன்ன மாராவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. 'மைத்ரேயன் தவறு செய்து விட்டான்.....!'
என்.கணேசன்
படு சுவாரசியம். கூடவே திக் திக்.
ReplyDeleteThursdays are becoming special because of your novel. THANK YOU.
ReplyDeletephoto selection so perfect...!!!
ReplyDeletesometimes I have a feeling that this story is real and happening. This photo is so perfect that it seemed to be taken at the scene. I also feel the Thursday fever like my fellow readers. Great writing.
DeleteEvery day Jayamohan - Venmursu and every Thursday putham saranam katchami make my life happy and meaningful.
ReplyDeletevalga pallanndu...
seshan
அண்ணா. . .
ReplyDeleteசெம திரில்லிங். . .
பகிர்வுக்கு நன்றிகள் பலபல. .
Dear ganesan sir! We r angry with U! Because, weekly once only u give ur novel's pages!
ReplyDelete