என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, October 26, 2015

பக்தர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் பாபா!

மகாசக்தி மனிதர்கள்-40

1886க்குப் பின் ஷிரடி சாய்பாபாவின் புகழ் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது. தொலை தூர மக்களும் ஆயிரக்கணக்கில் அவர் பக்தர்கள் ஆயினர். எண்ணற்ற மக்களுக்கு அருள் புரியவும், சேவை செய்யவும் இறைவனிடம் கூடுதல் ஆயுள் காலம் அவர் பெற்று வந்தது போல் இருந்தது அவர் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி.

அவரைப் பலர் கடவுளாகவே கண்டார்கள் என்ற போதும் அவர் தன்னைக் கடவுளாக அறிவித்துக் கொண்டதில்லை. எத்தனையோ அற்புதங்களை அவர் செய்து காட்டினார் என்ற போதும் அது குறித்த அகந்தையும் அவரிடம் இருந்ததில்லை. அவர் செய்து காட்டிய அற்புதச் செயல்கள் பற்றி வெளிப்படையாக எவராவது பாராட்டினாலோ, குறிப்பிட்டாலோ கூட அவர் அடக்கத்துடன் “இறைவன் ஆணை இட்டதை மட்டும் நான் அவன் அருளால் செய்கிறேன்என்று சொன்னார். 

ஷிரடி பாபாவிடம் இருந்த விசேஷ குணாதிசயம் என்னவென்றால் அவரை நெருங்கும் மனிதர்களின் அறிவுக்கும், தன்மைக்கும் தகுந்தபடி அவர்களுக்கு வழி காண்பிப்பதில் அவர் வல்லவராய் இருந்தார். எந்த சமயத்திலும் எந்த விதத்திலும் தன்னை மேம்படுத்திக் காட்டாமல் தேடுபவர்களுக்குத் தேவையானது என்னவோ அதைச் சொல்லி வழி நடத்தினார். ஒரு முறை அவருடைய பக்தர்களில் ஒரு இளைஞரை அவர் வேதாந்த வகுப்புகளுக்குச் சென்று ஆன்மிக ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளச் சொன்னார்.
அந்த வகுப்புகளுக்குச் சென்று வந்த அந்த இளைஞனுக்கு அவர்கள் ஒரு வேதாந்த உண்மையை வலியுறுத்தினார்கள். சில மனிதர்கள் விசேஷ சக்திகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கென்று அவர்களை கடவுள் என்று கூறிவிட முடியாது. இறைவன் ஒருவனேஎன்று திட்டவட்டமாக அவர்கள் சொன்னார்கள். ஷிரடி பாபாவைக் கடவுளாகவே நம்ப ஆரம்பித்திருந்த அந்த இளைஞனுக்கு அவர்கள் சொன்னது பிடிக்கவில்லை.

அந்த வகுப்புகளுக்குத் தன்னை அனுப்பிய ஷிரடி பாபாவிடம் அவன் வந்து அவர்கள் சொன்ன தனக்கு உடன்பாடில்லாத அந்த உபதேசம் பற்றி சொன்னான். உடனே ஷிரடி பாபா “அவர்கள் சொன்னதில் தவறு என்ன இருக்கிறது. நான் வெறும் ஒரு பக்கிரி மட்டுமே. இறைவனோடு யாரைத் தான் ஒப்பிட முடியும்என்று சொன்னார். நான் என்ற அகந்தையை வேரோடு பிடுங்கி எறிந்திருந்த ஒருவரால் மட்டுமே அல்லவா அதைச் சொல்ல முடியும்.

வேறொரு சமயத்தில் பாபாவின் தெய்வீகச் செயலைச் சுட்டிக்காட்டி அந்த இளைஞன் “அன்று நான் வெறும் பக்கிரி மட்டுமே என்றீர்களே. இப்போது என்ன சொல்கிறீர்கள்?என்று அவன் கேட்ட போது அவர் வெறுமனே புன்னகைத்தார்.

பல நேரங்களில் பிரச்னைகளோடு தீர்வு தேடி தன்னிடம் வந்தவர்களிடம் அவர்களுக்குத் தகுந்த வழிபாட்டு முறையை ஷிரடி பாபா காட்டிக் கொடுத்தார். ஒருவரைக் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று சிவனை வணங்கச் சொல்வார். இன்னொருவரை இன்னொரு புனிதத் தலத்தில் இருக்கும் விஷ்ணுவை வணங்கச் சொல்வார். வேறொருவரை சரஸ்வதியைத் துதிக்கச் சொல்வார். அவர்களும் அவர் சொன்னபடி சென்று வழிபட்டு தங்கள் பிரச்னைகள் தீர்வதைக் கண்டார்கள்.

சில நேரங்களில் அவருடைய பக்தர்களுக்கு அவர்கள் கேட்காமலே அருளும் அபூர்வ அன்பு அவரிடம் இருந்தது. அப்படி ஒரு நிகழ்வை இங்கு பார்ப்போம்.

தாத்யா பட்டீல் என்பவர் ஷிரடி சாய்பாபாவின் தீவிர பக்தர். அவருடைய தாய், பாபா ஷிரடிக்கு வந்த புதிதில் அவருக்கு உணவளித்த புண்ணியவதிகளுள் ஒருவர். பாபா தெய்வீகத் தன்மை வாய்ந்தவர் என்று அறியும் முன்னரே, பைத்தியக்கார பக்கிரியாக சுற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, உணவு வேண்டும் என்று கேட்காமல் இருந்தாலும் அவரைத் தேடி உணவளித்த அந்த தாயின் மகனான தாத்யா பட்டீல் பிற்காலத்தில் அவரைக் கடவுளாகவே பார்த்தவர். ஒரு முறை தாத்யா பட்டீலின் ஆட்கள் அறுவர் அவருக்கு எதிரான கோஷ்டியால் பொய் வழக்கு போடப்பட்டு கைதானார்கள். வலுவான பொய் சாட்சிகளும் இருந்ததால் கோபர்காவுன் நீதிமன்ற நீதிபதி அவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

தாத்யா பட்டீலின் ஆறு ஆட்களில் ஒருவனான ரகு என்பவன் ஷிரடி பாபாவிடம் பக்தி கொண்டவன். அவன் அந்தத் தீர்ப்பால் மனமுடைந்து போனான். அகமதுநகர் சிறையில் அடைக்கப்பட்ட அவன் துக்கம் தாளாமல் அழுது கொண்டே அவன் உறங்கிப் போன போது சிறையில் பாபாவின் திருவுருவம் அவன் கனவில் தோன்றியது. கவலைப்படாதே. நீ சிக்கிரம் விடுதலையாகி விடுவாய்என்று பாபா அவனுடைய கனவில் உறுதி அளித்தார்.

அக்காலத்திலேயே ஷிரடி பாபாவின் திருவுருவம் தீவிர பக்தர்கள் கனவில் தோன்றுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாக இருந்தது.  தாத்யா பட்டீல் அந்த வழக்கின் அப்பீல் மனுவை எடுத்துக் கொண்டு போய் பிரபல வக்கீல்களின் உதவியை நாடினார். வழக்கைப் படித்துப் பார்த்த அவர்கள் வழக்கு அப்பீலுக்குப் போனாலும் ஜெயிக்காது எனவும், அந்த அளவு வழக்கு எதிர் கோஷ்டி பக்கம் வலுவாக இருக்கிறது எனவும் சொல்லி விட்டார்கள்.

தாத்யா பட்டீல் வேறு வழி தெரியாமல் ஷிரடி பாபாவிடமே அந்த அப்பீல் மனுவை எடுத்துக் கொண்டு வந்தார். பாபா நாசிக்கில் உள்ள பாவ் எஸ்.பி. தூமல் (Bhav, S.B. Dhumal) என்ற ப்ளீடரிடம் அந்த வழக்கு சம்பந்தமான காகிதங்களை எடுத்துச் செல்லுமாறு தாத்யா பட்டீலைப் பணித்தார். அந்த ப்ளீடரிடம் அப்பீல் மெம்மோவுடன் அந்த வழக்கை அகமதுநகர் மாவட்ட நீதிபதி முன்னிலையில் வைக்கும்படி சொன்னார். வழக்கு பற்றியோ, வழக்கு நடைமுறை வழிகள் பற்றியோ, அந்த ப்ளீடர் மற்றும் நீதிபதி பற்றியோ அறிந்திராத பாபா இப்படிச் சொன்னது தாத்யா பட்டீலுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர் பாபா சொன்னது போலவே செய்தார். அப்படியே அந்த ப்ளீடர் அகமதுநகர் மாவட்ட நீதிபதியிடம் அப்பீல் மெம்மோவுடன் வழக்கை முன் வைக்க அவர் அதிக விசாரணை இல்லாமல் ரகுவையும் மற்ற ஐவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். நீதி வென்றது. வெல்லவே முடியாத வலுவான வழக்கு என்று சட்ட நிபுணர்கள் சொன்ன ஒரு வழக்கை பாபாவின் சக்தி வெல்ல வைத்ததாகவே அந்த வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்த அவருடைய பக்தர்கள் கருதினார்கள்.

ஷிரடி சாய்பாபாவை நாடி வரும் பக்தர்கள் தங்கள் சின்னச் சின்னப் பிரச்னைகளை அவர் முன் வைத்து அதற்கு தீர்வு வேண்டுவது அதிகரித்துக் கொண்டே போனது. இது அவருடைய சில சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. பாபாவைப் போன்ற பெரிய மகானிடம் சின்னச் சின்னப் பிரச்னைகளைச் சொல்வதே தவறு என்று கருதினார்கள். ஞானப் பொக்கிஷமான அவரிடம் ஞான மார்க்க வழி கேட்கலாமே ஒழிய லௌகீக வேண்டுதல்களை அவர் முன் வைப்பது அவமரியாதை என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் அவற்றைத் தடுக்கவும் முற்பட்டார்கள்.

ஆனால் அவர்களை ஷிரடி பாபா கண்டித்தார். “அவர்களைத் தடுக்காதீர்கள். சின்னச் சின்ன வேண்டுகோள்களுடன் ஆரம்பத்தில் என்னை நெருங்கும் அவர்கள் அந்தப் பிரச்னைகள் தீர்ந்தவுடன் அதற்கும் மேலான உண்மையான ஆன்மிக மார்க்கத்திற்காகவும் என்னைப் பின்பற்றுவார்கள். என்னை நாடி வருபவர்கள் அவர்களாக வருவதில்லை. நானே அவர்களை என்னிடத்தில் வரவழைக்கிறேன். அவர்களது பிரச்னைகள் உங்களுக்கு சிறியதாகவும் அர்த்தம் இல்லாததாகவும் கூடத் தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு அந்தப் பிரச்னைகள் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. அப்படியே அவர்களை அழுத்துகின்றன. அந்தப் பிரச்னைகள் தீரும் வரை அவர்கள் அதைத் தாண்டிய ஆன்மிகத்திற்கு நுழைவதில்லை. அதனாலேயே அவர்கள் பிரச்னைகளை நான் தீர்த்து வைக்கிறேன். உண்மையான ஆன்மிகத்துக்குள் நுழைய நான் வழி வகுக்கிறேன்.

எத்தனை தீர்க்கமான சிந்தனை பாருங்கள். ஷிரடி பாபாவின் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இருந்து அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னால் லட்சக்கணக்காக மாறியதற்குக் காரணம் புரிகிறதல்லவா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 22.05.2015

                                                                                                                                                                          

1 comment:

  1. I thought all the time why we always approach baba for our problems to be solved not asking real knowledge spiritual growth. but the way Baba explain is very true. Truly touched my heart!

    ReplyDelete