அக்ஷய்
எப்படித் தப்பித்திருக்க வேண்டும் என்று மாரா அனுமானித்தது கிட்டத்தட்ட சரியாகவே
இருந்தது.
சம்யே
மடாலயத்தில் இருந்து கிளம்பிய போது அக்ஷய் மடாலயத்தின் உள்ளே இருந்த எதிரிகள்
பார்வையில் பட்டுவிடக்கூடாது என்று எண்ணினானே ஒழிய வெளியே ஜீப்பில் எதிரிகள்
காத்துக் கொண்டு இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த எதிரிகள் லீ
க்யாங்கின் ஆட்களா அல்லது இன்னொரு கோஷ்டி ஆட்களா என்று ஆரம்பத்தில் புரியா
விட்டாலும் பின் யோசித்த போது லீ க்யாங்கின் ஆட்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது
புரிந்தது. லீ க்யாங்கின் ஆட்களாக இருந்தால் போன் செய்து லாரியைச் சுற்றி வளைக்க
அதிக நேரம் ஆகியிருக்காது. அப்படி நடக்காததால் பின் தொடர்வது இன்னொரு கோஷ்டி
ஆட்கள் என்பது தெரிந்தது.
பின்னால்
ஜீப்பை ஓட்டியவன் ஓட்டும் திறமையில் அசகாய சூரனாக இருந்ததால் ஜீப்பை விட்டு அவர்களால்
அதிக தூரம் போய் விட முடியவில்லை. அதனால்
அக்ஷயின் திட்டப்படி அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியவில்லை. அவர்கள்
திட்டப்படி பிரதான சாலையிலிருந்து ஒரு இடத்தில் குறுக்கே செல்லும் ஒரு சாலையில்
சுமார் இரண்டு கிலோமீட்டர் போய் இறங்க வேண்டி இருந்தது. அந்தத் திருப்பம்
வருவதற்கு சிறிது நேரம் முன்பே லாரி டிரைவர் பின்னால் இருந்த சின்னத் துளை
வழியாகக் கேட்டான். “என்ன செய்வது?”
அக்ஷய்
சொன்னான். “இப்போதைக்கு நேராகப் போய்க் கொண்டே இருங்கள்”
லாரி டிரைவர்
அவன் சொன்னபடி அந்தத் திருப்பத்தில் திரும்பாமல் நேராகவே போக ஆரம்பித்தான். இரண்டு
நிமிட யோசனைக்குப் பிறகு திரும்பி வர ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியுமா என்று
அக்ஷய் கேட்ட போது லாரி டிரைவர் சொன்னான். “அது ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் பின்னால் ஒரு சைத்தான் வருகிறானே அவன்
பார்வையில் படாமல் எப்படித் திரும்பி வருவீர்கள்?”
”பலர் வண்டியை நிறுத்தக்கூடிய ஒரு பொது இடத்தில்
நாம் அந்த சைத்தான் கண்ணில் ஓரிரு நிமிடங்கள் படாமல் இருப்பது பெரிய விஷயமல்ல.....” என்ற அக்ஷய்
தன் திட்டத்தைச் சொன்னான். லாரி டிரைவர்
உடனடியாகப் போன் செய்து தன் நண்பன் ஒருவனிடம் பேசினான். அதன்பின் அக்ஷயின் ஆலோசனைப்படியே அந்தத் திட்டம்
மிகவும் கச்சிதமாக நடந்தேறியது.
மிக யதார்த்தமாக வெந்நீர் கொண்டு வரப்போவது போல் போன ஆள் திரும்பி வந்த
நேரத்தில் அவர்கள் லாரி டிரைவர் வண்டியைக் கிளப்பி சற்று குறுக்காக நிறுத்த அந்த மறைவில்
அந்த ஆள் இரு லாரிகளின் பின் கதவுகளின் தாழ்ப்பாள்களையும் திறந்து விட்டான்.
அதனால் அந்த லாரியில் இருந்து இந்த லாரிக்கு மைத்ரேயனுடன் வருவது அக்ஷய்க்குச் சுலபமாக
இருந்தது. இரு லாரிகளின் பின் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் போட்டு விட்டு அந்த ஆள்
வேகமாக டிரைவர் அருகில் வந்து அமர்ந்து கொள்ள இரண்டு லாரிகளும் கிளம்பின.....
அக்ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். இப்போது நன்றாக விடிந்து விட்டிருந்ததால்
கதவிடுக்கில் புகுந்த வெளிச்சத்தில் அவனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் அக்ஷயையே
பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான். நேற்று இரவு அந்த லாரியில் மைத்ரேயன்
நன்றாக உறங்கி விட்டிருந்தான். உணவகத்தின் முன்னால் லாரியை நிறுத்திய போது அக்ஷய்
அவனை எழுப்பிய பிறகு தான் அவன் கண் விழித்தான். அவன் இந்த லாரிக்குள் வந்த கணம்
முதல் அசையாமல் அமைதியாகவே அமர்ந்திருக்கிறான். அவன் காலில் தர்மசக்கரத்தைப்
பார்த்த கணத்தில் இருந்து இந்தக் கணம் வரை அக்ஷயின் பிரமிப்பு அகலவில்லை. அவனுடைய
மகன் கௌதம் ஐந்து நிமிடம் கூட ஒரே இடத்தில் சேர்ந்தாற்போல் உட்கார்ந்திருக்க
மாட்டான்....
“உங்கள் மகன் பெயர் என்ன?” மைத்ரேயன் திடீரென்று கேட்டான்.
அக்ஷய்க்குத்
தூக்கிவாரிப்போட்டது. தன் மகனை அவன் நினைக்க நினைக்க, அவனையே பார்த்துக்
கொண்டிருந்த மைத்ரேயன் இந்தக் கேள்வியைக் கேட்டது அவன் எண்ணங்களைப் படித்து
விட்டுத் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. ”உங்களுக்கு எப்படி
என் மகன் பற்றித் தெரியும்?” என்று கேட்டான்.
“என்ன திடீர் மரியாதை?” மைத்ரேயன் கேட்டவுடன் அக்ஷய்க்கு என்ன சொல்வது என்று
தெரியவில்லை. மைத்ரேயன் காலில் தர்மச்சக்கரம் இருந்ததும், அது பொன்னிறத்தில் சுழல்வது
போல் தெரிந்ததும், அவனை இனியும் மரியாதைக் குறைவாய் ஒருமையில்
அழைக்க விடாமல் அக்ஷயைத் தடுத்தன.
“எனக்கு நீங்கள் என்னை முன்பு போலவே ஒருமையில் அழைப்பது தான்
பிடித்திருக்கிறது” சொல்லியபடி அக்ஷய் மீது மைத்ரேயன் உரிமையுடன் சாய்ந்து
கொண்டான். சில நேரங்களில் புத்தரின் அவதாரம் போல் தெரிந்தாலும், சில நேரங்களில்
அவன் மகன் கௌதம் போல சுவாதீனத்துடன் நடந்து கொள்கிற மைத்ரேயனின் முகத்தை அக்ஷய்
கூர்ந்து பார்த்தான். இப்போது அந்த முகத்தில் மந்த பாவனை இல்லை, மந்தகாசம் தெரிந்தது.
சின்னதாய் ஒரு கெஞ்சலும் தெரியவே அவனை ஒருமையிலேயே அழைப்பது என்று அக்ஷய் முடிவு
செய்தான். ‘இறைவனையே ஒருமையில் அல்லவா நாம் உரிமையுடன்
அழைக்கிறோம்!’ என்று அவன் நினைத்துக் கொண்டான்.
“சரி.... உனக்கு எப்படி என் மகனைப் பற்றித் தெரியும்?” என்று அக்ஷய்
கேட்டான். கண்டிப்பாக உங்கள் மனதில் அவனைப் பற்றி நினைத்தீர்கள், அதைத் தெரிந்து
தான் கேட்டேன் என்று இவன் சொல்ல மாட்டான் என்பது தெரியும். என்றாலும் என்ன தான்
சொல்கிறான் பார்ப்போமே என்று தான் அவன் கேட்டான்.
“நீங்கள் தானே
என் அம்மாவிடம் என் வயதில் உங்களுக்கு ஒரு மகன் இருப்பதாய் அன்றைக்குச்
சொன்னீர்கள்” என்று மைத்ரேயன் சொல்ல அக்ஷயால் சிரிக்காமல் இருக்க
முடியவில்லை.
அந்த நேரத்தில் லாரி நின்றது.
ஜானகி
வாயடைத்துப் போகும் சந்தர்ப்பம் அவள் வாழ்வில் இது வரை வந்ததே இல்லை. முதல்
தடவையாக வாயடைத்துப் போன அவள் அவன் கண்களில் பெருகிய கண்ணீர் விடாமல் வழிந்து
கொண்டிருந்ததை மிகுந்த பச்சாதாபத்துடன் பார்த்தாள். லேசாய் ஜண்டு பாம் வாசனை வந்தது.
பாவம் ஜலதோஷமோ, தலைவலியோ கூட அவனைப் படுத்துகிறது போல் இருக்கிறது என்று அவள்
நினைத்துக் கொண்டாள்.
“இது...
இது.... எப்போது நடந்தது?” என்று அவள் மெல்லக் கேட்டாள்.
“பன்னிரண்டு பதிமூன்று வருஷங்களுக்கு முன்....” என்று சொன்னவன்
அந்தப் பழைய நாட்களின் நினைவே தன்னைக் கொல்வது போலக் காட்டிக் கொண்டான். பொய்
பித்தலாட்டம் அனாயாசமாக வந்த அளவுக்கு அவனுக்கு நடிப்பு வரவில்லை. அதனால் தன்
முகத்தை கைகளால் மூடிக்கொண்டான். பின் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டு பேசுவது போல அவள் முகத்தை நேரடியாகப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துப்
பேசினான்.
“அப்போதே செத்து விடலாம்
என்று நினைத்தேன்..... சில முறை முயற்சியும் செய்தேன்.... எமனுக்கு என் மேல் கருணை
இருக்கவில்லை..... அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிழைக்க வைத்து விட்டார்கள். என்
அப்பா போல் நான் மதித்த என் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். “நீ உனக்காக இல்லா
விட்டாலும் உன் மகனுக்காகவாவது வாழ வேண்டும்.... உன் மனைவிக்கு இன்னொரு கணவன்
கிடைப்பான். ஆனால் உன் மகனுக்கு இன்னொரு தகப்பன் கிடைக்க மாட்டான்... அதை
மறக்காதே.... அவர்களைத் தேடிக் கண்டுபிடி. உன் மகனையாவது மீட்டுக்கொள்”. அவர் சொன்னதும் எனக்கு உண்மையாகப்பட்டது. அந்த
நாளில் இருந்து என் குடும்பத்தை, இல்லை என் மகனை நான் தேடி அலைந்து கொண்டே இருக்கிறேன்.
சில நாட்கள் முன் கோயமுத்தூர் வந்த போது தான் ஒரு தெருவில் தற்செயலாக என்
மனைவியைப் பார்த்தேன்.... அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து வந்து அவர்கள்
வீட்டைக் கண்டுபிடித்தேன்....”
ஜானகிக்கு
அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ‘பாவம் இந்த ஆளுக்கு என் முகத்தைப் பார்த்துப்
பேசக்கூட முடியவில்லை. கூனிக்குறுகிப் போய் எங்கேயோ பார்த்துப் பேசுகிறார்’. அந்த எண்ணத்துடனேயே சேர்ந்து இன்னொரு சந்தேகம்
எழ, அவள் கேட்டாள். “அப்படியானால் நீங்கள் சினிமா
கதாசிரியர் இல்லையா?”
அவன்
ஜாக்கிரதையாகச் சொன்னான். “நான் சினிமா கதாசிரியன் தான். நான் பல நாடகங்களுக்குக்
கதை வசனம் எழுதியதாகச் சொன்னதும் உண்மை தான். எனக்குப் பொய் பேச வராது.... ஆனால்
இந்த வீட்டில் குடி வந்தது மட்டும் சினிமா கதை வசனம் எழுத அல்ல. அது நான்
ஊட்டிக்குப் போய் எழுதத் தான் தீர்மானித்திருந்தேன். போகும் வழியில் கோயமுத்தூரில்
சஹானாவைப் பார்த்து விட்டுத் தான் இங்கேயே தங்கி விட்டேன்.......”
“இனி என்ன
செய்வதாக உத்தேசம்...” ஜானகி
கேட்டாள்.
“எனக்கு என்
மகனைப் பார்த்துப் பேசி அவனை அழைத்துக் கொண்டு போக வேண்டும்..... அவள் எக்கேடோ
கெட்டுப் போகட்டும்..... அவளுக்கு வருண் இல்லா விட்டாலும் இன்னொரு மகன்
இருக்கிறான்.... எனக்கு.... எனக்கு...” அவன் வாயடைத்தது போல், அதற்கு மேல் பேச வராதது போல்
நிறுத்திக் கொண்டான்.
“வருண் வேறொரு ஆளைத் தான் அப்பா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான். அவன்
அந்த ஆளைப் பற்றிப் பெருமையாகப் பேசாத நாளே இல்லை. அந்த அளவு பாசம்
வைத்திருக்கிறான்.....”
ஜானகிக்கு அதைச் சொல்லாமல்
இருக்க முடியவில்லை.
”அவள் என்னைப் பற்றி என்னவெல்லாம் மோசமாகச்
சொல்லி அவனை மூளைச்சலவை செய்திருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை..... அவளைப் பற்றி
அவன் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக என்னைப் பற்றி கண்டபடியெல்லாம்
சொல்லி இருக்கலாம்.... அதனால் அவனைத் தவறு சொல்ல முடியாது.....”
”பின் எப்படி அவனை உங்களோடு அழைத்துப்
போவீர்கள்?”
அவன்
கண்களுக்கு மறுபடியும் ஜண்டு பாம் தடவிக் கொண்டு கண்ணீர் விட்டான். ”எனக்கு அது தான் புரியவில்லை. எதற்கும் முதலில் அவனைச் சந்தித்து மனம்
விட்டுப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.... அதற்கு நீங்கள்... நீங்கள் உதவி
செய்வீர்களா?”
(தொடரும்)
என்.கணேசன்
அண்ணா நாவல் Z வேகம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
அக்ஷய் திரும்பி வரும் வரை அந்த தடியனை கொஞ்சம் அடக்கி வையுங்கள் கணேசன் சார். நாவல் அருமையாக செல்கிறது. வியாழன் 5.45 தாண்டி விட்டால் உங்கள் ப்ளாக் வந்து அப்டேட் ஆகி விட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டே இருக்க தூண்டுகிறது.
ReplyDeleteThe same feel
ReplyDeleteஅருமை
ReplyDelete