சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 22, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 68



லாரி நின்றவுடன் அக்‌ஷயும் மைத்ரேயனும் இறங்கினார்கள். லாரியின் பின் கதவை அக்‌ஷய் சாத்தி தாளிட்டு விட்டு லாரி டிரைவரைப் பார்த்துக் கையசைத்தான். லாரி டிரைவரும் கையசைத்தான். பாட்டில் ஒன்றும் டிரைவர்  கையுடன் சேர்ந்து அசைந்தது. அவர்களுக்காக உணவகத்தின் முன்பு கதவைத் திறந்து விட்டவன் தான் பாட்டிலை ஆட்டுகிறான். அக்‌ஷய் புன்னகைத்தான். லாரி கிளம்பிப் போனது.

அவர்கள் இறங்கிய இடம் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்த சாலை. சூரியன் வானில் தெரிந்த போதும் அதன் கிரணங்கள் வெளியே நிலவிய குளிரைப் பெரிதாகக் குறைத்து விடவில்லை. இருவரும் அந்த சாலையில் நடக்க ஆரம்பித்தார்கள். தூரத்து மலை முகடுகளில் பனி உறைய ஆரம்பித்து இருந்தது.

“இனி நாம் வாகனங்களில் பயணம் செய்வதும், எங்காவது விடுதிகளில் தங்குவதும் அபாயம் என்று நினைக்கிறேன். அதனால் நாம் நிறையவே நடக்க வேண்டி இருக்கும். வெளி இடங்களிலேயே தங்க வேண்டி இருக்கும்....என்று அக்‌ஷய் மைத்ரேயனிடம் தெரிவித்தான்.

மைத்ரேயன் தலையசைத்தான். மலைப்பாதைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும், இமயமலைக் கடுங்குளிரில் வெளியே தங்குவதும் அவனைப் போன்ற சிறுவனுக்கு மிகவும் கஷ்டமான அனுபவம் தான் என்றாலும் அதை அவன் உணர்ந்ததாகவோ அதற்கு வருத்தப்பட்டதாகவோ தெரியவில்லை.    

அவர்கள் இருவரும் சிறிது தூரம் சாலையில் நடந்தார்கள். சாலையில் எந்த வாகனமும், ஆட்களும் அவர்கள் நடந்த வரை அவர்களுக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.  அங்கிருந்து ஒரு ஒற்றையடிப் பாதையில் அக்‌ஷய் திரும்பிய போது மைத்ரேயன் கேட்டான். “நீங்கள் இந்த இடங்களுக்கெல்லாம் முன்பே வந்திருக்கிறீர்களா?”

“ம்... ஒரு முறை வந்திருக்கிறேன்.....”  என்றான் அக்‌ஷய்.

“ஒரு முறை வந்ததிலேயே இந்த இடங்களை நீங்கள் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.

அக்‌ஷய்க்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறுவனாக இது வரை தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டதோ, தன்னுடைய கருத்தைத் தெரிவித்ததோ இல்லை. முதல் முறையாக அந்த அதிசயம் நடந்திருக்கிறது....

அக்‌ஷய் புன்னகைத்தபடி சொன்னான். “அதற்கு என் குருவைத் தான் பாராட்ட வேண்டும். பயிற்சிகள் செய்ய சில சமயங்களில் வெளியிடங்களுக்கு அனுப்புவார். எங்கு போய் வந்தாலும் பத்து கேள்விகள் கேட்பார். நீ வருகிற வழியில் எத்தனை ஆடுகள் பார்த்தாய்,  நீ தியானம் செய்த இடத்தில் உன் எதிரில் எத்தனை பைன் மரங்கள் இருந்தன, நீ நடந்து வந்த போது உன்னைக் கடந்து போன மனிதர்கள் எத்தனை என்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்பார். ஆரம்பத்தில் பத்தில் இரண்டு கேள்விகளுக்குக் கூடப் பதில் தெரியாது. சின்னச் சின்ன விஷயங்களையும் கவனிப்பது முக்கியம் என்று அடிக்கடி சொல்வார். பெரும்பாலானவர்கள் அரைத்தூக்கத்தில் தான் வாழ்கிறார்கள் என்றும் அந்த வரிசையில் சேர்ந்து விடாதே என்றும் சொல்வார்......

அவன் தன் திபெத்திய குருவை நினைவு கூர்ந்த போது தானாக அவன் முகம் மென்மையானது.

மைத்ரேயன் கேட்டான். “ஆரம்பத்தில் பத்தில் இரண்டு கேள்விகளுக்குக்கூட பதில் தெரியாத நீங்கள் கடைசியில் எத்தனை கேள்விகளுக்குப் பதில் சொல்கிற அளவு முன்னேறினீர்கள்?

அடுத்த கேள்வியும் கேட்கும் அளவு அவன் ஆர்வம் காட்டியது அக்‌ஷயை மறுபடியும் ஆச்சரியப்படுத்தியது.

“ஐந்து அல்லது ஆறு வரைக்கும் தான் போக முடிந்ததுஎன்று அக்‌ஷய் உண்மையைச் சொன்னான். ஆனால் அவனோடு அந்தக் குருவிடம் அந்தக் காலக்கட்டத்தில் படித்தவர்கள் யாரும் அதிகபட்சம் மூன்றைத் தாண்டியதில்லை. அவர்களில் பலரும் அவனை விட அதிக காலம் அங்கு படித்தவர்கள்.  இதைக் கேட்பார் என்று எண்ணி கவனித்து மனதில் குறித்துக் கொண்டதை என்றுமே அவனது குரு கேட்டதில்லை. அதை எல்லாம் அவன் மைத்ரேயனிடம் சொல்ல முற்படவில்லை...


இருவரும் சிறிது நேரம் பேசாமல் நடந்தார்கள். ஒற்றையடிப் பாதை நடக்க சுலபமாக இல்லை. சில இடங்களில் பாதை கரடு முரடாக இருந்தது. மைத்ரேயன் களைத்துப் போனாலும் சின்னதாய் ஒரு முகச்சுளிப்பு கூட இல்லாமல் நடப்பதைப் பார்க்கையில் அக்‌ஷய்க்குக் கஷ்டமாக இருந்தது. அவன் மகன் கௌதம் இதில் கால் வாசி தூரம் கூட நடந்திருக்க மாட்டான்.

“உன்னைத் தூக்கிக் கொண்டு நடக்கவா?என்று அக்‌ஷய் கேட்டான்.

“பரவாயில்லை. வேண்டாம்....என்றான் மைத்ரேயன். அக்‌ஷயை அவன் சிரமப்படுத்த விரும்பவில்லை.  அக்‌ஷய் அவன் மறுத்ததைப் பொருட்படுத்தாமல் அவனைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். மைத்ரேயன் சின்னதாய் ஒரு புன்னகையுடன் அவனையே பார்த்தான். அக்‌ஷயும் புன்னகைத்து விட்டு பாதையில் கவனமாக நடக்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் நடந்த பிறகு ஒரு சிறிய கிராமத்தை அடைந்தார்கள். அதன் பிறகே மைத்ரேயனை அக்‌ஷய் இறக்கி விட்டான்.

கிராமத்திற்குள் செல்லும் போது இருவரும் சேர்ந்து தெரிய வேண்டாம் என்று நினைத்த அக்‌ஷய் “நீ சற்று மறைவாகவே இரு. நான் சென்று வருகிறேன் என்று அக்‌ஷய் ஒரு புதரைக் காட்டிச் சொல்லவே தலையசைத்த மைத்ரேயன் அந்தப் புதரின் பின்பறம் சென்று மறைவாக அமர்ந்து கொண்டான்.

அக்‌ஷய் தனியாக கிராமத்திற்குள் பிரவேசித்தான். அந்தக் கிராமத்தில் சிறிது தூரம் சென்ற பின் ஒரு கிழவர் தான் முதலில் அவனுக்குப் பார்க்கக் கிடைத்தார். சில ஆடுகள் சுற்று வட்டாரத்தில் மேய்ந்து கொண்டிருக்க அவர் ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டிருந்தார். முகமெல்லாம் சுருக்கமாக, நாலைந்து பற்களே மிஞ்சியவராக, பல கிழிசல்களை ஒட்டுப் போட்டிருந்த ஒரு சால்வையைப் போர்த்தியிருந்த அவர் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார். அன்னியர்கள் அங்கு வருவது மிக அபூர்வம்....

அவரை நோக்கி நடந்த போது அக்‌ஷய் ஆடு மேய்க்கும் ஆளாகவே மாறி இருந்தான். நடையில் நளினமோ, அமைதியோ இல்லை. வணக்கம் தெரிவிக்க முனையவில்லை. புன்னகைக்கவோ, சினேகமாய் சிரிக்கவோ அவன் முனையவில்லை. அவரை நெருங்கிய பிறகு நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “நான் ஆடுகள் வாங்க வந்திருக்கிறேன்.... இந்த ஆடுகள் எல்லாம் உங்களுடையது தானா?அவன் குரலும் தடித்திருந்தது.

கிழவர் சுறுசுறுப்பானார். இப்போதெல்லாம் அந்தப் பகுதியில் நேரடியாக ஆடுகள் வாங்க அதிக ஆட்கள் வருவதில்லை. ஓரிரண்டு இடைத்தரகர்களே அதிகம் வருகிறார்கள்.  அந்தக் கிராமத்தில் இருந்து தரைமட்ட விலையில் சுமார் 30 சதவீதம் மட்டுமே முன்பணம் கொடுத்து விட்டு ஆடுகள் வாங்கிக் கொண்டு போய், நேபாளத்தில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக விலையில் விற்று பிறகு தான் திரும்ப வந்து ஆடுகளுக்கான மீதமுள்ள 70 சதவீதத் தொகையைத் தருவார்கள்.  அப்படித் தந்து பழைய கணக்கை முடித்த கையோடு மறுபடியும் 30 சதவீத பணம் தந்து விட்டு மேலும் ஆடுகள் வாங்கிக் கொண்டு போவார்கள். அதனால் எப்போதுமே 70 சதவீதத் தொகை அந்த இடைத்தரகர்களிடமே இருக்கும். இடைத்தரகர்கள் இந்த ஏற்பாட்டினால் நல்ல லாபத்தில் கொழுத்தார்கள். அதனால் அக்கிராமத்து ஜனங்கள் வயிற்றுப் பிழைப்பை மட்டுமே கவனிக்க முடிந்த ஏழைகளாகவே தங்கிப் போனார்கள். அதனால் தரகர் அல்லாத ஒருவன் ஆடுகளை நேரடியாக விலைக்கு வாங்க வந்ததில் மகிழ்ச்சி அடைந்த கிழவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். “ஆமாம்.... நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

அக்‌ஷய் அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தான் வருவதாகச் சொன்னான். பக்கத்து கிராம எல்லையில் உள்ள ஒரு மடாலயத்திற்கு வழிபாட்டுக்காக வந்ததாகவும், போகும் போது இங்கிருந்து ஆடுகள் வாங்கிக் கொண்டு போகலாம் என்று எண்ணியதாகவும் சொன்னான்.

“நல்ல யோசனை..... திபெத்தில் இப்பகுதி ஆடுகளே உயர்ந்தவை. எத்தனை ஆடுகள் வேண்டும்?

“இப்போதைக்கு இரண்டு ஆடுகள் வாங்கிக் கொண்டு போகிறேன். விலை நியாயமாக இருந்து, ஆடுகள் என் தந்தைக்குத் திருப்தி அளித்தால் மேலும் அதிக ஆடுகள் வாங்க வருவேன்...


கிழவர் தலையசைத்தார். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற வகையில் பேசும் இந்த இளைஞனை அவருக்குப் பிடித்திருந்தது. ஆடுகளைப் பொருத்து விலை அமையும்.  இங்கு மேயும் ஆடுகளில் இரண்டை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.... பிறகு விலை சொல்கிறேன்.....

அக்‌ஷய் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை ஆராய்ந்தான். கடைசியில் தனியாக ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுத்தான். ஒரு ஆடும், அதன் குட்டியும்...

அந்த ஆடுகளுக்கு நியாயமான விலையைச் சொன்ன கிழவர் பொக்கை வாயால் புன்முறுவல் செய்தபடி தொடர்ந்து சொன்னார். குட்டி சாதுவானது. ஆனால் அந்த தாய் ஆடு சாமர்த்தியமானது. சுறுசுறுப்பானது. மற்ற ஆடுகள் போகாத இடத்திற்கெல்லாம் அது போய் விடும்...

அக்‌ஷய் யோசித்தபடி சொன்னான். “அதை என் ஊர் வரை நான் கொண்டு போக வேண்டுமே... போக எனக்கு ஒரே வாகனம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டு மூன்று வாகனங்கள் மாறி மாறிப் போக வேண்டி இருக்கும். சில தூரம் நடந்தும் போக வேண்டி இருக்கலாம். அப்படியானால் அதைச் சமாளிப்பது கஷ்டமாக இருக்குமே!

“இல்லை சுலபம் தான். அது இந்த வகைப் புல்லை விரும்பி சாப்பிடும்என்றவர் ஒரு சாக்கில் கட்டி வைத்திருந்த ஒரு புல்கட்டை வெளியே எடுத்தார். “இதை எடுத்துக் காட்டி சத்தம் செய்தால் போதும். பார்த்து விட்டால் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து விடும்

சொன்னதோடு நிற்காமல் ஒரு பிரத்தியேக ஒலி எழுப்ப அந்த ஆடு திரும்பிப் பார்த்தது. உடனே அங்கிருந்து அது பெரிய தாவலில் ஓடி வர அதன் குட்டியும் பின் தொடர்ந்தது. மேலும் மூன்று ஆடுகள் மெல்ல வர ஆரம்பித்தன. அந்தக் கட்டில் இருந்து சிறிது புல்லை மட்டும் அழைத்த ஆட்டுக்குச் சாப்பிடப் போட்டு விட்டு மீதியை சாக்கில் மறுபடி போட்டு பத்திரப்படுத்திக் கொண்ட அவர் “வேண்டுமானால் இந்தப் புல்கட்டு ஒன்றையும் உங்களுக்குத் தருகிறேன்என்றார்.

புல்லைச் சாப்பிட்டு விட்டு அவனையே அந்த துடிப்பான ஆடு பார்த்தது. அவன் போகிற இடத்துக்கும், போட்டிருக்கும்  திட்டத்திற்கும் இந்த ஆடு பொருத்தமாக இருக்கும் என்று அக்‌ஷய்க்குத் தோன்றியது. பணத்தை எண்ணிப் பெரியவரிடம் அக்‌ஷய் நீட்டினான். அவன் பேரம் பேசாமல் பணத்தைத் தந்தது அவருக்கு நிறைவாக இருந்தது. வாங்கிக் கொண்டார்.

அக்‌ஷய் அவரிடம் கேட்டான். “உங்கள் வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கிறது

“சொல்கிற அளவுக்கு இல்லை. எங்களிடம் வியாபாரம் செய்வது அதிகம் தரகர்கள் தான். அவர்களும் சில நாட்களாக நேபாள எல்லையில் இருக்கும் கெடுபிடியால் தற்காலிகமாக எங்களிடம் ஆடுகள் வாங்குவதை நிறுத்தி இருக்கிறார்கள்....

“என்ன கெடுபிடி?

“சீன நேபாள நெடுஞ்சாலை வழியாகச் செல்கிற ஒவ்வொரு வாகனமும், மனிதனும், கடுமையான சோதனைக்குப் பின்னே தான் திபெத்திய எல்லையைக் கடக்க முடிகிறது. ஏதோ தீவிரவாதியைத் தேடுகிறார்களாம். அதனால் எல்லையில் மைல்கணக்கில் வாகனங்களும் மனிதர்களும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்... லஞ்சம் கொடுத்தால் கூட சோதனையில் இருந்து தப்ப முடிவதில்லையாம்....

அக்‌ஷய் அப்படியா என்பது போல் ஆச்சரியத்தை முகத்தில் காட்டினான். 

கிழவர் சொன்னார். “இந்தப் பகுதிகளில் கூட ரோந்து வாகனம் ஒன்று அந்த தீவிரவாதிகளைத் தேடி அவ்வப்போது வருகிறது....

அதற்கு மேல் காலம் தாழ்த்த விரும்பாத அக்‌ஷய் இரண்டு ஆடுகளோடு அங்கிருந்து கிளம்பினான். இத்தனை நேரம் ரோந்து வாகனத்தைக் காணாமல் தப்பித்தது பெரும் புண்ணியம் என்று தோன்றியது. வேகமாகச் சென்று மைத்ரேயனை அவன் அடைந்த போது தூரத்தில் வாகனம் வரும் சத்தம் கேட்டது. கண்டிப்பாக அது ரோந்து வாகனமாகத் தான் இருக்க வேண்டும். புண்ணியம் போதவில்லையோ?  

ரோந்து வாகனத்தைத் தவிர்க்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அக்‌ஷய் என்ன செய்வது என்று அவசரமாக யோசித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. லக்‌ஷ்மிOctober 22, 2015 at 5:21 PM

    அக்‌ஷய் மைத்ரேயன் இருவரோடு பயணிக்கும் எங்களுக்கும் இனி ஒரு வாரம் திக் திக் தான். பரபரப்பாக போகிறது. அக்‌ஷய் மைத்ரேயன் இருவருக்கு இடையே வளர்கிற அன்னியோன்னத்தை இயல்பாய் காட்டி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. Remarkable writing. It has been a great experience to read and feel with the flow of your story. May God bless you

    ReplyDelete
  3. Gratitude Sir...
    Happy VijayaDhasami Wishes 4 u..

    ReplyDelete
  4. உடன் பயணிப்பது போன்ற த்ரில் அனுபவம்.... காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  5. Arumai Ganesan Anna :) ..Budham saranam kachami puthagama podungal , naan mudalil vangi viduven .. pala varanaglukku piragu indru muzhudhum akshay matrum maithreyan.. eppodhu adutha varum endru irukkirudhu ..

    Amazing and interesting read !!!

    ReplyDelete
  6. aaga arumai guru patrium akashai thitamum arumai. vaalthukal.

    ReplyDelete