சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 25, 2015

நாற்பது நாட்களில் யோகியின் அற்புதம்!

மகாசக்தி மனிதர்கள்-24
லாகூரில் புதைக்கப்படும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்பே யோகி ஹரிதாஸ் அதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்திருந்தார். அந்த நாட்களில் வெறும் பால் ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு வந்த அவர் புதைக்கப்படும் நாளில் அதையும் தவிர்த்து விட்டார். அந்த நாளில் சுமார் முப்பது கஜ நீள, மூன்று அங்குல லினன் துணியை விழுங்கி மறுபடி வெளியே உருவி எடுத்து தன் வயிற்றை சுத்தப்படுத்தி துடைத்து எடுத்துக் கொண்டார். இந்த வகை தயார்ப் படுத்திக் கொள்ளும் நிலை மற்றவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றக் கூடும். ஆனால் ஹத யோகிகள் தங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் பல விதங்கள் அவர்களுக்கு உதவுவதாகவே உள்ளன.
அன்றைய நாள் யோகி ஹரிதாஸ் தன் தாடியை நீக்கி சவரம் செய்து கொண்டு வந்திருந்தார். மகாராஜா ரஞ்சித்சிங்கின் சேவையில் இருந்த சில பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் யோகி ஹரிதாஸின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள். நீராகாரம் மட்டுமே சில நாட்கள் உட்கொண்டு வந்ததால் யோகி ஹரிதாஸ் பலவீனமாகவே தோன்றினார்.  யோக ஆசன நிலையில் நிமிர்ந்து நேராக அமர்ந்த அவர்  தன் நாக்கை தொண்டைக் குழியில் மடித்து வைத்து, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டார். பின் மூச்சை நிறுத்திக் கொண்டார். அவர் உடலின் துவாரங்கள் பஞ்சாலும் மெழுகாலும் அடைக்கப்பட்டன. அவர் உடல் லினன் துணியால் சுற்றப்பட்டு பின்னர் நான்கு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு மரப் பெட்டியில் வைக்கப்பட்டது.
மகாராஜா ரஞ்சித் சிங் யோகி ஹரிதாஸால் ஏமாற்றாமல் இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட முடியாது என்று நம்பினார் என்று கேப்டன் ஆஸ்போர்ன் தெரிவிக்கிறார். அதனால் மகாராஜா ரஞ்சித் சிங் இந்த நிகழ்ச்சிக்கு ஏமாற்றவே முடியாதபடி பிரத்தியேக முயற்சிகள் மேற்கொண்டிருந்தார். முதலாக அந்த மரப்பெட்டியைத் தன் கையாலேயே ஒரு பெரிய வலுவான பூட்டைக் கொண்டு மகாராஜா பூட்டினார்.
அந்த மரப்பெட்டியை லாகூர் அரண்மனையை அடுத்த ஒரு பெரிய தோட்டத்தில் சில அடிகள் ஆழத்தில் தோண்டி இருந்த ஒரு குழியில் இறக்கி வைத்து விட்டு பிறகு மண்ணால் மூடினார்கள். மூடிய மண்ணில் தண்ணீர் ஊற்றி சில பார்லி விதைகளை அந்த மண்ணின் மீது தூவினார்கள். அந்த இடத்தைச் சுற்றி செங்கல் சுவர் அறை ஒன்று முன்பே எழுப்பப்பட்டிருந்தது. அந்த அறையைப் பூட்டினார்கள். அந்தப் பூட்டில் தன்னுடைய முத்திரையைப் பதித்து மகாராஜா ரஞ்சித் சிங்கே மூடினார்.  பூட்டிய அந்த அறைக்கு வெளியே பகலில் நான்கு காவலாளிகளும், இரவில் எட்டு காவலாளிகளும் காவலுக்கு இருத்தப் பட்டார்கள். இரண்டிரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை காவலாளிகள் மாற்றப்பட்டார்கள். இருபத்தி நாலு மணி நேரமும் காவல் இருந்தது. அந்தக் காவல் நாற்பது நாட்களும் நீடித்தது.
இந்த ஏற்பாட்டில் எந்தவித ஏமாற்று வேலையும் நடைபெற வாய்ப்பே இருக்கவில்லை. மூச்சை சில நிமிடங்கள் நிறுத்துவதே முடியாத காரியம் என்கிற போது மூக்கின் துவாரங்கள் கூட மூடப்பட்ட ஒருவர் சில மணி நேரங்கள் கூட உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை. அதில் ஏதாவது தில்லுமுல்லு இருந்தால் கூட மூடப்பட்டிருந்த மரப்பெட்டியில், அதுவும் மண்ணில் புதைக்கப்பட்ட மரப்பெட்டியில் உயிர்வாழ்வது முடியவே முடியாத காரியம்.
அந்த மரப்பெட்டியில் இருந்து தப்பித்து மேலே வருவதும் அசாத்தியமானது. அப்படி எதாவது நிகழ்ந்தால் மேலே விதைக்கப்பட்டிருந்த பார்லிச் செடி அரும்புகள் அகற்றப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டு விடும். அதையும் தாண்டி வெளியே வர வாய்ப்பே இல்லை. மகாராஜா ரஞ்சித் சிங்கே தன் முத்திரையை வைத்துப் பூட்டியிருந்த அந்த செங்கல் கட்டிட அறையை விட்டு வருவதும், அங்கு எப்போதுமே காவலுக்கு இருந்த நான்கு அல்லது எட்டு காவலாளிகள் கண்களில் மண்ணைத் தூவித் தப்பிப்பதும் நடக்கவே முடியாத காரியம். எனவே நாற்பது நாட்கள் கழிந்த பின் யோகி ஹரிதாஸின் பிணத்தைத் தான் வெளியே எடுக்கப் போகிறோம் என்பதில் மகாராஜாவுக்கு சந்தேகம் இருக்கவில்லை.
நாற்பது நாட்கள் வேகமாக நகர்ந்தன. புதைந்திருந்த யோகியை மறுபடி வெளியே எடுக்கும் நாள் வந்ததும் மகாராஜா ரஞ்சித் சிங்கும் மற்றவர்களும் பரபரப்பானார்கள். மகாராஜா ரஞ்சித் சிங் யானையின் மீதேறி அந்தத் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் பிரிட்டனின் பிரதிநிதியான இருந்த சர் க்ளாட் வாட்டும், புதைக்கும் போது உடன் இருந்த பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேய மருத்துவர்களும், அரசவையின் முக்கியஸ்தர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். பொது மக்களும் பெருமளவு வந்திருந்தனர். அனைவருக்கும் யோகி ஹரிதாஸ் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பதை அறிய பேராவல் இருந்தது.
மகாராஜா ரஞ்சித்சிங் தன் முத்திரை பூட்டில் இப்போதும் இருக்கிறதா என்று முதலில் பார்த்தார். இருந்தது. பின் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே சென்றார்கள். யோகி புதைக்கப்பட்ட இடத்தில் பார்லி செடிகள் நன்றாகவே முளைத்திருந்தன. மண்ணைத் தோண்டி பெட்டியை எடுத்து அந்தப் பெரிய பூட்டையும் கழற்றினார்கள். வெள்ளை நிற லினன் துணியால் சுற்றியிருந்த யோகியின் உடலை வெளியே எடுத்தார்கள். பிணம் போலவே சில்லிட்டு கட்டை போல் ஆகி இருந்த உடல் தோற்றத்தில் அவர்கள் வைத்தது போலவே இப்போதும் இருந்தது.  சவரம் செய்து மழித்திருந்த யோகி ஹரிதாஸின் முகம் இப்போதும் வழுவழுவென்றே இருந்தது.
மருத்துவர்கள் யோகி ஹரிதாஸின் உடலைப் பரிசோதித்தார்கள். இதயத் துடிப்போ, நாடித்துடிப்போ இருக்கவில்லை. உடல் சில்லிட்டுப் போயிருந்தாலும் தலையில் மூளைப்பகுதியில் மட்டும் வியக்கத்தக்க வகையில் லேசான வெப்பம் இருந்தது.
யோகி ஹரிதாஸின் சீடன் ஒரு யோகியின் உடலை வெந்நீரால் குளிப்பாட்ட ஆரம்பித்தான். சில்லிட்டு கட்டை போல ஆகி இருந்த உடலின் இறுக்கம் தளர ஆரம்பித்தது. கை கால்களைத் தேய்க்கும் பணியில் சீடன் ஈடுபட்டான். திகைப்பில் ஆழ்ந்திருந்த மகாராஜா ரஞ்சித் சிங்கும், சர் களாட் வாட்டும் யோகியின் இரு கைகளையும் ஆளுக்கொருவர் தேய்க்கும் வேலையை மேற்கொண்டார்கள்.  உடலில் வெப்பம் தங்க ஆரம்பித்தது.
பின் சீடன் யோகியின் மூக்கிலும் காதிலும் அடைத்திருந்த பஞ்சையும் மெழுகையும் அகற்ற ஆரம்பித்தான். பின் கத்தி முனையைக் கவனமாக யோகியின் உதடுகளுக்கு இடையே வைத்து கஷ்டப்பட்டு வாயை இடது கையால் திறந்து மடிந்து கிடந்த யோகியின் நாக்கை விரித்து வைத்தான். நாக்கு மறுபடியும் மடிந்து கிடந்த பழைய நிலைக்கே போய் விட்டது. இப்படியே சில முறை ஆனது. மிகவும் பொறுமையுடன் சீடன் முயன்று ஒருவழியாகத் தன் முயற்சியில் வெற்றியடைந்து நாக்கை இயல்பான நிலைக்குக் கொண்டு வந்தான்.
யோகியின் கண்களில் சீடன் நெய்யை வைத்துத் தேய்த்து அவருடைய தலையில் ஏதோ ஒரு மருந்துக்கட்டியை வைத்து பல முறை தேய்த்தான். கடைசியில் யோகியின் உடல் பயங்கரமாக ஒரு முறை சிலிர்த்து நடுங்கியது. யோகி லேசாக மூச்சு விட ஆரம்பித்தார். சீடன் யோகியின் வாயில் சிறிது நெய்யை விட்டு அவரை மெல்ல விழுங்க வைத்தான். யோகி பழைய நிலைக்கு மெல்ல வர ஆரம்பித்தார்.
மருத்துவர்கள் பரிசோதிக்கையில் யோகியின் நாடித் துடிப்பு லேசாக கேட்க  ஆரம்பித்தது. ஆனால் யோகி இன்னமும் பலவீனமாகவே இருந்தார். இதை எல்லாம் மிகுந்த வியப்புடன் மகாராஜா ரஞ்சித்சிங்கும், சர் க்ளாட் வாட்டும் மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.
யோகி ஹரிதாஸ் பலவீனமான குரலில் மகாராஜாவைப் பார்த்துக் கேட்டார். “இப்போதாவது என்னை நம்புகிறீர்களா மகாராஜா?
“பூரணமாக நம்புகிறேன் என்று கூறிய மகாராஜா ஒரு முத்து மாலையையும், ஒரு ஜதை தங்க கைக்காப்புகளையும் யோகி ஹரிதாஸுக்கு அணிவித்ததோடு பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்தினார்.  
இந்தப் பரிசோதனை நிகழ்ச்சி சர் க்ளாட் வாட் மற்றும் கேப்டன் ஆஸ்போர்ன் ஆகிய இருவர் அருகில் இருந்து பார்த்து எழுதியதால் உலக அளவில் மிகவும் பேசப்பட்டது. லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலகிராஃப் என்ற பிரபல பத்திரிக்கையும் இந்த நிகழ்ச்சி பற்றி விரிவாகவே 1880ஆம் ஆண்டு எழுதியது. உயிர் வாழ்தல் என்பதை சில காலம் நிறுத்தி வைத்துப் பின் தொடர முடியும் என்பதை யோகிகளால் அல்லாமல் வேறு யாரால் செய்து காட்ட முடியும்?
-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 27.02.2015 

2 comments:

  1. அற்புதமாக அப்படியே நிலைகுத்தி படிக்கும் நடையில் அழகாக பதிவு செய்து விட்டீர்கள் .சித்தர்கள் யோகிகள் பற்றி அறியும் போது நேரம் கடப்பதே இல்லை .படிக்க படிக்க ஆசையாக இருக்கிறது நன்றி .

    ReplyDelete