என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, May 7, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 45


றைவாகவே நின்றிருந்த போதும் மைத்ரேயனைத் தன் பின்னால் நிற்க வைத்துக் கொண்ட அக்‌ஷய், வரும் ஆளுக்காகத் தயாராகக் காத்திருந்தான். விளக்கொளி சம்யே மடாலயத்தின்  ஐந்தாம் தளத்தை அதிகமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்து காலடி ஓசையும் தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. முடிவில் பெரிய டார்ச் விளக்கை ஏந்தி வரும் ஆள் வெளிப்பட்டார். வந்தவர் சுமார் ஐம்பது வயதிருக்கக்கூடிய புத்த பிக்கு!

“இந்தத் தளத்தில் இருக்கிறீர்களா போதிசத்துவரே?என்று தாழ்ந்த குரலில் அவர் கேட்டார்.

அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். இந்தக் கேள்வி எனக்கல்ல என்பது போல் மைத்ரேயன் நின்றாலும் அவன் கண்களில் சிறு புன்னகை தவழ்ந்து மறைந்ததை மங்கிய விளக்கொளியில் அக்‌ஷயால் பார்க்க முடிந்தது. வந்திருந்த புத்த பிக்குவின் தோற்றமும் மைத்ரேயன் புன்னகையும் சேர்ந்து அவர் எதிரியாய் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவித்த போதும் அக்‌ஷய் எச்சரிக்கையை தளர்த்தி விடவில்லை.

“பிக்குவே, நீங்கள் அங்கேயே நிற்பது தான் தங்களுக்கு நல்லதுஎன்று அமைதியான குரலில் எச்சரித்தான்.

பிக்கு தன் கையிலிருந்த விளக்கை குரல் வந்த திசைக்குத் திருப்பினார். அக்‌ஷயும் அவன் பின்னால் மைத்ரேயனும் தெரிந்தார்கள். பிக்கு அப்படியே மண்டியிட்டார். “மகா புத்தரின் அவதாரமான மைத்ரேயருக்கு என்னுடைய இதயபூர்வ வணக்கங்கள்.  உடனிருக்கும் பிக்குவுக்கும் என் வணக்கங்கள்

இப்படி ஒவ்வொருவராக மைத்ரேயனை அடையாளம் காண ஆரம்பிப்பதை அக்‌ஷயால் பொறுக்க முடியவில்லை. அவன் மெல்ல சொன்னான். “புத்தபிரான் காட்டிய வழியில் பயணிக்கும் சாதாரண யாத்திரீகர்கள் நாங்கள். தவறுதலாக எங்களில் ஒருவரை அவரது அவதாரமாகவே நினைத்து விட்டீர்கள் போல இருக்கிறது.

பிக்கு மைத்ரேயனையே பார்த்துக் கொண்டு அக்‌ஷய்க்குப் பதில் சொன்னார். “சூரியனை அடையாளம் காண பிரத்தியேக சூட்சுமப் பார்வை தேவையில்லை அன்பரே. சொல்லும் போதே அவர் முகத்திலும் குரலிலும் பரவசம் தெரிந்தது.  பின் அக்‌ஷயைப் பார்த்து கேட்டார். “நான் அவர் அருகில் வந்து பேசலாமா?

அக்‌ஷய்க்கு அவர் இந்த இரவு நேர அமைதியில் தொலைவில் நின்று கொண்டு பேசி சம்யே மடாலயத்தில் மற்றவர்கள் கவனத்தைக் கவர்வதை விட அருகில் வந்து மேலும் தாழ்ந்த குரலில் பேசுவது நல்லது என்று தோன்றியது. அது மட்டுமல்லாமல் அவரது உத்தேசத்தையும் அறிந்து கொள்வது முக்கியமாகத் தோன்றியது. அதனால் மெல்ல சொன்னான். “நான்கு அடி தூரத்தில் வந்து பேச அனுமதிக்கிறேன். அதையும் கடந்து நெருங்க முயற்சித்தால் உங்கள் உயிருக்கு நான் உத்திரவாதம் தர முடியாது பிக்குவே

மைத்ரேயர் காலத்தில் நீண்ட ஆயுளோடு வாழ்வது பாக்கியம் என்று நினைக்கிறேன். கழுத்து திருகி படுத்த படுக்கையாவதையோ, உயிரை இழப்பதையோ நான் விரும்பவில்லை அன்பரேஎன்று சொன்ன பிக்கு எழுந்து மெல்ல நடந்து வந்து அவன் சொன்ன தொலைவில் நின்று இந்தத் தொலைவு சரிதானா என்பது போல அக்‌ஷயைப் பார்த்தார்.

அக்‌ஷய் தலையசைக்க அங்கேயே மண்டியிட்டு கைகளைக் கூப்பி, தலையைத் தாழ்த்தி மைத்ரேயனை வணங்கிய பிக்கு பின் மைத்ரேயனைப் பார்த்து குரல் தழுதழுக்க சொல்ல ஆரம்பித்தார். எத்தனையோ நாட்கள் இந்த மடாலய எல்லையில் உங்களைப் பார்த்திருக்கிறேன் மைத்ரேயரே. இந்தப் பகுதியில் இருக்கும் பாழடைந்த கட்டிடங்களிலும், தூரத்து பாறைகளிலும் வந்தமர்ந்த நீங்கள் இந்த மடாலயத்திற்குள் இதற்கு முன் ஒருமுறையும் நுழையவே இல்லை. அருகில் சென்று பேசக்கூடாது, அது உங்களை அடையாளம் காட்டி விடலாம் என்று எங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் அருகே வந்து காணும் பாக்கியம் இது நாள் வரை கிடைக்கவில்லை. தூரத்தில் இருந்தே ரகசியமாய் வணங்குவதோடு நான் திருப்தி அடைந்திருக்கிறேன்.  நீங்கள் சென்ற பின் யாரும் பார்க்காத நேரங்களில் நீங்கள் நடந்த காலடி மண்ணை எடுத்து பத்திரப்படுத்தி இருக்கிறேன். நீங்கள் அமர்ந்திருந்த பாறைகளில் அமர்ந்து ஆசுவாசம் அடைந்திருக்கிறேன். ஆனால் நீங்களே இப்படி ஒரு நாள் நம் தர்மப்படி ஆடை அணிந்து கொண்டு இந்த மடாலயத்துக்குள் நுழைவீர்கள், அருகில் இருந்து பார்க்கவும், பேசவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..... இந்த ஒரு கணத்திற்காகவே நான் தவமிருந்து பிறவி எடுத்திருக்கிறேனோ என்னவோ எனக்கு விளங்கவில்லை. என்னை ஆசிர்வதியுங்கள் மைத்ரேயரே.

கண்களில் தாரை தாரையாக நீர் வழிய தலை தரையில் தொட மீண்டும் பிக்கு மைத்ரேயனை வணங்கினார்.  அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். இது போன்ற சமயங்களில் சாதாரணமாக ஒரு சிறுவன் உணரக்கூடிய கூச்சமோ, திகைப்போ, ஆச்சரியமோ அவனிடம் தென்படவில்லை. இது போன்ற வணக்கங்களை அனுதினமும் பெறக்கூடிய ஒருவரைப் போல அவன் தென்பட்டான். அவன் திபெத்தியக் கிழவருக்கோ, மாராவின் ஆளிற்கோ காட்டிய அலட்சியம் இப்போது அவனிடம் தென்படவில்லை. எங்கோ வேடிக்கை பார்க்காமல் அந்த பிக்குவையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான் என்றாலும் அந்தக் கண்ணீரும், உருக்கமான பேச்சும் எந்த விதத்திலும் அவனைப் பாதித்தது போலத் தெரியவில்லை. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.  

புத்த பிக்கு நிமிர்ந்து மைத்ரேயனைப் பார்த்து சொன்னார். “தர்மத்தை நிலை நிறுத்தப் பிறந்தவரே. இந்த மடாலயம் உங்களுடையது. உங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் பலர் இருக்கிறோம். அப்படி இருக்கையில் யாரோ ஆதரவற்றவர் போல எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த தளத்தில் இந்தக் கடுங்குளிரில் நீங்கள் தங்கி இருப்பது எனக்கு வேதனையைத் தருகிறது. தலாய் லாமா அறையிலேயே கூட நீங்கள் தங்கிக் கொள்ளலாம் என்றாலும் அப்படித் தங்குவது ரகசியமாக இருக்காது என்பதால் நீங்கள் இந்த அடியவன் ஓய்வறையிலாவது வந்து தங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது என் பேராசை என்று நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள்

மைத்ரேயன் எதையும் தீர்மானிப்பது நானல்ல இவர் தான் என்பது போல அக்‌ஷயைப் பார்த்தான். அதைக் கவனித்த புத்த பிக்கு கெஞ்சும் முகபாவனையுடன் அக்‌ஷயைப் பார்த்தார். அக்‌ஷய் அவரது கோரிக்கைக்குப் பதில் அளிக்காமல் அந்தப் பிக்குவைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான். “இங்கு உங்கள் ஆள்கள் எத்தனை பேருக்கு இவரை அடையாளம் தெரியும்

“நானும் என் பிரதான சீடன் ஒருவனும் மட்டுமே இவரை அறிவோம் அன்பரே

“இப்போது நீங்கள் இங்கு வந்து பேசிக் கொண்டிருப்பது மற்றவர் கவனத்தைக் கவர்ந்திருக்காது, யாரும் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

“இங்கு வரும் மாடிப்படிகளின் முதல் படியில் என் பிரதான சீடன் நின்று கொண்டிருக்கிறான். யாராவது சந்தேகப்படும்படி வந்தாலோ, தென்பட்டாலோ அவன் எனக்கு சங்கேத ஓலியில் தெரிவிப்பான் அன்பரே. மைத்ரேயருக்குக் காத்திருக்கும் ஆபத்தை அறியாதவர்கள் அல்ல நாங்கள்.

இவரைத் தாக்க வந்தவன் மடாலய ஊழியர் என்று கேள்விப்பட்டேன்அக்‌ஷய் தன் பார்வையின் கூர்மையைக் குறைக்காமல் சொன்னான்.

பிக்கு ஒரு கணம் தலையைத் தாழ்த்தி விட்டு நிமிர்ந்து பார்த்து வருத்தத்துடன் சொன்னார். “இந்த மடாலயத்தில் வேலை பார்க்க ஆட்கள் கிடைப்பது சுலபமாக இல்லை அன்பரே. இங்கு கிடைக்கும் கூலி பெரிதாக இல்லை. பெரிய கூலி கொடுக்கும் வசதியான நிலையில் நாங்களும் இல்லை. இது புனிதமான இடம், சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்கிற மனப்பான்மை கொண்ட சிலர் வருகிறார்கள். அப்படிக் கிடைக்கிற ஊழியர்களை வைத்துக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையிலேயே இந்த மடாலயம் உள்ளது. வருகின்றவர்களின் இதயத்தைத் துளைத்து எண்ணங்களை அறிகிற சக்தி யாருக்கு உள்ளது அன்பரே

அக்‌ஷய்க்கு அவர் சொன்னதில் தவறு காண முடியவில்லை. சில நிபந்தனைகளுடன் ஓரிரண்டு நாட்கள் அந்த பிக்குவின் அறையில் ரகசியமாய் தங்க முடிந்தால் நல்லது தானே என்று அவனுக்குத் தோன்றியது.லீ க்யாங்  மைத்ரேயனைப் பற்றி வாங் சாவொ அனுப்பி இருந்த குறிப்புகளைப் பதினோராவது முறையாகப் படித்தான். இதற்கு முன் உளவுத்துறை ஆட்கள் அனுப்பி இருந்த குறிப்புகளைக் காட்டிலும் வாங் சாவொ அனுப்பி இருந்த குறிப்புகள் மைத்ரேயனின் தனிப்பட்ட குணாதிசயங்கள் குறித்த கூடுதல் தகவல்களைக் கொண்டிருந்தன. வாங் சாவொ லீ க்யாங் எதையெல்லாம் அறிய ஆவலாய் இருப்பான் என்பதை அறிந்து அதை எல்லாம் விரிவாகவே விளக்கி அனுப்பி இருந்தான்.     

இப்போது மைத்ரேயனை லீ க்யாங் மனக்கண்ணில் ஓரளவு பார்க்க முடிந்தது. ஆனாலும் முழுமையாக மனதில் தெளிவாகச் சித்தரித்துக் கொள்ள முடியவில்லை. மைத்ரேயனின் புகைப்படத்தைக் கூர்மையாக மேலுமொரு முறை கவனித்தான். ஏதோ பகல்கனவில் ஆழ்ந்திருந்த மந்தபுத்திச் சிறுவன் போலத் தான் அந்தப் புகைப்படத்தில் மைத்ரேயன் தெரிந்தான். அவனது ஆசிரியர்கள் சிலரும், அக்கம்பக்கத்தினர் சிலரும், அவனை மந்தபுத்திக்காரன் என்றே கருத்தும் தெரிவித்திருந்தார்கள். வாங்சாவொ தன் கருத்துகள் சிலவற்றை அடிக்கோடிட்டுக் காட்டி இருந்தான்.

“அந்த சிறுவன் யாரிடமும் சண்டை போட்டதில்லை. யாரிடமும் கோபித்துக் கொண்டதில்லை. அவன் அழுது யாரும் பார்த்ததில்லை. வாய் விட்டுச் சிரித்தும் பார்த்ததில்லை. அதிக பாசம் காட்டியவனாகவும் தெரியவில்லை. மடாலயம் எதற்கும் போனதில்லை. யாரையும் வணங்கியதுமில்லை.....

இப்படி இல்லை இல்லை என்ற வகையிலேயே மைத்ரேயனை வர்ணிக்க முடிந்த வாங் சாவொவுக்கு மைத்ரேயனிடம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடிந்த குணாதிசயங்கள் எதுவும் அந்தக் குறிப்பில் எழுத முடிந்திருக்கவில்லை.

மைத்ரேயனாக நடிக்கத் தேர்ந்தெடுத்திருந்த டோர்ஜேயை லீ க்யாங் நினைத்துப் பார்த்தான். வயதைத் தவிர எந்த விதத்திலும் இருவரிடமும் எந்த ஒற்றுமையையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உலகம் டோர்ஜேயைத் தான் மைத்ரேயன் என்று நம்பும். மைத்ரேயனை புத்தரின் அவதாரமாக ஏற்றுக் கொள்ள யாருக்கும் எளிதாக இருக்காது. இந்த எண்ணமே அவனுக்கு ஓரளவு திருப்தியை அளித்தது.

ஆனால் மைத்ரேயனிடம் இருக்கும் சரக்கு என்ன என்று தெரியாத வரை அவன் தலை மேல் தொங்கும் கத்தியாகவே இருப்பான் என்றும் லீ க்யாங்குக்குத் தோன்றியது. அவனைப் பற்றியும் தெரியவில்லை. அவனுக்குத் துணையாக இருக்க தலாய் லாமாவும், ஆசானும் ஏற்பாடு செய்திருந்த இந்திய உளவுத்துறை ஆள் பற்றியும் எதுவும் தெரியவில்லை என்பது லீ க்யாங்கால் சகிக்க முடியாததாக இருந்தது. வித்தியாசமான பெயருடைய அல்லது பட்டப்பெயருடைய இந்திய உளவுத்துறை ஆட்கள் பற்றிய் விவரங்களை ரகசிய கோப்புகளில் படித்துப் பார்த்து விட்டான். யாருமே லாஸா விமான நிலைய காமிராவில் பதிந்த அந்த மர்ம மனிதனாக இருக்க வாய்ப்பில்லை என்பது அவன் கணிப்பாக இருந்தது.....

மறுபடி வாங் சாவொ குறிப்புகளில் ஆழ்ந்து போன லீ க்யாங் கடைசியில் வாங் சாவொவிற்குப் போன் செய்தான். வாங் சாவொ எதிர்பார்த்திராத ஒரு கேள்வியைக் கேட்டான்.

“அவன் பயப்படுவானா?

வாங் சாவொ சிறிது யோசித்தான்.  

லீ க்யாங் சொன்னான். நீ அவனைப் பற்றி சொல்லி இருக்கும் எல்லாமே மகாமந்த புத்திக்காரனிடமும் ஓரளவு இருக்கலாம் வாங் சாவொ. ஆனால் மந்தபுத்திக்காரன் கூட பயத்தை விட்டொழித்தவனாக இருக்க முடியாது. உலகில் பயம் போல் பிரதானமாய் மனிதனை இயக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் உணர்ச்சி வேறெதுவும் இருக்க முடியாது என்பதால் தான் கேட்கிறேன்

வாங் சாவொ மெல்ல சொன்னான். “அதைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதுவும் இதுவரை அமைந்திருக்கவில்லை. அதனால் தெரியவில்லை

லீ க்யாங் சொன்னான். “அவன் பயத்துக்கு அறிமுகமாகாதவனாக இருந்தால் அவனுக்கு அதை அறிமுகப்படுத்த வேண்டியது நமக்கு கடமையாகிறது வாங் சாவொ

வாங் சாவொ புன்னகைத்தான். லீ க்யாங் எதிரியாக இருப்பது சைத்தானே எதிரியாக இருப்பது போலத்தான். அவன் அறிமுகப்படுத்தும் பயம் யாராலும் தாங்க முடிவதாக இருக்காது.

லீ க்யாங் கேட்டான். “அவர்கள் இருவரும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஏதாவது துப்பு கிடைத்ததா?

“இல்லை சார்

லீ க்யாங் சொன்னான். “மைத்ரேயனைக் காப்பாற்றப் போயிருக்கும் இந்தியன் சில நாள் புனித ஸ்தலங்களுக்குப் போய் விட்டு வருவதாகத் தான் திபெத்திற்கு விசா கேட்டிருக்கிறான். அந்த நகல் பையனை திபெத்தில் விட்டு விட்டு அசல் மைத்ரேயனை அழைத்து வருவது தான் அவன் திட்டம். அதனால் அவன் பெயருக்கு புனித ஸ்தலங்களுக்கு அந்தச் சிறுவனை அழைத்துப் போய்க் கொண்டிருக்கலாம். அது போன்ற இடங்களில் அவனைத் தேடு...... எதற்கும் முதலில் சம்யே மடாலயத்துக்குப் போ. அது தான் சேடாங் நகருக்குப் பக்கத்தில் இருக்கும் மிக முக்கிய புனித ஸ்தலம்

(தொடரும்)
என்.கணேசன்


9 comments:

 1. Rocking....!!!
  Waiting since morning to read this week's episode......
  Great work.

  ReplyDelete
 2. Super anna ...!!!! bayam patriya varnanai 100% correct(for normal human being).

  ReplyDelete
 3. thodarugal. putha pikukal than maranathium aduthu entha thampathiku maganaga pirapathum, idathayam ariviparagalam. apdi endral putharukum maru pravi unda? tamil naatu putha piku thebuddhistmeditation.net/ thagavalukaga. h

  ReplyDelete
 4. Each week this novel gets more interesting. Beside the suspense events your developing each character is fantastic sir. All seem real an natural. Great novel.

  ReplyDelete
 5. விஷ்ணுMay 7, 2015 at 8:19 PM

  சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது அண்ணா. நேரில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பது போல் கொண்டு செல்கிறீர்கள். அடுத்த வியாழனை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 6. Sir its going more thrilling and interesting

  ReplyDelete