சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 18, 2015

மண்ணில் புதைந்தும் மரணமில்லாத யோகி!



23.மகாசக்தி மனிதர்கள் 


ன் உடலை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் ஒரு ஹத யோகியால் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு பல உதாரணங்களை வரலாறு ஆதாரபூர்வமாக பதிவு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சராசரி மனிதன் செய்ய முடியாததைச் செய்து காட்டி இருக்கிறார்கள். அந்தப் பதிவுகளில் ஒரு சிறப்பான இடம் யோகி ஹரிதாஸுக்கு உண்டு. இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடநாட்டின் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த யோகி. இவரால் பல நாட்கள் உணவு நீரின்றி மட்டுமல்ல நிலத்தடியில் புதைந்திருக்கவும் முடியும். இந்த யோகியைப் பற்றி இந்தியர்களும், மேலை நாட்டவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

முக்கியமாய் ஜேம்ஸ் ப்ரெய்ட் (James Braid )  என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவரும் விஞ்ஞானியுமானவர் தன் சமகாலத்தவரான யோகி ஹரிதாஸ் பற்றி எழுதியுள்ளார். அவர் நவீன ஹிப்னாடிசத்தின் தந்தையாக மேலை நாடுகளில் கருதப்படுபவர். அவர் 1850 ஆம் ஆண்டு எழுதிய Observations on Trance or Human Hibernation நூலில் யோகி ஹரிதாஸ் 3, 10, 30 மற்றும் 40 நாட்கள் உயிரோடு புதைந்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் முதல் மற்றும் கடைசி சுவாரசியமான நிகழ்வுகளை விரிவாக இங்கே பார்ப்போம். 1828 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு பகுதியில் அப்பகுதி கனவான் ஒருவரிடமிருந்து பிரிட்டிஷ் மேஜரிடம் ஒரு வித்தியாசமான விண்ணப்பம் வந்தது.  அப்பகுதியில் ஒரு யோகி உயிரோடு ஒன்பது நாட்கள் புதைந்தும் இறக்காமல் எழும் பரிசோதனை ஒன்றை நடத்திக் காட்ட அனுமதியை அந்தக் கனவான் கேட்டிருந்தார். 

அது போன்ற அமானுஷ்யங்களில் நம்பிக்கை இல்லாத மேஜர் உடனடியாக அதற்கு அனுமதி தரவில்லை. ஆனாலும் மிலிட்டரி ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு பகுதியில் அவர்கள் மேற்பார்வையிலேயே ஒரு பரிசோதனை நடந்தால் அதன் நம்பகத்தன்மை உறுதிப்படும் என்று நம்புவதாக அந்தக் கனவான் தொடர்ந்து வற்புறுத்தவே இறுதியில் அந்த மேஜர் அனுமதி தந்தார். அதே சமயம் இந்தப் பரிசோதனையில் எந்த தில்லுமுல்லும் நடக்காமல் இருக்க தன்னுடைய வீரர்களையே காவலுக்கும் நிறுத்த உத்தரவிட்டார்.

யோகி ஹரிதாஸைப் புதைக்கும் நிகழ்ச்சி சுமார் ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில் நடந்தது. சுமார் மூன்று முதல் நான்கு அடிகள் வரை வெட்ட வெளியில் குழி தோண்டி, யோகி ஹரிதாஸை சவப்பெட்டியில் வைக்காமல் ஒட்டகத்தின் தோலால் சுற்றி வைத்துப் புதைத்தார்கள். அவரைப் புதைத்து விட்டு மறுபடியும் மண்ணைப் போட்டு மூடினார்கள். புதைத்த இடத்தில் காவலுக்கு தன் படையில் இருந்த முகமதிய வீரர்களை மேஜர் நிறுத்தினார். காவலுக்கு இந்து வீரர்களை நிறுத்தினால் அவர்கள் அந்த யோகிக்கு சாதகமாக இருந்தார்கள் என்று பரிசோதனையின் மீது சிலருக்கு சந்தேகம் வரலாம் என்பதால் அவர் அப்படி செய்தார். ஆனால் அவர்கள் ஏதாவது செய்து பரிசோதனையைக் குழப்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளூர் ஆட்கள் சிலரும் அந்த இடத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அதனால் என்னேரமும் ராணுவ வீரர்களும், உள்ளூர் மக்களும் அந்த இடத்தில் இருந்தார்கள்.

மூன்று நாட்கள் இப்படி நகர்ந்தன. ஆனால் புதைக்கப்பட்ட ஆள் இறந்து போவது உறுதி என்று அந்த பிரிட்டிஷ் மேஜருக்குத் தோன்றியதால் இந்த சூழ்நிலை அது வரை இல்லாத ஒரு புதிய அச்சத்தை அவருக்கு ஏற்படுத்தியது. அப்படி அந்த யோகி இறந்தால் உள்ளூர் மக்களுக்கும் முகமதிய வீரர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கலவரமாக அது மாறினால் மேலிடத்தில் தான் அனாவசியமாக விசாரணைக்கு உள்ளாக வேண்டும் என்று அவர் பயந்தார். ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூட நீதிமன்றத்தில் தண்டனைக்குள்ளாகலாம் என்கிற அளவுக்கு அவரது சிந்தனை ஓடியதால் ஒன்பது நாட்கள் தந்திருந்த அனுமதியை அவர் மூன்றாவது நாளிலேயே விலக்கி விட்டார். அவருடைய அனுமதியைக் கோரிய கனவான் கண்டிப்பாக அந்த யோகியின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் முன்பு கொடுத்த அனுமதியை விலக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டார். இது போல் பல முறை அந்த யோகி அபாயத்திற்கு உட்படாமல் புதைக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்.  ஆனால் அந்த மேஜர் அனாவசியமாக ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாததால் அவர் கோரிக்கையை ஏற்கவில்லை.  உடனடியாக அந்த மண்ணைத் தோண்டி யோகியின் உடலை வெளியே எடுக்க உத்தரவிட்டார். அப்படியே நூற்றுக் கணக்கானவர்கள் முன்னிலையில் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

அந்த பிரிட்டிஷ் மேஜர் உடலைத் தொட்டுப் பார்த்தார். உடல் சில்லிட்டு கட்டையாகப் போயிருந்தது. நினைத்தபடியே அந்த யோகி இறந்து விட்டாரே என்று மேஜர் பயந்து போனார். ஆனால் யோகி ஹரிதாஸின் சீடர்கள் அப்படி பயப்படவில்லை. அவர்கள் சாவகாசமாக வந்து அந்த யோகியின் தலை, கண்கள், நெஞ்சு, கை கால் பகுதிகளை நீவ ஆரம்பித்தார்கள். முக்கியமாக நெஞ்சுப்பகுதியில் ஏதோ ஒரு லேகியத்தால் நீவினார்கள்.  கால் மணி நேரம் எந்த ஒரு முன்னேற்றமும் மேஜருக்குத் தெரியவில்லை. பின்னர் யோகியின் உடலில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. ஒரு மணி நேரத்தில் யோகி புதைக்கப்படும் முன் இருந்த நிலைக்கே திரும்ப வந்து விட்டார். மேஜர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இந்தப் பரிசோதனை நம்பிக்கை இருந்தவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற இரு சாராரின் முன்னிலையிலும் நடந்து சம்பவத்தின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அது மூன்று நாட்கள் மட்டுமே நடந்து முடிந்ததால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு அதில் முழுத் திருப்தி ஏற்பட்டிருக்கவில்லை. ஒன்பது வருடங்கள் கழிந்து 1937 ஆம் ஆண்டு யோகி ஹரிதாஸை நாற்பது நாட்கள் வரை புதைத்து பரிசோதிக்கும் சந்தர்ப்பம் வந்தது.

பஞ்சாபின் மகாராஜாவாக இருந்த ரஞ்சித் சிங்கிடம் யோகி ஹரிதாஸைப் பற்றி சொல்லப்பட்டது. நாற்பது நாட்கள் வரை கூட அவரால் மண்ணில் புதைந்து இருக்க முடியும் என்று சொன்ன போது மகாராஜாவுக்கும் அந்த பிரிட்டிஷ் மேஜரைப் போலவே நம்பிக்கை வரவில்லை. மகாராஜாவின் மேற்பார்வையிலேயே அந்தப் பரிசோதனையை நடத்த யோகி ஹரிதாஸ் முன் வந்தார். மகாராஜா ரஞ்சித் சிங் அந்தப் பரிசோதனையை லாகூரில் நடத்த அனுமதி வழங்கினார். ஆனால் அவர் இதில் ஏதாவது ஏமாற்று வேலை இருப்பதை தான் அறிய நேர்ந்தால் கடுமையான தண்டனையும் உறுதி என்றும் அச்சுறுத்தினார். யோகி ஹரிதாஸ் அதற்குச் சம்மதித்தார்.

நாற்பது நாட்கள் லாகூரில் யோகி ஹரிதாஸ் மண்ணில் புதைந்திருந்த நிகழ்ச்சியை மகாராஜா ரஞ்சித் சிங்கின் அரசவையில் பிரிட்டனின் பிரதிநிதியாக இருந்த சர் க்ளாட் வாட் (Sir Claude Wade) என்பவரும் கேப்டன் ஆஸ்போர்ன் (Hon. Capt. Osborn) என்ற மற்றொரு ஆங்கிலேயரும் நேரடியாக கண்டு அது பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

நடப்பது நாற்பது நாட்கள் என்ற நீண்ட கால புதைந்திருத்தலாக அந்த நிகழ்வு இருந்ததால் அதற்கு யோகி ஹரிதாஸ் தன்னை சில நாட்கள் முன்பிருந்தே கவனமாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது. அவர் எப்படி தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார் என்பது துவங்கி அந்த நிகழ்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை முடிவு வரை நேரடியாகக் கண்டு சின்னச் சின்ன விவரத்தையும் விடாமல் அவர்கள் இருவரும் எழுதியிருப்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.   

என்.கணேசன்
நன்றி தினத்தந்தி 20-2-2015

                               

1 comment: