சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 10, 2014

இந்திய யோகிகளும், அஷ்ட மகாசித்திகளும்!


மகாசக்தி மனிதர்கள்-1


லக அளவில் உள்ள மகாசக்தி படைத்த மனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் முதல் இடம் பெறுபவர்கள் நம் இந்திய யோகிகள் தான். கற்பனைக்கும் எட்டாத அபூர்வ சக்திகளைப் பெற்றவர்கள் இவர்கள். முற்றிலும் தேர்ச்சி பெற்ற ஒரு யோகிக்கு அஷ்ட மகாசித்திகள் என்று சொல்லப்படும் எட்டு வகையான அபூர்வ சக்திகள் வசப்பட்டிருக்கும் என்று பதஞ்சலி மகரிஷி,  திருமூலர் உள்ளிட்டவர்கள் அந்தக் காலத்திலேயே பதிவு செய்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். 

திருமூலர் கூறுகிறார்:
தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. 

அவர் கூறும் அந்த அஷ்டமகாசித்திகள் இவை தான்:

அணிமா – அணுவைப்  போல் நுட்பமான மிக நுண்ணிய நிலைக்கு உடலைக் கொண்டு சென்று கண்களுக்குப் புலப்படாதிருத்தல்.

மகிமா  உடலை மலையைப்  போல் பிரம்மாண்டமாகப் பெரிதாக்குதல்.

இலகிமா -  காற்றைப்  போல் உடலை லேசாக்குதல். இந்த நிலையை எட்டிய பிறகு ஒரு யோகியால் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகிறது.

கரிமா –  எதனாலும் அசைக்க முடியாதபடி மிகவும் உடலை மிகவும் கனமாக்குதல்.

பிராப்தி -  இயற்கை சக்திகளையும், மற்ற எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல். தன் மனத்தினால் நினைத்த எதையும் மாற்றுதல் மற்றும் அடைதல்.

பிரகாமியம் –  தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்.

வசித்துவம் – விலங்குகள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் வசியப்படுத்தி அனைத்தையும் தன் வசப்படுத்தல்.

ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல் முதலானவற்றைச் செய்யும் இறைசக்தியையே பெற்று விடுதல்.

இந்த அஷ்டமகாசித்திகள் உண்மையான யோகிகளிடம் இயல்பாகவே இருந்த போதிலும் அவர்கள் அந்த மகாசக்திகளை அனாவசியமாகவோ, சுயநலத்திற்காகவோ அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கும் சுயகட்டுப்பாட்டைப் பெற்றிருந்தார்கள். தேவையான சக்தியை, தேவையான அளவு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர்.

அணிமா என்ற முதல் சக்தி மற்றவர்கள் கண்ணில் படாமல் இருக்க இந்த மகாசக்தி யோகிகளுக்கு மிக உதவியாக இருக்க வல்லது.
போலிச் சாமியார்கள் என்னைக் கவனி, வணங்கு, பாராட்டு என்று விளம்பர யுத்திகளை மேற்கொண்டு பக்தர்களைச் சேர்க்கும் வேலையில் சலிக்காமல் இறங்குவார்கள். ஆனால் தனிமையில் யோக மார்க்கத்தில் பயணிக்கும் யோகிகளும், சித்தர்களும் பொதுமக்கள் பார்வைக்குத் தென்படுவது மிக அபூர்வம். தென்பட்டால் அதைச் செய்து கொடுங்கள், இதை சாதித்துத் தாருங்கள், இரும்பைத் தங்கமாக்குங்கள், என்னை செல்வந்தனாக்குங்கள், என் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள் என்று மக்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளக் கூடும்.  சொந்த ஆசைகளில் இருந்து தப்பித்த அந்த துறவிகள் இவர்கள் ஆசைகளை நிறைவேற்ற ஆரம்பித்தால் அவர்கள் அடுத்து வேறு ஏதாவது வேலையை எப்போதாவது செய்ய முடியுமா என்ன?

எனவே மகாசக்தி வாய்ந்த யோகிகள் அவசியம் நேரும் போது மட்டும் தகுந்த நபர்கள் கண்களில் தென்படுவார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் அடுத்தவர் பார்வையில் இருந்து மறைந்தே இருப்பார்கள். புராணக் கதைகளில் மாயமாக மறைந்தார் என்று படித்திருக்கிறோம். அப்படி அவர்கள் மாயமாக மறைய உதவிய சக்தி அணிமாவாக இருந்திருக்கக் கூடும்.

மகிமா சக்தியை யோகிகள் அதிகம் உபயோகித்ததாகவோ அதற்கான முகாந்திரங்கள் இருந்ததாகவோ தெரியவில்லை. ஆனால் புராணங்களில் இறைசக்தி படைத்தவர்கள் விஸ்வரூபம் எடுத்ததாக என்று நாம் நிறைய படித்திருக்கிறோம். அது மகிமா சக்தியால் தான் சாத்தியமாயிருக்க வேண்டும்.

இந்த இரண்டு சக்திகளையும் யோகிகள், இறைசக்தி பெற்றோர் மட்டுமே தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது. புராணங்களில் அசுரர்களும் இந்த சக்தியை தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கள் உருவத்தை அசுரர்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப சுருக்கியோ, பெருக்கியோ காட்டினார்கள் என்பதை நாம் படித்திருக்கிறோம்.

உடலை மிக லேசாக்கி காற்றில் மிதப்பதையும், நீரில் நடப்பதையும் சாத்தியமாக்கும் இலகிமா சக்தியை இந்திய, திபெத்திய யோகிகள் தேவைப்படும் போது சர்வசாதாரணமாக உபயோகித்துக் கொண்டார்கள் என்று நிறைய பழங்குறிப்புகள் கூறுகின்றன. கல்லைக்கட்டி திருநாவுக்கரசரைக் கடலில் எறிந்த போது அவர் இந்த இலகிமா சக்தியைப் பயன்படுத்தியே கடலில் மிதந்து உயிர்பிழைத்திருக்க வேண்டும்.

யோகிகளும், பல பௌத்த சமண மத துறவிகளும் அக்காலத்தில் இந்தக் கூடு விட்டு கூடு பாயும் பிரகாமிய சக்தியில் வல்லவர்களாக இருந்தனர் என்பது பல பழமையான ஏடுகளில் இருந்து நம்மால் அறிய முடிகிறது.

கரிமா என்னும், உடலை எளிதில் யாரும் அசைக்க முடியாதபடி கனமாக்கிக் கொள்ளும் சக்தி போதிதர்மர் போன்ற மகாசக்தியாளர்கள் மூலம் இந்தியாவில் இருந்து மேலை நாடுகளுக்குப் பரவி தற்போது தற்காப்புக் கலைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எதிரிகள் தாக்க வரும் போது தூணைப் போல் அசைக்கக்கூட முடியாதபடி நிற்க இந்த சக்தி உதவுகிறது.

விலங்குகளையும், மனிதர்களையும் வசியப்படுத்திக் கொள்ளும் சக்தியான வசித்துவம் யோகிகளிடம் மிக இயல்பாக இருந்தது.  கொடிய விலங்குகள் வாழும் அடர்ந்த காடுகளில் பழங்காலத்தில் வசித்தும் தவமியற்றியும் வந்த யோகிகளும் துறவிகளும் இந்த வசித்துவ சக்தி இல்லாதிருந்தால் உயிரோடிருந்திருக்கவே முடியாதல்லவா?

பிராப்தி மற்றும் ஈசத்துவம் போன்ற மகாசக்திகள் ஒரு முழுமையான யோகிக்கே வாய்ப்பனவாக இருந்தன. இயற்கை சக்திகளைத் தன்வசப்படுத்திக் கொள்வதும் மற்ற இறை சக்திகளை தன் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்வதும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் யோகிகளால் கையாளப்பட்டன. தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு தாங்களே முழுப்பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதாலும், தவறாகப் பயன்படுத்தினால் அது அவர்களுக்கே முதல் கேடு என்பதாலும் மிக கவனமாகவும், அபூர்வமாகவும் மட்டுமே இந்த சக்திகள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.

முழுமையான யோகிகளாக இல்லா விட்டாலும் யோக மார்க்கத்தில் உண்மையாகப் பயணித்தவர்கள் கூடத் தங்கள் திறமைக்கும், முயற்சிகளுக்கும் ஏற்றபடி பல சக்திகள் பெற்றிருந்தனர். பல நாட்கள் உணவும், நீரும் இல்லாமல் உயிர் வாழ்வது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிவது, தொலைவில் நடப்பவற்றை பார்க்கவும், கேட்கவும் முடிவது, குளிர், வெப்பம் ஆகியவற்றை எந்த அளவிலும் அசௌகரியப்படாமல் தாங்கிக் கொள்வது போன்ற சக்திகளைப் பெற்றிருந்தார்கள்.
 
இப்படிப்பட்ட மகாசக்தி மனிதர்கள் ஒரு காலத்தில் நம் பாரத நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் காலப் போக்கில் அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வந்து விட்டது என்பது கசப்பான உண்மை. அதற்கு பதிலாக அந்த யோகிகளின் போர்வையில் போலிகள் நிறைய வலம் வர ஆரம்பித்து விட்டார்கள்.

போலிகள் அதிகம் என்பதாலேயே அந்த மகாசக்திகளையும், உண்மையான மகாசக்தி மனிதர்களையும் கற்பனை என்று நாம் ஒதுக்கி விட முடியாது. இது குறித்து நேர்மையான, சந்தேகப்படக் காரணமில்லாத சில பிற்கால மனிதர்கள் சில மகாசக்தி மனிதர்களின் வாழ்வில் நடந்த அற்புதங்களையும், அவர்களுடனான தங்கள் நேரடி அனுபவங்களைப் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.  இனி அவற்றைப் பார்க்கலாமா?

(தொடரும்)

-          என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – 5.9.2014


4 comments:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. தெரியாத தகவல்கள்...
    அருமை ஐயா...
    தொடருங்கள் தொடர்கிறோம்...

    ReplyDelete
  3. முன்னுரையே ஆர்வத்தை தூண்டுகிறதே! நன்றிகளோடு தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள், தொடருங்கள்.

    ReplyDelete