பத்மசாம்பவாவின்
ஓலைச்சுவடிக் குறிப்பையும், மௌனலாமா சொல்லி இருப்பதையும் ஆசான் சொன்ன போது தன்
நாகமச்சத்தில் முதல் முறையாக சிலிர்ப்பை உணர்ந்த போதே விதி இந்த விஷயத்தில் முன்பே
தன்னை சம்பந்தப்படுத்தி இருக்கிறது என்பதை அக்ஷய் உணர்ந்து விட்டான். இதில்
இருந்து இனி அவன் விலக முடியாது என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால்
மைத்ரேயன் என்கிற சிறுவனின் புகைப்படத்தை ஆசான் காட்டிய போது ஏற்பட்ட ஏமாற்றம்
தான் அவனை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது. அதனாலேயே அவன் முடிவெடுக்கும் முன் தன்
ஆபத்து காலங்களிலும் அவசிய காலங்களிலும் ஒலித்த அந்தக் குரலைக் கேட்க முற்பட்டான்.
அந்தக் குரலும் திபெத்திற்குப் போகவே அவனுக்குக் கட்டளை இட்டது.
அதனால் ஆசான்
கேட்டதற்கு அக்ஷய் “நான் திபெத் செல்லத் தயார் ஆசானே” என்றான்.
ஆசான் கண்களில் உடனே நீர் நிரம்பியது. உடனடியாக நன்றியை வார்த்தைகளாக்க முடியாமல்
தவித்த அவர் இரு கைகளையும் கூப்பி அவனை வணங்கினார். ஏற்கெனவே பயங்கரமான எதிரிகளை
சம்பாதித்து மறைந்து வாழும் அவன் இந்த ஆபத்தான வேலைக்கு ஒத்துக் கொண்டது சாதாரண
விஷயமல்ல என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த ஆசான் பின்பு தழுதழுத்த குரலில் சொன்னார்.
“நாங்கள் என்றென்றும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம் அன்பரே! எங்கள்
பிரார்த்தனையில் நீங்கள் என்றும் இருப்பீர்கள்.....”
அக்ஷயை அவர்
கண்ணீரும், கைகூப்பி ஆத்மார்த்தமாய் சொன்ன வார்த்தைகளும் மனம் நெகிழச் செய்தன. அவருடைய இரண்டு கைகளையும் தன் இரு கைகளாலும்
பிடித்துக் கொண்டு “பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி என்னை
தர்மசங்கடத்துக்குள்ளாதீர்கள் ஆசானே. எல்லோரும் நம்மால் முடிந்ததையே செய்கிறோம்.
அதைக் கூட நாம் செய்வதில்லை. கடவுளே செய்ய வைக்கிறான்....”
அக்ஷயின்
வார்த்தைகள் மேலும் அதிகமாய் ஆசானின் கண்களைக் கலங்க வைத்தன. அக்ஷய் பேச்சை
மாற்றினான்.
“ஆசானே மைத்ரேயர்
திபெத்தில் எங்கே இருக்கிறார்?”
ஆசான்
மைத்ரேயர் இருக்கும் இடத்தின் பெயரை வாய்விட்டுச் சொல்லவும் தயங்கினார். இடுப்பில்
சொருகியிருந்த ஒரு சீட்டை எடுத்து நீட்டினார். அதில் விலாசம் எழுதப்பட்டிருந்தது.
அதில் குறிப்பிட்டிருந்த நகரத்துக்கு பல
வருடங்களுக்கு முன்பு அவன் ஒரு முறை போயிருக்கிறான்.
“எனக்கு இந்த
இடத்தைப் பற்றியும், இங்குள்ள மனிதர்களைப் பற்றியும் விவரங்கள் தேவை ஆசானே”
“கேளுங்கள்
அன்பரே”
அடுத்ததாக அவன்
கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி ஆசான் களைத்தே போனார். அந்த நகரத்திற்கு
எந்தெந்த வழியாக எல்லாம் போகலாம், சீதோஷ்ணநிலை எப்படி இருக்கும், மக்கள்
எப்படிப்பட்டவர்கள் என்று ஆரம்பித்து மைத்ரேயர் வீடு இருக்கும் பகுதி எப்படி
இருக்கும், அக்கம்பக்கத்து வீடுகளில் குடி இருப்பவர்கள் யார் யார், அவர்கள் எப்படி
என்றெல்லாம் கேட்டான். அதற்கெல்லாம் உபரி கேள்விகளும் பல கேட்டான். மைத்ரேயரின்
தாயைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்டான். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்,
என்ன வேலை செய்கிறார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், அவர்களுக்கு அக்கம்பக்கத்து
ஆட்களுடன் நட்பு எந்த அளவில் உள்ளது, அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து
போகிறவர்கள் யார் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள், மைத்ரேயர் மீது
குடும்பத்தாருக்கு எந்த அளவு பாசம் உள்ளது என்றெல்லாம் கேட்டான். ஒருசில
கேள்விகளுக்கு ஆசானுக்கே பதில் தெளிவாகத் தெரியவில்லை. சில கேள்விகளுக்கு அவர் யோசித்து தான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. கடைசியாக மைத்ரேயர் பற்றிக் கேட்டான். மைத்ரேயர்
பற்றி மட்டும் அவன் கேள்விகள் கேட்டது அரைமணி நேரம் தொடர்ந்தது.
ஒரு வேலையைத்
தொடங்கும் முன் அவன் அது சம்பந்தமான விஷயங்களை எவ்வளவு அதிகம் அறிந்து கொள்ள
முயல்கிகிறான் என்று வியந்தார் ஆசான். அவர் பதில்களை வைத்தே அவன் மைத்ரேயரையும்,
அவர் குடும்பத்தையும் அவர் ஊரையும் துல்லியமாக மனக்கண்ணில் நிறுத்திக் கொண்டு
விட்டிருக்கிறான் என்பதை ஆசான் உணர்ந்தார்.
“நான் போய்
அழைத்தவுடனேயே அவர்கள் மைத்ரேயரை என்னுடன் அனுப்பி வைப்பார்களா? இல்லை
முன்கூட்டியே தெரிவித்து தயார்ப்படுத்துகிறீர்களா?” அக்ஷய் கேட்டான்.
“முன்கூட்டியே
ஆளனுப்பி தெரிவித்து விடுகிறேன் அன்பரே.... நீங்கள் எப்போது போகிறீர்கள், எப்படி
போகிறீர்கள்?”
“சில விஷயங்கள்
உங்களுக்குக்கூடத் தெரியாமல் இருப்பது நல்லது ஆசானே... அவர்களிடம் நான் எப்போது
வேண்டுமானாலும் வருவேன் என்றே சொல்லி வையுங்கள்.”
ஆசான்
தலையசைத்தார். சில வினாடிகள் அவனையே பார்த்து விட்டு மெல்ல சொன்னார். ”அன்பரே, நான் ஒன்று சொன்னால் நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
ஒரு வயதான கிறுக்கனின் அர்த்தமில்லாத பயம் என்று கூட நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம்....”
‘என்ன’ என்பது போல அக்ஷய் அவரைப் பார்த்தான்.
“லீ க்யாங் அதிபுத்திசாலி. ஆபத்தானவனும் கூட. நீங்கள் மிகவும்
ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். நீங்கள் அவனை எந்தக் காரணம் வைத்தும் குறைத்து
மதிப்பிட்டு விடக்கூடாது....” ஆசான்
எச்சரித்தார்.
”கண்டிப்பாக கவனமாக இருப்பேன் ஆசானே. யாரையுமே
குறைத்து மதிப்பிடுவதற்கு இணையான முட்டாள்தனம் வேறிருக்க முடியாது என்பது எனக்கு
நன்றாகத் தெரியும்.”
எனக்கு எல்லாம்
தெரியும், என்னை மிஞ்ச ஆளில்லை என்கிற மனோபாவம் இல்லாமல் அடக்கமாய் அக்ஷய்
இருந்தது ஆசானுக்குப்
பிடித்திருந்தது. இத்தனைக்கும் இவனும் சாதாரணமானவனல்ல. இவனுடைய எதிரிகள் இவனை
அமானுஷ்யன் என்ற பெயரில் மட்டுமல்லாமல் சைத்தான் என்றும் அழைத்ததாக அவர்
கேள்விப்பட்டிருந்தார்...
அக்ஷய் அவரிடம் சொன்னான். “ஆசானே நீங்கள் இங்கே வந்திருப்பதும் என்ன
சந்திக்கப் போவதும் லீ க்யாங்குக்குத் தெரிந்திருக்கிறது என்றால் அவனுக்கு
நீங்களும் தலாய் லாமாவும் பேசிக் கொள்கிற விஷயங்கள் தெரிய வருகிறது என்று
அர்த்தம். தலாய் லாமாவைச் சுற்றி இருப்பவர்களில் யாராவது உளவாளி இருக்கலாம்.
அதனால் இனி நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்….”
அதே முடிவுக்கு முன்பே வந்திருந்த ஆசான் சரியெனத் தலையசைத்தார். அவருக்கு திடீரென்று
உடனடி பிரச்னை நினைவுக்கு வந்தது. லீ க்யாங்கின் ஆட்கள் இன்னமும் வெளியே
இருக்கிறார்கள். அதை அக்ஷயிடம் நினைவுபடுத்தி இனி என்ன செய்வது என்று கேட்டார்.
அக்ஷய் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “நீங்கள் முதலில் மடாலயத்தை விட்டுக் கிளம்புங்கள் ஆசானே...”
டெர்கார்
மடாலயத்தில் இருந்து ஆசானும் இன்னொரு பிக்குவும் வெளியே வந்தவுடன் வாங் சாவொவின்
ஆட்கள் உஷாரானார்கள். ஆசான் கூனல் எதுவும் இல்லாமல் நிமிர்ந்து வெளியே வந்தது
அவர்களைக் குழப்பியது. அப்படியானால் கூனலோடு தெரிந்ததும், கர்மா தார்ஜே மடாலயத்துக்கு
கூனலோடு வேகமாய் போனதும் யார்?... ஆசான்
ஒரு ஆட்டோவில் ஏறினார்.... அங்கிருந்த உளவாளிகள் அனைவரும் அவரைப் பின் தொடர
ஆரம்பித்தார்கள்.
ஐந்து நிமிடம்
கழித்து அக்ஷய் டெர்கார் மடாலயத்திலிருந்து அமைதியாக வெளியேறினான்.
ஒரு
மணி நேரம் கழித்து வாங் சாவொ லீ க்யாங்குக்குப் போன் செய்தான்.
”ஒரு மணி நேரத்துக்கு முன்னால் ஆசான் திடீரென்று
டெர்கார் மடாலயத்திலிருந்து மகாபுத்தர் ஆலயத்துக்குப் போயிருக்கிறார். இப்போதும்
மகாபுத்தர் ஆலயத்தில் போதி மரத்துக்குப் பக்கத்தில் தான் தியானத்தில் இருக்கிறார்.
அவர் கூட இன்னொரு பிக்கு இருக்கிறார்....”
லீ க்யாங்
உடனடியாகக் கேட்டான். “ஆசான் இப்போதும் கூனோடு தான் இருக்கிறாரா?”
“நிமிர்ந்து
தான் இருக்கிறார் சார்”
லீ க்யாங்
அமைதியாகக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய் வாங் சாவொ?”
எச்சிலை வாங்
சாவொ விழுங்கி விட்டு மெல்ல சொன்னான். “ஆசானைப் பார்க்க வந்த ஆசாமியை நாம் தவற
விட்டு விட்டோம் என்று தான் தோன்றுகிறது... கூன் விழுந்த ஆளை ஆசான் என்று நினைத்து
இவர்கள் பின் தொடர்ந்த போது ஆளில்லாத நேரமாய் அந்த ஆள் ஆசானைப் பார்த்துப் பேசி
விட்டுப் போயிருக்கலாம்...”
“இருக்கலாம்.....
இப்போது டெர்கார் மடாலயத்து வாசலில் நம் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா?”
“இல்லை....
இந்த முறை வெளியே வந்தது ஆசான் தான் என்பது உறுதியாக தெரிந்ததால் பிறகு யாரும் அங்கே
நிற்கவில்லை....”
“அப்படியானால் முன்பு
ஆளில்லாத போது ஆசானைப் பார்க்க வந்து, ஆசான் மகாபுத்தர் ஆலயம் போன பிறகு கூட அந்த
ஆசாமி வெளியேறியிருக்கலாம்”
வாங் சாவொ
வாயடைத்துப் போனான். அப்படி நடந்திருந்தால் இரண்டு முறை அவன் ஆட்கள்
ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். உள்ளூர ஒருவித கோபம் அவனுள் எழுந்தது.
ஆனால் லீ
க்யாங்குக்கு கோபம் வரவில்லை. காரணம் அவன் யதார்த்த சூழ்நிலையை மறந்து விடவில்லை. இரகசியம்
காக்க வேண்டி, ஒற்றர்களிடம் கூட எப்போதுமே முழு விவரங்களைச் சொல்லி விடுவதில்லை.
இப்போதைய விவகாரத்தில் கூட ஆசானை ஒரு ஆள் சந்திக்க வருவான். அவன் புகைப்படமும்,
அவன் பற்றி தெரிந்து கொள்ள முடிந்த மற்றெல்லா தகவல்களும் வேண்டும் என்று தான்
சொல்லி இருந்தார்கள். ஆசானே அங்கே இல்லை என்றால் அவரைச் சந்திக்க அந்த ஆள் எப்படி
வர முடியும் என்கிற ரீதியில் அந்த ஒற்றர்கள் எண்ணியதில் ஆச்சரியம் ஏதுமில்லை....
சிறிய
புன்னகையுடன் ஆசானின் அந்த ஆசாமியிடம் மனதினுள் பேசினான். ”இந்தச் சின்ன
விஷயத்தில் அடிமட்ட ஒற்றர்களை நீ ஏமாற்றி இருக்கலாம்... ஆனால் நான் நேரடியாக
களத்தில் இறங்கிக் காத்திருக்கையில் என்னை ஏமாற்றுவது சுலபமல்ல.... நான்
காத்திருக்கிறேன் மனிதனே... ஒரு நாள் சந்திப்போம்....”
(தொடரும்)
என்.கணேசன்
லீ க்யாங் மாத்திரமல்ல நாங்களும் ஆவலாக காத்திருக்கிறோம். அமானுஷ்யனுக்கு இணையான புத்திசாலியாக லீ க்யாங் இருப்பது சுவாரசியத்தை கூட்டுகிறது என்.கணேசன் சார்.
ReplyDeleteதங்கள் நாவல்களில் எல்லாக் கதாபாத்திரங்களும் அருமை தான் என்றாலும் அமானுஷ்யன் தான் அதிகம் பிடித்த கேரக்டர். அமானுஷ்யனில் ரசித்த அந்த கேரக்டரை இதிலும் அதே அழகுடன் கொண்டு போகிறீர்கள். நன்றி.
ReplyDeleteகதையில் நம்மால் முடிந்ததை கடவுள் செய்ய வைக்கிறார் என்பவை வாழ்வின் நிதரசனத்தை காட்டுகின்றன
ReplyDeleteCan/are you publishing eBook sir? that will be very convenient for me to buy online and comfortable to keep in eReader. Please do that sir.
ReplyDeleteAt present we are unable to publish ebook. Maybe in future. Thanks for your interest.
Deleteஇருவரும் ஒருவருக்கொருவர் பின்வாங்காமல் முன்னோக்கி செல்வது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது........ இருவரும் வெவ்வேறு வழிகளில் நெருங்குவது,,விருவிருப்பாக உள்ளது
ReplyDelete