என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 6, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 19


த்மசாம்பவாவின் ரகசிய ஓலைச்சுவடி இருபகுதிகளாக கிடைத்தும் அது என்ன சொல்கிறது என்பதில் தெளிவில்லை என்பதைக் கேட்ட பின் லீ க்யாங் ஆவணக்காப்பகத்தின் முதன்மைப் பொறுப்பாளரை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்து விட்டுச் சொன்னான். “மைத்ரேயரைப் பார்த்த பிறகு தான் எந்த மொழிபெயர்ப்பு சரி என்று தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்கிறீர்கள். ஆனால் மைத்ரேயர் பிறந்ததாகவே தெரியவில்லையே. பத்து வருடங்களுக்கு முன் மைத்ரேயர் என்று எல்லோரும் நம்பிய ஒரு குழந்தை விபத்தில் இறந்து விட்டது என்று கேள்விப்பட்டேன்.

பொறுப்பாளர் அமைதியாகச் சொன்னார். “யாரும் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் முடியாமல் சாக முடியாது. அதனால் இறந்து போன குழந்தை மைத்ரேயராக இருக்க வாய்ப்பில்லை

செய்ய வேண்டிய வேலைகள் முடிந்தால் தான் ஒருவன் சாக முடியும் என்றால் இவன் குறைந்தது ஆயிரம் வருடமாவது வாழ வேண்டி இருக்குமேஎன்று எரிச்சலுடன் தனக்குள் லீ க்யாங் சொல்லிக் கொண்டான்.  பின் அவரைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்களே, அப்படியானால் மைத்ரேயர் கதையை நீங்கள் நம்புகிறீர்களா?

பொறுப்பாளர் உடனடியாக அவனுக்குப் பதில் சொல்லவில்லை. பின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி சொன்னார். “பத்மசாம்பவாவை நம்புகிறேன். ஏனென்றால் அவர் கதை எழுதுகிற ஆள் அல்ல

பொறுப்பாளர் மகா சோம்பேறியானாலும் கூட தத்துவார்த்த நூல்களை நிறைய படிப்பவர் என்பதை  முன்பே அறிந்திருந்தாலும் பத்மசாம்பவா பற்றி இந்த அளவு ஒரு திடமான அபிப்பிராயம் அவருக்கு இருப்பது லீ க்யாங்குக்கு ஆச்சரியமாக இருந்தது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்த இந்திய யோகி (?) இருபத்தி ஓராம் நூற்றாண்டில் நடக்கப்போகும் நிகழ்வை எப்படி அன்றே எழுதி வைத்து விட்டுப் போயிருக்க முடியும்? அவனுக்கு லேசாய் தலை வலித்தது. 

லீ க்யாங் அவரிடம் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அங்கிருந்து வெளியேறினான்.  எதுவும் சொல்லாமல் திடீரென்று கிளம்பிப் போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பொறுப்பாளர் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டார். சில வினாடிகளில் அப்படியே உறங்கிப் போனார்.

வெளியே வந்த லீ க்யாங் காரில் ஏறி அமர்ந்தவுடன் வாங் சாவொவிற்குப் போன் செய்து டெர்கார், கர்மா தார்ஜே மடாலயங்கள் முன் இருக்கும் நிலவரத்தைக் கேட்டான். ஆசானோ, சந்தேகப்படுபடியான வேறு ஏதாவது ஆட்களோ, கண்காணித்து வரும் ஒற்றர்கள் கண்ணில் இன்னும் படவில்லை என்று வாங் சாவொ சொன்னான்.  தனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அங்கு நடந்து கொண்டிருக்கிறது அல்லது நடந்து முடிந்திருக்கிறது என்பது மட்டும் லீ க்யாங்குக்குப் புரிந்தது. 

அவன் சிறிது யோசித்து விட்டு, திபெத்தில் இருக்கும் ஒற்றைக் கண் பிக்குவிற்குப் போன் செய்தான்.

ற்றைக்கண் பிக்கு கை நடுங்க செல்போனை எடுத்தார். அவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக வரும் ஒரே போன் கால் லீ க்யாங்குடையது தான். அவன் போன்கால் வரும் போதெல்லாம் அவருக்கு நடுக்கம் வராமல் இருந்தது இல்லை. இத்தனைக்கும் அவன் அவரிடம் ஒரு முறை கூட அதிர்ந்து பேசியதில்லை.  என்றுமே அதட்டியதோ, மிரட்டியதோ இல்லை. ஆனாலும் கூட சீன உளவுத்துறையின் உபதலைவன் இனம்புரியாத கிலியை அவரிடம் ஏற்படுத்தினான்.

“ஹலோ

“மைத்ரேயன் எப்படி இருக்கிறான்?”  லீ க்யாங் கேட்டான்.

டோர்ஜேயைத் தேர்ந்தெடுத்த கணத்திலிருந்து மைத்ரேயன் என்ற பெயரல்லாமல் டோர்ஜே என்ற நிஜப்பெயரில் லீ க்யாங் அழைத்ததில்லை.

ஒற்றைக்கண் பிக்கு பவ்யமாக சொன்னார். “நலமாய் இருக்கிறான்

“அவன் முன்னேற்றம் எல்லாம் எப்படி இருக்கிறது?

பிரமாதமாக இருக்கிறது

“அவனை மைத்ரேயனாக அறிவிக்க வேண்டிய நாள் சீக்கிரமே வந்து விடும் என்று நினைக்கிறேன் பிக்குவே. அப்படி நாம் அறிவித்தால் அவன் சமாளிப்பானா?

“கண்டிப்பாக சமாளிப்பான்..... சார்

நான் ஒரு வாரம் கழித்து நேரில் வந்து பார்க்கிறேன்

அவனிடம் போனில் பேசும் போதே நடுங்கும் பிக்குவிற்கு அவனை நேரில் சந்திக்கப் போகிறோம் என்கிற தகவல் பெரும் ஆயாசத்தை ஏற்படுத்தியது. கஷ்டப்பட்டு “மகிழ்ச்சிஎன்றார்.

“திபெத்தில் வேறு ஏதாவது மைத்ரேயனைப் பற்றி யாராவது ஏதாவது சமீபத்தில் பேசியதை கேட்டிருக்கிறீர்களா பிக்குவேதிடீரென்று லீ க்யாங் கேட்டான்.

அதிர்ச்சியில் ஒற்றைக்கண் பிக்குவின் கையில் இருந்து அலைபேசி நழுவி கீழே விழுந்தது. இன்னொரு வேறு ஏதாவது மைத்ரேயனைசீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும்  திபெத்தில் உருவாக்கும் துணிச்சல் யாருக்கும் வர வாய்ப்பில்லை என்பதால் லீ க்யாங் சொல்வது உண்மையான மைத்ரேயரைத் தான் என்பதை அவரால் உடனே உணர முடிந்தது. கீழே விழுந்த அலைபேசியைத்  திரும்பவும் படபடப்புடன் எடுத்துக் கொண்ட அவர் திகைப்புடன் கேட்டார். “அவர்.... அவர்.... உண்மையாகவே இருக்கிறாரா சார்?

அவர் கேட்டதை லீ க்யாங் ரசிக்கவில்லை என்பது மூன்று வினாடிகள் நீடித்த மௌனத்தால் ஒற்றைக்கண் பிக்குவால் உணர முடிந்தது. பின் லீ க்யாங்  “சும்மா தான் கேட்டேன்என்று அலட்சியமாய் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.

ஒற்றைக்கண் பிக்குவிற்கு லீ க்யாங்கை பல ஆண்டுகளாகத் தெரியும். அவன் வாழ்க்கையில் சும்மா என்கிற வார்த்தைக்கு இடம் இருந்ததில்லை. அவன் சும்மா எதையும் பேசியதாகவோ, செய்ததாகவோ அவருக்கு நினைவில்லை....  அவருக்கு ஒரேயடியாக வியர்த்தது. அப்படியே சுவரில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்து கொண்டார்.

“உங்களுக்கு உடம்பு சரியில்லையா ஆசிரியரே” 

குரல் கேட்டு பிக்கு திரும்பிப் பார்த்தார். டோர்ஜே! காவி உடையில் நின்றிருந்த அந்த அழகிய சிறுவன் முகத்தில் கவலை தெரிந்தது. அவனைப்  பார்த்துப் புன்னகைக்க பிக்கு கஷ்டப்பட்டு முயன்றார். ஆனால் உடனடியாக புன்னகை பிறக்கவில்லை. டோர்ஜே அவரை நெருங்கி வந்து அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று கழுத்தைத் தொட்டுப் பார்த்தான். பிக்கு அவனை  இழுத்து மடியில் உட்கார வைத்து அணைத்துக் கொண்டார்....

இளம் வயதிலேயே புத்த பிக்குவாகி இருந்த ஒற்றைக்கண் பிக்கு ஆசானிடம் புத்தமத புனித நூல்களை மிக ஆழமாகக் கற்றவர். ஆசானுக்கு அடுத்தபடியான பாண்டித்யம் உள்ளவராக பலராலும் ஒத்துக் கொள்ளப்பட்டவர். ஆனாலும் கூட தலாய்லாமாவிற்கு நெருங்கிய வட்டத்தில் அவருக்கு என்றும் இடம் கிடைத்ததில்லை. ஆசானுக்குக் கிடைத்த கௌரவத்திலும் அன்பிலும் அவருக்கு பாதி கூட கிடைத்ததில்லை. அதுவே அவரை சீனாவின் பக்கம் திரும்ப வைத்ததென்று சொல்லலாம். திபெத்திய புத்த மடாலயங்களில் ரகசியமாய் பேசப்படும் அரசியல் தகவல்களை சீன உளவுத்துறைக்கு அவ்வப்போது தந்து கொண்டிருந்த அவரை ஐந்து வருடங்களுக்கு முன் லீ க்யாங் தன் ரகசியத் திட்டத்திற்காக அணுகிய போது மைத்ரேயர் உயிரோடு இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் அவருக்குத் துளியும் இருக்கவில்லை. ஏனென்றால் மைத்ரேயர் பற்றிய பேச்சு திபெத்தின் புத்த மடாலயங்களில் கூட என்றோ நின்று போயிருந்தது.

லீ க்யாங்கின் மைத்ரேய புத்தா ரகசியத் திட்டத்தில் பணம் மட்டுமல்லாமல் உலகப்புகழ் பெறப்போகிற மைத்ரேயருக்கு குரு என்கிற கௌரவமும் கிடைக்கும் என்கிற ஆசை அந்தத் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்தது. பின்பு தான் அவருக்கு லீ க்யாங்கை நெருங்கி இருந்து கவனிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் பேரறிவையும் செயல்படும் விதத்தையும் பார்த்து அவர் மலைத்துப் போனார்.           
  
எந்த ஒரு வேலையைச் செய்வதானாலும் அதன் சகல அம்சங்களையும் அவன் துல்லியமாக அறிந்து வைத்திருந்தான். மிகக் கச்சிதமாக அந்த வேலையைச் செய்து முடிக்கும் வரை அவன் ஓய்ந்ததில்லை. ஏழு குழந்தைகளில் இருந்து டோர்ஜேயை தேர்ந்தெடுத்த கணத்தில் இருந்து டோர்ஜேயை மைத்ரேயனாக உருவாக்க அவன் எடுத்த ஒவ்வொரு முயற்சியிலும் இருந்த கச்சிதத்தன்மை அவரை பிரமிக்க வைத்தது. அவன் அவரிடமும், டோர்ஜேயிடமும் நிறைய எதிர்பார்த்தான். எதிர்பார்த்ததில் நூறு சதவீதத்திற்கும் குறைவான வெளிப்பாடுகளை அவன் ஏற்றுக் கொண்டதில்லை. அவன் எதிர்பார்த்த விளைவு கிடைக்கும் வரை அவர்களை அவன் சும்மா விட்டதில்லை. அதனால் அவன் எதிர்பார்த்த மைத்ரேயனாக டோர்ஜே கச்சிதமாக வேகமாக உருவாகிக் கொண்டு வந்தான்.   

திபெத்தில் ஒரு ரகசிய இருப்பிடத்தில் அவர்களைத் தங்க வைத்து அவர்களுக்கு சமைத்துப் போடவும், தேவைப்பட்ட வேலைகளைச் செய்து தரவும் ஒரு ஒற்றனையும் லீ க்யாங் ஏற்பாடு செய்திருந்தான். ஒற்றைக்கண் பிக்குவுக்கு அவனுக்குக் கற்றுத் தருவதைத் தவிர வேறு வேலை இருக்கவில்லை. டோர்ஜேயிற்கு மைத்ரேயனாக உருவாவதைத் தவிர வேறு வேலை இருக்கவில்லை. ஒற்றைக்கண் பிக்கு, பாதிக்கும் மேற்பட்ட ஆயுளைக் கடந்திருந்ததால் ஓரளவு அந்த வாழ்க்கைக்கு ஒத்துப் போக முடிந்தது.
 
ஆனால் டோர்ஜே சில சமயங்களில் சிறிது சிரமப்பட்டான். கற்பதிலும், அவர்கள் சொன்னபடி நடந்து கொள்வதிலும் மிக நன்றாகவே அவன் தேறி வந்தான். லீ க்யாங் டோர்ஜேயை நன்றாக மூளைச்சலவை செய்து வைத்திருந்தது அருமையாகவே அவனை வேலை செய்ய வைத்த்து. “நீ புத்தரின் மறுபிறவியான மைத்ரேயன். உலகமே உன்னை வணங்கப் போகிறது. உன்னைத் தரிசிக்க உலகத்தின் பல பகுதிகளில் இருந்து மனிதர்கள் வருவார்கள். உலகத்தலைவர்கள் உன்னை சந்திக்க வருவார்கள்....என்றெல்லாம் திரும்பத் திரும்ப சொல்லி அப்படி ஆக என்ன எல்லாம் செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று லீ க்யாங் கற்பித்தான். அவன் சொன்னபடியே டோர்ஜே திருப்திகரமாகவே செய்து வந்தான்.

ஆனால் இயற்கை என்று ஒன்று இருக்கிறதே அது சில சமயங்களில் அந்த சிறுவனை சிரமப்படுத்தியது. தன் விளையாட்டுப் பருவத்தில் விளையாட்டை இழக்கும் துக்கம் அவனிடம் தெரிய ஆரம்பித்தது. படிப்பிலும், மற்ற விஷயங்களிலும் மிகவும் சூட்டிகையான அந்தச் சிறுவன் மீது தனியொரு பாசம் ஒற்றைக்கண் பிக்குவுக்கு ஏற்பட்டிருந்ததால் அவன் துக்கத்தைப் பார்க்கையில் எல்லாம் அவருக்கு என்னவோ செய்தது.

அவர்கள் இருப்பிடம் மேடான பகுதியில் இருந்தது. தெரு சற்று இறக்கத்தில் இருந்தது. தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை மேலேயிருந்து ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் டோர்ஜே சில நாட்களில் பார்த்துக் கொண்டிருப்பான். நானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடப் போகட்டுமா?என்று ஆசையாகக் கேட்பான். ஒற்றைக் கண் பிக்கு அவனிடம் ஏதேதோ காரணங்கள் சொல்லி மறுப்பார்.

அதை ஒரு முறை லீ க்யாங் வந்த போது சமையல்காரன் சொல்லிக் கொடுத்து விட்டான். லீ க்யாங் டோர்ஜேயிடம் ஒரு பிரசங்கமே செய்து விட்டான். கடைசியில் சொன்னான். “....தெருவில் இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் பையன்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்த அடையாளம் தெரியாமல் போய் விடுவார்கள். ஆனால் நீ ராஜ மரியாதையுடன் பேரும், புகழும் பெற்று வாழ்வாய். பெரிய நன்மைகளுக்காக சின்னச் சின்ன ஆசைகளை விட்டு விடுவது தான் புத்திசாலித்தனம்

டோர்ஜேக்குப் புரிகிற மாதிரி இருந்தது. சில நாட்கள் தெருவில் விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்ப்பதைக் கூட தவிர்த்தான். ஆனால் காலம் போகப் போக அந்த ஏக்கம் அவனுக்குத் திரும்பி வந்தது. சமையல்காரன் இல்லாத நேரங்களில் பழையபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். பார்க்கையில் தானே அந்த விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டவன் போல சில சமயங்களில் புன்னகைப்பான். பிக்குவுக்கு பார்க்க பாவமாக இருக்கும்.

ஒரு நாள் அப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் ஆச்சரியத்துடன் கூவினான். “ஆசிரியரே இங்கே வந்து பாருங்கள். ஒரு தாத்தா கூட அந்தப் பையன்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்

ஒற்றைக்கண் பிக்கு திடுக்கிட்டார். அவருக்குத் தெரிந்து தெருவில் பையன்களுடன் ஆடும் ஒரே தாத்தா அவருடைய குருவான ஆசான் தான். ஜன்னல் வழியாகப் பார்த்த போது ஆசான் தான் அந்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒற்றைக்கண் பிக்கு லேசாகப் புன்னகை செய்தார். காலத்தாலும் மாற்ற முடியாத ஒரே மனிதர் இந்த ஆசான் தான்!

அவர் அசந்து பார்த்துக் கொண்டிருக்கையில் டோர்ஜே கதவைத் திறந்து கொண்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தான். கீழே தெருவில் ஆசான் மட்டும் இருக்காமலிருந்தால் ஓடிப்போய் அவர் டோர்ஜேயை திருப்பி அழைத்து வந்திருப்பார். ஆனால் ஆசான் கண்ணில் விழவும் மனதில்லாமல், டோர்ஜேயைத் தடுக்கவும் வழி தெரியாமல் திகைத்து செய்வதறியாமல் நின்ற பிக்குவுக்கு லீ க்யாங் நினைவும் வர சப்தநாடியும் ஒடுங்கியது. டோர்ஜே விளையாடுபவர்களை நெருங்கி விட்டான்.  

(தொடரும்)

என்.கணேசன்

9 comments:

 1. Sir your novel is going very interesting. The incidents are nicely woven and we feel the characters' feelings. Nice update

  ReplyDelete
 2. விஷ்ணுNovember 6, 2014 at 7:21 PM

  நிஜம் போலவே தோன்றுகிறது இந்த நாவல். கேரக்டர்கள் எல்லாம் மிக யதார்த்தம். தாமதமாக அப்டேட் செய்தாலும் பெரிய அப்டேட் தந்திருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 3. அருமையான கதை. கதாபாத்திரங்கள் அனைத்து நிஜம் போலவே உள்ளன. ஆசான் போல ஒருவர் உண்மையில் இருந்தால் நன்றாக இருக்கும். லீக்யாங் x அமானுஷ்யன் மரைமுக / நேர்முக யுத்தத்தை ஆவலோடு எத்ர்நோக்குகிறேன்.

  ReplyDelete
 4. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 5. ப்ரசாந்த்November 8, 2014 at 3:10 AM

  போன வாரம் தான் உங்கள் அமானுஷ்யன் நாவல் படித்து முடித்தேன். அக்‌ஷய் ஏக்‌ஷன் ஹீரோ மட்டுமல்ல நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்த மாதிரி இருந்தது. ரியலி க்ரேட். உங்கள் ப்ளாக் பற்றி அப்போது ஒரு நண்பன் மூலம் தெரிந்தது. இங்கு வந்தால் அறிவுச்சுரங்கமே இருப்பது போல் ஒரு ஃபீல். பரமன் ரகசியம் இனி தான் படிக்க வேண்டும். புத்தம் சரணம் கச்சாமியில் அக்‌ஷய் உள்ளதால் இதை ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன். பிரமாதமாய் போகிறது. அக்‌ஷயும், லீ க்யாங்கும் நல்ல காம்பினேஷன். வித்தியாசமான கதை கரு. கேரக்டரைசேஷன் எல்லோரும் சொல்வது போல் அருமை. நேரில் பார்ப்பது போல் ஒரு ஃபீல்.

  ReplyDelete
 6. அருமையான தொடர். ஒற்றைக்கண் பிக்குவை ஆசானுக்கு இணையாக வர்ணித்து பின்பு கோழையாய் காட்டி இருப்பது சற்றே நெருடல்!

  ReplyDelete
 7. Different and interesting

  ReplyDelete
 8. லீ க்யாங்-ன் செயல் திட்டம் எல்லாம்.. பரம(ன்) ரகசியத்தில் வரும் குருஜி யை நினைவுபடுத்துகிறது... உண்மையான மைத்ரேயர் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது

  ReplyDelete