என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, September 22, 2014

மகாவீரரின் மகத்தான போதனைகள்!


அறிவார்ந்த ஆன்மிகம்-48

இந்தியாவில் பக்தி மார்க்கம் செழிக்க ஆரம்பித்த ஏழாம் நூற்றாண்டு வரை ஜைன மதம் என்னும் சமண சமயம் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. சமண சமயம் தீர்த்தங்கரர் என்று அழைக்கப்பட்ட 24 சமய வழிகாட்டிளால் உருவாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தது. தீர்த்தங்கரர் என்றால் வழிகாட்டிகள், பாலங்கள் என்று சொல்லலாம். அதாவது  ஜீவனை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாலங்கள், அல்லது வழிகாட்டிகள் தீர்த்தங்கரர்கள். அந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் என்ற மகாஞானி.

அரச குடும்பத்தில் பிறந்த அவரது இயற்பெயர் வர்த்தமானர். அவர் தனது முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக பன்னிரண்டு ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார். அந்த நாட்களில் தன்னுடைய புலன்களை எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தவ வாழ்க்கை வாழ்ந்தார். மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் என எல்லா உயிரினங்களுக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் அருளுடன் வாழ்ந்து வந்தார். புலன்களை முழுமையாக அடக்குவதும், எல்லா சூழ்நிலைகளிலும் தன் அருள் தன்மையை இழந்து விடாமல் இருப்பதும் ஆன்மிகத்தில் மிகப்பெரிய வீரத்தன்மையே அல்லவா? அதனாலேயே அவர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். அவரை ஜீனர்என்றும் அழைப்பதுண்டு. ஜீனர் என்றால் ஜெயித்தவர்என்று பொருள். அதாவது ஆசை, துன்பம் ஆகியவற்றை வெற்றி கண்டவர் என்ற பொருளில் அப்படி அழைக்கப்பட்டார். இந்த வகையில் மேற்கொண்ட ஆழமான தேடலின் முடிவில் கைவல்யம் என்ற மிக உயர்ந்த ஞானத்தை அடைந்தார்.  

மகாவீரர் தனது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தான் அறிந்த ஆன்மீக விடுதலையின் மேலான உண்மைகளைப் பரப்பிகினார். வெறும் கால்களில் நடந்து மிக மோசமான சீதோஷ்ண நிலைகளிலும் சலிக்காமல் பயணம் செய்து போதனைகள் செய்தார். சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய போதனைகளைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் மேலும் பரவியது. மக்களுக்கு ஞான வழி காட்டிய மகாவீரர் தனது 72வது வயதில் நிர்வாணம் எய்தினார்.

மகாவீரரின் போதனைகள் அவரது உடனடி சீடர்களால் அகம் சூத்திரங்கள் என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் கடைசியில் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. இன்று நமக்குக் கிடைத்திருப்பவை எல்லாம் அப்படி மிஞ்சியவையே.

மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது தீய செயல்களின் விளைவாக  கர்மா  எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிகமான,  உண்மை போல தோன்றுகின்ற இன்பங்களிலும், பொருள்களை சேர்ப்பதிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்குத் தவறான எண்ணங்கள் ஏற்படுகின்றன, பாவச் செயல்களில் ஈடுபாடு கூடுகிறது. இதனால் அவன் கர்மாவின் சுமை கூடி அவன் துன்பப்படுகின்றான்.  

இந்தத் துன்பங்களில் இருந்து விடுபட  மகாவீரர் சரியான நம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  சரியான அறிவு (சம்யக்-ஞானம்),  மற்றும் சரியான நடத்தை(சம்யக்-சரித்திரம்') ஆகிய மூன்றும் தேவை என்பதை வலியுறுத்தினார். இவை திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டன.

சரியான நம்பிக்கை இல்லாவிட்டால் சரியான அறிவு வாய்க்காது. சரியான அறிவு இல்லா விட்டாலோ நன்னடத்தை சாத்தியப்படாது. சரியான ஞானம் இருந்து நன்னடத்தை சாத்தியப்பட ஒரு மனிதன் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:

அகிம்சை அல்லது வன்முறை தவிர்த்தல்:  எந்தவொரு உயிரினத்திற்கும் எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காதிருத்தல்.

சத்தியம் அல்லது வாய்மை:  தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதல்.

அஸ்தேயம் அல்லது திருடாமை:  தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாத்தையும் தனக்கு எடுத்துக் கொள்ளாதிருத்தல்.

பிரம்மச்சரியம் அல்லது பாலுறவு துறத்தல்:  பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல் என்ற இந்த உறுதிமொழி துறவிகளுக்கு முக்கியமாய் சொல்லப்பட்டது என்றாலும் மற்றவர்களுக்கும் முறையான அளவான பாலுறவு வலியுறுத்தப்படுகிறது.

அபரிகிருகம் அல்லது பற்றற்றிருத்தல்: மனிதர்களிடத்தும், பொருள்களிடத்தும், மற்ற உடைகளிடத்தும் பற்றில்லாமல் இருத்தல்.

மகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். பெண்களை ஆத்மஞானத்திற்கு எதிராக நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் மகாவீரர் இப்படி சம அந்தஸ்து தந்தது அக்காலத்தில் புரட்சிகரமாக இருந்தது. மேலும் அவரை சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றினர். அவர் போதனைகளில் எளிமையும் தெளிவும் இருந்ததால் அடித்தள மக்கள் கூட அவரால் ஈர்க்கப்பட்டனர்.

மகாவீரர் மனிதன் தன் கர்மபலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார். நம் இன்ப துன்பங்களுக்கு நாமே பொறுப்பு. நம் கருமங்கள் நம்முடைய முயற்சியினால் நாமே களைந்து விடுதலை பெறவேண்டும் என்று கூறினார்.  தனிப்பட்ட கடவுள், சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றை அவர் மறுத்தார்.

மகாவீரர் கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கல், மண், உலோகம் போன்றவற்றிற்கும் உயிர் உண்டு என்று கருதினார். தண்ணீரைக் காய்ச்சினால் அதிலுள்ள உயிரினங்கள் இறந்து விடும். எனவே தண்ணீரைக் காய்ச்சக் கூடாது. சுவாசிக்கும் போது உயிரினங்கள் மூக்கு வழியே சென்று இறந்து விடும். எனவே மூக்கை திரையிட்டு மூட வேண்டும். நடக்கும்போது பாதம் பட்டு எறும்பு போன்றவை இறந்து விடும். எனவே தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  அந்த அளவு பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிப்பதை அவர் மறுத்தார்.

அதே போல ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டே சென்று திருப்தி அடைவது மனிதனால் முடியாத காரியம் என்று அவர் உறுதியாகக் கூறினார். மனிதனுக்கு தங்கமும், வெள்ளியும் கைலாச மலையளவு கிடைத்தாலும் அவன் போதும் என்று திருப்தியடைய மாட்டான். மேலும் மேலும் தேடி அலைந்து துன்பப்படுவான்என்று அவர் கூறுகிறார்.

அவருடைய போதனைகள் மனிதனின் வாழ்வை ஒட்டி இருப்பது அவரது தனித்தன்மை. பெரிய சித்தாந்தங்கள் பேசி சர்ச்சைகளை எழுப்பி குழப்பாமல் இப்படி வாழ்ந்தால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம், ஞானம் பெறலாம் என்ற வழிகாட்டுதலாக அவருடைய போதனைகள் அமைந்தன. பிறப்பினாலும் சமூக அமைப்பினாலும் வரும் வேற்றுமைகளை அவர் பொருட்படுத்தவில்லை. யாரும் முறையான சரியான வாழ்க்கை முறையில் ஞானம் பெற்று தேறலாம் என்ற நம்பிக்கையை அவருடைய போதனைகள் ஊட்டின.

இந்தியா முழுவதும் பரவிய அவருடைய போதனைகள் தமிழகத்திலோ இலக்கியங்களில் இடம் பெறும் அளவுக்கு வேறூன்றின. அவர் கூறிய அறநெறிகளும், சிந்தனைகளும் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற நீதி நூல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான காப்பியங்களிலும் இடம் பெற்று இருக்கின்றன.

பேராசையும், சுயநலமும் அதிகமாகி, பிறர் நலத்தில் அலட்சியம் பெருகி அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மகாவீரரின் போதனைகளை அனைவரும் ஓரளவாவது பின்பற்ற முடிந்தால் நாம் வாழும் உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்.

-          என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 11-02-2014

3 comments:

  1. தண்ணீரைக் காய்ச்சக் கூடாது.
    மூக்கை திரையிட்டு மூட வேண்டும்.
    தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும்,/// itha elloralum follow panna mutiyathe...!

    ReplyDelete
  2. மகாவீரர் பற்றிய பல செய்திகளை வெளியிட வேண்டும்

    ReplyDelete