அறிவார்ந்த ஆன்மிகம்-47
உபநிஷத்துகள் என்றழைக்கப்படும் உபநிடதங்கள் வேதங்களின் கிளைநூல்களாகக் கருதப்படுபவை. நம் இந்திய வேதாந்தத்தின்
சாராம்சம் முழுவதும் உபநிடதங்களில் இருக்கின்றது.
உபநிடதங்களில் சில உரைநடையிலும் சில செய்யுள் நடையிலும் உள்ளன. ஆனால்
எல்லாமே மெய்ஞான உண்மைகளையும், தத்துவங்களையும் அலசுபவை. அறிவுகூர்மையான பல
கேள்விகளை எழுப்பி பதில்களை அலசி ஆராய்ந்து பின் மகத்தான மெய்ப்பொருளை
விளக்கக்கூடிய நூல்கள் அவை.
உபநிஷத் என்ற
சமஸ்கிருதச் சொல்லில் 'உப', 'நி'
மற்றும் 'ஸத்’ என்ற மூன்று
வேர்ச்சொற்கள் உள்ளன. ’உப’ என்றால் (குருவின்) அருகில் என்று பொருள். ’நி’ என்றால் உறுதியாக அல்லது நிச்சயமாக என்று பொருள். ஷத் என்றால் (துயரத்தை அல்லது சந்தேகத்தை) அழிப்பது என்று பொருள். எனவே உபநிஷத் என்னும் சொல்லின் பொருள் குருவின்
அருகில் இருந்து உறுதியாக மெய்ப்பொருள் ஞானத்தைப் பெற்று அறியாமையையும், அதனால்
வரும் துயரத்தையும் நீக்குதல் என்பது தான். இப்படி குருவின் அருகில் அமர்ந்து
சீடனால் கேட்டு உணரும் அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது
மொத்தம் 108 உபநிடதங்கள் இருப்பதாகக்
கூறப்பட்டாலும் அவற்றில் மிகப் பழமையான பத்து உபநிடதங்கள் மிக முக்கியமானவை. அவை ஈசா,
சாந்தோக்யம், பிரகதாரண்யகம், ஐதரேயம், தைத்திரீயம், பிரச்னம், கேனம், கடம், முண்டகம்,
மாண்டூக்யம். இவற்றில் பிரகதாரண்யகமும் அடுத்ததாக சாந்தோக்யமும் பெரிய
உபநிடதங்கள். மாண்டூக்யம் 12 சுலோகங்களே கொண்டே மிகச்சிறிய உபநிடதம்.
மகான்களான ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வாச்சாரியார், நீலகண்ட
சிவாசாரியார் ஆகிய நான்கு சமயாசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் தாங்கள் கொண்டிருந்த கொள்கைகளை ஒட்டி மேற்கூறிய
முக்கிய உபநிடதங்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளார்கள்.
ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் புத்த, சமண
மதங்களின் சாரம் முழுவதும் உபநிடதங்களிலிருந்தே எடுக்கப்பட்டிருப்பதைக் காண
முடியும். மிக உயர்வாக சொல்லப்படும் அந்த மதங்களின் நல்லொழுக்கக் கோட்பாடுகள் கூட
ஏதோ ஒரு உபநிடதத்தில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதைக் காணலாம்.
வேதங்களைப் போலவே உபநிடதங்களையும்
எழுதியவர்கள் பெயர்கள் நாம் அறியோம். சிறிய உபநிடதங்கள் ஒரே ரிஷியின் உபதேசமாக
சொல்லப்பட்டு இருந்தாலும், பெரிய உபநிடதங்கள் பல ரிஷிகளின் உபதேசங்களின் தொகுப்பாக
அமைந்துள்ளன. இனி சில உபநிடதங்களையும் அவை உணர்த்தும் உண்மைகளையும் பார்ப்போம்.
’பிரகதாரண்யகம்’
என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு மிகப்பெரிய அடர்ந்த காடு என்று பொருள். அக்காலத்தில்
சன்னியாசத்திற்கு முந்தைய நிலையாக வனப்பிரஸ்தம் என்று காடுகளில் அமைதியான வாழ்க்கை
நடத்தும் முறை இருந்தது. அவர்களுக்கேற்ற உபதேசங்கள் நிரம்பி இருப்பதால் இது
பிரகதாரண்யக உபநிடதம் என்ற பெயர் பெற்றது. இது யஜுர் வேதத்தைச் சார்ந்தது. இவ்வுபநிடதம்
பிரம்மதத்துவ விசாரணை, நன்னெறிகள், வேள்விகள்,
சடங்குகள், ஒரு மனிதன் எவ்வாறு
வாழ வேண்டும், பிரம்மத்தை அடையும் வழிகள் மற்றும் ஜீவன் -
பிரம்ம ஐக்கியத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. இந்த உபநிடதத்தில் தான் ”அஹம் ப்ரம்மாஸ்மி” (நான் பிரம்மமாக இருக்கிறேன்) என்ற மகா வாக்கியம் அமைந்திருக்கிறது.
உபநிடதங்களில் மிக அழகான, தெளிவான உவமை
மூலம் உண்மையை உணர்த்துகிற சிறப்பு உண்டு. உதாரணத்திற்கு முண்டக உபநிடதத்தில்
வரும் இரண்டு பறவைகளின் உவமையைச் சொல்லலாம்.
ஒரு மரத்தில் அழகிய இறகுகள் கொண்ட இரண்டு
பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று மிகுந்த நேசம்
பாராட்டுகின்றன. கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை பழங்களைத் தின்கிறது. மேல்
கிளையில் இருக்கும் பறவை உண்ணாமல் கம்பீரமாக அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை மாறிமாறி இனிப்பும் கசப்புமான பழங்களைத்
தின்பதில் அதற்கேற்ப மகிழ்ச்சியையும் வேதனையையும் அடைகிறது. ஆனால் மேலே
அமர்ந்திருக்கின்ற மற்ற பறவையோ இனிப்பும் உண்ணாமல், கசப்பும் உண்ணாமல் இருப்பதால் இந்த சுக துக்கங்களில் சிக்காமல் தன்
அமைதி நிலையிலேயே ஆழ்ந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கீழ்க்கிளையில் உள்ள பறவை
மேல்கிளையில் உள்ள பறவையின் நிறைவான அமைதியைப் பார்த்து உண்மையை உணர்கிறது.
மனிதனின் நிலை இதுதான். வாழ்க்கை தரும் இனிப்பும் கசப்புமான பழங்களை உண்கிறான். பணத்தை நாடி புலனின்பங்களைத் தேடி வாழ்க்கையின் நிலையற்ற இன்பங்களைத் தேடி பைத்தியக்காரத் தனமாக வெறித்தனமாக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். இதுதான் உலகம். ஆனால் புலனின்ப வாழ்க்கைக்கு அப்பால், உலகின் நிலையற்ற சுக துக்கங்களுக்கும் அப்பால் உள்ள அமைதியான, ஆனந்தமான மேல் நிலையை கண நேரம் காணப் பெற்றாலும் அவன் வாழ்க்கை திசை மாறுகிறது.
மனிதனின் நிலை இதுதான். வாழ்க்கை தரும் இனிப்பும் கசப்புமான பழங்களை உண்கிறான். பணத்தை நாடி புலனின்பங்களைத் தேடி வாழ்க்கையின் நிலையற்ற இன்பங்களைத் தேடி பைத்தியக்காரத் தனமாக வெறித்தனமாக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். இதுதான் உலகம். ஆனால் புலனின்ப வாழ்க்கைக்கு அப்பால், உலகின் நிலையற்ற சுக துக்கங்களுக்கும் அப்பால் உள்ள அமைதியான, ஆனந்தமான மேல் நிலையை கண நேரம் காணப் பெற்றாலும் அவன் வாழ்க்கை திசை மாறுகிறது.
உபநிடதங்கள் படிக்கத் துவங்கும் முன்பு
அந்தந்த உபநிடத்திற்குரிய சாந்தி மந்திரத்தை சொல்லிவிட்டுத்தான் துவங்க வேண்டும்
என்பது மரபு. வேதாந்த சாத்திரங்கள்
கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான சூழ்நிலைகளிலிருந்து வரும் தடை, இயற்கையிலிருந்து வரும் தடை, நம்மிடருந்து
நமக்கே வரும் தடை ஆகிய மூன்று தடைகளை அமைதிப் படுத்துவதின் மூலம் நம்மை நாம்
காத்துக்கொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவதே சாந்தி மந்திரம் சொல்வதின் உட்பொருள்.
உதாரணத்திற்கு ஐத்ரேய உபநிடதத்தின் சாந்தி மந்திரப் பொருளைப் பார்ப்போம்.
“எனது வாக்கு, மனதில்
நிலைபெறட்டும். மனம், வாக்கில் நிலைபெறட்டும். ஒளிமயமான
பரம்பொருளே! நீ என்னுள் ஒளிர்வாயாக. மனமே, வாக்கே,
நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்குக் அருள்வீர்களாக.
என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றைப்
பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளைச் அறிவேனாக. பிரம்மத்தைப் பற்றிய
உண்மையை அறிவேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். எனது குருவையும் காக்கட்டும்.
எனக்கும் குருவுக்கும் ஆரோக்கியத்தை தர வேண்டும். சீடனாகிய எனக்கு வேதத்தை நன்கு
கேட்கும் சக்தியையும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத்தரும் சக்தியையும்
அருள வேண்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி”.
இது எவ்வளவு அழகான உயர்ந்த பிரார்த்தனை
பாருங்கள். இப்படி ஒவ்வொரு உபநிடதத்திலும் சாந்தி மந்திரத்தில் இருந்து கடைசி
சுலோகம் வரை ஞானப் பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. ஞான மார்க்கத்தில் பெண்களுக்கு இருக்கும்
வேட்கையும் இவற்றில் சொல்லப்பட்டிருக்கின்றன. மைத்ரேயி மற்றும் கார்க்கி என்ற
பெண்கள் கூட அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டு ஞானத்தைப் பெற்றதாக
சொல்லப்பட்டிருக்கின்றன.
கடோபநிடதத்தில் நசிகேதன் என்ற சிறுவன் எமனிடமே
மரணத்தைப் பற்றியும் அதன் பின் உள்ள உண்மைகள் பற்றியும் கேள்விகள் கேட்டு ஞானம்
பெறுவதாக சொல்லப்பட்டிருக்கிறது, நீண்ட ஆயுள், நிறைய செல்வம், மற்ற அனைத்து
சுகங்களையும் தர எமன் தயாராக இருந்தாலும் அதை எல்லாம் வேண்டாம் என மறுத்து ஞானமே
எனக்குத் தேவை என்று உறுதியாக நின்று
நசிகேதன் ஆத்மஞானம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
இப்படி உயர்ந்த ஞானப் பொக்கிஷங்கள்
அனைத்தையும் கொண்ட உபநிடதங்கள் குறித்து விவேகானந்தர் கூறுகிறார்.
”எந்தப்
பிரிவைச் சேர்ந்தவர்களானாலும், எந்தத் தத்துவக்
கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும்
உபநிடதங்களையே தங்கள் பிரமாண சாஸ்திரமாகக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத
எந்தப் பிரிவும் வைதீகத்திற்குப் புறம்பாகி விடுகிறது. எந்தத் தொழில் செய்பவராயினும் எல்லோருக்கும்
உபநிடதங்கள் பொதுவானவை. வேதாந்தத்தின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தாக வேண்டும். காட்டிலும் குகைகளிலும் வசிக்கும் முனிவர்களிடம் மட்டும் இருந்தால் போதாது. அவை
வெளிவந்து வழக்கறிஞர் சபைகளிலும் வழிபாட்டு மேடைகளிலும் ஏழையின் குடிசையிலும் மீன்
பிடிக்கும் மீனவரிடமும் படிக்கின்ற மாணவரிடமும் செயல்பட்டாக வேண்டும்”
அவர் கூறுகின்றபடி அந்த ஞானம்
பொதுமக்களிடமும் ஏற்படுமானால் நாம் எட்ட முடியாத உயரங்களே இருக்காதல்லவா?
-என்.கணேசன்
நன்றி- தினத்தந்தி - 4.2.2014 - ஆன்மிகம்
Ubanidathangal ella kalathirkum pothuvanathu..... Ippothulla ulla pirachanaikku kooda athil thervu irukkum
ReplyDeleteஉண்மை ஜி
Deletewell done, I am very fortunate, having you Sir
ReplyDeleteVery good Sir, keep on writing about Ubanizhads, every individual must read with out any religious ideology. It is universal, your writing will help many people to understand easily because your wording and writing style very simple and powerful. Thanks for your great work.
ReplyDeleteஅன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.
ReplyDeleteசின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html
the great upanishads richer meaning brought out in a simple way. keep it up.
ReplyDeleteSir...any suggesstions on specific good website or blog to read these?
ReplyDeleteThank you sir.
Nice one.
ReplyDelete