சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 16, 2014

இறைவனை நாடுபவர் நான்கு ரகம்!


கீதை காட்டும் பாதை 31

இறைவனை நம்புபவர்கள் கூட எப்போதும் அவனை நாடுபவர்களாக இருப்பதில்லை. அவசியம் ஏற்பட்டால் ஒழிய ஆண்டவனையும் எண்ணாமல் இருப்பது சாதாரண மனித சுபாவம் தானே. அப்படியானால் இன்று கோயில்களில் கூட்டம் எல்லா நேரங்களிலும் நிரம்பி வழிகிறதே, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறதே என்று கேட்கலாம். இன்று அவசியங்கள் அதிகமாகிக் கொண்டு வருவதால் தான் இறைவனை நாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பது தான் இன்றைய யதார்த்தம்.  ஆனால் காரணம் எதுவாக இருந்த போதிலும், இறைவனை நாடுவதே புண்ணியம் என்கிறது பகவத்கீதை.

கீதையின் ஏழாவது அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தில் இறைவனை நாடுபவர்களை நான்கு ரகங்களாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிரிக்கிறார். அவர் அர்ஜுனனிடம் சொல்கிறார்-    

அர்ஜுனா! துன்பம் அடைந்தவன், பொருளை நாடுபவன், ஞானத்தை நாடுபவன், மெய்ஞானம் பெற்றவன் என புண்ணியசீலர்களான நான்கு வகையினர் என்னை வழிபடுகிறார்கள்.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பார்கள். துன்பம் வருகையில் இறைவனைத் தவிர வேறு யாரை ஒருவன் நம்பிக்கையோடு அழைக்க முடியும்? மனிதர்கள் உதவலாம். ஆனால் அதற்கு அவர்களுக்கு சக்தியும், மனமும் இருக்கும் என்று உறுதியாக நம்மால் சொல்ல முடியுமா? ஆபத்து காலங்களில் ஆத்மார்த்தமாய் மனிதன் கூவுவது இறைவனை நோக்கியே அல்லவா?

பாஞ்சாலி ஐந்து பராக்கிரமசாலிகளைக் கணவர்களாகப் பெற்றவள். துச்சாதனனால் சேலை உருவப்பட்ட போது அந்த ஐந்து பேர்களும் அவளுக்கு உதவ முடியவில்லை. குலத்தின் மூத்தவரான பீஷ்மர் உதவ முடியவில்லை. தர்மம் அறிந்த விதுரன் உதவ முடியவில்லை. கௌரவர்களுக்கும் குருவான கிருபாச்சாரியாரும், ஆசிரியரான துரோணரும் உதவவில்லை. அத்தனை பேரிடமும் அவள் நியாயம் கேட்ட போது தலைகவிழ்ந்தனரே ஒழிய அவளுக்கு உதவ முன்வரவில்லை. கடைசியில் சிறிது நேரம் தன்னையே நம்பித் தன் கைகளால் தடுத்துப் பார்த்தாள் பாஞ்சாலி. தன் கையே தனக்குதவி என்பார்கள். கைகளும் அப்போது கைகொடுக்கவில்லை. கடைசியில் அந்தக் கைகளையும் மேல் உயர்த்தி பரந்தாமனை அழைத்தாள். எடுத்தார் இறைவன் வஸ்திராவதாரம். சேலைக்குவியல் மலைபோலக் குவிந்தும் முடிவுக்கு வரவில்லை. போர்க்களத்தில் எதிரிகளைக் கொன்று குவிக்க முடிந்த மகா சக்திமானான துச்சாதனனுக்கு அந்த சேலையை இழுக்க சக்தி போதாமல் தோற்றுப் போய் தரையில் உட்கார்ந்து விட்டான்.

தன்னைச் சேர்ந்தவர் பலமும், தன் பலமும் துன்பகாலத்தில் போதாத போது கடைசியான புகலிடம் இறைவனே அல்லவா? அந்தக் காலத்தில் இறைவனை நம்பிக்கையோடு அழைக்கவும் ஒருவர் முன்பே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  இந்த முதல் ரகம் தான் இறைவனை நாடுவதில் முதல் நிலையும் கூட. இது அடிப்படை அவசியம். இது இதயத்தின் ஆழத்தில் உணரப்படும் தேவை.

அடுத்ததாக  அது வேண்டும், இது வேண்டும் என்கிற ஆசையும் மனிதனை இறைவனை நாட வைக்கிறது. மனித ஆசைகளும், தேவைகளும் பாஞ்சாலியின் சேலையைப் போலவே எல்லையில்லாமல் வந்து கொண்டு இருப்பவை தானே? அதனால் அதைக் கொடு, இதைக் கொடு என்று எல்லாவற்றையும் தர முடிந்த கற்பகத் தருவான இறைவனை நாடுவதும் என்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி தேவைகளின் போதும் இறைவன் மீது மனிதனுக்கு ஏற்படும் பக்திக்கு அளவே இல்லை. இந்த இரண்டாம் ரகம் மற்றும் இரண்டாம் நிலையையும் இறைவன் இங்கு குறை கூறவில்லை. எதையாவது கேட்பதற்காவது இறைவனை நினைத்தாலும் இறைவனை நினைக்கும் செயலால் இந்த ரகத்தையும் புண்ணியசாலிகளாய் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

மூன்றாவதாக எதையும் அறிந்து கொள்ளும் தாகத்தை, ஞானத் தேடலை ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இந்த ரகத்தில் கூட்டம் அதிகமில்லை. தன் தேவைகள் முடியும் போது, மேலானதான ஒன்றை அறிந்து கொள்ள ஏற்படும் தாகம் என்ற தேவையை வெகுசிலரே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எல்லா ஞானத்தின் எல்லையும் இறைவனே என்பதால் ஞானத்தை நோக்கிப் போகிறவன் இறைவனை நாடிப் போகிறவனே ஆகிறான். முதல் இரண்டு அடிப்படை நிலைகளையும் கடந்து வருகிறவனே இந்த மூன்றாம் நிலையில் பயணிக்கிறான்.

நான்காவது ரகமும், நிலையும் மெய்ஞானி. ஒன்றை அறிவது வேறு. அறிந்ததில் ஐக்கியமாவது வேறு. இறைவனை நாடிச் சென்று, அறிந்து, உணர்ந்து, அந்த மெய்ஞானத்தில் ஐக்கியமாக முடிவது முடிவான உன்னத நிலை. அது மிகச் சிலருக்கே வாய்க்கும். கோடிகளில் ஒருவருக்கு மட்டும் வாய்க்கும் பெரும்பேறு அது.  இந்த நிலையில் சாதாரண மனிதர்களின் இயல்பான தேவைகளும் இல்லை. அறிவுமுதிர்ச்சியின் காரணமாக மனிதன் உணரும் தேவைகளும் இல்லை. தேவைகளே இல்லாமல், இதற்கு மேல் வேறு எதுவும் இல்லை என்று அறிந்து, அந்த நிலையிலேயே தங்கி விடும் உன்னத நிலை, உன்னத ரகம்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
அவர்களுக்குள் எப்போதும் என்னுடன் தொடர்பு கொண்டவனும், என் ஒருவனிடமே பக்தி பூண்டவனுமான ஞானி உயர்ந்தவன். ஞானிக்கு நான் மிகவும் பிரியமானவன். அதே போல எனக்கும் அவன் மிகவும் பிரியமானவன்.

மேற்கண்ட நால்வரும் உயர்ந்தவர்களே என்றாலும் ஞானி என்னுடைய ஆத்மா என்பதே என் முடிவு. ஏனெனில் அவன் மனதை அடக்கி என்னையே உயர்ந்த புகலிடமாகக் கொண்டிருப்பவன்.

பற்பல பிறவிகள் எடுத்து இறுதியில் சகலமும் வாசுதேவனே என்ற ஞானம் பெற்று என்னை அவன் சரணடைகிறான். அத்தகைய மஹாத்மா கிடைத்தற்கு அரியவன். 

இறைவனை நாடுவதாலேயே புண்ணியசாலிகளாக கருதப்படும் இந்த நான்கு ரக மனிதர்களும் உயர்ந்தவர்கள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதில் நான்காம் ரகமான ஞானி மிகவும் பிரியமானவன் என்கிறார். அதற்குக் காரணமாக இரண்டு காரணங்களையும், சிறப்புக் குணங்களையும் அவர் சொல்கிறார்.

முதலாவதாக, ஞானி இறைவனிடம் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறான். ஆபத்துகளோ, துன்பங்களோ மறைந்தவுடன் இறைவனை மறக்கிறது முதல் ரகம். ஒரு தேவை முடிந்து இன்னொரு தேவைக்காக ஏங்க ஆரம்பிக்கும் வரை இறைவனை மறக்கிறது இரண்டாம் ரகம். அறிய விரும்பும் விஷயம் பிடிபடாத போதும், குழப்பும் போதும், சுவாரசியம் இல்லாத போதும் தற்காலிகமாக மூன்றாவது ரகமும் இறைவனிடம் தொடர்பை இழக்கிறது. இறைவனிடம் தொடர்பை இழக்காதவன் ஞானி ஒருவனே. மேலும் ஞான நிலையை முழுமையாக அடைந்து இறைவனின் அலைவரிசைகளிலே இருக்கக் கூடியவன் அவன். மற்றெல்லாவற்றையும் விட இறைவனை அதிகமாக நேசிக்கிறவன் அவன். அப்படிப்பட்டவனை இறைவனும் அதிகம் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

ஆனால் அப்படிப்பட்ட நிலையை ஒருவன் அடைய முடிவது ஒரு பிறவியின் சாதனை அல்ல. பல பிறவிகளில் முயன்று கடைசிப் பிறவியில் கிடைக்கும் பலன் அது. எல்லாம் இறைவனே என்று சரணடைய முடிவது அப்படிப்பட்ட ஒரு மகாத்மாவுக்கே சாத்தியம்.

பாதை நீளும்....
-          என்.கணேசன்



5 comments:

  1. வணக்கம்

    நல்ல சிந்தனையுள்ள பதிவு நல்ல கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. aartho Jigyaasurarthaarthee gyaanee cha Bharatarshabha..
    theshaam gyaane nitya yukthah sa me bhakthascha me priyah..

    ReplyDelete
  3. we will analyses ourselves where we fit among 4 types of people. thanks for information to know

    ReplyDelete
  4. இறைவனை நாடுபவர்களை நான்கு ரகமாக கூறி... அதே வரிசையில் இறைவனுக்கு யார்? எந்த அளவு பிரியமானவர்கள்?? என்று கூறுவதும் சிறப்பு.

    ReplyDelete