அறிவார்ந்த ஆன்மிகம்-43

அந்த வகையில் பதினைந்தாம் நூற்றாண்டில்
வாரணாசியில் தோன்றிய ஞானி கபீர் தாசர். இவர்
பிறப்பு பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. நெசவுத் தொழில் செய்யும் ஒரு
மகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாரார் கூறுகின்றனர். ஒரு
பார்ப்பன விதவைக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து ஊர் அவச்சொல்லுக்குப் பயந்து அவளால்
கைவிடப்பட்டார் என்றும் பிறகு `நீரு' என்ற பெயருடைய ஒரு மகமதிய நெசவுக்காரரால் இவர் எடுத்து வளர்க்கப்
பட்டார் என்றும் மற்றொரு சாரார் கூறுகின்றனர். ஆனால் வளர்க்கப்பட்டது ஏழை மகமதிய
நெசவுக் குடும்பத்தில் தான் என்பதில் ஒருமித்த கருத்து நிலவுகின்றது.
சிறுவனாக இருக்கையிலேயே ராமானந்தர்
என்ற துறவியின் போதனைகளால் கபீர்
ஈர்க்கப்பட்டார். திருமணம் செய்து கொண்டு ஏழை நெசவாளியாகவே வாழ்ந்த போதும்
ஆன்மிகத்தில் மிக உயர்ந்த நிலையை இளமையிலே கபீர் எட்டி இருந்தார். இறைவன் ஒருவரே,
சாதி சமயப் பிரிவினைகள் கூடாது, ஆன்மிகத்தில் மேற்போக்காய் போதனைகளைப்
பின்பற்றுவதில் பயன் எதுவுமில்லை, உண்மையாய் ஆத்மார்த்தமாய் இறைவழியில் நடக்க
வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அவர் போதனைகளில் மிக முக்கியமாய் இருந்தன. அவரது
ஆன்மிக தத்துவக் கருத்துக்கள் அதிகமாக தோஹா என்ற ஈரடிக் கவிதை வடிவில் இருந்தன.
கபீரின் நேர்மையான ஆணித்தரமான போதனைகள்
மக்களை சிந்திக்க வைப்பதாகவும் கவர்வதாகவும் இருந்தன. அவர் தெள்ளத் தெளிவாகச்
சொன்னார். ”நமது கர்ம வினைகளுக்கானப் பலனை நாமே தான்
தீர்த்தாக வேண்டும். நமது நோக்கம் நேர்மையாக
இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த
வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின் விளைவுகளை
அவர்களே சந்திப்பர்.”
மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்த
கபீரிடம் இருந்த உண்மையான ஞான சக்தி இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலாரையும்
அவரிடம் ஈர்த்தது. இரண்டு மதங்களிலும் அறிவுக்குப் பொருந்தியவற்றை அவர்
ஆதரித்தும், அறிவுக்குப் பொருத்தமற்றதாய் தோன்றியதை மறுத்தும் அவர் வெளிப்படையாகப்
பேசினார். அதனால் இரு மதங்களில் இருந்தும் எதிர்ப்பு அவருக்கு இருந்த போதும் அவர்
போதனைகளைக் கேட்க அவர் குடிசைக்குப் பலர் சென்ற வண்ணம் இருந்தனர்.
அவர் குடிசைக்குச் செல்ல கசாப்புக் கடைத்
தெரு வழியாகப் போக வேண்டும் என்பதால் அக்காலத்தில் சில உயர்ஜாதி இந்துக்களுக்குத்
தயக்கம் இருந்தது. அதே நேரத்தில் ஒரு மகானிடம் இருந்து ஞான வாக்கியங்களைக்
கேட்டறியவும் அவர்களுக்கு பேரார்வம் இருந்தது. தங்கள் தயக்கத்தை அவர்கள் கபீரிடம்
வெளிப்படையாகவே சொன்ன போது கபீர் பாடினார்.
மனையொட்டி மாமிசக் கடை என வருந்துவது எதற்கு?
வினையொட்டி வருவதே வாழ்வு, அவரவர் வினை அவர்க்கு!
வெளி உலக அடையாளங்களை விட உள்மனம் செயல்
ஒட்டியதே ஆன்மிக வாழ்க்கை என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
அவரது தோஹாக்களின் ஆழமான ஆன்மிகக்
கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
”கபீரான
நான் மிக ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன்: நான் அது (இறைவன்) ஒன்றெனச் சொன்னால்,
அது இல்லை (தவறாகிப் போகும்), நான் இரண்டு
எனச் சொன்னாலும் அதுவும் நிந்தனையாகப் போகும், அது
எப்போதும் எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும்.” இறைவன் பற்றிய விவாதங்கள் அனாவசியம்
என்கிற தொனியில் இருக்கிறது இந்த தோஹா.
”எதுவரை,
“நான்” “என்” என்று
(அகந்தை என்னுள்) இருந்ததோ, “ஹரி” அங்கு வரவில்லை, எப்போது “ஹரி” அங்கு வந்துவிட்டாரோ, அப்போது, “நான்” “என்”
என்று என்னுள் இருந்த அகந்தையைக் காண முடியவில்லை.” கடவுள்
இருக்கும் இடத்தில் கர்வம் இருக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்
பாருங்கள்.
”கையிலுள்ள
ஜபமாலையோ, முறைப்படி தன்னியக்கமாக சுழற்றப்படுகிறது;
நாக்கோ உதட்டைச் சுழற்றி சுழற்றி மந்திரங்களை உச்சரிப்பதாகக்
காண்பித்துக் கொள்கிறது. ஆனால், மனமோ எங்கெங்கோ போய்
தடுமாறுகிறது. இதனைத் தான் ‘இறையைப் பற்றி ஆழ்ந்த
சிந்தனை’ எனச் சொல்வதா?”. பெரும்பாலான
நம்முடைய பிரார்த்தனை மற்றும் தியான நேரங்களின் தன்மை எப்படி இருக்கின்றன என்று
அருமையாக கபீர் சுட்டிக் காட்டுகிறார்.
”அரிசி
தூக்கிச் செல்லும் எறும்பு, வழியில் காணும் பருப்புக்கும் ஆசைப்பட்டால் அதற்கு இரண்டும்
இல்லாமல் போகும் அபாயம் உண்டு” அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது
சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது்
இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள்
இரண்டையும் தூக்கிச் சென்றுவிடும் என்று கபீர் எச்சரிக்கிறார். எறும்பின் சக்திக்கு பருப்பு அல்லது அரிசி
இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் இறைவன் பால் திரும்ப
வேண்டுமானால் மாயையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே அவர்
அறிவுரை.
கபீரின் பக்தி இயக்கம் கபீர் பந்த்
என்றழைக்கப்படுகிறது. அவரது சீடர்களும், பின்பற்றுவோரும் அந்த இயக்கத்தின் மூலம்
அவர் போதனைகளைப் பரப்பினார்கள். அம்பேத்கரின் குடும்பம் கூட கபீர் பந்த் இயக்கத்தின்
தொடர்பில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதனால் சிறுவயதில் இருந்தே அம்பேத்கர் கபீர்
பந்த் பாடல்கள் கேட்டே வளர்ந்தார். அவர் பௌத்த மதத்துக்கு மாறிய பிறகு, அவரது மரணத்துக்குச் சிறிது நேரம் முன்னால்கூட, அவர்
கபீர் பாடல்களைத் தனக்குள் பாடிக்கொண்டிருந்தார் என்கிறார் அவரது வாழ்க்கை
வரலாற்றை எழுதிய தனஞ்ஜய் கீர்.
மத ஒற்றுமையை வலியுறுத்தி வாழ்ந்த கபீர்
தாசரின் மறைவுக்குப் பின் அவர் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சண்டை அவர் உடலுக்கு
உரிமை கொண்டாடிய இந்து முஸ்லீம்களிடம் ஏற்பட்டது தான் வேடிக்கை. கடைசியில் அவர்
பிணத்தின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்த போது மலர்கள் மட்டுமே
இருந்ததாகவும், அவற்றை அவர்கள் பாதியாகப் பிரித்துக் கொண்டு அவரவர் முறைப்படி
அந்திமக் கிரியைகள் செய்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இன்றும் காசியில்
அவருடைய கோயிலும், அவர் சமாதியில் மசூதியும் இடம் பெற்று அவர் போதித்த மத
ஒற்றுமைக்கு சான்றாய் விளங்குகின்றன.
-
என்.கணேசன்
-
நன்றி: தினத்தந்தி –
ஆன்மிகம் - 31-12-2013
Well said sir..
ReplyDeleteதனஞ்ஜய் கீர் பற்றிய தகவல் புதிது... நன்றி...
ReplyDeleteகரங்குவிவார் உள்மகிழும்கோன்கழள்கள் போற்றி(இந்து)
ReplyDeleteசிரங்குவிவார் ஓங்குவிக்கும்சீரோன் கழள் போற்றி(இஸ்லாம்)