பரமேஸ்வரன் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டது போல சில வினாடிகள்
துடித்ததைப் பார்த்துத் தான் ஒரு நர்ஸ் டியூட்டி டாக்டரைக் கூப்பிட ஓடினாள். அவர்
வந்து பார்த்த போது பரமேஸ்வரன் ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்தார். டாக்டர் இதயத்
துடிப்பை பரிசோதனை செய்தார். அது இயல்பாக இருந்தது. மூச்சும் சீராக இருந்தது.
இரண்டு நிமிடங்கள் கழித்து வந்த நர்ஸிற்கு
சற்று முன் பார்த்தது இவரைத் தானா என்ற சந்தேகம் வந்தது. அரை மணி நேரம் கழித்து
வந்த பெரிய டாக்டருக்கும் பரமேஸ்வரனின் அமைதியான உறக்க நிலை ஆச்சரியப்படுத்தியது.
ஏதோ சரியில்லை!
மெல்ல பரமேஸ்வரனை அவர் உலுக்கினார்.
“சார்.... பரமேஸ்வரன் சார்”
பரமேஸ்வரன் சில வினாடிகளுக்குப் பிறகு
கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தார். 
“எப்படி இருக்கீங்க?”
பரமேஸ்வரன் முழு விழிப்பு நிலைக்கு வரா
விட்டாலும் பலவீனமான குரலில் சொன்னார். “நான்... குணமாயிட்டேன்....”
டாக்டர் தன் சர்வீஸில் இப்படி ஒரு தகவலை
எந்த நோயாளியிடம் இருந்தும் பெற்றதில்லை. ’பரவாயில்லை’
என்ற பதிலுக்குப் பதிலாக மயக்க நிலையில் ’குணமாயிட்டேன்’
என்ற வார்த்தையை பரமேஸ்வரன் பயன்படுத்தி இருக்கிறார் என்று பெரிய டாக்டர்
நினைத்துக் கொண்டார்.
”அப்படின்னா நாளைக்கு சர்ஜரியை செய்துடலாமா?” என்று நகைச்சுவையாக அவர் பரமேஸ்வரனைக் கேட்டார். 
பரமேஸ்வரன்
கஷ்டப்பட்டு சொன்னார். “வேண்டாம்.... குணமாயிட்டேன்”
அடுத்து ஒரு வார்த்தை பேசும் சக்தி
பரமேஸ்வரனிடம் இருக்கவில்லை. மறுபடி உறங்கி விட்டார். 
‘இந்த ஆளுக்குப் புத்தி பேதலித்து விட்டது
போல் இருக்கிறது’ என்று டாக்டர் நினைத்த போதும் பரமேஸ்வரனின் தற்போதைய
மாற்றமும், அதன் காரணமும் கேள்விக்குறியாக இருந்தது.  எதற்கும்
எல்லாவற்றையும் ஒரு தடவை மீண்டும் பரிசோதிப்பது நல்லது என்று அவருக்குத் தோன்றியது. 
அடுத்த அரை மணி நேரம் நடந்த பரிசோதனைகள் அவரை
திகைப்படைய வைத்தன. பரமேஸ்வரனின் இதயத்தில் அடைப்புகள் இருந்ததன் அறிகுறியே
இல்லை.  அவர் சில மணி நேரங்களுக்கு முன்
எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை நர்ஸிடம் கொண்டு வரச் சொன்னார். அவற்றைக் கொண்டு
வரப் போன நர்ஸ் சிறிது தாமதமாக வந்து குழப்பத்துடன் அந்த ரிப்போர்ட்டுகள் எதையும்
காணவில்லை என்று சொன்னாள்.
என்ன ஆயிற்று எல்லோருக்கும், ஏன் இன்றைக்கு
ஏதேதோ போல் நடந்து கொள்கிறார்கள் என்று டாக்டர் திகைத்தார். ”நன்றாகத் தேடும்மா”
“தேடிட்டோம் சார். காணோம்”
“அதெப்படிம்மா காணாமல் போகும்” என்று டாக்டர் கேட்டார். அதைச் சொல்ல முடிந்தால் அதைக் கண்டு பிடித்தே
விடுவோமே என்பது போல நர்ஸ் அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
ஐசியூவில்
நுழைந்த பெரிய டாக்டர் உடனடியாக வெளியே வந்து தாத்தாவின் கதை முடிந்து விட்டது
என்று சொல்வார் என்று ஆவலாக எதிர்பார்த்த மகேஷ் பொறுமை இழந்து விட்டான். பெரிய
டாக்டர் வெளியே வருவதற்குப் பதிலாக நர்ஸ்களும், டியூட்டி டாக்டரும் பரபரப்புடன்
வெளியே வந்து போவதும், தாத்தாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைக் காணாமல் தேடிக்
கொண்டிருந்ததும் அவனுக்கு எரிச்சலைக் கிளப்பியது.
ஒரு நர்ஸ் ஈஸ்வரிடம் ”அந்த ரிப்போர்ட்டுகள் உங்களிடம் இருக்கிறதா” என்று கேட்க
ஈஸ்வர், “அதை நான் அப்போதே உங்களிடம் தந்து விட்டேனே” என்று சொன்னதும்
அவள் “ஆமா, ஆனா அது இப்ப காணோம்” என்று சொல்லி விட்டுப் போனாள். 
“என் தாத்தாவுக்கு
என்ன ஆச்சு” என்று மகேஷ் டியூட்டி டாக்டரிடமும் கேட்டுப்
பார்த்தான். டியூட்டி டாக்டர் என்ன சொல்வது என்று தெரியாமல் ’பெரிய டாக்டர்
வந்து சொல்வார்’ என்று சொல்லி விட்டுப் போனார். 
’தேவையில்லாமல் அந்த ரிப்போர்ட்டுகளை தேடுவதை விட்டு
விட்டு அவர் செத்துட்டார்னு சொல்லித் தொலையுங்களேண்டா” என்று மனதிற்குள்
மகேஷ் கத்தினான். 
இந்த நேரத்தில்
ஆனந்தவல்லியையும், மீனாட்சியையும் அழைத்துக் கொண்டு விஸ்வநாதன் வந்தார். ”என்னடா ஆச்சு?” என்று அவர் மகனைக் கேட்டார். 
”சரியா சொல்ல மாட்டேங்குறாங்க” என்று எரிச்சலுடன்
மகேஷ் சொன்னான். 
அவன் சொல்லி முடித்த
போது பெரிய டாக்டர் குழப்பத்துடன் ஐசியூவில் இருந்து வெளியே வந்தார். தன்
நடிப்புத் திறமையை அரங்கேற்றும் நேரம் வந்து விட்டதென்று நினைத்த மகேஷ் ”என் தாத்தா எப்படி இருக்கார் டாக்டர்” என்று குரல்
தழுதழுக்கக் கேட்டான். கேட்கும் போதே அவன் கண்கள் நிறைய ஆரம்பித்தன. 
என்ன சொல்வது என்று
தெரியாமல் அவர் அவனையே உள்ளே போய் பார்க்கச் சொல்லி கை காண்பித்து விட்டுச்
சென்றார். ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்பது தான் அதன் அர்த்தம் என்று எடுத்துக்
கொண்ட மகேஷ் ஆனந்தக் கண்ணீருடன் “தாத்தா” என்று கதறிக் கொண்டே உள்ளே ஓடினான். 
அவன் அப்படிக் கதறி
ஓடுவதைப் பார்த்த விஸ்வநாதன், மீனாட்சி, ஆனந்தவல்லி மூவரும் அவன் பின்னால்
விரைந்தார்கள். ஈஸ்வர் கலக்கத்துடன் பெரிய டாக்டர் பின்னால் போனான். “என்ன ஆச்சு
டாக்டர்?”
உள்ளே சென்ற மகேஷ் பரமேஸ்வரன் மீது விழுந்து அழுது
புலம்ப பரமேஸ்வரன் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தார். பேரன் துக்கத்தைப் பார்த்து
மனம் நெகிழ்ந்த அவர் பலவீனமான குரலில் சொன்னார். “எனக்கு ஒன்னும் ஆகலைடா
அழாதே.....”
அவர் கண்கள் திறந்து மெல்ல பேசியதில்
இரண்டு இதயங்கள் மலர்ந்தன. இரண்டு இதயங்கள் நொறுங்கின. மீனாட்சிக்கு ஆனந்தக்
கண்ணீரை அடக்கக் கஷ்டமாக இருந்தது. பரமேஸ்வரன் பேசியது ஆனந்தவல்லி வயிற்றில் பாலை
வார்த்தது. அவள் மகனை அது வரை இல்லாத பாசத்துடன், கண்கள் ஈரமாக, பார்த்தாள்.  
மகேஷ் தன் காதில் விழுந்த சத்தம் பிரமையா
என்று சந்தேகப்பட்டான். ஆனால் சந்தேகத்தை ஆனந்தவல்லியின் குரல் தீர்த்தது. ”டேய் உடம்புக்கு முடியாதவன் மேல அப்படி
விழுந்து புரளாதேடா”
மகேஷ் திகைப்புடன் நிமிர்ந்தான்.
பரமேஸ்வரன் பேரனை ஆறுதல் படுத்தும் விதத்தில் மெல்ல புன்னகைத்து விட்டுத் தன் தாயையும்,
மகளையும் பார்த்தார். மீனாட்சி ஓடி வந்து தன் தந்தையின் கை ஒன்றை பெருத்த
நிம்மதியுடன் பிடித்துக் கொண்டாள். ஆனந்தவல்லி மகனின் காலடியில் உட்கார்ந்தாள்.
மகளையும், தாயையும் பார்த்து புன்னகைத்த பரமேஸ்வரன் விஸ்வநாதனைப் பார்த்து லேசாகத்
தலையசைத்தார். அவர் கண்கள் வேறு யாரையோ தேடின.
மகனையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி
கேட்டாள். “யாரைத் தேடறடா. ஈஸ்வரையா? அவன் வெளியே உட்கார்ந்திருக்கான். கூப்பிடவா?”
பரமேஸ்வரன் ஆம் என்ற விதத்தில் மிக லேசாகத்
தலையசைக்க ஆனந்தவல்லி மகேஷிடம் சொன்னாள். “ஏண்டா மரம் மாதிரி நிற்கறே. போய் ஈஸ்வரைக்
கூப்பிடுடா!”
மகேஷிற்கு கிழவியின் கழுத்தை நெறித்தால்
என்ன என்று தோன்றியது. மெல்ல வெளியேறினான். 
டாக்டரிடம் பேசி முடித்திருந்த ஈஸ்வர்
மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கி இருந்தது. மகேஷ் வெளியே வந்ததைப் பார்த்துக்
கேட்டான். “என்ன மகேஷ்?”
“நீயே போய் பாரு” என்ற மகேஷ்
பெருத்த ஏமாற்றத்துடன் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சுரத்தில்லாமல் சரிந்தான்.
அவனைத் தொடர்ந்து விஸ்வநாதனும் வெளியே வந்து மகன் அருகே உட்கார்ந்தார்.
ஈஸ்வர் தயக்கத்துடன்
ஐசியூவிற்குள் போனான். பரமேஸ்வரன் பேரனை மிகுந்த சிநேகத்துடன் பார்த்தார்.
ஈஸ்வருக்கு மனம் நிம்மதியாயிற்று. அவர் அவனை பக்கத்தில் வருமாறு தலையசைத்தார். 
ஈஸ்வர் தயக்கத்துடனேயே
அவர் அருகே சென்றான். அவர் அவனைக் குனியும் படி சைகையில் சொன்னார். ஏதோ சொல்லப்
போகிறார் என்று குனிந்தான். தன் சகல பலத்தையும் திரட்டி சற்று மேல் எழும்பி பேரன்
கன்னத்தில் பரமேஸ்வரன் முத்தமிட்டார். ஈஸ்வர் கண்கள் அவனை அறியாமல் கலங்கின. 
மீனாட்சி சத்தமாக அழுதே
விட்டாள். முதல் முறையாக ஒரு அதிசயம் நடந்திருக்கிறது! அவள் அண்ணன் மகனை அவள்
தந்தை அங்கீகரித்து விட்டார். அவனும் அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டான். அது
போதும் அவளுக்கு!
ஆனந்தவல்லி பேத்தி
மீது எரிந்து விழுந்தாள். “சீரியல் நடிகை மாதிரி எப்பப் பாரு என்னடி அழுகை?”
மகளை அவள் திட்டியதை பரமேஸ்வரன்
ரசிக்கவில்லை. அம்மாவை அவர் முறைத்தார். ஆனந்தவல்லி அதை சட்டை செய்யாமல் கேட்டாள்.
“இப்ப உனக்கு எப்படிடா இருக்கு?”
மெல்ல பரமேஸ்வரன் சொன்னார். “அண்ணா என்னை
குணப்படுத்திட்டான்மா”
அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. “களைப்பாய்
இருக்கு... தூங்கறேன்”.  அவர் கண்கள்
தானாக மூடின. மறுபடி அவர் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார். 
ஆனந்தவல்லி
திகைப்புடன் மகனைப் பார்த்தாள். ஈஸ்வர் டாக்டர் தெரிவித்ததை அத்தையிடமும்,
பாட்டியிடமும் சொன்னான். பரமேஸ்வரன் இதயத்தில் இருந்த அடைப்புகளை இப்போது காணோம்,
அடைப்புகள் இருந்ததாய் தெரிவித்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளையும் காணோம் என்று கேள்விப்பட்டவுடன்
ஆனந்தவல்லி பிரமிப்புடன் மெல்ல எழுந்தாள். 
“எனக்கு வீட்டுக்குப்
போகணும். நீயும் வர்றியாடி”
”என்ன அவசரம். அப்பா கொஞ்சம் முழிச்ச பிறகு போலாமே”
ஆனந்தவல்லி சம்மதிக்கவில்லை. 
”நீ
வராட்டி பரவாயில்லை.. டிரைவர் என்னை வீட்டுல விட்டுட்டு வரட்டும். எனக்கு
வீட்டுக்குப் போகணும்”
சில நேரங்களில் பாட்டி சின்னக் குழந்தை போல
பிடிவாதம் பிடிப்பதாக எண்ணிய மீனாட்சி ஈஸ்வரைப் பார்த்து தலையாட்ட ஈஸ்வர்
ஆனந்தவல்லியை கார் வரை அழைத்துச் சென்றான். ஆனந்தவல்லி கனவில் நடப்பவள் போல்
நடந்தாள். யாரையும் பார்க்கவும் இல்லை. யாரிடமும் பேசவும் இல்லை. 
ஈஸ்வர் கவலையுடன் கேட்டான். “பாட்டி
உங்களுக்கு உடம்புக்கு எதுவுமில்லையே”
“நல்லா தாண்டா இருக்கேன்” என்று கரகரத்த குரலில் சொன்ன ஆனந்தவல்லி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
அவளை டிரைவருடன் அனுப்ப மனமில்லாமல் ஈஸ்வர் தானே பாட்டியை காரில் வீட்டுக்கு
அழைத்துச் சென்றான். வீடு சேர்ந்தவுடன் தனதறைக்கு நேராகச் சென்ற ஆனந்தவல்லி
கொள்ளுப் பேரனிடம் சொன்னாள். “இனி நீ போடா. தாத்தா கூட இரு. அவனை வீட்டுக்கு கூட்டிகிட்டு
வா”
ஈஸ்வர் நகர்ந்தவுடன் கதவை உடனடியாகச்
சாத்திய ஆனந்தவல்லி வேகமாகச் சென்று தன் மூத்த மகனின் புகைப்படத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு தன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். 
மகன் புகைப்படத்தில் முத்தமிட்டு அந்தப்
புகைப்படத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்ட அவள் கண்கள் கடலாயின. “குழந்தே...
குழந்தே.... உன்னைக்கூட அன்னைக்கு நீ காப்பாத்திக்கலை. ஆனா உன் தம்பியை இப்ப காப்பாத்திட்டியேடா....
போதும்டா,  இந்தக் குடும்பத்துல நீ எல்லா
கடனையும் தீர்த்துட்டே. அம்மா அப்ப ரொம்பவே மோசமா பேசிட்டனாடா? மன்னிச்சுடுடா...!
வெந்து நொந்த மனசு பைத்தியம் மாதிரி பேசிச்சுன்னு நினைச்சுக்கோடா....”
மகன் புகைப்படத்தைப் பிடித்துக் கொண்டு
அன்று அழுததைப் போல ஆனந்தவல்லி வாழ்க்கையில் அதற்கு முன்பும் அழுததில்லை, அதற்குப்
பின்பும் அழுதது இல்லை. கோபம் கொள்கையில் சரமாரியாக வார்த்தைகள் வந்தது போல
இப்போது ஏனோ அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனம் நிறைகையில் ஏனோ மௌனமே மொழியானது.
கடைசியில் மகன் படத்தைக் கட்டிப்பிடித்தபடியே அவள் உறங்கிப் போனாள்.....!
அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் பரமேஸ்வரனும்
ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தார். அவரைத் தனியறைக்கு மாற்றி இருந்தார்கள். அவர்
பக்கத்தில் மீனாட்சி, விஸ்வநாதன், மகேஷ் மூவரும் இருந்தார்கள். அவர் கண்
விழிக்கையில் அக்கறையுடன் பக்கத்திலேயே அவன் உட்கார்ந்திருந்தது தெரிய வேண்டும்
என்பதற்காக மகேஷ் அங்கிருந்தான். அவனுக்கிருந்த சோகத்திற்கு அளவே இல்லை. 
”தாத்தா தான் பிழைச்சுகிட்டாரே. இன்னும் ஏண்டா சோகமாய்
இருக்கே?” என்று மீனாட்சி மகனைக் கேட்க விஸ்வநாதன் மனைவியின்
வெகுளித் தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார். 
ஈஸ்வர் பெரிய
டாக்டருடன் பேசிக் கொண்டிருந்தான். அவருக்கு இன்னமும் திகைப்பு அடங்கியபாடில்லை. இந்த
21 ஆம் நூற்றாண்டில் இப்படி மாயாஜாலம் போன்ற நிகழ்வுகளும் நடக்குமா என்ன? என்று தனக்குள்
பல முறை கேட்டுக் கொண்ட அவர் பிறகு ஈஸ்வரிடம் அதை வாய் விட்டே கேட்டார். 
ஈஸ்வர் சொன்னான்.
“நமக்கு காரணம் புரியாமல் இருந்தாலோ, புரிந்தாலும் அது அறிவுக்கு எட்டாத
பிரம்மாண்டமாக இருந்தாலோ நாம் அதை மாயாஜாலம் மாதிரின்னு நினைச்சுக்கறோம். இதெல்லாம்
விஞ்ஞான விதிகளுக்கும் மேலான சில விதிகள் படி நடக்கிற விஷயங்கள். அந்த விதிகள்
பரிச்சயமானவங்களுக்கு இதெல்லாம் அதிசய நிகழ்ச்சிகள் அல்ல”
”அந்த ஸ்கேன் ஃபோட்டோக்களும், ரிப்போர்ட்டுகளும் இருந்திருந்தால்
இதை நாம் ஆதாரபூர்வமாகவே பதிவு செய்திருக்கலாம். ஆனால் அதெல்லாமும் காணாமல் போனது
தான் என்னால் புரிஞ்சுக்க முடியல”
”இதெல்லாம் ஆதாரபூர்வமாகப் பதிவாக வேண்டாம்னு அந்த
சக்திகள் நினைச்சு இருக்கலாம்....”
“ஏன் அப்படி?”
ஈஸ்வர் பதில் ஏதும் சொல்லவில்லை. இதற்குப்
பதில் சொல்லி டாக்டருக்குப் புரிய வைப்பது கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது. அவன்
டாக்டரிடம் ”தாத்தாவை
எப்போது டிஸ்சார்ஜ் செய்வீர்கள்?”
என்று கேட்டான்.
டாக்டர் நாளை காலை இன்னொரு முறை சில
பரிசோதனைகள் செய்து  மறுபடி உறுதிப்படுத்திக்
கொண்டு பரமேஸ்வரனை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொன்னார்.
ஈஸ்வர் போன பிறகு அவன் மீதும் டாக்டருக்கு
சந்தேகம் வந்தது. கடைசியாக நர்ஸிடம் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை வாங்கிப்
பார்த்தவன் அவன் தான். அவன் அந்த நர்ஸிடமே திருப்பிக் கொடுத்து விட்டதாகச் சொல்கிறான்,
அதை அந்த நர்ஸும் ஒப்புக் கொள்கிறாள். அவளுக்குத் தெரியாமல் மறுபடியும் அந்த
ரிப்போர்ட்டுகளை அவனே எடுத்திருப்பானோ?
குடும்பமே ஏதோ ரகசியக் குடும்பம் போல
அவருக்குத் தோன்றியது. ஒரு சிவலிங்கம் காணாமல் போனதையும் பரமேஸ்வரனின் அண்ணன் கொலை
செய்யப்பட்டதையும் பத்திரிக்கைகளில் படித்த நினைவு வந்தது. அந்தக் கிழவர்
பத்மாசனம் கலையாமலேயே கடைசி வரை இருந்தார் என்று பத்திரிக்கைகளில் எழுதி
இருந்தார்கள்.... அந்தக் கிழவர் தான் தம்பியின் கனவில் வந்து காப்பாற்றி இருப்பதாக
குடும்பத்தினர் பேசிக் கொள்வது அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும்
பரமேஸ்வரனின் இதய அடைப்புகள் நீங்கி இருப்பதென்னவோ உண்மை தான்....
ஆஸ்பத்திரியின் ரகசிய காமிரா மூலம் எடுத்த
வீடியோக்களில் ஏதாவது கிடைக்கிறதா என்று டாக்டர் பார்க்க எண்ணினார்.
பரமேஸ்வரனுக்கு குணமானது எப்படி என்று அறிய அந்த வீடியோக்கள் உதவா விட்டாலும் அந்த
ரிப்போர்ட்டுகள் காணாமல் போனது எப்படி என்று அறியவாவது அவை உதவும் என்று
நினைத்தார். 
சிறிது நேரத்தில் அந்த வீடியோவையும் அவர்
பார்த்தார். பார்க்கையில் முழுக் கவனமும் அந்த ரிப்போர்ட்டுகளின் மீதே இருந்தன.
ரிப்போர்ட்டுகள் வழக்கமாக வைக்கப்படும் இடத்திலேயே இருப்பதையே பார்த்துக் கொண்டு
வந்த அவர் திடீரென்று அடுத்த ஃப்ரேமில் அந்த ரிப்போர்ட்டுகள் காணாமல் போனதைப்
பார்த்து திகைத்தார். 
மறுபடி ஒரு நிமிடம் பின்னுக்கு வந்து ஸ்லோ
மோஷனில் வீடியோவை ஓட விட்டுப் பார்த்தார். 
ரிப்போர்ட்டுகள் இருந்த ஃப்ரேமிற்கும், இல்லாமல் போன ஃப்ரேமிற்கும் இடையே ஒரு
வினாடிக்கும் குறைவான நேரத்தில் மின்னல் ஒளி போல ஏதோ தோன்றி மறைந்த மாதிரி
இருந்தது. அந்த ஒளியோடு சேர்ந்து அந்த ரிப்போர்ட்டுகளும் மாயமாக மறைந்திருந்தன. 
டாக்டருக்குத் தன் கண்களையே நம்ப
முடியவில்லை....! அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது.
(தொடரும்)
-         
என்.கணேசன்