என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 1, 2012

பரம(ன்) ரகசியம் 16குருஜி மறுபடி பார்த்தசாரதி பக்கம் திரும்பிய போது அவர் மனதில் ஓடிய எண்ணங்களின் சாயல் கூடத் தெரியவில்லை. அமைதியாகக் கேட்டார். “அப்படிப் பார்த்தால் அந்த சிவலிங்கம் இப்ப யார் கிட்ட போய் சேரணும்கிறதும் முடிவாகி இருக்கணுமே?

பசுபதி சாகறதுக்கு முன்னாடி அந்த சிவலிங்கம் பரமேஸ்வரனோட பேரன் கிட்ட போகணும்கிற மாதிரி சொல்லி இருக்கார். ஆனா அந்தப் பேரன் அமெரிக்கால ஏதோ ஆராய்ச்சியாளனா இருக்கான். அவன் பசுபதியையோ, அந்த சிவலிங்கத்தையோ பார்த்தது கூட இல்லையாம். அமெரிக்காலயே செட்டில் ஆனவன். பசுபதி மாதிரி ஆன்மிகவாதியாவும் அவன் தெரியலை..

முதல் முதலில் அந்தத் தகவலைக் கேட்பவர் போல கேட்ட குருஜி புன்னகையுடன் சொன்னார். “சிவபக்தரான பசுபதி அந்த சிவலிங்கத்தை ஆராய்ச்சியாளனான பேரன்  கிட்ட அதை சேர்க்க நினைச்சதுக்குக் காரணம் அதைப் பற்றி அவன் ஆராய்ச்சி செய்யட்டும்னு இருக்குமோ?

பார்த்தசாரதியும் புன்னகை செய்தார். “இந்தக் கேஸ்ல எல்லாமே புதிரா தான் இருக்கு

குருஜி சொன்னார்.ஒருவேளை அந்த சிவலிங்கம் யார் கிட்ட போய் சேரணும்கிறதை ஒரு குழு தீர்மானம் செய்வதாகவே வச்சுக்குவோம். அந்தக் குழு ஆட்கள் யார்னு தீர்மானம் செய்யறது யார்? பல நூறு வருஷங்களுக்கு முந்தின சிவலிங்கம்கிறப்ப அப்ப இருந்து இப்ப வரைக்கும் அந்தக் கால ஆள்களே இருக்க வாய்ப்பில்லையே? அந்த சித்தர் கூட அந்த ஆரம்பக்கால ஆளாக இருக்கவும் வாய்ப்பில்லை....

பார்த்தசாரதிக்கு குருஜி சொன்னதும் அறிவு பூர்வமானதாகவே தோன்றியது. அவர் சிரித்துக் கொண்டே குருஜியிடம் சொன்னார். “இதெல்லாம் நம்ப எனக்கும் முடியலை தான். ஆனால் ஆரம்பத்தில் இருந்து எல்லாமே புதிரா இருந்ததால எதை நம்பறது எதை விடறதுன்னு எனக்குத் தெரியலை. பசுபதியோட அம்மா கிட்ட தெரியாம கேட்டுட்டேன். “இதெல்லாம் உண்மையா இருக்குமோன்னு. கிழவி என் கிட்ட “மூளை இல்லை?யான்னு வெளிப்படையாவே கேட்டுட்டாங்க. இப்ப அந்த சிவலிங்கம் யார் கிட்ட போகணும்னு தீர்மானம் பண்ணி இருக்கறது அந்தக் குழு இல்லையே, அந்தக் கொலைகாரக் கூட்டம் தானேன்னு கேட்டு என் வாயையும் அடைச்சுட்டாங்க...

குருஜி அடுத்த கேள்வியை மிகவும் கவனமாகப் புன்னகையுடன் கேட்டார். “உங்க போலீஸ் உள்ளுணர்வு என்ன சொல்லுது

“இதுல அறிவுக்கு எட்டாத நிறைய விஷயம் இருக்குன்னு சொல்லுது...

“நீங்க பரமேஸ்வரனோட அமெரிக்கா பேரன் கிட்ட பேசினீங்களா?

“அவன் நாளைக்கு தான் இந்தியா வர்றான் குருஜி. ரெண்டு நாள் கழிச்சு தான் அவனைப் போய் பார்க்கணும். அதுக்கு முன்னாடி அவனைப் பத்தின தகவல்களும் சேகரிக்கணும்

அவனைப் பற்றி எல்லாத் தகவல்களையும் சேகரித்து அறிந்திருந்த குருஜி மனதில் சொல்லிக் கொண்டார். “அவனும் புதிரானவன் தான்

கேஷ் தந்தையிடம் சொன்னான். “அம்மா செய்யற அமர்க்களத்தைப் பார்த்தா அமெரிக்க ஜனாதிபதியே இந்த வீட்டுக்கு வர்ற மாதிரி தோணுது...

விஸ்வநாதன் புன்னகை செய்தார். “அவளுக்கு அவங்கண்ணான்னா உயிர்டா. அவனோட மகன் முதல் தடவையா இங்க வரான்கிறதால அவளுக்குத் தலை கால் புரிய மாட்டேங்குது. இது வரைக்கும் அவள் அவனைப் பார்த்தது கூட இல்லை. அதான்....

மகேஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும் ஈஸ்வரின் வருகை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அம்மா மீனாட்சி மருமகன் வரவுக்கு செய்யும் ஆயத்தங்களும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

இது வரையில் பரமேஸ்வரனின் செல்லப் பேரனாக வலம் வந்த அவனுக்கு ஈஸ்வர் வரவு எல்லா விதங்களிலும் ஒரு போட்டி வரவாகத் தான் பட்டது. தாத்தாவிடம் கோடிக்கணக்கில் இருந்த சொத்துகளுக்கு தான் தான் ஒரே ஒரு வாரிசு என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வளர்ந்தவன் அவன். மகனைப் பற்றி பேசுவதைக் கேட்கக் கூட விரும்பாதவராய் பரமேஸ்வரன் இருந்ததை மிக வரவேற்றவன் அவன். மீனாட்சி தன் அண்ணன் சங்கரிடம் அடிக்கடி பேசி வந்ததை ஆதரிக்காதவன் அவன். தன் அண்ணனைப் போன்ற ஜீனியஸ், தங்கமான மனிதன் உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்று அவள் அடிக்கடி சொல்வதை அவனால் ரசிக்க முடிந்ததில்லை. இன்று வரை மாதம் ஒரு முறை அண்ணன் அறைக்குச் சென்று அவர் வாங்கி இருந்த நூற்றுக் கணக்கான பதக்கங்களையும், கோப்பைகளையும் அவள் துடைத்து பொருட்காட்சிக்கு வைப்பது போல வரிசையாக வைத்து ஒரு முறை ரசித்து விட்டு வருவது அவனுக்குக் குழந்தைத்தனமாகப் பட்டது. அவன் தாயிடம் அதை ஜாடையாக சொல்லியும் பார்த்திருக்கிறான். ஆனால் இயல்பிலேயே வெகுளியான மீனாட்சி அவன் தாய் மாமனை அறியாததால் அப்படிப் பேசுகிறான் என்றும் அவனை சந்தித்திருந்தால் அந்த மாதிரி எல்லாம் பேச மாட்டான் என்றும் நினைத்திருக்கிறாள்.

எத்தனையோ முறை மீனாட்சி சங்கரிடம் போனில் பேசும் போது அவனையும் பேசச் சொல்லி இருக்கிறாள். வேண்டா வெறுப்பாக எப்போதாவது ஒரு முறை ஹலோ சொல்பவன் அவள் போன் பேசும் சந்தர்ப்பத்தில் முடிந்த வரை அந்த இடத்தில் இல்லாமல் இருக்கக் கற்றுக் கொண்டிருந்தான்.  மாமா இறந்ததைக் கேள்விப் பட்ட போது, விட்டது சனியன் என்று அவன் நினைத்திருக்கிறான். என்றாவது மாமா திரும்பி வந்து தாத்தாவும் மாமாவும் சமாதானமாகி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவன் மனதின் அடியில் இருந்தது தான் அதற்குக் காரணம். மாமா இறந்த பிறகு மாமாவின் மகன் ஈஸ்வரை ஒரு பொருட்டாக அவன் நினைத்ததே இல்லை. ஆனால் எதிர்பாராத விதமாக ஈஸ்வர் வருவது அவனுக்குள் பயத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பரமேஸ்வரன் ஈஸ்வர் மீதும் பாசம் வைக்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனை பெரிதாக உருவாக ஆரம்பித்து விட்டது.

தாத்தா ஈஸ்வர் வரவைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அறிந்து கொள்ள அவன் நிறைய முயற்சி செய்தான். ஆனால் அதை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஈஸ்வர் வருகையைப் பற்றி அவரிடம் பேச்சு வாக்கில் சொல்லிப் பார்த்திருக்கிறான். ஆனால் அவர் அது காதில் விழாதது போலவே இருந்தாரே ஒழிய ஆதரவாகவோ, எதிராகவோ எதுவும் சொல்லவில்லை.  

“அம்மா எங்கே?மகேஷ் தந்தையிடம் கேட்டான்.

“கிழவி கிட்ட லாப் டாப்பை எடுத்துகிட்டு போயிருக்கிறாள்...விஸ்வநாதன் சொன்னார்.

“கிழவிக்கு என்ன கம்ப்யூட்டரில் திடீர்னு ஈடுபாடு

ஈஸ்வர் பத்தி தினமும் ஏதாவது இண்டர்நெட்டில் கிழவி தேடித் தேடி படிக்குது. ஃபேஸ் புக்குல எல்லாம் போய்  அவனைப்பத்தி படிக்குது...

மகேஷ் திகைப்புடன் தந்தையைப் பார்த்தான். ஆனந்தவல்லிக்கு தன் மகன் பரமேஸ்வரனைத் தவிர யாருமே மனிதர்களாகத் தென்பட்டதாக அவன் அறியவில்லை. மகனைப் பார்த்து மட்டும் அவள் புன்னகைப்பாள். பேத்தியிடம் ஓரளவாவது முகத்தை இயல்பாக வைத்திருப்பாள். ஆனால் விஸ்வநாதனையும், மகேஷையும் பார்க்கும் போதெல்லாம் அவள் முகத்தில் மெலிதான அலட்சியம் கலந்த இகழ்ச்சி என்றுமே நிலவும். அவள் தகுதிக்கு அவர்கள் குறைந்தவர்கள் என்பது போன்ற பாவனையுடன் தான் அவள் என்றுமே பார்ப்பாள். அவர்களை ஒரு பொருட்டாக அவள் என்றும் நினைத்ததே இல்லை. அது அவர்கள் இருவருக்கும் பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது. தன் மனதில் தோன்றியதை எல்லாம் அபூர்வமாக மட்டுமே வெளியிடும் விஸ்வநாதன் தன் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் மகேஷ் அதைத் தாங்க முடியாமல் தாத்தாவிடமே புகார் செய்திருக்கிறான்.

பரமேஸ்வரன் பேரனை சமாதானப்படுத்தி இருக்கிறார். “எங்கம்மா எப்பவுமே அப்படித்தான். மாத்த முடியாத கேஸ் அது. கண்டுக்காதே...

அப்படிப்பட்ட ஆனந்தவல்லி ஈஸ்வரைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதை மகேஷால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனந்தவல்லிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் நிறைய இருந்தன.... கிழவிக்கு என்ன ஈஸ்வர் மேல திடீர் அக்கறை. இத்தனை காலம் அவன் இருக்கானா செத்தானான்னு கூட கிழவி தெரிஞ்சுக்க விரும்பினதில்லை....

கிழவியோட புருஷன் பார்க்க அப்படியே அவன் மாதிரி அழகாய் இருப்பாராம். உங்கம்மா அவன் ஃபோட்டோவைக் காண்பிச்ச பிறகு கிழவியும் உங்க தாத்தாவும் திகைச்சுப் போயிட்டாங்களாம்... அவனைப் பத்தி உங்க தாத்தா அப்புறம் எதுவும் பேசலையாம்.. ஆனா கிழவி அவனைப் பத்தி பேசறதை அப்புறம் நிறுத்தலையாம்...

அம்மாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலைஎன்று மகேஷ் மனதில் நினைத்துக் கொண்டான். சிறிது யோசித்து விட்டு தந்தையிடம் கேட்டான். “வர்றவன் எத்தனை நாள் இருப்பானாம்?

தெரியலைஎன்ற விஸ்வநாதன் குரலைத் தாழ்த்திக் கொண்டு மகனிடம் சொன்னார். அவனைப் பிடிக்குதோ இல்லையோ அதை வெளிப்படையாக அவன் கிட்ட காண்பிச்சுக்காதே. அவன் அமெரிக்கால நல்ல வேலையில் இருக்கிறவன். அதனால இங்கே ஒன்னும் நிரந்தரமா தங்கிடப் போறதில்லை.... ஏதோ கொஞ்ச நாள் தான் இங்கே இருக்கப் போறான். அது வரைக்கும் நல்லா நட்பாவே இரு

மகேஷ் தலையாட்டினான்.  பல விஷயங்களில் அவனும் அவரும் ஒத்துப் போனார்கள். அதனால் அவரிடம் அவனால் மனம் விட்டு பல விஷயங்களைப் பேச முடிந்தது. அவர் சொல்லுக்கு அவன் மதிப்பும் வைத்து இருந்தான். அவர் சொன்னது போல ஈஸ்வரை சில நாட்கள் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்தான். ஆனால் ஈஸ்வரை சகித்துக் கொள்வது எத்தனை கஷ்டம் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை...

நாளைக்கு ஃப்ளைட் எத்தனை மணிக்கு வருதுடி?ஆனந்தவல்லி பேத்தியைக் கேட்டாள்.
“காலைல ஆறு மணிக்கு பாட்டி

கூட்டிகிட்டு வர யாரு போறீங்க?

மீனாட்சி உடனடியாகப் பதில் சொல்லாமல் எதிரே அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்தாள். பரமேஸ்வரன் பேசப்படும் விஷயத்துக்கு சம்பந்தமே இல்லாதவர் போல அமர்ந்திருந்தார்.

மீனாட்சி சொன்னாள். “நான் மட்டும் தான் போகணும் போல இருக்கு... மகேஷைக் கூப்பிட்டேன். ஆறு மணிக்கு ஏர்போர்ட்டுல இருக்கணும்னா இங்கிருந்து அஞ்சே காலுக்காவது கிளம்பணும். அத்தனை சீக்கிரம் காலைல எழுந்திருக்க முடியாதுன்னுட்டான். அவங்கப்பா  கிட்ட கேட்டேன்... அவரும் அதே தான் சொல்றார்... ஈஸ்வர் முதல் தடவையா வர்றான். வெறும் டிரைவரை மட்டும் அனுப்ப முடியுமா?...

“அவனுக்கு எந்த அறையை ஒதுக்கி இருக்கே?

“அண்ணா அறையை தான்

“அதுல பாதி  அவன் வாங்கின மெடலு, கப்புன்னு அடுக்கி வச்சிருந்தியே. அதை எல்லாம் அப்புறப்படுத்திட்டியா?

சேச்சே... அப்படியே தான் வச்சிருக்கேன்.. அவங்கப்பா ஆரம்பத்துல இருந்து வாங்கின அத்தனை பரிசுகளையும் அவன் பார்க்க வேண்டாமா... அதான்..

ஏண்டி மனுசன் சௌகரியமா தங்க வேண்டாமா?..

“சௌகரியத்தை விட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கு பாட்டி.. உங்களுக்குப் புரியாது...

பேத்தியை முறைத்து விட்டு ஆனந்தவல்லி மகனிடம் சொன்னாள். “மருமகன் வர்றான்னவுடனேயே இவளுக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு...

பரமேஸ்வரன் அவரையும் மீறி புன்முறுவல் பூத்தார்.

அன்றிரவு அந்த வீட்டில் யாருமே சரியாக உறங்கவில்லை. எல்லோர் நினைவிலும் ஏதோ ஒரு விதத்தில் ஈஸ்வர் இருந்தான்....

(தொடரும்)

-          என்.கணேசன்

  

7 comments:

 1. வரதராஜன்November 1, 2012 at 6:22 PM

  இன்றைக்கு என்னாலும் சரியாக தூங்க முடியாதுன்னு நினைக்கிறேன். ஈஸ்வர் வரவுக்காக நானும் காத்து இருக்கிறேன். சுவாரசியம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாராட்டுக்கள் இப்படிப்பட்ட அருமையான நாவலைத் தருவதற்கு.

  ReplyDelete
 2. சுவாரஸ்யத்துடன் தொடர்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 3. அவுங்க வீட்டில் ஒருநாள் இரவு தூக்கம் தான் போச்சு........இதை படிப்பவர்களின் அனைவரின் ஒரு வாரம் தூக்கத்தை உங்கள் எழுத்தால் அபேஸ் செய்துவிட்டீர்கள்.......
  ஆனந்தவல்லியைவிட எங்களுக்குதான் ஈஸ்வரை காண, அவரை பற்றி தெரிந்துக் கொள்ள இருப்புக்கொள்ளாமாட்டேன்ங்கிறது....

  ReplyDelete
 4. கதையைப் எல்லோர் நினைவிலும் ஏதோ ஒரு விதத்தில் ஈஸ்வர் இருக்கப்போகிறான்...

  ReplyDelete
 5. ”அவனைப் பற்றி எல்லாத் தகவல்களையும் சேகரித்து அறிந்திருந்த குருஜி மனதில் சொல்லிக் கொண்டார். “அவனும் புதிரானவன் தான்”

  ”ஈஸ்வரை சகித்துக் கொள்வது எத்தனை கஷ்டம் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை...”

  ”எல்லோர் நினைவிலும் ஏதோ ஒரு விதத்தில் ஈஸ்வர் இருந்தான்....”

  இப்படியெல்லாம் சொல்லி கதையில் நாளைக்கு வர்ற ஈஸ்வருக்காக எங்களை ஒரு வாரம் காக்க வைக்கிறீங்களே சார் நியாயமா?

  ReplyDelete
 6. இது மிகவும் அருமையான தொடர். நான் வாரம் தவறாமல் படிகிறேன். சஸ்பென்செஸ் நிறைய இருக்கு. வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி...

  ReplyDelete
 7. இந்த வாரம்தான், முதன் முதலாக நிறையவே நம்ம சகோதரர் கணேசன் இந்த நாவலில் படிப்போரை 'கிச்சு கிச்சு' மூட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஹா! நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete