என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, September 20, 2012

பரம(ன்) ரகசியம்! – 10

ரமேஸ்வரன் மனதில் அன்று ஏனோ ஈஸ்வர் நினைவுகளே திரும்பத் திரும்ப வந்து அலைக்கழித்தன.

நீங்க தப்பான ஆளுக்கு போன் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... என்று வார்த்தைகளால் அறைந்தவனிடம் அவர் திரும்பவும் பேச ஒரே ஒரு காரணம் அவர் அண்ணன் மேல் வைத்திருந்த அன்பும், அளவுகடந்த மரியாதையும் தான். அப்படி அவர் மறுபடி பேசிய போது நல்ல வேளையாக அவனும் பேசினாலும் கூட, கடைசியில் “வேறொண்ணும் இல்லையே?என்று கேட்டு விட்டு முடிவாக அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் பேச்சை நிறுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. பசுபதி சொல்லச் சொன்னதற்கு அவன் என்ன நினைக்கிறான், அதற்கு அவன் பதில் என்ன என்பது பற்றி அவன் ஒன்றுமே சொல்லாதது கோபத்தைக் கிளப்பியது....

அவரிடம் முகத்தில் அடித்தது போலப் பேச யாருக்கும் இது வரை தைரியம் வந்ததில்லை. அவர் மகன் சங்கர் ஒரு தடவை கூட அவர் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியதில்லை. ஆனால் அவனுடைய மகன் நாக்கில் சவுக்கு வைத்திருக்கிறான்... ஈஸ்வரின் பேச்சு அவர் மகனின் நினைவுகளை மறுபடி முழுவதுமாக எழுப்பியது. ஒரு ஆறாத வடுவை அவர் பேரன் மறுபடி ஆழமாகக் கீறி ரணமாக்கி இருந்தான்.....

பரமேஸ்வரனின் மனைவி இறந்த போது அவர் மகன் சங்கருக்கு வயது ஐந்து, மகள் மீனாட்சிக்கு வயது மூன்று. அவர் தன் குழந்தைகளை உயிருக்கு உயிராக நேசித்தார். மறுமணம் செய்து கொண்டால் அவருடைய இரண்டாம் மனைவி அந்தக் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்ற உத்திரவாதம் இல்லாததால் அவர் மறுமணம் கூட செய்து கொள்ளவில்லை.

அவர் தாய் ஆனந்தவல்லியின் உலகம் நான்கு பேர்கள் மட்டுமே கொண்டது. அவள் தந்தை, அவள் கணவன், அவளுடைய இரண்டு மகன்கள். அந்த உலகில் அவளுடைய பேரக் குழந்தைகளுக்குக் கூட இடம் இருக்கவில்லை. அவள் நினைத்திருந்தால் அந்த தாயில்லாத குழந்தைகளை பாசத்துடன் வளர்க்க முன்வந்திருக்கலாம். ஆனால் அவள் அந்தக் குழந்தைகளைத் தன்னிடம் அண்ட விட்டது கூட இல்லை.

பரமேஸ்வரன் தன் தாயிடம் ஜாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தார். ஆனந்தவல்லி தாட்சணியம் இல்லாமல் அவரிடம் சொன்னாள். “நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி நல்ல ஆளா பார்த்து அவங்களைப் பாத்துக்க வேலைக்கு வை. எனக்கு இனிமே இந்தக் குழந்தைகளைப் பார்க்கற வேலையெல்லாம் முடியாது

பரமேஸ்வரன் தாயிடம் மிகுந்த பாசமுடையவர் என்றாலும் அவளுடைய அந்த வார்த்தைகளை அவரால் இன்று வரை மன்னிக்க முடியவில்லை. பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது வேலையா? எத்தனையோ குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளிடம் பாசம் இல்லாதவர்கள் கூட பேரக்குழந்தைகளிடம் மிகப்பாசமாக இருப்பதை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் ஆனந்தவல்லியை என்றுமே யாரும் சாதாரண பட்டியலில் சேர்க்க முடியாது.

அவர் அன்றிலிருந்து என் குழந்தைகளைத் தாயில்லாத குறை தெரியாத மாதிரி வளர்த்துவேன், அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வேன் என்று மனதிற்குள் வைராக்கியமாய் நினைத்துக் கொண்டார். அப்படியே வளர்த்தும் காட்டினார். சமையலுக்கும், மற்ற வேலைகளுக்கும் ஆள் இருந்தால் கூட அவர் குழந்தைகள் பொருத்த வேலைகள் எதையும் வேறு யாரிடமும் விடவில்லை. காலையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளை எழுப்பி குளிப்பாட்டி, டிரஸ் செய்து, சாப்பிட வைத்து, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றுகிற வரை அவர் தான் செய்வார். மகள் மீனாட்சிக்குத் தலைவாருவதும் அவர் தான். அவர்களாகத் தங்களைக் கவனித்துக் கொள்ளும் வயது வரை சாயங்காலம் ஸ்கூல் பஸ் வரும் போது அவரும் வீட்டில் இருப்பார். எத்தனை பெரிய வியாபார விஷயமானாலும் அவருக்கு அவர் குழந்தைகளுக்கு அடுத்தபடி தான்.

கோடிக்கணக்கான வியாபார ஒப்பந்தங்களைக் கையெழுத்துப் போடும் போது கிடைக்காத சந்தோஷம் அவருக்கு அவரைப் பார்த்தவுடன் ‘அப்பாஎன்று கூப்பிட்டபடி ஓடிவரும் அவருடைய குழந்தைகளைப் பார்க்கும் போது கிடைத்தது. அந்தக் குழந்தைகளும் அவர் மேல் உயிரையே வைத்திருந்தனர். அவர்கள் இருவரும் இயல்பாகவே மென்மையானவர்களாகவும், நல்லவர்களாகவும் இருந்தனர்.  அவர் மகன் படிப்பிலும் மிகவும் சூட்டிகையாக இருந்தான். என்றுமே வகுப்பில் முதலிடத்தை அவன் நழுவ விட்டதில்லை. மீனாட்சி படிப்பில் சுமாராக இருந்தாள். அந்தக் குழந்தைகள் எதையாவது பார்த்து விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் போதும் அது தேவையா இல்லையா என்று நினைக்கும் சிரமத்தைக் கூட பரமேஸ்வரன் மேற்கொண்டதில்லை. அந்தப் பொருள் உடனடியாக வீட்டுக்கு வந்து விடும். அவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லா விட்டால் அவர் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டார். அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு எல்லாம் கூட்டிக் கொண்டு போவார்.  அவர்களும் அப்பாவுக்கு மனம் வருத்தமாகும் என்று தெரிந்த எதையும் செய்யாமல் தவிர்த்தார்கள். ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்ட அப்பாவும், இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து ஒரு சொர்க்கத்தில் இருந்தார்கள். நண்பர்களைப் போல இருந்தார்கள். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவு அன்னியோன்னியமாய் இருந்தார்கள்.

சங்கர் எஸ்.எஸ்.எல்.சியில் மாநிலத்தில் முதலிடம் வந்தான். பத்திரிக்கைக் காரர்கள் வீடு தேடி வந்த போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இத்தனை நாள் அவருக்குக் கிடைத்த கௌரவம் பணத்தின் மூலம் கிடைத்தது. ஆனால் முதல் முறையாக மகன் மூலமாக ஒரு புதிய கௌரவம் கிடைத்தது என்று உச்சி குளிர்ந்தார். அதன் பிறகு நிறைய பரிசுகள் வாங்கினான். நண்பர்கள் அவரிடம் சொன்னார்கள். “அதிர்ஷ்டம் செய்த மனிதனய்யா நீஎன்றார்கள். அவர் எல்லாவற்றையும் விட அதிகமாக மகனே பெரிய சொத்து என்று நினைத்தார். படிப்பில் மட்டுமல்ல குணத்தில் கூட ஒருவரும் அவனைக் குறை சொல்ல முடியாத அளவு ஒரு உதாரணமாக அவன் இருந்தான். அவனுக்கு என்ன வேண்டுமோ அதை அவரே பார்த்து பார்த்து செய்தார். எட்டு வயதில் சைக்கிளாகட்டும், பதினாறு வயதில் பைக்காகட்டும், இருபத்தியொரு வயதில் காராகட்டும் எல்லாமே இருப்பதிலேயே மிகச் சிறந்தது, விலையுயர்ந்தது என்கிறபடியாகத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் அவர் மகன் மனைவியை மட்டும் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டான். அவன் தன்னுடன் படித்த ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்ன போது அந்தப் பெண் ஒரு நடுத்தரக் குடும்பத்தவள், அதுவும் தெலுங்குக்காரி என்று தெரிந்த போது அவரால் அனுமதிக்க முடியவில்லை. அவருடைய அருமை மகனுக்கு ஒரு ராஜகுமாரி போன்ற பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். என்றுமே அப்பாவிற்குப் பிடிக்காது என்று லேசான குறிப்பு கிடைத்தால் உடனே அதை விட்டு விடக் கூடிய அவர் மகன் இதில் மட்டும் பிடிவாதமாக இருந்தான்.

கடைசியில் பரமேஸ்வரன் சொன்னார். “சங்கர். இதுல நான் கண்டிப்பா மனசு மாற மாட்டேன். நானா அவளான்னு நீ தீர்மானிச்சுக்கோ.சொல்லி விட்டு ஆபிசிற்குப் போய் விட்டார். இதைக் கேட்டதற்குப் பின் மகன் கண்டிப்பாக அந்தப் பெண்ணை விட்டு விலகி விடுவான் என்று நூறு சதவீதம் அவர் நம்பினார். அவர் அருமை மகன், அவரை அந்த அளவு நேசிக்கும் மகன் இந்த உலகில் யாரிற்காகவும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதில் அவருக்கு சந்தேகமே இருக்கவில்லை.

ஆனால் சாயங்காலம் அவர் வீட்டுக்கு வந்த போது அவனுடைய திருமணம் ரிஜிஸ்டர் ஆபிசில் முடிந்து விட்டது என்ற செய்தி காத்திருந்தது. தன் காலின் கீழ் இருந்த நிலமே ஆட்டம் கண்டு விட்டது போலவும், பேரிடி தலையில் விழுந்தது போலவும் அவர் உணர்ந்தார். அவருக்கு கேட்டதை உடனடியாக நம்பவே முடியவில்லை. சொன்னது மகள் மீனாட்சியாக இல்லாமல் இருந்திருந்தால் சிறிதும் நம்பியிருக்க மாட்டார். உண்மை சிறிது சிறிதாக உறைத்த போது உள்ளே உருவான ஒரு பிரளயம் அவரை உயிரோடு சிதைத்துப் போட்டது.

பரமேஸ்வரன் மகளிடம் சொன்னார். “மீனாட்சி. இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லிடு

மீனாட்சி அண்ணனுக்கு சாதகமாக அவரிடம் பேச முற்பட்ட போது இறுகிய குரலில் கேட்டார். “மீனாட்சி உனக்கு அப்பா வேணுமா வேண்டாமா

“என்னப்பா இப்படி கேட்கறீங்க.? நீங்க எனக்கு வேணும்ப்பா

“அப்படின்னா அவனைப் பத்தி இன்னொரு தடவை நீ என் கிட்ட பேசக் கூடாது

அவள் அவரை மிகுந்த துக்கத்துடன் பார்த்தாள். ஆனால் அவர் முகத்தில் தெரிந்த நூறு சதவீத உறுதியை அவளால் உணர முடிந்தது. அதற்குப் பிறகு அவள் என்றுமே அவனைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. அவர் மகனை அவர் பார்த்ததும் இல்லை.

மனத்தின் ரணம் குறைய காலம் நிறைய தேவைப்பட்டது.  ஆனால் மகள் மீனாட்சியின் அன்பில் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது. மகனை இழந்த அவர் மகளையாவது தக்க வைத்துக் கொள்ளப் பார்த்தார். வீட்டோடு இருக்கும் படியான நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். மாப்பிள்ளை விஸ்வநாதன் சங்கருடன் கல்லூரியில் படித்தவன் தான். நல்ல குடும்பம். நல்ல புத்திசாலி. பண வசதியில் மட்டுமே அவர்களுக்குக் குறைந்தவன். பார்க்க லட்சணமாய் இருந்தான். மீனாட்சிக்கும் பிடித்திருக்கவே அவர் அவளுக்கு அவனைத் திருமணம் செய்து வைத்து வீட்டோடு வைத்துக் கொண்டார். அவருடைய கம்பெனியில் ஒரு பெரிய நிர்வாகப் பொறுப்பை அவனுக்குத் தந்தார்.

விஸ்வநாதன் ஏதோ பேச்சு வாக்கில் அவரிடம் சங்கர் பற்றி ஒரு முறை சொன்ன போது அவனிடமும் சொன்னார். எனக்கு சில விஷயங்களைத் திரும்பத் திரும்ப சொல்றது பிடிக்காது. அதனால ஒரே தடவை சொல்றதை புரிஞ்சுக்கோங்க மாப்பிள்ளை. அவனைப் பத்தி எப்பவுமே என் கிட்ட பேசிடாதீங்க

அதற்கப்புறம் அவர் மாப்பிள்ளையும் அவரிடம் சங்கர் பற்றி பேசினதில்லை. மகள் மீனாட்சி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மகேஷ் என்ற அந்தப் பேரப்பிள்ளை அவருடைய செல்லமாக ஆரம்பித்தான். சிறிது சிறிதாக அவர் மனக்காயம் ஆற ஆரம்பித்தது. காலம் ஓடிய ஓட்டத்தில் சிறிது சிறிதாக பழைய அமைதி திரும்ப ஆரம்பித்தது. எல்லாம் ஈஸ்வர் என்ற அந்தப் பையனிடம் அவர் பேசிய வரை....

என்னப்பா, தனியா உட்கார்ந்து என்ன யோசிச்சுகிட்டிருக்கீங்க?

மீனாட்சி அவர் அறைக்குள் நுழைந்தாள். மகளைப் பார்த்த போது எப்போதும் போல மனம் மென்மையாகியது. அதனாலேயே மகன் நினைவு மேலும் வலித்தது. நெருக்கமான யாரிடமாவது சொல்லி மனதில் உள்ளதை இறக்கி வைக்க வேண்டும் என்றும் இல்லா விட்டால் தாங்காது என்றும் தோன்றவே முதல் முறையாக அவராகவே அவளிடம் ஈஸ்வர் பற்றிய பேச்சை எடுத்தார்.

“உன் அண்ணன் பையன் கிட்ட நான் ரெண்டு நாளுக்கு முன்னாடி பேசினேன்.

மீனாட்சி கண்கள் விரியத் தந்தையைப் பார்த்தாள். அவள் ஒரேயடியாக சந்தோஷப்பட்டு விட வேண்டியதில்லை என்று எண்ணிய பரமேஸ்வரன் மெல்ல பசுபதி கடைசியாகச் சொன்னதையும், அதனால் அவருக்கு சங்கரின் மகனிடம் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும், அவன் முகத்தில் அடித்தது போல பேசியதையும் மகளிடம் சொன்னார்.

ஈஸ்வரின் ஆரம்பப் பேச்சைக் கேட்டு லேசாக மீனாட்சிக்குப் புன்னகை அரும்பினாலும் தந்தையின் முகத்தில் தெரிந்த அவமானத்தைக் கவனித்த போது அந்தப் புன்னகை அரும்பிலேயே கருகியது. அவள் முகமும் வாடியதைக் கவனித்த பரமேஸ்வரன் நினைத்தார். “இவள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ செத்திருப்பேன்....

அவன் சொன்னதைப் பெரிசா நினைக்காதீங்கப்பா. அவன் நல்ல பையன் தான். ஆனா கோவத்தில மட்டும் உங்க மாதிரியும், பாட்டி மாதிரியும்னு அண்ணா சொல்வான்....

அவரையும் அவர் அம்மாவையும் மாதிரி என்றதை அவரால் ரசிக்க முடியவில்லை. “நீ அந்தப் பையன் கிட்ட பேசியிருக்கியா?

அண்ணா கிட்ட தான் அதிகம் பேசுவேன்.... அவன் கிட்ட, எப்படி இருக்கே? நல்லா இருக்கியான்னு மட்டும் தான் பேசி இருக்கேன். போன்ல அதுக்கு மேல பேச விஷயமும் இல்லை... அவனைப் பார்த்ததும் இல்லை. அண்ணா இறந்த பிறகு ரெண்டே தடவை தான் பேசி இருக்கேன்..

பரமேஸ்வரன் கேட்டார். “நீ மட்டும் தான் பேசுவாயா, இல்லை மாப்பிள்ளை, மகேஷ் எல்லாருமே பேசுவாங்களா?

“இல்லை அவங்க பேச மாட்டாங்க......என்று வருத்தம் தொனிக்க மீனாட்சி சொன்னாள். பரமேஸ்வரனுக்கு அந்தத் தகவல் சிறிது திருப்தியை அளித்தது.

அந்த நேரமாய் பார்த்து அவள் செல் போன் அடிக்க அவள் அதை அழுத்திப் பேசினாள். “ஹலோ..

“ஹலோ அத்தை நான் ஈஸ்வர் பேசறேன்

மீனாட்சி அவளையும் அறியாமல் சந்தோஷமாய் சொன்னாள். “ஈஸ்வர். நிஜமாவே உனக்கு நூறு ஆயுசு. இப்ப தான் உன்னைப் பத்தி பேசிகிட்டிருந்தேன்...

யார் கிட்ட?

பரமேஸ்வரன் முறைப்புடன் தலையசைக்கவே மீனாட்சி பொய் சொன்னாள். “மகேஷ் கிட்ட தான். அண்ணி எப்படியிருக்காங்க?

“அம்மா நல்லாயிருக்காங்க. மாமாவும் மகேஷும் எப்படியிருக்காங்க?

சௌக்கியம் தான். சொல்லுப்பா என்ன விஷயம்?

“உங்க ஊர்ல தங்கற மாதிரி நல்ல ஓட்டல் எது?

“எதுக்கு கேட்கறே?

“நான் இந்தியா வர்றேன். அதனால தான்

மீனாட்சியின் மனதில் சந்தோஷ கங்கை கரை புரண்டு ஓடியது. இன்று தந்தை
அவராகவே பேரதிசயமாக ஈஸ்வர் பற்றிய பேச்சை எடுத்ததும், சரியாக அதே நேரத்தில் அதிசயமாக அவன் வருவதாகப் போன் செய்ததும் நல்ல சகுனமாகத் தோன்றியது. தாத்தா-பேரனாவது சேர ஒரு பொன்னான சந்தர்ப்பம் வர வேண்டும் என்று விரும்பிய அவள் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. அவரை நேரில் பார்த்துக் கொண்டு தைரியமாக சிலதை எல்லாம் சொல்ல முடியாது என்று எண்ணி பரமேஸ்வரனிற்கு முதுகைக் காண்பித்து திரும்பியபடி மருமகனிடம் சொன்னாள். 

“இங்க வீடு இருக்கறப்ப நீ எதுக்கு ஓட்டல்ல தங்கறே?

“என்னவோ உங்க வீட்டுக்குக் கூப்பிடற மாதிரி கூப்பிடறீங்க?

“நான் என் வீட்டுக்குக் கூப்பிடலை. உன்னோட வீட்டுக்குக் கூப்பிடறேன். இது உன் தாத்தா கட்டின வீடு கூட இல்லை.... உன் கொள்ளுத்தாத்தா கட்டின வீடு. நீ உரிமையோட வரலாம்

“ஓ அப்படியா. அப்ப சரி. அடுத்த புதன் கிழமை வர்றேன். சார் கிட்ட சொல்லி வையுங்க?

“எந்த சார் கிட்ட சொல்லி வைக்கிறது?

“உங்க அப்பா கிட்ட தான்.. சரி அத்தை வேறொரு கால் வருது. நான் அப்புறமா பேசறேன்.

அவன் போனை வைத்து விட்டான்.

மீனாட்சி எச்சிலை விழுங்கியவளாக பரமேஸ்வரனை சமாளிக்கும் உபாயங்கள் அத்தனையையும் யோசித்தபடி மெல்ல அவர் பக்கம் திரும்பினாள்.

பரமேஸ்வரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மகளைப் பார்த்து கொண்டிருந்தார்.

(தொடரும்)

- என்.கணேசன்


16 comments:

 1. So Thrilling.. Can't wait for the next episode!!! Feeling like stopping here and start reading the rest of it when you finsih the whole novel, because I cannot stand the pressure/expectation/anxiety or whatever you call it.

  Chandhru

  ReplyDelete
 2. I can understand Mr Parameswaran's feelings ! It sounds familiar, too. I wonder - why a son will alienate one's own father, who is so caring ? -

  ReplyDelete
  Replies
  1. Come on! I cannot understand his feelings ( I truely suspect if he has got any???? I cannot imagine a dad who does this when knowing about his son's death..)... What is the difference between Parameswaran and his mother???? He should have been a bit flexible.. After all he was his beloved son wasn't he? OK leave his son aside. What has Eashwar done to him?

   Chandhru

   Delete
  2. சிலர் அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு செய்வார்கள். அதே போல் அவர்களிடமும் அநியாயத்துக்கு எதிர்பார்ப்பார்கள். அந்த மாதிரி ஆள் தான் பரமேஸ்வரன் என்று நினைக்கிறேன். ப்ளஸ் மைனஸ் சேர்ந்த கேரக்டர். தாத்தா பேரன் காம்பினேஷன் இந்த மர்மங்களுக்கு இடையே சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். -கனகசபாபதி

   Delete
 3. கதிர்வேல்September 20, 2012 at 7:35 PM

  பரமேசுவரன் கேரக்டர் பிரமாதமாய் மனதில் பதிகிறது. இந்த அத்தியாயத்திற்கு தேர்ந்தெடுத்த படம் சூப்பராய் இங்கு பொருந்துகிறது. ஈஸ்வர் வரவுக்காக எல்லாருமே வெயிட்டிங்

  ReplyDelete
 4. படித்துக்கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 5. நல்லாயிருக்கு... அருமையான நடை...
  தொடருங்கள் தொடர்கிறோம்....

  ReplyDelete
 6. You are really great :) More suspense.. Waiting for next thrill.
  We can find Lord Shiva. Same as your Novel

  ReplyDelete
 7. தொடர்கிறேன்... முடிந்தவுடன் இதை ஒரு மின் நூலாக்கி விடுங்கள்... நன்றி...

  ReplyDelete
 8. நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 9. நல்ல கதை...அதிலும் பரமேஸ்வரன் கேரக்டர் மனதில் நல்லா பதிந்து இருக்கு ...இன்னும் நிறைய எழுதுங்க ...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 10. மனதின் ரணங்கள் , தனக்கு உரிமை உள்ளவர்களை பார்க்கும் பொது ஆறிவிடும் . தொடருங்கள்

  ReplyDelete
 11. i am waiting for expect this story weekly

  ReplyDelete
 12. போன பாகம் படிக்கும் வரை எனக்கு பரமேஸ்வரன் மேல் வருத்தம் இருந்தது உண்மை. ஆனால் அவரைப்பற்றி அவர் மனைவி இறந்ததும் பிள்ளைகளுக்காக தன் ஆசாபாசங்கள் எல்லாம் துறந்து பிள்ளைகளே உலகம் என்று வாழ்ந்த அவர் வாழ்க்கையைப்பற்றி அவர் பிள்ளைகள் மீது கொண்டிருந்த அன்பை பற்றி படிக்க படிக்க அவர் மீது மரியாதை அதிகமாயிற்று..

  ஆனால் ஒரு விஷயம்.. எத்தனை நேசித்திருந்தால் பிள்ளையிடம் தனக்காக அவன் நேசித்த பெண்ணை விடச்சொல்லுவார்?

  பிள்ளை தவறிழைத்துவிட்டான் சரி.. அதற்காக இத்தனை கடுமையான தண்டனையா? பிள்ளையை பார்க்காமல் இத்தனை வருடங்கள் அவன் பிள்ளை பெற்றானா இல்லையா எது பற்றியும் ஒரு சிந்தனை கூட இல்லாமல் யாரும் அவனை பற்றி பேசக்கூடாது என்று இத்தனை வீம்பு எதற்கு?


  அன்பு, பாசம், கருணை, கனிவு இதெல்லாம் நிறைந்த பசுபதியின் தம்பி பரமேஸ்வரனா இப்படி தன் பிள்ளையிடம் நந்துக்கொண்டார்?


  சரி தன் அம்மா தான் அப்படி தான் தன் பிள்ளைகள் என்று சுயநலமாக இருந்தார்? தன் அம்மாவைப்போல் இல்லாமல் இவர் பிள்ளைகளிடம் பாசமாக இருந்து அவர்களை வளர்த்து ஆளாக்கி இத்தனை செய்து என்ன பயன்?

  இவரின் இந்த பிடிவாதத்தால் பிள்ளை இறுதி வரை அப்பாவின் கோபத்தையே உட்கொண்டு மண்ணோடு மக்கிப்போனானே?

  பிள்ளை மண்ணோடு போனப்பின்னரும் இவருக்கு இந்த பிடிவாதம் அவசியமா?

  பேரன் ஈஸ்வரன் இந்தியாவுக்கு வரும் செய்தி கேட்டு மீனாட்சிக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரே சந்தோஷம்.

  ஈஸ்வருக்கு நல்வரவு இந்தியா வருகைக்கு..

  அதுவும் கொள்ளுத்தாத்தா வீட்டுக்கே.. பரமேஸ்வரனின் கோபம் மீனாட்சியை என்ன செய்யும்?

  அன்பு நன்றிகள் பகிர்வுக்குப்பா...

  ReplyDelete