சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 17, 2012

காரியம் பெரிது, வீரியமல்ல!




ண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார்.

ஹைதராபாத் நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக் கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச் சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார்.

மதன் மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது மகாராஜாவின் செருப்பு. இதை ஏலம் விடப் போகிறேன்என்று அறிவித்தார். கூடிய மக்கள் முதலில் அவர் நகைச்சுவையாக ஏதோ செய்கிறார் என்று நினைத்தாலும் அந்த வேலைப்பாடுடைய செருப்பைப் பார்த்தவுடன் அது மகாராஜாவுடையது தான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏலத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மிகக் குறைந்த விலையில் ஆரம்பித்த ஏலம் சிறிது சிறிதாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.

சிப்பாய்களில் ஒருவன் அவசர அவசரமாக நிஜாமிடம் போய் தகவலைச் சொன்னான். நிஜாமிற்கு தர்மசிந்தனை இல்லா விட்டாலும் சுயகௌரவம் நிறையவே இருந்தது. என்ன விலைக்கு அந்த செருப்பு ஏலம் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க சிப்பாய் தான் கிளம்பிய போது இருந்த நிலவரத்தைச் சொன்னான். அது போன்ற குறைந்த விலைக்கு அந்தச் செருப்பு ஏலம் போய் வாங்கப்பட்டால் அது தன் நிலைக்கு மகா கேவலம் என்று நினைத்தார் அவர். அதை நல்ல அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கி வரச் சொல்லி பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார். அந்தப் பெரிய தொகையில் அந்த ஒற்றைச் செருப்பு நிஜாமாலேயே சிப்பாய் மூலம் வாங்கப்பட்டது.

மதன் மோகன் மாளவியா அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
(1916 ஆம் ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)

மாளவியாவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் செருப்பு மேலே விழுவதைக் கௌரவக் குறைவாக நினைத்திருப்பார். கோபப்பட்டிருப்பார். தான் கேவலப்பட்டு விட்டதாக நினைத்திருப்பார். இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை அக்காலத்தில் பெற்றிருந்த மாளவியா அப்படி நினைத்திருந்தால் அது நியாயமாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல பொதுக் காரியத்திற்காகச் சென்ற இடத்தில் காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அவருக்கு இருந்ததால் நல்லபடியாகவே அதை சாதகமாக்கிக் கொண்டு விட்டார்.

பெரிய காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதன்மோகன் மாளவியாவின் மனப்பக்குவமும், சமயோசிதமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும், சீக்கிரமாக முடியும். காரியத்தில் கண்ணாய் இருப்பதை விட்டு விட்டு சிறிய சிறிய சுமுகமல்லாத சூழ்நிலைகளையும், பின்னடைவுகளையும்  பெரிதுபடுத்தும் தன்மை இருந்தால் கோபமும், விரக்தியும் தான் மிஞ்சும்.

தங்களை முன்னிறுத்தாமல் காரியத்தை முன்னிறுத்தும் மனிதர்களே கடைசியில் பெரும் சாதனைகளை செய்து முடிக்கிறார்கள். சாதனையாளர்களாகத் தாங்களும் சிறப்பு பெறுகிறார்கள். எதிர்மாறாக காரியத்தையும் விடத் தங்களை முன்னிலைப் படுத்தும் மனிதர்களால் காரியமும் நடப்பதில்லை, வெற்றியாளர்களாகப் பிரகாசிக்கவும் முடிவதில்லை.

- என்.கணேசன்

  

9 comments:

  1. EXCELLENT ARTICLE .. IT INSPIRED ME ..

    ReplyDelete
  2. காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது.//

    மாளவியா மாதிரி எல்லோரும் வீரியம் காட்டாமல் காரியத்தில் கண்ணாய் இருந்தால் சாதனை படைக்கலாம்.
    நன்றி.

    ReplyDelete
  3. இந்த மனப்பாங்கு பெரிய காரியங்களில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. நான் என் அனுபவத்தில் இதைக் கடைப்பிடித்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. உண‌ர்வ‌ய‌ப்ப‌டுமிட‌ங்க‌ளில் அறிவை முன்னிறுத்த‌ ந‌ல்ல‌ ப‌டிப்பினை!

    ReplyDelete
  5. ஏனோ, "ராமர் எந்த காலேஜில் படித்தார்? அவர் இஞ்சினியரா"? என்ற பேச்சு ஞாபகத்துக்கு வருகிறது....

    ReplyDelete
  6. மிகவும் நன்று..... உண்மையில் நடந்த, நாமும் நம் வாழ்க்கையில் பின்பற்றவேண்டும் என்று நினைக்க தூண்டிய பதிவு....

    அவர் பொது வாழ்க்கைக்கு, தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்று இரு வேறு கருத்துக்களை கொண்டிருக்கமாட்டார் எனவும், அவர் தன் இயல்பு தன்மையிலேயே "தான்" என்ற அகங்காரத்தை தாண்டிய மனிதராக வாழ்ந்திருப்பார் என்பதும் என் தனிப்பட்ட, தாழ்மையான கருத்தாகும்.

    ReplyDelete
  7. வாழ்க்கைக்கு சிறந்த படிப்பினை

    ReplyDelete