என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, September 13, 2012

பரம(ன்) ரகசியம்! – 9ஸ்வர் விர்ஜினியா பல்கலைக்கழக அதீதமன (Parapsychology)ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்தான். அமெரிக்காவில் அதீத மன ஆராய்ச்சிகள் பல பல்கலைக் கழகங்களில் நடைபெற்றாலும் இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் இதற்கென்று தனியாக பெரிய ஆராய்ச்சிக்கூடங்கள் இருக்கின்றன. ஒன்று விர்ஜினியா பல்கலைக்கழகம், இன்னொன்று அரிசோனா பல்கலைக்கழகம். சிறிய வயதில் இருந்தே ஆழ்மனசக்திகளில் ஆர்வம் இருந்த அவன் இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒன்றில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தான். அவனுக்கு விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் சரியான வாய்ப்பு கிடைத்தது.  அங்கு அதீத மனம் மற்றும் புலனாற்றல் ஆராய்ச்சிகள் விஞ்ஞான முறைப்படி நடக்க வசதிகளும், வரவேற்பும் நிறையவே அவனுக்கு இருந்தது. அதை அவன் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டான்.
அவன் தற்போது ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி சுமார் ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. டெலிபதி பற்றிய ஆராய்ச்சி அது. அது பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் முன்பே நடந்திருந்தாலும் டெலிபதியின் மூலம் அதிகபட்சமாக அனுப்ப முடிந்த தகவல்களைப் பற்றியும், அதற்கு உதவும் மனநிலைகள் பற்றியும் விரிவான ஆராய்ச்சி செய்ய அவன் முனைந்திருந்தான். ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளோ, காட்சிகளோ இல்லாமல் தகவல்கள் அனுப்பும் இந்த ஆராய்ச்சிக்குத் தகுதி இருக்கக்கூடிய ஆட்கள் என்று இருவரைத் தேர்ந்தெடுத்திருந்தான். ஒருவர் சீனர். அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். மகன் அமெரிக்காவில் ஒரு பெரிய வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டதால் அவரும் சீனாவில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு இங்கே வந்திருந்தார். ஆங்கிலம் அவருக்கு அரை குறையாய் தான் வரும் என்ற போதிலும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிக்குப் பொருத்தமான சில விசேஷத் தன்மைகள் அவருக்கு இருந்தன. இன்னொரு நபர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முப்பது வயது கருப்புப் பெண். விர்ஜினியா பல்கலைக்கழகத்திற்கு நாற்பது மைல் தொலைவில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் பணி புரியும் அந்தப் பெண் அமெரிக்காவில் இருபது வருடங்களாக வாழ்கிறாள். அவளுக்கும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிக்குப் பொருத்தமான சில விசேஷத் தன்மைகள் இருந்தன. அத்துடன் அவள் நன்றாக வரையும் திறமையும் பெற்றிருந்தாள்.
ஆராய்ச்சியின் போது சீனர் ஒரு அறையிலும், ஆப்பிரிக்கப் பெண் இன்னொரு அறையிலும் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் அறைகளுக்குள் நுழைந்த பிறகு சீனருக்கு அனுப்ப வேண்டிய செய்தி சொல்லப்படும். அது வரையில் அவருக்கு என்ன செய்தி அனுப்பப்போகிறோம் என்று தெரியாது. அந்த செய்தியை ஆப்பிரிக்கப் பெண் வரைந்தோ, எழுதியோ காட்ட வேண்டும்.
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் இருவரையும் அந்த அறைகளில் இருந்த வீடியோ காமிரா மூலம் வீடியோ எடுத்து அந்தப் பதிவுகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. வெளியே இருந்து கொண்டு அவர்களை ஈஸ்வர் கண்காணித்துக் கொண்டே இருப்பான். ஆராய்ச்சி முடிந்து அவர்கள் வெளியே வந்த பின் தனித்தனியாக ஆராய்ச்சி சமயத்தில் அவர்கள் உணர்வுநிலைகள் எப்படி இருந்தன என்றும் எதையாவது வித்தியாசமாக உணர்ந்தார்களா என்றும் கேட்டு ஈஸ்வர் அதையும் பதிவு செய்து விடுவான். சீனரிடம் அந்த ஆப்பிரிக்கப் பெண்ணின் அன்றைய மனநிலையை உணர முடிந்ததா என்றும், ஆப்பிரிக்கப் பெண்மணியிடம் அந்த சீனரின் அன்றைய மனநிலையை உணர முடிந்ததா என்றும் கேட்டு அதையும் பதிவு செய்வான். ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவும் அந்த இரண்டு நபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதில்லை. சரியாக இருந்ததா, இல்லையா என்பதற்கு அவர்களுக்கு எந்த குறிப்பும் தரப்படவில்லை. அப்படி அவர்கள் அறிந்து கொள்வது அடுத்த ஆராய்ச்சிகளைப் பாதிக்கும் என்பதால் அதை அவன் தவிர்த்தான். அந்த இருவரும் ஒருவரை ஒருவர் ஆராய்ச்சிசாலையில் மட்டும் பார்த்து அறிவார்களே ஒழிய அவர்களுக்கு இடையில் வேறு எந்த விதமான தொடர்பும் இருக்கவில்லை. ஆராய்ச்சியின் முடிவிலும் சீனர் சென்று ஒரு மணி நேரம் கழித்து தான் ஆப்பிரிக்கப் பெண் செல்வாள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசியே ஆக வேண்டும் என்று விரும்பினால் ஒழிய வெளியே சந்திக்க சாத்தியங்கள் குறைவு. அப்படி விரும்பி சந்திக்க அவர்களுக்குள் எந்தக் காரணமும் இருக்கவில்லை.
இது வரை ஏழு பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. முதல் பரிசோதனையில் பிரமிடுகளின் படத்தைக் கொடுத்து அதை அனுப்ப ஈஸ்வர் சொன்னான். ஆப்பிரிக்கப் பெண் மலைகளை வரைந்திருந்தாள். கிட்டத்தட்ட தோற்றத்தில் ஒன்றாகவே இருந்ததால் அவன் அதை ஆரம்பநிலைக்கு வெற்றியாகவே நினைத்தான். இரண்டாவது நான்காவது பரிசோதனைகளில் அவன் அனுப்பச் சொன்ன தகவல்களை அவள் சரியாக வரையவில்லை. இரண்டாவது பரிசோதனையின் போது ஆப்பிரிக்கப் பெண் கணவனிடம் சண்டையிட்டு வந்திருந்தாள். நான்காவது பரிசோதனையின் போது அவள் மகன் சின்ன விபத்தில் காயப்பட்டிருந்தான். ஆனால் அந்த பரிசோதனைகளில் சீனர் அவளது மனநிலையை கோபம், கவலை என்று சரியாகக் கணித்திருந்ததால் அவைகளையும் ஈஸ்வர் வெற்றிகரமான பரிசோதனைகளாகவே நினைத்தான்.  நான்காவது பரிசோதனையில் வானில் பறந்து கொண்டிருக்கும் ஆகாய விமானத்தின் படத்தைக் கொடுத்து அதைத் தெரிவிக்க ஈஸ்வர் சொன்னான். ஆப்பிரிக்கப் பெண் பறவை பறப்பதாக வரைந்திருந்தாள். ஐந்தாவது ஆறாவது ஆராய்ச்சிகளில் இரண்டிரண்டு பொருள்கள் தகவல்கள் அனுப்பப்பட்டன. அவை இரண்டும் சில சின்னச் சின்ன வித்தியாசங்களுடன் ஓரளவு தெளிவாக வரையப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் இருப்பதே பெரிய விஷயம் என்பதால் ஈஸ்வருக்கு இந்த ஜோடியின் வெற்றி சதவீதம் மிகத் திருப்தியாக இருந்தது. ஆறு சோதனைகளில் நான்கு ஆராய்ச்சிக் கூடங்களில் நடந்தன. நான்காவதும் ஆறாவதும் ஆராய்ச்சிகள் கிட்டத்தட்ட நூறு மைல் இடைவெளியில் இருவரையும் வைத்து நடத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளில் இடைவெளிகள் ஒரு பொருட்டே அல்ல என்பதும் தெளிவாக நிரூபணம் ஆகியது. அடுத்த அறையும் ஒன்று தான் அடுத்த நகரமும் ஒன்று தான்.
அந்த சீனர் ஆறு ஆராய்ச்சிகளில் ஐந்தில் அவளுடைய மனநிலையை சரியாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த ஆப்பிரிக்கப் பெண் ஆறில் ஒரே ஒரு முறை அவர் மனநிலையை வருத்தம் என்று குறிப்பிட்டாள். மற்ற நாட்கள் எல்லாம் அவளுக்கு குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இருக்கவில்லை. வருத்தம் என்று குறிப்பிட்ட பரிசோதனைக்குப் பிறகு சீனரிடம் பேசிய போது அவருக்கு தன் நாட்டையும் நட்பு, உறவுகளையும் விட்டு அமெரிக்கா வந்ததில் வருத்தம் இருப்பதாகவும், அன்று அதை அதிகம் உணர்ந்ததாகவும் சொன்னார்.
“என் மகன் ஓரளவு நன்றாக சம்பாதித்த பிறகு நாம் சீனாவுக்கே போய் விடலாம், அது வரை பொறுங்கள் என்கிறான். ஆனால் ‘ஓரளவு நன்றாக சம்பாதிப்பது’ என்றால் என்ன தொகை என்று எனக்கு விளங்கவில்லை. நான் சாவதற்குள் அந்த அளவு சம்பாதித்து முடிப்பானா என்றும் தெரியவில்லை”.
இந்த ஏழாவது ஆராய்ச்சியில் கடற்கரை மணலில் இரண்டு சிறுவர்கள் கோபுரம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை ஈஸ்வர் சீனரிடம் கொடுத்து அனுப்பச் சொல்லி இருந்தான்.
வெளியே இருந்து அவர்கள் இருவரையும் முன்னால் இருந்த கம்ப்யூட்டர் ஸ்கிரினில் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வருக்கு அந்த சீனர் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தது போலத் தெரிந்தது. முந்தைய ஆறு ஆராய்ச்சிகளிலும் அவர் அலட்டிக் கொள்ளாமல் மிக அமைதியாக இருந்தவர். ஈஸ்வர் அந்த ஆப்பிரிக்கப் பெண்ணைக் கவனித்தான். அவள் இரண்டாம், நான்காம் ஆராய்ச்சிகளில் தொந்திரவான மனநிலையில் இருந்தவள் என்றாலும் மற்ற ஆராய்ச்சிகளில் அப்படி இருக்கவில்லை. இந்த முறை மிக உற்சாகமாகத் தெரிந்தாள். அவள் முழு கவனத்துடன் வரைந்து கொண்டிருந்தாள். எப்போதும் அடிக்கடி ரப்பரைப் பயன்படுத்தி அழித்து சில மாற்றங்கள் செய்பவள் இன்று ரப்பரையே உபயோகிக்காதது அதிசயமாக இருந்தது. ஈஸ்வர் சீனரின் அசௌகரியத்திற்கும் ஆப்பிரிக்கப் பெண்ணின் உற்சாகத்துடன் கூடிய முழு கவனத்திற்கும் இடையே பெரியதொரு முரண்பாட்டை உணர்ந்தான். ஏதோ ஒன்று சரியில்லை....
சீனர் வெளியே வந்த பின் ஈஸ்வர் அவரிடம் கேட்டான். “நீங்கள் ஏதோ அசௌகரியம் உணர்ந்தது போல எனக்குத் தோன்றியது. என்ன விஷயம்?
சீனர் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னார். “என் தகவல் சரியாகப் போகாதது போல தோன்றியது... வேறு யாரோ வாங்குகிற மாதிரி அல்லது இடைமறிக்கிற மாதிரி தோன்றியது....எனக்கு விளக்கத் தெரியவில்லை..
ஈஸ்வர் அவரிடம் கேட்டான். “இன்றைக்கு பர்சனலாய் ஏதாவது பாதிப்பில் உங்கள் மனம் இருந்ததா?  
“இல்லை. சொல்லப் போனால் இன்றைக்கு இங்கே வரும் முன் செய்த தியானத்தில் வழக்கத்தை விட அதிகமாய் நான் அமைதியை உணர்ந்தேன்
“உங்கள் தகவலை வாங்கியது போலத் தோன்றியவர் பற்றியோ அவர் மனநிலை பற்றியோ ஊகிக்க முடிந்ததா?
“சக்தி....பெரிய சக்தி... மனிதரா இல்லை வேறெதாவதா எனக்குத் தெரியவில்லை..புதிய அனுபவமாக இருக்கிறது...
அவன் அதற்கு மேல் அவரை எதுவும் கேட்கவில்லை. அனுப்பி விட்டான். இது போன்ற அனுபவம் அந்த சீனருக்கு மட்டுமல்ல அவனுக்கும் புதிது தான்.  அவனுடைய உதவியாளர் அந்த ஆப்பிரிக்கப் பெண் வரைந்த படத்தை ஒரு வெள்ளை உறையில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார். ஈஸ்வர் உறையில் இருந்த படத்தை வெளியே எடுத்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று போனது. குப்பென்று வியர்த்தது. இத்தனையையும் ஏற்படுத்தியது அந்தப் படத்தில் அவன் பார்த்த சிவலிங்கம் தான். சிவலிங்கம் மிக தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அந்த சிவலிங்கம் அந்தரத்தில் இருப்பது போல வரையப்பட்டிருந்தது. ஈஸ்வருக்குத் தன்னை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது.
சில நிமிடங்கள் கழித்து உதவியாளரிடம் அந்தப் பெண்ணைத் தன்னிடம் அனுப்பச் சொன்னான். ஆப்பிரிக்கப் பெண் வந்தாள்.
மிக இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு ஈஸ்வர் அவளிடம் கேட்டான். “இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
ஏதோ சிற்பக்கலைப் பொருள் மாதிரி இருக்கிறது”.
அவளுக்கு சிவலிங்கம் பற்றி எதுவும் தெரியாதது அவனுக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆப்பிரிக்கா-அமெரிக்கா வார்ப்பான அவள் பொது அறிவில் பூஜ்ஜியம் தான்.
“இந்த முறை உங்கள் அனுபவம் எப்படி இருந்தது. ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தீர்களா?
அவள் சொன்னாள். “எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் எனக்கு உணர முடியும். ஆனால் இந்தத் தடவை அப்படி இல்லை.... என் கண் முன்னாலேயே இந்தக் கலைப்பொருள் தெளிவாகத் தெரிந்தது. நான் என் மனதைக் குவித்து கவனிக்க வேண்டி இருக்கவில்லை...
ஈஸ்வர் அவளிடம் கேட்டான். “இந்தக் கலைப் பொருள் தரையில் இல்லாமல் அந்தரத்தில் இருப்பது போலத் தான் தெரிந்ததா?
ஆமாம்.... அது மட்டுமல்ல அது லேசாக நகர்கிற மாதிரியும் தெரிந்தது....
ஈஸ்வர் தன் திகைப்பைக் காண்பிக்காமல் இருக்க மறுபடி சிறிது முயற்சி செய்ய வேண்டி இருந்ததுஅவன் சொன்னான். இந்த தடவை முழு கவனத்துடன் நீங்கள் இருந்த மாதிரித் தெரிந்தது. எப்போதுமே அதிகமாக ரப்பரைப் பயன்படுத்தும் நீங்கள் இந்த முறை ஒரு தடவை கூட ரப்பரே பயன்படுத்தவேயில்லை.....
அவள் சற்று வியப்பு கலந்த குரலில் சொன்னாள். “எப்போதும் நான் உணர்கிற தகவலில் தெளிவு அதிகமாக அதிகமாக முதலில் வரைந்ததில் சிலதை விட்டு விட்டது புரியும். அதனால் தான் அதை சரி செய்ய ரப்பர் தேவைப்படும். ஆனால் இன்றைக்கு கண் முன்னால் இருப்பது போலத் தெளிவாக இருந்ததால் தேவையே படவில்லை..
“அனுப்பிய அவர் மனநிலை பற்றி ஏதாவது உங்களால் உணர முடிந்ததா?
அவள் சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். “இல்லை... ஆனால் எனக்கு தான் வித்தியாசமாய் இருந்தது. ஒரு பிரம்மாண்டமான சக்திக்கு முன்னால் நான் இருக்கிற மாதிரி.... நான் இதற்கு முன்னால் ஒரே ஒரு தடவை தான் அப்படி உணர்ந்திருக்கிறேன். நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற  போது....  
அவள் போன பிறகு நிறைய நேரம் ஈஸ்வர் தனிமையில் அமர்ந்திருந்தான். இந்த ஆராய்ச்சியில் அவன் அனுப்பச் சொன்ன செய்தி அந்த சீனர் மூலம் ஆப்பிரிக்கப் பெண்ணிற்குப் போய் சேரவில்லை. அதற்குப் பதிலாக யாரோ அல்லது ஏதோ அந்த ஆப்பிரிக்கப் பெண் மூலம் அனுப்பிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
கண்களை மூடிக் கொண்டு நிறைய நேரம் யோசித்தவன் கடைசியில் இந்தியா செல்வது என்று முடிவெடுத்தான்.

(தொடரும்)
 - என்.கணேசன்

30 comments:

 1. அருமை. அடுத்த வாரத்திற்காகக் காத்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சிவன். தினசரி அபிஷேகம் செய்யாமல் என்னுடைய நாள் தொடங்குவதில்லை. இந்த தொடரை ஒட்டுதலுடன் படிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 2. ஒரு பிரம்மாண்டமான சக்திக்கு முன்னால் நான் இருக்கிற மாதிரி.... நான் இதற்கு முன்னால் ஒரே ஒரு தடவை தான் அப்படி உணர்ந்திருக்கிறேன். நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற போது....” //

  ’யாரோ அல்லது ஏதோ’ அந்த ஆப்பிரிக்கப் பெண் மூலம் அனுப்பிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. //

  அமானுஷ்யமான பிரம்மாண்டம் தொனிக்கும் கதை...

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. Really Great!! Keep going... Why Don't you post this AT LEAST twice a week :). Can't wait...

  Chandhru
  UK

  ReplyDelete
 4. சுந்தர்September 13, 2012 at 6:53 PM

  வில்லனான குருஜியிடமே சந்தேகம் கேட்க கிளம்பும் போலீஸ் அதிகாரி, ஈஸ்வர் செய்து கொண்டிருந்த ஆராய்ச்சியிலே இடையில் புகுந்து வேறு ஒரு செய்தியை சொன்ன ‘ஏதோ அல்லது யாரோ’ சக்தி, இந்தியாவுக்கு வரக் கடைசியாக முடிவெடுத்த ஈஸ்வர் என்று பல பக்கங்களிலும் சுவாரசியம் இருப்பது அருமை. அதற்கு நடுவில் சீனர் சொன்னது சூப்பர் பஞ்ச்.

  “என் மகன் ஓரளவு நன்றாக சம்பாதித்த பிறகு நாம் சீனாவுக்கே போய் விடலாம், அது வரை பொறுங்கள் என்கிறான். ஆனால் ‘ஓரளவு நன்றாக சம்பாதிப்பது’ என்றால் என்ன தொகை என்று எனக்கு விளங்கவில்லை. நான் சாவதற்குள் அந்த அளவு சம்பாதித்து முடிப்பானா என்றும் தெரியவில்லை”.

  விருவிருப்பு மட்டுமே அல்லாமல் இடையிடையே சொல்கிற இந்த அழகான யதார்த்தங்களை மிகவும் ரசிக்கிறேன். சந்துரு சொல்வது போல வாரம் இரு முறை இதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் சார்.

  ReplyDelete
 5. பரம ரகசியம் மிக அருமை..வாரம் இருமுறை வெளியிட்டால் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 6. இந்த தொடரில் வரும் விஷயங்கள் விஞ்ஞான பூர்வமான சாத்தியகூறுகள் உள்ளதா ? இந்த சம்பவங்கள் உண்மையிலே நடந்தவை போன்ற எண்ணம் வருகிறது !

  ReplyDelete
 7. மிகவும் அருமை.சிந்திக்க வைக்கும் எழுத்துகள்.புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 8. very good .continue

  ReplyDelete
 9. நல்ல அருமையான தொடர்... விறுவிறுப்பும்,கதையில் திருப்பங்களும் மிக அருமை..தொடருங்கள...வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 10. மிகவும் அருமையான தொடர்.........

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 11. migvum unarvupoorvamaga irukirathu intha thodar.. Nandri, ganesan.

  ReplyDelete
 12. அங்கங்கே எதிர்பாராத திருப்பங்கள்... தொடர்கிறேன்...

  ReplyDelete
 13. வாசக நண்பர்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி. உங்களில் சிலர் வாரம் இருமுறை இக்கதையைத் தொடரச் சொல்லி இருக்கிறீர்கள். அலுவலகப் பணி, குடும்ப வேலைகளுடன் சில நூல்கள் எழுதும் பணியும் இப்போது சேர்ந்துள்ளது. (புதிய நூல்கள் வந்தவுடன் தெரிவிக்கிறேன்). அதனால் இப்போதைக்கு வாரம் ஒரு முறை மட்டுமே இந்த நாவலை எதிர்பாருங்கள்.

  சில நண்பர்கள் கதை நிஜம் போலத் தோன்றுகிறது என்று சொல்லியிருந்தீர்கள். இக்கதை நிறைய நிஜங்கள், கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்டு உள்ளது. ஆனால் நடக்க முடியாத அளவு முழுக் கற்பனை எதுவும் இல்லை. பெரும்பாலான விஷயங்கள் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டவையே.

  உங்கள் மறுமொழிகள் பெரிய ஊக்க சக்தியாக இருக்கின்றன. நன்றி.

  ReplyDelete
 14. Ganeshan, It is a good one.... and you are writing in simple tamil.

  ReplyDelete
 15. very very interesting novel.Waiting eagerly for every thursday.

  ReplyDelete
 16. Very much looking forward to the next part. Keep it up

  ReplyDelete
 17. உங்கள் பதிவை படிக்க தொடங்கிய பின் இடையில் நிருத்தாமல் படித்து முடித்து விடுகிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 18. It's going interesting..
  One thing i must mention...it s so informative...getting knowledge abt some rare field thru this novel...

  Keep informing us...Thank you

  ReplyDelete
 19. Very interesting & appealing. If time permits, please post twice per week, Best Regards

  ReplyDelete
 20. Very interesting & appealing. If time permits, please post twice per week..

  ReplyDelete
 21. I have started reading this story only today. But I completed all the nine chapters in single day. I can't wait for another Thursday. I thought I should have waited until you complete the entire novel. So, that I could have completed the novel in one stretch.

  It reminds me, before 25 years, when Vikatan published the story "Kottaipurathu veedu" by Indira Soundararajan. I am getting same feelings, excitements and tensions today. Thanks so much.

  ReplyDelete
 22. // அந்தப் படத்தில் அவன் பார்த்த சிவலிங்கம் தான். சிவலிங்கம் மிக தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அந்த சிவலிங்கம் அந்தரத்தில் இருப்பது போல வரையப்பட்டிருந்தது. //

  மெய் சிலிர்க்க வைத்தது...

  ReplyDelete
 23. இந்த பாகத்தில் பேரா சைக்காலஜி என்ற ஆழ்மனசக்திகளை டெலிபதி மூலம் இருமனங்களின் போக்கை அறிவது பற்றியும் அதற்காக ஒரு சீனரையும் ஒரு ஆப்பிரிக்க பெண்ணையும் ஈஸ்வர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி செய்த விஷயங்கள் எல்லாம் ஆச்சர்யப்படுத்தியது என்றால்.... சீனர் ஒரு விஷயம் சொல்ல அது இடையே தடுக்கப்பட்டு ஏதோ ஒரு சக்தியால் ஆப்பிரிக்கப்பெண்மணி கண்களுக்கு சிவலிங்கம் அந்தரத்தில் இருப்பது போலவும் நகர்வது போலவும் படித்ததுமே ஆச்சர்யத்தின் விளிம்பில் இருந்தேன்.. ஈஸ்வர் இந்தியாவுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறியமுடிகிறது... தடுத்து ஈஸ்வரை இந்தியாவுக்கு அழைத்த அந்த சக்தி எது? சித்தரா என்று எனக்கு யோசனையாக இருக்கிறது.... பணி பளுவினாலும் வேறு நூல்கள் எழுதுவதாலும் இனி வாரம் ஒரு முறை தான் இந்த தொடர் வரும் என்று சொல்லி இருந்ததை வாசித்தேன்.. அது மட்டுமில்லாமல் இது ஒரு கதையாக இல்லாமல் நிஜம் போன்றதொரு உணர்வை ஏற்படுத்துவதையும் அறிந்தேன். அதேப்போலவே நீங்க எழுதியது படிச்சதும் நிரூபணம் ஆயிற்று. ஆம் என்று.. அன்பு நன்றிகள்பா.. ரொம்ப அற்புதமாக எழுதுகிறீர்கள்...

  ReplyDelete