என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, January 23, 2009

தோற்றம் எவ்வளவு முக்கியம்?


எட்டு கோணல்களாக உடல் திருகி இருந்ததால் அந்த ரிஷியை அஷ்டவக்கிரர் என்று அழைத்தார்கள். கோணிய உடல் தந்த வலியையும், மற்றவர்கள் செய்த கேலியையும் பொருட்படுத்தாமல் அஷ்டவக்கிரர் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து ஞானியாகத் திகழ்ந்தார்.

ஒரு முறை ஆன்மீகத்தில் மிகவும் ஆர்வம் இருந்த ஒரு சக்கரவர்த்தி வேதங்கள் பற்றி விவாதிக்க சபை ஒன்றைக் கூட்டியிருந்தார். பல வேத விற்பன்னர்கள் கூடியிருந்த அந்த சபையில் கலந்து கொள்ள அஷ்டவக்கிரரும் வந்தார். அஷ்டகோணலுடன் உடலை வித்தியாசமாக அசைத்துக் கொண்டு அவர் சபையில் நுழைய அங்கிருந்தவர்கள் பலரும் கேலியாகச் சிரித்தனர்.

கேலியையே கேட்டும் பார்த்தும் வளர்ந்திருந்த அஷ்டவக்கிரர் சக்கரவர்த்தியைப் பார்த்து, "அரசே நான் இது வேத விற்பன்னர்கள் கூடி இருக்கும் சபை என்று நம்பி வந்தேன். ஆனால் இது செருப்பு தைப்பவர்கள் கூடியிருக்கும் இடம் என்று அறியவில்லை. குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்" என்று அமைதியாகச் சொல்லி சபையை விட்டு வெளியேறத் தயாரானார்.

தங்களை அவமதித்ததற்கு பண்டிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சக்கரவர்த்தி அவர் கூறியதற்கு விளக்கம் கேட்டார்.

அஷ்டவக்கிரர் விளக்கம் சொன்னார். "அரசே செருப்பு தைப்பவர்கள் தான் ஒரு விலங்கினைப் பார்த்ததும் அது கோணல் மாணலாக வளர்ந்திருந்தால் இதன் தோல் தங்கள் வேலைக்கு ஆகாதே என்று அதைப் புறக்கணிப்பார்கள். வேத விற்பன்னர்கள் தோற்றத்தைக் கண்டு எடைபோடும் பாமரத்தனத்தை கடந்து, உள்ளே உள்ள அறிவின் ஆழத்தை அறிய முற்படுவார்கள். இங்கே இவர்கள் நடந்து கொண்டதைக் கண்டு தான் அப்படி முடிவு செய்தேன்"

அவர் சொற்களில் இருந்த உண்மை சுட சிரித்த வேத பண்டிதர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

தோற்றம் எப்படி இருக்கிறது என்பது அவரவர் கையில் இல்லை. அது இயற்கை தந்தது. தானாகத் தேர்ந்தெடுக்காத ஒன்றிற்காக ஒருவரைக் கேலி செய்வது அறிவீனம்.

தோற்றம் என்பது ஒரு பொருளைச் சுற்றிக் கட்டி இருக்கும் காகிதம் போன்றது. பொருளின் மதிப்பும், பயனும் அந்த சுற்றியிருக்கும் காகிதத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அறிவு உள்ளவர்கள் அந்தப் பொருளை வெளிப்புற காகிதத்தை வைத்து எடை போட மாட்டார்கள்.

உங்கள் உடையைத் தைக்க ஒரு தையல்காரரைத் தேர்ந்தெடுக்கும் போது நன்றாகத் தைப்பவரா என்று மட்டும் தானே பார்ப்பீர்கள். அவர் பார்க்க எப்படி இருக்கிறார் என்பதை வைத்தா தையல்காரரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுடைய டாக்டர், ஆசிரியர் ஆகியோரை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? அவர்கள் தோற்றத்தை வைத்தா, இல்லை அந்தந்த துறையில் அவர்களுக்கிருக்கும் திறமையை வைத்தா?

எனவே தோற்றத்தைக் கண்டு யாரையும் எடை போடாதீர்கள். உங்களுடைய தோற்றத்திற்கும் மிக அதிக முக்கியத்துவம் தந்து விடாதீர்கள். இயற்கை அளித்த தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்வதிலும், மெருகேற்றிக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அந்தத் தோற்றம் தான் எல்லாம் என்று எண்ண முற்படும் போது அஷ்டவக்கிரர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். செருப்பு தைப்பவர் பார்வையாக உங்கள் பார்வை இருந்து விட வேண்டாம்.

- என்.கணேசன்

11 comments:

 1. அஷ்ட கோனலாக இருக்கும் ஒருவனுக்கே அரசனின் சபையில் இருப்பவர்களை செருப்பு தைப்பவர்கள் என்று சொல்லும் ஆணவம் இருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியதே.

  ReplyDelete
  Replies
  1. ஏன் தண்டிக்க படனும்? தண்டிக்க படவேண்டியது சிறுமனதால் சிரித்தவர்கள்? அரசனின் சபையில் இருந்தால் என்ன? அடுப்பங்கரையில் இருந்தால் என்ன??? மதி கெட்டு நடபவர்களுக்கு புரியவைக்க இன்னும் எது வேண்டுமானாலும் சொல்லலாம் தவறில்லை அமர பாரதி அய்யா....

   Delete
 2. அஷ்ட கோனலாக இருக்கும் ஒருவனுக்கே அரசனின் சபையில் இருப்பவர்களை செருப்பு தைப்பவர்கள் என்று சொல்லும் ஆணவம் இருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியதே.

  ReplyDelete
 3. அந்தத் தோற்றம் தான் எல்லாம் என்று எண்ண முற்படும் போது அஷ்டவக்கிரர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். செருப்பு தைப்பவர் பார்வையாக உங்கள் பார்வை இருந்து விட வேண்டாம்.//

  நல்ல பதிவுங்கோ!!!!!
  நம்ம வலைக்கு வந்து
  கருத்துரை
  தருக...

  ReplyDelete
 4. மிகவும் நல்ல கருத்துகள்ள நல்ல விதத்தில் மனம் கவரும்படி சொல்லும் உங்கள் பாங்கு மிகவும் நன்று. வாழ்த்துகள்..

  உங்களுக்கான விருது இங்கே:
  http://pettagam.blogspot.com/2009/01/blog-post_24.html

  ReplyDelete
 5. நல்ல கருத்துகளை மிக நல்ல முறையில் சொல்லும் உங்கள் பாங்கு மிக நன்று. வாழ்த்துகள்.

  உங்களுக்கான விருது இங்கே:
  http://pettagam.blogspot.com/2009/01/blog-post_24.html

  ReplyDelete
 6. i am continiously read your blog ,all are devine.by dheenaa

  ReplyDelete
 7. தானாகத் தேர்ந்தெடுக்காத ஒன்றிற்காக ஒருவரைக் கேலி செய்வது அறிவீனம்.
  It is true. we all separted by caste, Lanugages,Religion,Region... So do not give importance to all useless stuff. But still our society...????

  ReplyDelete
 8. அருமை அருமை சார் .. சென்ற வருடம் தான்
  அஷ்ட வகரர் பற்றி படிக்க நேர்ந்தது .. மிக மிக அதிசயமாகவும் ,அற்புதமாகவும் இருந்தது ... தற்போது வக்ர எண்ணங்கள் தானே அனைத்து மனிதர்களையும் வாட்டி எடுக்கிறது . அஷ்டவக்கரர் சித்தரை மனத்தில் எண்ணி தினமும் பிராத்தித்தால் வக்ர எண்ணங்கள் மனதில் உதிக்காமல் கட்டுபடுத்த உதவும் .....,

  ReplyDelete