என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, January 9, 2009

டென்ஷனைக் குறைக்க நடை தியானம்


இன்றைய வாழ்க்கையில் டென்ஷன் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. யாருக்குத் தான் டென்ஷன் இல்லை என்கிறார்கள். அதிகாலையில் ஆரம்பித்து அன்று இரவு படுக்கையில் சாயும் வரை டென்ஷன் தான். தூக்கத்தில் கூட ஆழமும் அமைதியும் இல்லை.

மறுபடி காலை ஆரம்பிக்கிற நாளில் முந்தைய நாளின் டென்ஷனும் சேர்ந்து கொள்கிறது. இப்படி சேர்ந்து கொண்டே போகும் டென்ஷன் கோபமாய், கத்தலாய், வியாதியாய், வெறுப்பாய், பல ரூபங்கள் எடுத்து நமக்கு உள்ள சிக்கல்களை மேலும் அதிகப்படுத்தி விடுகிறது.

ஒருசிலர் "எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்றுகிறது" என்று புலம்புவது உண்டு. ஓடிப் போனாலும் அங்கும் நமக்கு முன்னால் டென்ஷன் நின்று கொண்டு காத்திருக்கும். அப்படியானால் என்ன தான் வழி என்றால் அதற்கு மாமருந்து தியானம் தான்.

தியானத்தில் பல நூற்றுக் கணக்கான முறைகள் இருக்கின்றன. எல்லாமே உயர்ந்தவை தான் என்றாலும் பெரும்பாலான தியானங்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்வதில் இருந்து ஆரம்பிக்கின்றன. அப்படிப்பட்ட தியானங்கள் பலருக்கு கைகூடுவதில்லை. சிலரால் சில நிமிடங்கள் சேர்ந்தாற் போல அமர்ந்திருக்க முடிவதில்லை. முடிந்தவர்களிலும் சிலர் அப்படியே உறங்கி விடுவதும் உண்டு.

அவர்களுக்கெல்லாம் இந்த நடை தியானம் மிகவும் பயன்படும். இதை முதலில் உருவாக்கியவர் திச் நாட் ஹான் என்கிற வியட்நாமிய புத்தத் துறவி. பின்னர் அந்த நடை தியானம் சில கூட்டல் கழித்தல்களுடன் பலரால் பல அவதாரங்கள் எடுத்தது. அதில் சிலவற்றின் அம்சங்களைக் கலந்து நடை தியானம் ஒன்றைப் பயன்படுத்திப் பயன் பெற்றவன் நான். எனவே இதைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்ய முடிந்தால் கண்டிப்பாக நீங்கள் பெரும் மாற்றத்தை உங்களிடத்தில் காண்பீர்கள் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.

இது மிகவும் எளிமையானது. நடை தியானம் செய்யும் முறை இதோ -

1) முதலில் அதிக நெரிசலோ, கூட்டமோ இல்லாத அமைதியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு வாகன, மக்கள் போக்குவரத்து குறைவாக இருக்கிறதோ அந்தப் பாதை சிறந்தது.

2) காலை அல்லது மாலை அல்லது இரவு நேரங்கள் உத்தமம். ஆனால் தேர்ந்தெடுத்த பின் தொடர்ந்து அதே வேளையில் நடை தியானத்தை தினமும் செய்வது நல்லது.

3) நடக்கையில் கூட ஒருவர் இருப்பதைத் தியானம் கை கூடும் வரை தவிர்ப்பது நல்லது. செல் போன் இருந்தால் அதை ஆ·ப் செய்து விடுங்கள்.

4) நடக்க ஆரம்பிக்கும் முன் சிறிது அமைதியாக நில்லுங்கள். முதலில் உங்கள் உடலுடன் தொடர்பு கொள்ளுங்கள். இயந்திரத்தனமாக வாழ ஆரம்பித்து விட்ட நாம் பெரும்பாலான நேரங்களில் நம் உடலின் சின்னச் சின்ன உணர்வுகளைக் உணர்வதில்லை. மூச்சை மூக்கு வழியாக ஆழமாக உள்ளிழுத்து மெள்ள வெளிவிடுங்கள். மூச்சுக் காற்று உங்கள் உடலில் பயணம் செய்வதை உணருங்கள். காலடியில் செருப்பின் ஸ்பரிசம், வெளியே வீசும் காற்று/வெயில்/சீதோஷ்ணம் உங்கள் உடலைத் தொடும் விதம் போன்றவற்றை கண்களை மூடிக் கொண்டு அனுபவியுங்கள்.

5) மூன்று முறை முன்பு சொன்னது போல் மூச்சு விட்டு விட்டு நடக்க ஆரம்பியுங்கள். நிதானமாக நடக்க ஆரம்பித்து பின் இயல்பாக சீராக ஒரே வேகத்தில் நடந்து செல்லுங்கள். மூச்சையும் இயல்பாக விட்டால் போதும். ஆனால் உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் விடும் மூச்சில் இருக்கட்டும். நடக்க நடக்க உங்கள் மூச்சு தானாக ஆழப்படும்.

6) நடக்கையில் உங்கள் மூச்சில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கட்டும். மனம் ஆயிரத்தெட்டு விஷயங்களை அவசரமாக உங்களுக்குச் சொல்ல ஆசைப்படும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனம் மூச்சில் இருந்து வேறு விஷயங்களுக்கு சஞ்சரிக்கும் போது அமைதியாக அதை மறுபடி மூச்சுக்கே கொண்டு வாருங்கள். திரும்பத் திரும்ப அது அலையும். சலிக்காமல் அதை உங்கள் மூச்சுக்கே கொண்டு வாருங்கள். சிறிது சிறிதாக மனம் தாவும் வேகம் குறைந்து போகும். மனம் அமைதியடைய ஆரம்பிக்கும்.

7) நீங்கள் சீராக மூச்சு விட்டபடி தாளலயத்தோடு அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தவுடன் பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திகளை மூச்சுக் காற்றோடு அமைதியாக உங்களுக்குள் இழுத்துக் கொள்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளையும், டென்ஷனையும், பலவீனங்களையும் வெளிமூச்சு வழியாக வெளியே விடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

8) சுமார் பதினைந்து நிமிடங்களாவது இப்படிக் கற்பனையோடு மூச்சு விட்டு நடந்தீர்களானால் சிறிது சிறிதாக உங்களுக்குள் அமைதியும் சக்தியும் பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள்.

9) நீங்கள் உங்கள் நடை தியானத்தின் முடிவுக்கு வரும் போது மறுபடி உங்கள் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்துங்கள்.

அவ்வளவு தான். இதைத் தினந்தோறும் செய்ய அரை மணி நேரத்திற்கு மேல் நமக்குத் தேவையில்லை. ஆனால் தொடர்ந்து செய்தால் மன அமைதி, உடல் நலம் இரண்டிலும் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்கலாம். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.

-என்.கணேசன்

8 comments:

 1. நடை தியானமாக இல்லை. ஆனால் நான் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அலுவலகத்தில் இருந்து வரும் போது வாகனத்தைத் தவிர்த்து ஆட்கள் மிகக் குறைந்த தெருவால் முப்பது நிமிடம் இயற்கையை உணர்ந்தவாறு நடப்பேன். (உடற் பயிற்சியாக இருக்கட்டுமே என நினைத்துத் தான்). மிகுந்த அமைதியையும் உற்சாகத்தையும் உணர்ந்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. Thanks for sharing the meditation technique.

  ReplyDelete
 3. தியானத்தை பயில விரும்பும் பலருக்கு
  கை கொடுக்கும் ஒரு பயனுள்ள நல்ல பதிவு.

  மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 4. சுட்டி எல்லாம் தந்து கவனத்தை திசை திருப்பாமல், விஷயத்தை உள்வாங்கி, எளிமையாய் சொன்ன பாங்கு பிடித்திருந்தது!

  ReplyDelete
 5. பொதுவாகவே நடை மனதை அமைதிப் படுத்துவதை உணர்ந்ததுண்டு. நடைதியானம் பற்றிச் சொன்னமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. நடை பயிற்சி செயகிறேன்....கூட மூச்சு பயிற்சியும் நாளவையில் இருந்து ஆரம்பிக்கப் போகிறேன்.......ரொம்ப நன்றி.....NG.....

  ReplyDelete