சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 1, 2009

பொருள் பொதிந்த பிரார்த்தனை


பிரார்த்தனையின் மகத்துவம் அதன் நீளத்திலோ, காலத்திலோ இல்லை. மணிக்கணக்கில் செய்யும் பிரார்த்தனை வெறும் வார்த்தை ஜாலமாக இருந்து விடுவதுண்டு. 'நான் தினமும் அரைமணி நேரம் பிரார்த்தனை செய்வேன்' என்று பிடிவாதமாக பூஜையறையில் உட்கார்ந்து கொண்டு மனதை மட்டும் ஊர்சுற்ற அனுப்பி விடுவதுண்டு. நமக்குத் தேவையென நினைப்பவற்றின் பட்டியலாக நீள்வதுண்டு (அப்புறம் முக்கியமானதை விட்டு விட்டால் என்ன செய்வது?). அப்படியும் எதை எதையோ கேட்டு மிக முக்கியமானதைக் கேட்க மறந்து விடுவதுண்டு.

ஆனால் வாழ்வில் எல்லா சிறப்புகளையும் பெறத் தேவையான ஒரு சிறிய பொருள் பொதிந்த பிரார்த்தனை உண்டு. உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்ட இது "சாந்தி மந்திரம்" என அழைக்கப்படுகிறது. இது மனிதன் மகத்தான, உபயோகமான மாமனிதனாக வாழத் தேவையான அம்சங்களை பரம்பொருளிடம் வேண்டுகிறது.

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(உண்மை அல்லாதவற்றில் இருந்து என்னை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக
இருட்டில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக
அழிவில் இருந்து அமரத்துவத்திற்கு அழைத்துச் செல்வாயாக
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: )

அஸதோ மா ஸத் கமய

தற்கால மனிதன் உண்மை, பொய் இரண்டையும் பகுத்தறியும் திறன் பெற்றிருந்தாலும் அந்தத் திறமையைப் பயன்படுத்த பெரிதாக முயற்சி எடுத்துக் கொள்வதில்லை என்பதை சமூகத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குப் புரியும். உண்மை எதுவென அறிவதில் அவன் காட்டும் அலட்சியம் தான் எத்தனையோ தீமைகளுக்கு அஸ்திவாரமாக உள்ளது.

அடுத்தவர்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்து உண்மையா இல்லையா என்று பெரும்பாலும் நாம் ஆராயப் போவதில்லை. கேள்விப்பட்டதையும், படித்தவற்றையும் அடுத்தவரிடம் சொல்வதற்கு முன் உண்மையா என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே நம் மனதினுள்ளும், நாம் வெளியே தெரிவிப்பதிலும் பொய்கள் மலிந்து கிடக்கின்றன. அவற்றை நம்பவும் ஆரம்பித்து செயல்படும் போது விளையும் அனர்த்தங்களுக்கு அளவேயில்லை.

மேலும் பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு நடக்கும் எதுவும் நீண்டகால நற்பலனைத் தருவதில்லை. எனவே இந்தப் பிரார்த்தனையின் முதல் வரி மிகவும் பொருள் பொதிந்தது. ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் உண்மையில்லாததை அகற்றி உண்மைக்கு முக்கியத்துவம் தர உறுதி பூணுவோம். நம் கவனமும், வாழ்க்கையும் உண்மையை நோக்கி செல்வதாக இருக்கட்டும்.

தமஸோ மா ஜ்யோதிர் கமய

அறியாமை, மூடநம்பிக்கை, வெறுப்பு, பொறாமை, பயம் எல்லாமே வாழ்க்கையில் பேரிருட்டை ஏற்படுத்தக் கூடியவை. எனவே தான் இன்றைய உலகில் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம், வசதிகள் அதிகரித்திருந்தும் தனிமனித வாழ்க்கையில் பெரும்பாலும் இருள் மண்டியே கிடக்கிறது. ஏதோ ஒரு இருட்டில் அழுந்திப் போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இந்த இருட்டில் இருந்து மீண்டு தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை என்ற ஒளிபடைத்த, அறிவார்ந்த வாழ்க்கை வாழ ஒவ்வொரு தினமும் பிரார்த்தனை செய்வோம். மேலே சொன்ன இருள்கள் நம்மை நெருங்கும் போதெல்லாம் அவற்றை விரட்டும் கவசமாக இந்தப் பிரார்த்தனை நம் மனதில் இருக்கட்டும்.

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

நமது சொல்லும் செயலும் அழிக்கும் விஷமாக இருக்கிறதா, இல்லை உயிரூட்டி நிறுத்தும் அமிர்தமாக இருக்கிறதா? தீமையையும், வெறுப்பையும் உண்டாக்குகையில் அவை அழிவை ஏற்படுத்தும் விஷமாகிறது. நன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்படி அவை இருக்கையில் அவை நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வாழ வைக்கும் அமிர்தமாகிறது.

இந்த இரண்டையும் செய்யும் சக்தி நம்மிடம் இருக்கிறது. பெரும்பாலானோர் மாறி மாறி நம் மனநிலைக்கேற்ப இரண்டையும் செய்கிறோம். ஆனால் ஆக்குவதில் தான் சிறப்பு இருக்கிறது, அழிப்பதில் இல்லை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக நம்மை நடத்த அந்த ஆண்டவனைப் பிரார்த்திப்போம். அழிவுபூர்வமான பாதையை மூடி வைப்போம்.

ஒவ்வொரு நாளையும் இந்தச் சிறிய பிரார்த்தனையுடன் ஆரம்பிப்போம். காலை, மதியம், மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் இந்தப் பிரார்த்தனை செய்து நம்மை நிலைப்படுத்திக் கொள்வோம். உண்மை, ஒளி, ஆக்கம் ஆகியவற்றை நோக்கியே நம் சிந்தனை சொல், செயல் எல்லாம் இருக்கட்டும். இனிமையான சூழல்களில் மட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் அப்படியே வாழ இறைவன் நமக்கு உறுதுணையாக இருப்பானாக!

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:




- என்.கணேசன்

12 comments:

  1. good one ur post's are very nice...

    ReplyDelete
  2. //உண்மை அல்லாதவற்றில் இருந்து என்னை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக
    இருட்டில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக
    அழிவில் இருந்து அமரத்துவத்திற்கு அழைத்துச் செல்வாயாக
    ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: //

    இப்படியே நேரடியாக தமிழில் தினமும் சொல்ல வேண்டியது தானே1 ஏன் சமஸ்கிருததில்?

    எதாவது தப்பா கேட்டுடேனா?

    சகல வல்லமை படைத்த கடவுளுக்கு நீங்கள் பேசும் தமிழ் புரியாதா என்ன?

    ReplyDelete
  3. சம்ஸ்கிருதத்தில் இருந்து எடுத்த பிரார்த்தனை ஆதலால் அதன் மூலத்தை அப்படியே கொடுத்திருக்கிறேன். தமிழிலும் சொல்லலாம். பிரார்த்தனையில் அர்த்தம் முக்கியமே ஒழிய மொழி முக்கியமில்லை.

    ReplyDelete
  4. DEAR Ganeshan, Ijust chanced upon your blog today.I thank you very much for this new year mesage of good thoughts.Is it possible to get your mail id.
    DR.KAPILAMOORTHY
    kapilamoorthytr@yahoo.com

    ReplyDelete
  5. எவ்வளவு எளிமையாக அத்தனை அறத்தையும் அழகாக அறிவுறுத்தி இருக்கிறார்கள், இம்மந்திரத்தில்!
    தங்களது விளக்கங்கள் அருமை, நன்றிகள்.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அஸதோ மா ஸத் கமய
    தமஸோ மா ஜ்யோதிர் கமய
    ம்ருத்யோ மா அம்ருதம் கமய
    ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

    yoga கிளாசில் சொல்லி தந்தார்கள்

    ReplyDelete
  8. நான் சம்ஸ்கிருதத்தில் பண்டிதன் அல்ல. சிறிது பரிச்சயம் உண்டு.

    "ம்ருத்யோ மா அம்ருதம் கமய"

    இந்த வரியில் "ம்ருத்யோர் மா" என்று இருக்கவேண்டும் என்று கருதுகிறேன். சம்ஸ்கிருத மூலத்தில் அப்படித்தான் இருக்குறது. அந்த "ர்" சந்தி விகுதி என்று கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

      Delete
    2. என் கருத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் எனக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

      Delete
    3. தவறு எப்போதுமே சரி செய்யப்பட வேண்டியதே அல்லவா?

      Delete
  9. எளிய விளக்கம் .நன்றி

    ReplyDelete