என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, January 5, 2009

மணல் கோட்டையும், மனிதக் கோட்டையும்ஒரு சிறுவன் கடற்கரை மணலில் ஒரு மணல் கோட்டையைக் கட்டிக் கொண்டு இருந்தான். அவன் கொண்டு வந்திருந்த வாளி மற்றும் சில உபகரணங்கள் கொண்டு ஆலோசித்து ஆலோசித்து அவன் அந்தக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்து நிறைய நேரம் ஆகியிருந்தது. கோட்டை, வாயில், மதில் சுவர்கள் என ஒவ்வொன்றையும் பேரழகுடன் உருவாக்கிக் கொண்டு இருந்தான். அந்தக் கோட்டை கட்டும் ஆர்வத்தில் அவன் தன் சுற்றுப்புறத்தையே மறந்து விட்டிருந்தான். தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் சிரிப்புச் சத்தம், கடலை, பட்டாணி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவர்களின் விற்பனை சத்தம், அங்கு வந்து போய்க் கொண்டிருந்தவர்களின் பேச்சுச் சத்தம் எதுவுமே அவன் கவனத்தைத் திருப்பவில்லை. அந்தக் கோட்டை அழகுருவம் பெறப் பெற அவன் மனதில் எல்லையில்லாத சந்தோஷம். 'இந்த அழகுக் கோட்டை நான் உருவாக்கியது.....'

நகரத்தின் இன்னொரு பகுதியில் பரபரப்பான சூழ்நிலையில் ஒரு மனிதன் தொலைபேசியில் பேசிக் கொண்டும், கம்ப்யூட்டரின் கீ போர்டை அழுத்திக் கொண்டும் இன்னொரு விதமான கோட்டையை அமைத்துக் கொண்டிருக்கிறான். அது அவனுடைய வியாபாரக் கோட்டை. அவன் வாய் வார்த்தைகளில் வியாபார அஸ்திவாரங்கள் போடப்படுகின்றன. அவன் விரல்நுனிகளில் பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. அவனும் தான் உருவாக்கிக் கொண்டிருந்த கோட்டையில் உலகையே மறந்து விட்டுருந்தான். ஒன்றுமில்லாமல் ஆரம்பித்து அவனுடைய தீவிர முயற்சிகளால் நன்றாக வளர்ந்திருந்த அதன் வளர்ச்சியைப் பார்க்கையில் அவனுக்கும் பேரானந்தம். 'இது நான் உருவாக்கியது...'

இந்த இரண்டு கோட்டைகளும் அவரவர் கடும் உழைப்பால் உருவானவை. அவர்கள் திட்டமிட்டு உருவாக்கியவை. அவர்களில்லா விட்டால் அந்தக் கோட்டைகள் இல்லை. அவர்களுடைய முழுக் கவனத்தையும் பெற்று அவர்கள் எண்ணப்படி உருவானவை. கடலலையும், விதியலையும் எந்த நேரத்திலும் வந்து அழித்து விடக்கூடிய கோட்டைகள் அவை. இதோடு இருவருக்குமுள்ள ஒற்றுமைகள் முடிந்து விடுகின்றன. இனி வரும் வேற்றுமைகள் தான் நம்மை சிந்திக்கத் தூண்டுபவை.

மாலை நேரம் நெருங்க நெருங்க கடலலைகள் கரையில் அதிக தூரம் வர ஆரம்பிக்கின்றன. அவனது கோட்டையை அலைகள் நெருங்க நெருங்க சிறுவன் துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறான். தான் கட்டிய கோட்டை அலைகளால் அழியப்போகிறதே என்ற வருத்தம் அவனிடம் இல்லை. பயம் இல்லை. ஏனென்றால் அவன் ஆரம்பத்திலிருந்தே இதை அறிவான். சிறிது சிறிதாக அவனது கோட்டையை கடலலைகள் கபளீகரம் செய்ய சில நிமிடங்களில் அவன் கட்டிய கோட்டை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகிறது. வாளியில் தன் மற்ற உபகரணங்களைப் போட்டுக் கொண்டு அந்த வாளியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையால் தந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பும் அந்தச் சிறுவன் மனதில் துளியும் துக்கம் இல்லை. எல்லாம் விளையாட்டு. அன்றைய பொழுது ஆனந்தமாய் கழிந்ததில் ஒரு நிறைவு.

ஆனால் இன்னொரு கோட்டை கட்டியிருந்த மனிதனின் மனோபாவமோ வேறு விதமாக இருக்கிறது. அவனுடைய கோட்டைகள் விதியலைகளால் தீண்டப்படும் போது அவனுள் பீதி கிளம்புகிறது. இது நான் கஷ்டப்பட்டுக் கட்டிய கோட்டை, இதற்காக நான் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன், தியாகம் செய்திருக்கிறேன் என்றெல்லாம் புலம்புகிறான். விதியலைகளில் இருந்து அந்தக் கோட்டை அழியாமல் காக்க முடிந்த மட்டும் போராடுகிறான். ஒவ்வொரு பகுதியாய் கோட்டை அழியும் போதும் கண்ணீர் வடிக்கிறான். இயற்கை அவன் புலம்பலையும், கண்ணீரையும் பொருட்படுத்தவில்லை. கடைசியில் அந்தக் கோட்டை இருந்த இடம் தெரியாமல் தகர்ந்து போகும் போது அவனிடம் சொல்லொணா துக்கம் மட்டுமே மிஞ்சுகிறது.

எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை அவன் அறிய முடியாதவன் அல்ல. ஆனாலும் தன் சொந்த விஷயங்களில் அந்த உண்மையை உணர்ந்து தெளியும் பக்குவம் அவனுக்கு இல்லை. தினமும் மரணங்களைப் பார்த்து வாழ்ந்தும், தான் சாசுவதமானவன் என்பது போல் நடந்து கொள்ளும் சராசரி மனிதர் கூட்டத்தைச் சார்ந்தவன் அவன். தன்னுடைய கோட்டை மட்டும் இந்த இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று பொய்யான நம்பிக்கையில் இருந்து வந்ததால் தான் அவனால் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. அந்தச் சிறுவனைப் போல் இயற்கையை அறிந்து, புரிந்து, உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை ஆனந்தமயமானதாக இருக்கலாம். அந்த மனிதனைப் போல் பொய்யான மாயையில் வாழ்ந்தால் வாழ்க்கை துக்ககரமானதாகவே முடியும்.

வெறும் கையுடன் வந்தோம். வெறும் கையோடு போகப்போகிறோம். இந்த உண்மையை இடைப்பட்ட வாழ்க்கையில் நினைவு வைத்து வாழ்ந்தால் உண்மையில் இங்கு இழக்க நமக்கு ஒன்றுமில்லை என்பதை தெளிவாக நாம் உணர முடியும். கோட்டைகளைக் கட்டுவதில் தவறில்லை. அதில் ஆனந்தமடைவதும் தவறில்லை. உண்மையில் அந்த செயல்களில் தான் ஜீவத்துவமே இருக்கிறது. ஆனால் எல்லாம் முடிந்து இறுதியில் கோட்டைகளை விதியலைகள் வீழ்த்தும் போதும் இதுவும் இயற்கையே என்று அந்த சிறுவனின் பக்குவத்துடன் வருத்தமில்லாமல் விடைபெற முடிந்தால் அந்த வாழ்க்கையின் நிறைவுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

- என்.கணேசன்

13 comments:

 1. உண்மைதான்..........

  அந்த பையனுக்கு கை பிடித்து அழைத்துச் செல்லும் தந்தை போல் இவனுக்கும் உண்மையை உணர்த்தி அழைத்து செல்ல ஒரு குரு இருந்தால் இவனும் துன்பத்தில் ஆழ்ந்திருக்க மாட்டான்.
  எவ்வளவு வளர்ந்தாலும் எல்லோரும் குழந்தைகளே!

  யுகம் யுகமாக இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பவரே இனியும் ஒழுங்காக இயக்குவார் என்று நினைத்து கொண்டால் தான் அச்சம் அகலும்,

  ReplyDelete
 2. //வெறும் கையுடன் வந்தோம். வெறும் கையோடு போகப்போகிறோம். இந்த உண்மையை இடைப்பட்ட வாழ்க்கையில் நினைவு வைத்து வாழ்ந்தால் உண்மையில் இங்கு இழக்க நமக்கு ஒன்றுமில்லை//

  உங்களுடைய பல பதிவுகளை படித்திருக்கிறேன். நல்ல சிந்தனைகளை சொல்கிறது உங்கள் எழுத்து. பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நெல்லைத்தமிழின் சோதனை திரட்டியில் இணைந்தமைக்கு நன்றி.
  http://india.nellaitamil.com/

  ReplyDelete
 4. I follow your writings.. it is really good .. please continue

  ReplyDelete
 5. வெறும் கையுடன் வந்தோம். வெறும் கையோடு போகப்போகிறோம். இந்த உண்மையை இடைப்பட்ட வாழ்க்கையில் நினைவு வைத்து வாழ்ந்தால் உண்மையில் இங்கு இழக்க நமக்கு ஒன்றுமில்லை என்பதை தெளிவாக நாம் உணர முடியும்.

  ஜீவனுள்ள வார்த்தைகள். அருமையான பதிவு . மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கட்டுரை . வாழ்த்துகள் .

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 6. Thangal blogs thodarnthu padikiren. Interesting. Found one more matter that almost all DMK ministers have more than one wife like MK, Anbalagan, Balu and kkRaja etc. Why don't you write a blog on this? Hope it will be very much interesting

  ReplyDelete
 7. Dear Ganesh,

  Apt wordings and thoughts in the present context.
  Waiting for similar ruminations.
  Congrats!

  Kapilamoorthy

  ReplyDelete
 8. Dear Ganesh,
  Apt wordings and thoughts in the present context of the world.
  Waiting for your next ruminations.
  Congrats!

  ReplyDelete
 9. Your word's and writings has life in it.
  I am regular reader of your blogs.
  Keep up the good work that your writings are being
  Encouraging to others

  ReplyDelete
 10. Hello Ganesan Sir,

  I am learning many things via your blog. All the best for your continuous writing.

  -Mohamed Nawabjan (From U.A.E)

  ReplyDelete
 11. சிறுவன் தான் கோட்டை கட்டியதை விளையாட்டாக நினைத்தான். வருத்தப்படவில்லை. வாழ்க்கையை விளையாட்டாக பாவிக்க முடிந்தால் நமக்கும் வருத்தமில்லை.
  மூர்த்தி

  ReplyDelete
 12. காலத்திற்கு ஏற்ற சிந்தனை நிச்சயம் மாற்றி கொள்ள வேண்டும் .அதிகம் எதிர்பார்ப்பு ஆபத்து தான் .

  ReplyDelete
 13. உண்மைதான் , எந்த காலத்திலும் ஏற்று கொள்ளக்கூடியது

  ReplyDelete